கணக்கு களவாடிய வீட்டு எட்வினா தெரேசா ஐரின் மரியாகொரத்தி அன்னா மார்கரீத்தா ஜெசிக்கா

நாவல் மலையாள மூலம் – லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள் (என்.எஸ்.மாதவன் எழுதியது)
தமிழில் – பீரங்கிப் பாடல்கள் (இரா.முருகன் தமிழில் மொழிபெயர்ப்பு)

மாதாகோவில் வாசலில் அம்மா, ஞானஸ்நானத்தின்போது என் தலைதொடும் அம்மாவாக இருக்கப் போகும் விக்டோரியா பெரியம்மா கையில் என்னைக் கொடுத்தாள். நான் பார்வையை உயர்த்தியபோது, கசங்கிய உடுப்புக்கு மேல் கருத்த அங்கி தரித்து, வெளுத்த சாட்டின் துணியில் மஞ்சள் நிறச் சிலுவை தைத்திருந்த கழுத்துப் பட்டை அணிந்து பிலாத்தோஸ் பாதிரியர் நிற்பதைக் கண்டேன். நான் இதுவரை பார்த்ததே இல்லாத இந்த பாதிரி உடுப்பு என்னைப் பயப்படுத்தியது. நான் அழ ஆரம்பித்தேன். பக்கத்தில் நின்றிருந்த கோவில்பிள்ளை ஆண்டனி சொன்னார்: “எல்லா பசங்களும் அழுவும்”.

பிலாத்தோஸ் பாதிரியார் என் முகத்தின் மேல் தன் சுவாசக் காற்றால் சிலுவை வரைந்தார். அவர் வேகமாக கோவிலுக்குள் போனார். கோவில்பிள்ளை ஆண்டனி மெல்லிய குரலில் சொன்னது: “கை கழுவப் போயிட்டிருக்கார்”.

பிலாத்தோஸ் பாதிரியாரைத் தண்ணீர்ப் பிசாசு பிடித்திருந்தது. அதனால் தான் சதா கைகழுவிக் கொண்டேயிருப்பார். அவர் ஊழியம் செய்திருந்த முதல் மாதாகோவில் திருச்சபையில் அவருக்குக் கிடைத்த பெயர் பிலாத்தோஸ். ஏசு பிரானைச் சிலுவையில் அறைந்து கொல்லத் தான் காரணமில்லை என்று கை கழுவிய பிலாத்தோஸின் பெயரை அவருக்குப் பட்டப்பெயராக்கினார்கள் அவர்கள். அப்புறம் அவர் எந்த ஊர்த் திருச்சபையில் ஊழியம் செய்யப் போனாலும் அந்தப் பெயர் மாறவே இல்லை. பிலாத்தோஸ் பாதிரியாருடைய உண்மையான பெயர் சிலருக்கே தெரியும். இதெல்லாம் அறியாத பலரும் அவர் முகத்துக்கு நேரே அவரை ஃபாதர் பிலாத்தோஸ் என்றே கூப்பிடுவதுண்டு.

பிலாத்தோஸ் பாதிரியார் கைகழுவி விட்டுத் திரும்ப வந்தபோது கேட்டார்: “சாத்தானை விலக்கினீரோ? சாத்தானின் காரியமெல்லாம் விலக்கினீரோ? குழந்தைக்கு தலைதொடும் அப்பாவும் அம்மாவும் பதில் சொல்லணும்”

என் தலைதொடும் அப்பன் எட்வினும் தலைதொடும் அம்மா விக்டோரியா பெரியம்மாவும் என் சார்பில் சொன்னார்கள் : “விலக்கினோம்”

“திருச்சபையை விசுவசிக்கிறீரா”?”

“விசுவசிக்கிறோம்”

“என்றால் சொல்வீர், கத்தோலிக்க திருச்சபையின் நான்கு அடையாளங்கள் எதெல்லாம்?”

இப்போது நான் விக்கி பெரியம்மா மூலம் பதில் சொன்னேன் : “ஒண்ணு, திருச்சபை ஒண்ணு. ரெண்டு, திருச்சபையே புனிதம். மூணு, திருச்சபையே கத்தோலிக்கம். நாலு, திருச்சபை அப்போஸ்தலம்”.

“இந்த நான்கையும் விசுவசிக்கிறீரா?”

”விசுவசிக்கிறோம்”, அவர்கள் இருவரும் ஒரே குரலில் சொன்னார்கள்.

என் வாயில் உப்புப் படிகத்தை இட பிலாத்தோஸ் பாதிரியார் நெருங்கியபோது அவருடைய வெளுத்த உள்ளங்கையைப் பார்த்தேன். எப்பொழுதும் தண்ணீரில் இருப்பதால், மழையில் நனைந்து வருவது போல விரல் நகக்கண்களுக்குக் கீழே மஞ்சள் படிந்து, உள்ளங்கையில் பள்ளம் குழிந்திருந்தார் அவர். என்னை மாதாகோவிலுக்கு உள்ளே நுழைய வைத்து, மறுபடி கை கழுவ பிலாத்தோஸ் பாதிரியார் உள்ளே போனார். திரும்பி வந்து, விசுவாச அறிக்கையை ஓதச் சொன்னார் அவர்.

எல்லோரும் மண்டியிட்டுப் பிரார்த்தித்தார்கள்.

”பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்தார். பந்தியோஸ் பிலாத்தோஸின் அதிகாரத்தில் ((பிரார்த்திக்கிறவர்கள் சிரிப்பை அடக்கிக்கொண்டு வேகமாகச் சொல்லி) பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். பரலோகத்திற்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கம் வீற்றிருக்கிறார்…”.

பரமண்டலத்தில் இருக்கும் பரமபிதாவே என்று தொடங்கும் பிரார்த்தனையையும் ஓதிய பிறகு, மண்டியிட்டிருந்த என் தலைதொட்டப்பனாகும் எட்வின்சேட்டனையும், தலைதொட்டம்மாவாகும் விக்டோரியா பெரியம்மாவையும் பிலாத்தோஸ் பாதிரியார் கேட்டார் : “குழந்தைக்கு என்ன பெயர் வைக்கணும்னு தீர்மானம் செஞ்சிருக்கீங்களா?”

“ஜெசிக்கா”, என்றாள் விக்கி பெரியம்மா.

“அந்தப் பெயர்லே ஒரு புனிதர் உண்டா?”, கோவில்பிள்ளை ஆண்டனி கேட்டார்.

எட்வின்சேட்டனும் விக்கி பெரியம்மாவும் என் அப்பனைப் பார்த்தார்கள். ஜெசிக்கா என்ற பெயருக்கு ஒரு நீண்ட சரித்திரம் இருக்கிறது. என் அம்மாவின் குழந்தைப் பருவத்தின்போது, அவளுடைய அம்மாவான என் பாட்டி செய்து கொடுத்த துணிப் பொம்மைக்கு அம்மா வைத்திருந்த பெயர்தான் ஜெசிக்கா. அம்மா குழந்தை வளர்ப்பை ஜெசிக்காவிடமிருந்து தொடங்கினாள். அவள் கண் கலங்க, பிலாத்தோஸ் பாதிரியாரை நோக்கினாள். அவர் பைபிளின் பக்கங்களை வேகமாகப் புரட்டினார்.

“ஜீசஸ்ங்கற பெயரோட பெண்பாலாக இருக்கும் ஜெசிக்காங்கற பேரு”, சந்தியாகு சொன்னார்.

“கோவிலுக்குள்ளே உளறாதே சந்தியாகு”, பிலாத்தோஸ் பாதிரியார் கண்டித்தார். அவர் வேதப் புத்தகத்தில் இருந்து கண் உயர்த்திக் கூடியிருந்தவர்களைப் பார்த்துச் சொன்னார் : “உலகத்தின் முதன்முதலாக வந்த ஈஸ்டர் தினம். கர்த்தராகிய ஏசு கிறிஸ்துவை அடக்கம் செய்த குகைக்குப் போய் மூன்று பெண்கள் பார்த்தார்கள். கல்லறையை அடைத்திருந்த பாறாங்கல்லை உருட்டி அகற்றியிருந்ததை அவர்கள் கண்டார்கள். கர்த்தராகிய ஏசு கிறிஸ்துவின் தேகத்தை அவர்கள் பார்க்கவில்லை. அந்த மூன்று பெண்கள் யாரென்றால், லூக்காவின் சுவிசேஷம் 24:10 ‘அவர்கள் யாரென்றால் மக்தலா என்ற ஊரைச் சேர்ந்த மரியா, யோஹன்னா, யாக்கோபின் அன்னை மரியா என்கிறவர்கள்’. இவர்களில், யோஹன்னாவின் இன்னொரு பெயர் ஜெசிக்கா. ஆக, இந்தக் குழந்தைக்குப் பெயர் ஜெசிக்கா”

ஜெசிக்கா என்கிற பெயர்லே மட்டில்டாவுக்கு சின்னப் பிள்ளையிலேருந்தே ரொம்ப இஷ்டம். வலிய ஆசாரிக்கு ஆட்சேபணை இல்லேன்னா, எங்க அம்மா பெயரு, மார்கரீத்தான்னும் இந்தக் குழந்தைக்கு பெயர் வச்சுக் கூப்பிடலாமா?” விக்கி பெரியம்மா கேட்டாள். அப்பன் சரியென்று தலையசைத்தார்.

“சரி, மார்கரீத்தா என்ற பெயரும் கூட”, பிலாத்தோஸ் பாதிரியார் சொன்னபடி கோவில்பிள்ளை ஆண்டனியை நோக்கினார். “டயக்ளிஷன் சக்கரவர்த்தி விரல் சுண்டி அடையாளம் காட்டியவனைக் கல்யாணம் செய்து கொள்ளாததால் சிரச்சேதம் செய்யப்பட்ட அந்தியோக்கியாக்காரியும், பிரபுத்துவ குடும்பத்துக் கன்யகையுமானவள் மார்கரீத்தா. கர்ப்பிணிகள், பிரசவம் தடையில்லாமல் நடந்தேறப் பிரார்த்திக்கும் புனிதவதி மார்கரீத்தா”.

”என்னோட பிரசவம் எந்த சிரமமும் இல்லாம நடக்க நான் பிரார்த்திச்ச புனிதவதி அன்னா பெயரும் வைக்கணும்” என்றாள் அம்மா.

“சரி, அன்னா என்ற பெயரும் இருக்கட்டும்”, என்றார் பிலாத்தோஸ் பாதிரியார்.

“தைரியமானவளா, பரிசுத்தமானவளா இருக்க என் மகளுக்கு எங்க அம்மா பெயர் மரியாகொரத்தி கூட வைக்கணும்” என்றார் என் அப்பன்.

“சரி, மரியாகொரத்தி”.

“போஞ்ஞிக்கரை, அர்த்துங்கல் கோவில்களோட புனிதர் செபஸ்த்யானோசுக்கு அம்பு துளைச்சு ஏற்பட்ட காயங்களை கருணையோடு சிகிச்சை செய்து குணப்படுத்தின புனிதவதி ஐரின் பெயரும் வைக்கணும்” என்றாள் பக்கத்து வீட்டு சில்வியா.

”சரி, ஐரின். போதும் இத்தோட”, பிலாத்தோஸ் பாதிரியார் கை கழுவப் போக அவசரப்பட்டார்,

“இருங்க, எனக்கு மனசிலே மரியன்னை சொல்றதா தோணுது. ஆவிலால் அம்மையோட பேரும் வைக்கணுமாம்”.

“சரி, தெரசா. கார்மலெத்தா திருச்சபையில் தேவ அழைப்பை ஏற்றுப் பெண்கள் தேவ ஊழியம் செய்யச் சேர வைத்த புனிதவதி தெரிசா பெயரும் கூட”, பிலாத்தோஸ் பாதிரியார் திரும்பி நடக்கத் தொடங்கினார்.

“சாமி, என் மகளுக்கு தலைதொட்டப்பனான எட்வினுக்கு நன்மை நேர்ந்து எட்வினாங்கற பெயரும் வைக்கணும்” என்றார் என் அப்பன்.

“அது வேணாமே வல்ய ஆசாரி. நம்ம கவர்னர் ஜெனரலோட பெண்ஜாதி பேரும் எட்வினா இல்லே? நேருவோட கூட அந்தம்மாவுக்கு சில தொடர்புகள்..”. சந்தியாகு சொல்லி முடிப்பதற்குள் பிலாத்தோஸ் பாதிரியார் கை கழுவ நடந்தபடி சொன்னார்: “சரி, எட்வினா பெயரும் வைக்கப்படும்”.

திருமுழுக்குக் கல் வைத்திருந்த உள்ளறைக்கு என்னை விக்கி பெரியம்மா கொண்டு போனாள். என வலது தோளைத் தொட்டுக்கொண்டு தலைதொட்டப்பன் எட்வின்சேட்டன் நின்றார். பிலாத்தோஸ் பாதிரியார் லத்தீன் மொழியில் ஏதோ சொன்னார். புரிந்து கொள்ள முடியாத மொழி எல்லாம் சங்கீதம் தான். நான் சிரித்தபடி கிடந்தேன். என் கையால் பிரகாசிக்கும் மெழுகுவர்த்தியைப் பற்றிக் கொள்ளச் செய்தார்.என் நெஞ்சைத் தென்னோலையால் தொட்டு, என் நெற்றியில் புனித நீரைத் தெளித்து, எனக்கு இடப்பட்ட எல்லாப் பெயர்களையும் கூறினார் பிலாத்தோஸ் பாதிரியார். பிறகு பரமபிதா, குமாரரான ஏசு கிறிஸ்து, பரிசுத்த ஆவி திருப்பெயர்களில் என் மேல் சிலுவை வரைந்தார்.

கோவில்பிள்ளை ஆண்டனி திறந்து வைத்த ஒரு கனமானபுத்தகத்தில் நான் பிறந்த தேதி, என் பெற்றோர் மற்றும் தலைதொட்ட பெற்றோர் பெயர்களை பிலாத்தோஸ் பாதிரியார் எழுதினார். தொடர்ந்து என் பெயர் எழுதப்பட்டது : கணக்கு களவாடிய வீட்டு எட்வினா தெரேசா ஐரின் மரியாகொரத்தி அன்னா மார்கரீத்தா ஜெசிக்கா.அந்தப் பதிவின் கீழ் தேதியிட்டுத் தன் பெயர் எழுதினார் பிலாத்தோஸ் பாதிரியார்: ஃபாதர் நோயல் 30/4/1951. நான் பிலாத்தோஸ் பாதிரியாரின் நிஜப் பெயரை இப்படித்தான் அறிந்தேன்.

பீரங்கிப் பாடல்கள் நாவல் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன