நாவல் 1975 – சிறு பகுதி -எமர்ஜென்சி சாப்பாடு -அக்டோபர் 1975

காந்தி ஜெயந்தி வியாழக்கிழமை வந்தது. வார நடுவில் வரும் விடுமுறையை ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்தோம்.

கூட ஒரு நாள், இருநாள், வெள்ளி, சனிக்கிழமை லீவு கிடைத்த அதிர்ஷ்டசாலிகள் பஸ்ஸை, ரயிலைப் பிடித்துச் சொந்த ஊரைப் பார்க்கக் கிளம்பிப் போனார்கள். இல்லாவிட்டாலும் ஒன்றும் குடிமுழுகிப் போகவில்லை. சுகம் அனுபவிக்க, விடுமுறையைக் கொண்டாட மெட்ராஸில் நிறைய இருந்தது. எமெர்ஜென்சி காலம் என்பதெல்லாம் ரெண்டாம் பட்சம்.

கோவிந்தன் மேன்ஷன் புதன்கிழமை சாயந்திரமே களைகட்டி விட்டது. உஸ்மான் ரோடு ஹோட்டல் ராச்சாப்பாடு வேண்டாம் என்று ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது. வேண்டாம் என்று முடிவானதும், தினசரி சாப்பிடுவதில் என்ன எல்லாம் சரியில்லை என்று பட்டியல் போட சௌகரியமாகப் போனது.

எமெர்ஜென்சி கால சாப்பாடு சரியான அளவில் இருக்க வேண்டும் என்ற கட்டாயத்தால் சோற்றை பட்டையாக அடித்துக் கொண்டு வருவார்கள். ஒரே மாதிரியான சிறு கிண்ணங்களில் ஒரே அளவு வார்த்த சவசவ சாம்பாரும், ரசமும், மோரும், ரெண்டு ஸ்பூன் உருளைக்கிழங்கு பொரியலும், நெற்றியில் வைக்கும் பொட்டு சைஸில் ஊறுகாயும் அடுத்து தட்டில் ஏந்தி வந்து சேரும்.

தட்டில் மீதி இருக்கும் இடத்தில் பொரித்த அல்லது சுட்ட சிறு அப்பளத்தின் விட்டம் கேம்பஸால் அளந்து வட்டம் போட்ட துல்லியத்தோடு வரும். ராணுவ மிடுக்கோடு முன்னால் வைக்கப்படும் அந்தத் தட்டைப் பார்த்ததுமே எழுந்து நின்று சல்யூட் அடித்து ஜனகனமன பாட வேண்டும் என்று தோன்றும்.

முன்பெல்லாம் ராத்திரி மெனு அமர்க்களமாக இருக்கும். பருப்புப் பொடியும் நெய்யும் பெரிய விழுதாக காரமான கோங்குராவும் தான் இரைவணக்கம் பாடி ராச்சாப்பாட்டைத் தொடங்கி வைக்கும். அளவுச் சாப்பாடெல்லாம் கிடையாது. பசிக்கப் பசிக்கச் சோறு வட்டிக்கப்படும். வீணாக்கினால் மட்டும் கல்லா முதலாளியிலிருந்து பரிமாறுகிறவர், இலை எடுப்பவர் வரை கோபப்படுவார்கள். ஏன், அடுத்த இலையில் சாப்பிடும் கோங்குராவ்களே மிளகாய்க் காரத்தோடு பார்ப்பார்கள்.

பெல்காவியோ, குல்கர்னியோ பனகல்பார்க் மார்க்கெட்டில் காலிஃப்ளவர் வாங்கி எடுத்து வந்து கொடுக்க, நாதன்ஸ் கஃபேயில் சிறப்பு பொரியல் செய்து தருவார்கள். அதற்கு ஒரு கட்டணம் உண்டு என்றாலும் ரெகுலர் கஸ்டமர் என்பதால் பல தடவை வசூலிப்பதில்லை.

என்ன, சபையில் கொண்டு வராமல், ரூமுக்கு பெரிய கேரியரில் ராச்சாப்பாடு அனுப்பும்போது அதெல்லாம் வரும். சனிக்கிழமை ராத்திரி ரூமில் இருந்து வைபவமாகச் சாப்பிட்டு விட்டு பாண்டிபஜார் ராஜகுமாரியில் அல்லது, பஸ் ஸ்டாண்ட் எதிரே கிருஷ்ணவேணியில், அங்கேயும் நல்ல படமாக ஓடாவிட்டால், மாம்பலம் சீனுவாசாவில் ரெண்டாம் ஆட்டம் சினிமா பார்க்கப் போவது வழக்கம்.

அதெல்லாம் இந்த வருடம் ஜூன் இருபத்தைந்து அன்று எமர்ஜென்சி வந்ததும் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போனது.

எவரும் சாப்பிட ஒரே கட்டணத்தில் மிகச்சரியாக அளந்த சாப்பாடு. மேலே கேட்டால் தேசத் துரோகமாகி விடலாம் என்று பொதுவான ஐயம்.

சாப்பாடு ஒரு கடமை என்று மாறிப் போயிருந்தது இப்போது. எல்லோரும் சாவி கொடுத்து முடுக்கப்பட்ட பொம்மை என்று ஒரு தோணுதல்.

’வெட்டிப் பேச்சைத் தவிர். வதந்தியைப் பரப்பாதே’, ‘கடின வேலைக்கு மாற்றே கிடையாது’ என்று நாஜி வதை முகாமில் எழுதி வைத்து மிரட்டிக் கொடுமைப்படுத்தின மாதிரி ஊரெங்கும் விளம்பரப் பலகை வைத்து நாட்டையே எமர்ஜென்சி அரசு பயமுறுத்தியது.

வட இந்தியாவிலும் கர்னாடகத்திலும், கேரளத்திலும், மகாராஷ்ட்ரத்திலும் எமர்ஜென்சி கொடுமைகள் தலைவிரித்து ஆடுவதாக அவ்வப்போது தகவல் வரும். ஆபீசில் இன்ஸ்பெக்ஷன், ஆடிட், டெப்யூடேஷன் என்று தில்லிக்கோ, பம்பாய்க்கோ போய் வரும் எல்லோரும் அங்கெல்லாம் சர்க்கார் கடுமையாக நடந்து கொள்வதாக வேறு யாரோ சொன்னதாகச் சொல்வார்கள்.

முக்கியமாக, கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு நிலவுகிறதாம். ஜூலை மாதத்தில் எமர்ஜென்சியை அங்கீகரிக்க நாடாளுமன்றத்தில் ஜகஜீவன்ராம் பாபு கொண்டு வந்த மசோதா ஏகமனதாக நிறைவேறியதற்கு அப்புறம் குடும்பக் கட்டுப்பாடும் பத்திரிகை தணிக்கையும், எமர்ஜென்சி எதிர்ப்புப் பேச்சுக்குத் தடையும் தீவிரமாகத் அமுலாக்கப்படுகிறதாம். வடக்கிலும் மேற்கிலும் இது அதிகமாகவும், தெற்கில் கிட்டத்தட்ட இல்லாமலும் போயிருப்பதாகத் தகவல்.

எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள். மேலே விவரம் கேட்டால், ’பேச்சைக் குறை, வேலையைப் பார்’ என்று அரசாங்க போஸ்டராக அடித்து வந்த சஞ்சய் காந்தி வாக்கை வாகாகக் காரணம் காட்டி மௌனமாகி விடுகிறார்கள். கூடுதலாக அவர்கள் சொன்னாலும் அதையெல்லாம் நம்புவதா என்று தயக்கமாக இருந்தது.

இங்கே. பத்திரிகைத் தணிக்கையும், கூட்டம் போடத் தடையும், மீறினவர்கள் கைதானதும் மட்டும் எமர்ஜென்சியின் இன்னொரு முகத்தைக் காட்டியது. மற்றப்படி, எமர்ஜென்சி என்பது ரயில் நேரத்துக்கு வருகிற, சர்க்கார் ஆபீசில் ஒன்பதே முக்கால் மணிக்கு எல்லா நாற்காலியும் நிரம்பி வழிகிற, ஹோட்டலில் சரியாக இருநூறு மில்லி காப்பி அளந்து கிடைக்கிற, ரேடியோ சதா சர்க்கார் கீதம் இசைக்கிற, நாள் முழுக்க பேச்சாகவும், உரையாடலாகவும் இருபது அம்சத் திட்டப் பிரசாரம் நடத்துகிற, நாட்டுக்குத் தேவையான நல்ல விஷயம் என்று நம்பி வாழ்க்கை நடந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன