நாவல் ராமோஜியம் – ராமோசி ராயன் துபாஷ் ஆனந்தரங்கம் பிள்ளையைச் சந்திக்கிறான் – புதுவை 1745

ராமோஜி தரையைப் பார்த்தபடி நின்றிருந்தான். துரை அவனை நோக்கினார்.

”நீர் என்ன செய்து கொண்டிருக்கிறீர்?”

துரை விசாரித்தார். இன்னொரு இளநீர் வெட்டப்பட்டு அவர் வாய்க்குள் தாரையாக வழிந்து கொண்டிருந்தது. மரியாதைக்குக் கூட இரும் என்றோ இளநீர் குடிக்கிறீரோ என்றோ விசாரிக்கவில்லை துரை.

அது கிடக்குது. வந்தது வந்தாய், நான் கேட்கக் கேட்கப் பதில் சொல்லிக்கொண்டு என் காலைப் பிடித்து விடு என்று சொல்லாமல் இருந்தாரே, அதுவரை விசேஷம்தான்.

“புடவைக் கிடங்கு வைத்து சாயம் தோய்த்து அந்நிய நாடுகளில் விற்கிறவர்களில் நானும் ஒருவன், ஐயா”

”பிரஞ்சு எங்கே பயின்றீர்?

”நான் காரைக்கால் காரன். காரைக்காலை துமா துரை மராத்தி மன்னரிடம் இருந்து விலைக்கு வாங்கியபோது அங்கே ப்ரஞ்சு கலாசாலையும் நாகரிகமும் பரவி வந்தது. நான் அப்படி ஒரு கலாசாலையில் தான் பிரஞ்சு படித்தேன்” என்றான் ராமோஜி.

”ராமோசி ராயர் … ராமோசி இது போதும் உம்மைக் கூப்பிட”.

உத்தரவு முசியே என்று வணங்கினான் ராமோஜி. அப்போதிருந்து அவன் ராமோசி ராயன் ஆனான்.

”ரங்கப்பிள்ளை வரும்வரை அவர் வேலையில் கொஞ்சம் பங்கு போட்டுக்கொள்ளும். அவரால் செய்ய முடியாமல் போகிறவற்றை அனுமதி பெற்று நீர் எடுத்துப் பாரும்”.

”யார் அனுமதி, கடவுளே?”

”ரங்கப்பிள்ளை தான், வேறு யார்? நீர் முதல் நாள் என்பதால் என்னோடு இவ்வளவு நேரம் நின்று பேச முடிகிறது. சரி வேலைக்கு வந்தீர். முதல் வேலை இது… இன்னும் ஒரு மாதத்தில் நாட்டியம், பாட்டு, பேச்சு மூலமாக தியூப்ளே பேட்டை பெயரை பிரபலமாக்கணும். நீர் என்ன செய்வீரோ தெரியாது. ஊர்ப் பெயரை முரட்டாண்டி என்று யாராவது சொன்னால் காது அறுபடும் என்பதையும் புரிய வைக்கணும். இன்னும் முப்பது நாளில் உம்மைக் கேட்பேன். இதெல்லாம் நடக்க முடியாமல் போனால் உம் காதையும் அறுத்து பட்டணத்துக்கு வெளியே துரத்தி விடுவேன்”.

கிராதக துரை.

”உமக்கு சம்பளம் எல்லாம் முசியே பிள்ளை மூலம் தெரியப்படுத்தப்படும்”

”உத்தரவு முசியே துரையவர்களே”

வேலை பார்த்துக் கிட்டும் பணம் ராமோஜிக்குத் தேவையில்லை. ஆஸ்தி உண்டு. அது போதும். ஆனால் வேலையில் வரும் பெயர் அவனுக்கு வேண்டியுள்ளது. ஒரே ஒரு நாள் பிரஞ்சு ராஜாங்க உத்தியோகம் என்றாலும்.

”கேட்க விட்டுப் போச்சே. உமக்கு எப்படி முசியே ரங்கப்புள்ளே பரிச்சயம்? அவர் மராத்தி ராயர் இல்லையே. தமிழ்க்காரராச்சுதே”

”ஐயா, அவர் என் காலம் செய்த தந்தையாருடைய நல்ல சிநேகிதர். இரண்டு பேரும் ஆரம்ப நாட்களில் கூட்டு வியாபாரமாக புடவைக் கிடங்கு வைத்து சாயமேற்றி விற்பனைக்கு வெளிதேசம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள்”.

”நல்லது. நீர் சரியாக காரியம் செய்யாவிட்டால் முசியே ரங்கப்புள்ளே மூலம் தண்டனை தருவோம். போய் நாளைக்கு வாரும்”.

அப்படி ராமோஜி அனுப்பிவித்துக்கொண்டு போனான். போகும் போது மனசு தியூப்ளே சொன்னதை அசை போட்டது.

என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் துரை? நாட்டியத்தையும் சங்கீதத்தையும் ராமோஜியே ஒரு மாதத்தில் கற்றுக்கொண்டு பாடி ஆட வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா? இது ஆடிப் பாடினதோடு முடிவடைகிற சமாச்சாரம் இல்லையே. சாகித்தியம் வேறே வேண்டி இருக்கிறது. அதைக் கேட்டு, ஆட்டம் பார்த்து ஜனங்கள் முரட்டாண்டிச் சாவடி என்ற பெயரையே மறந்துவிட வேண்டும். கோஷ்டியாக இல்லை தனித்து தியூப்ளே பேட்டை என்று ராகமாலிகையில் பாட வேண்டும். தில்லானா ஆட வேண்டும். எல்லாம் ஒரே மாதத்தில் நடந்து விடணுமாம்.

இதை அப்படியே ராமோஜியின் குருநாதர் ஆனந்தரங்கம்பிள்ளை அவர்களுக்குச் சொல்ல வேண்டியிருப்பதால் அவர் வீட்டுக்குப் போனான் ராமோஜி. உப்பரிகையில் கடற்காற்று ஏற்று மெல்ல உலவிக் கொண்டிருந்தார் அவர். ரொம்பவும் தளர்ந்திருந்தார். அவர் நடைக்குப் பாந்தமாக பின்னால் வெற்றிலைப் படிக்கத்தோடு ஒரு சிப்பந்தி போய்க் கொண்டிருந்தான்.

பிள்ளைவாள் உடம்பு என்ன வந்தாலும், ஒரு வெற்றிலையும், கொஞ்சம் பாக்கும் மென்றால் மெச்சப்பட்ட நிலைமை அடைந்து விடுவார். இரண்டு வாரமாக வெற்றிலையைக் கண்ணில் காணாமல் ஆக்கி விட்டான் வைத்தியன். அது அவரை சாய்ந்து விட்டது.

ராமோஜி வணங்கியபடி நின்றான். உள்ளே வாரும் என்று தலையை அசைத்தார் பிள்ளைவாள்.

மாடிக்குப் போவதில் ராமோஜிக்கு மனதில் ஒரு இடைஞ்சல் இருந்தது. பிள்ளைவாள் என்னதான் தனவந்தரும், பெரிய உத்தியோகஸ்தரும், அப்பாவின் அத்யந்த சிநேகிதரும் ஆனாலும், வாரக் கணக்கில் குளிக்காத மனுஷர். பக்கத்தில் போனால் வாடை அடிக்கத்தான் செய்யும்.

அதுவும், சுரமும் வேறே என்னவோ ரோகமுமாக இருக்கக் கூடியவர் என்பதால், பக்கத்தில் போனாலோ அல்லது அவருக்கு பின்னால் நின்றாலோ தொற்றுநோயாக அது நம்மையும் பீடிக்கக் கூடும். அப்புறம் ராமோஜி இடத்துக்கு துபாஷியை எங்கே தேட? காது அறுக்க கம்பியோடு தியூப்ளே துரை வேறே பின்னால் நிற்கிறார்.

அதைச் சொல்லணுமே ரங்கப்பிள்ளைவாளிடம். மேலே போகாமல் கீழேயே நின்று வர்த்தமானம் எல்லாம் சொன்னால் தெருவில் போகிறவனும், வீட்டுக்குள் குற்றேவல் செய்கிறவளுமெல்லாம் இதைக் காதில் வாங்கி வேறெங்காவது யாரோடாவது பகிர்ந்து கொள்ளக் கூடும்.

”நான் மேலே வரலாமா?” என்று பிள்ளைவாளிடம் பணிவோடு கேட்டான் ராமோஜி.

”வேணாமய்யா, நானே கீழே வருகிறேன்.. அங்கே என் குரிச்சியில் இருந்தால் தான் ராஜாங்க விஷயம் வகையறா நினைக்கவும் எழுதவும் தோதுப்படும்”.

ராமோஜி வாசலில் போட்டிருந்த பிரம்மாண்டமான நாற்காலிக்கு முன்னால் நிலைக் கண்ணாடியை ஒட்டி ஓரமாக நின்றான். பிள்ளை கீழே வர பத்து நிமிஷமானது.

தளர்ந்த உடம்பு ஒத்துழைக்காவிட்டாலும் அவரே படி இறங்கினார். அலமுசு பண்ணிக் கொள்கிறீரா என்று ராமோஜியைக் கேட்டார். அவர் காப்பி குடிக்கிறாயா என்று விசாரித்தால் நிறைய நாட்குறிப்பாக எழுத வேண்டி இருக்கும். சில சமயம் பிரதி எடுக்கவும் நேரும்.

”வயணங்கள் சொல்லும், முரட்டாண்டி சாவடிக்குப் போயிருந்தீராமே”.

பிள்ளைவாள் விசாரித்தார். அவர் முரட்டாண்டி சாவடி என்று சொல்ல, ராமோஜி சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

எதற்கு சிரிக்கிறீர் என்று தெரியும் என்றபடி அவரும் அடக்க முடியாமல் சிரித்தார்.

துரைத்தனத்து கபுறு எல்லாம் பிள்ளைவாளுக்குக் கூறினான் ராமோசி ராயன் என்ற ராமோஜி.

”இதென்ன ஆரியக்கூத்து? பெயரை இஷ்டத்துக்கு மாற்றி வைப்பார்களாம். அதை ஜாக்கிரதையாக அதே படிக்கு புதுப் பெயரில் சொல்லாவிட்டால் கசையடியாம், அபராதமாம், காதறுப்பாம். ஒவ்வொருத்தர் பின்னாலேயும் கவர்னர் மாளிகை, காதறுக்கக் கத்தியோடு சேவகர்களை அனுப்புமா?”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன