நாவல் ராமோஜியம் – ராமோசி ராயன் (ராமோஜி ராவ்) புதுவையில் அருணாசல கவிராயரை ஆனந்தரங்கம் பிள்ளை இல்லத்தில் சந்திப்பது – வருடம் 1745

”பெரியவர்கள் மன்னிக்கணும். இந்த பெயர் விஷயத்தில் துரை உறுதியாக இருக்கறபடியால் தான், நானும் கொஞ்ச நாள் உங்கள் பெயரைச் சொல்லி தற்காலிகமாக சர்க்கார் உத்தியோகஸ்தனாக இருக்கேனே” என்றான் ராமோஜி.

அதுவும் மெத்தச் சரிதான் என்றவர் போன வாரம் விட்ட இடத்திலிருந்து நாள் குறிப்பு எழுதலாமா என்று கேட்டார். ஒரு வாரம் எழுதலியே என்றான் ராமோஜி.

“அது ரொம்ப இல்லை, ராஜாங்கம் இல்லாத சம்பவங்கள் தான் எழுத வேண்டியது. ஒரு மணி நேரத்தில் முடிந்து விடும்” என்றார் அவர்.

இந்த வாரத்தில் ராஜாங்கமாக இல்லாமல் என்னவெல்லாம் நடந்தது இந்த நாள் குறிப்பில் எழுதி வைக்க என்று புரியாமல் ஆனந்தரங்கம் பிள்ளையைப் பார்த்தான் ராமோஜி.

”கள்ளுக் குடித்து விட்டு கும்பினி ஒஃபிசியே (ஆஃபீசர்) ஒருத்தன் நல்ல மீனாக பத்திருபது வாங்கி வா என்று சிப்பந்தியை சந்தைக்கு அனுப்பிச்சு வைத்து, அவன் வாங்கி வந்த மீன் நல்லதாக இல்லையென்று அடித்து உதைத்த விஷயம் அய்யா” என்றார் பிள்ளைவாள்.

இதென்ன கூத்து என்று முக வார்த்தையாக அவர் சொல்வதை எதிர்பார்த்திருந்தான் ராமோஜி. இது அவனுக்குக் கதை சொல்ல மட்டும். எழுத வேறே மாதிரி தமிழில் நீளநீளமாக வாக்கியங்கள் அமைத்து அவர் சொல்வதை அதே வேகத்தில் எழுத வேண்டியிருக்கும். எழுதினதைப் படிக்கச் சொல்லி அங்கங்கே அவர் திருத்தம் இருந்தால் சொல்வதால், எழுதிய பிரதி ஏறக்குறையப் பிழை இன்றி அமைந்து போகும்.

”அப்புறம் இந்த லச்சை கெட்ட சோல்தாத்து விவகாரம். கேட்டீரோ”, பிள்ளை உற்சாகமாகத் தொடர்ந்தார்.

”புலோ தோன் என்றோ என்னமோ பெயர் விளங்கான். பரீசில் இருந்து வந்தவனில்லை. காப்பிரி. தீவில் இருந்து வந்தவன். அவன் என்ன செய்தானா, நேற்று சாயங்காலம் வாணரப்பேட்டை தோப்பில் தென்னங்கள் மாந்தி அதே படிக்கு தியாகு முதலியார் தெருவில் திறந்து கிடந்த ஒரு வீட்டில் நுழைந்திருக்கிறான். பதினைந்து வயசு சொல்லத்தக்க ஒரு பெண்ணுக்கு அவளுக்கு தாயார் வயதில் இன்னொரு ஸ்திரி தலைமயிரில் பேன் பார்த்துக் கொண்டிருக்க இவன் குடிபோதையிலே உடுப்பை களைந்து விட்டு, சாடி விழுந்து அந்தப் பெண்பிள்ளைகள் ரெண்டு பேரையும் முத்தமிட்டு சந்தோஷமாக இருப்போம். ரெண்டு பேரும் வாங்களடி என்று ஆரம்பித்து இன்னும் அசங்கியமானதாக வார்த்தை எடுத்து விட அவர்கள் கூகூ வென்று கூக்குரலிட்டு வாசலுக்கு ஓடி வந்தார்களாம். வந்து, திரும்ப அங்கே கதவை சாத்தி, வெளியில் இருந்து பூட்டும் இட்டார்கள். பக்கத்து வீடுகளில் இருந்து ஆண்கள் திரண்டு வந்து காப்பிரி சொலுதாதுவை (சிப்பாய்) அடித்து, இரண்டு பல்லையும் உடைத்து, கிரிமாசி பண்டிதன் காவல் இருக்கும் சாவடியில் கொண்டு போய்த் தள்ளி விட்டார்களாம். கும்பினி சொலுதாதுக்கு இனியும் இங்கே காவல் இருக்க சந்தர்ப்பம் தராது அடுத்த கப்பலில் கோலனிக்கு திரும்ப அனுப்பும் முன்பு அவனுக்கு பத்து சாட்டையடியாவது தரணும் என்று தெருக்கார மனுஷர்கள் என்னிடம் முறையிட வந்து, நான் உடம்பு சரியில்லாமல் போனதால் வீட்டில் சொல்லிப் போனார்கள். துரைக்கு சமாசாரம் தெரியுமோ என்னமோ. இதை மட்டும் இன்று எழுதினால் போதும்”.

அவர் நிறுத்தாமல் பேசியதால் களைப்படைந்து காணப்பட்டார்.

”தோசை சுட்டு எடுத்து வரச் சொல்லட்டா?”

பிள்ளையவர்களின் மனைவி காமிரா அறைக்குள் வராமல் வாசலிலேயே நின்றபடி அவரிடம் கேட்டாள்.

”இந்த வேலையை முடித்து விட்டு சாப்பிடுகிறேன் மங்கா” என்றார் பிள்ளைவாள். ”ராமாசி ராயனுக்கு வேணுமானால் ரெண்டு வார்த்துப் போடச் சொல்லேன்” என்றார் பிறகும், ராமோஜி பக்கம் கை காட்டியபடி.

ராயர் நம் வீட்டில் எல்லாம் போஜனம் செய்வாரா என்ன என்று பிள்ளைவாள் மனைவி நகைத்தாள்.

”ஏன், ராமோசி பண்டிதர் இல்லையே அவர். ராமோசி ராயர் தானே? அவர் பிதா காலம் பண்ணிப் போகச்சே அவரை நம் வசம் ஒப்புவித்துப் போட்டுப் போனார். அப்படி அவர் நம் வீட்டு மனுஷரான படியினாலும் இவ்விடத்தில் போஜனம் செய்ய ஏது தடை” என்று பிள்ளையவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவருக்கு நெஞ்சில் வலி கண்டிருக்கும்போல.

நெஞ்சைப் பிடித்தபடி ஒரு நிமிடம் அவர் அப்படியே இருக்க, ராமோஜி சத்தமிட்டு வேலைக்காரர்களை வரவழைத்து ரேக்ளாவில் போய் வைத்தியரைக் கூட்டி வரச் சொன்னான். பிறகு என்னவோ தோன்ற, பிள்ளைவாளின் சாரட்டையும் சித்தம் பண்ணச் சொன்னபோது ரேக்ளாவில் வைத்தியர் வந்து விட்டார்.
நாடி பிடித்துப் பார்த்து அவர் சொன்னது –

“ரத்தம் அதிகமாகக் கொதிப்பு ஸ்திதியில் உள்ளது. என்ன உண்டீர்கள் ஆண்டவரே?”

”ரெண்டே ரெண்டு பலாச்சுளை தேனில் குழைத்து வைத்து உண்டேன் ஐயா. பண்ருட்டியில் இருந்து ஒரு குடியானவன் காணிக்கை வைக்க காலை முதலே காத்திருந்து கொடுத்துப் போனான். குதம்பைச் சித்தர் பாட்டு, பாம்பாட்டிச் சித்தர் பாட்டு என்று நாலஞ்சு பாட்டை நல்ல குரல் எடுத்து பாடினான். அதைக் கேட்டபடி சுளை தின்ன நெஞ்சு நிறைஞ்சு போச்சோ தெரியலியே” என்று சகஜமாக மறுபடி பிள்ளைவாள் எழுந்து உட்கார்ந்தார். கண்டம் தப்பிப் பிழைத்தவர்கள் முகத்தில் தவழும் திகில் கலந்த மந்தகாசத்தை ராமோஜி அவர் வதனத்தில் கண்டான்.

இன்னும் ஒரு வாரம் ராமோசி ராயனைத் தவிர யாரையும் பார்க்கவோ, கண்டு முக வார்த்தை சொல்லவோ வேணாம் என்று தோணுகிறதாகப் பிள்ளைவாள் சொல்ல, அப்படியே இருக்கட்டுமே என்றாள் அவருடைய மனைவி. ஊர்வம்பு இல்லாமல் பிள்ளையவர்கள் ஜீவிப்பதாவது என்று ராமோஜி நினைத்துக் கொண்டான்.

நாள் குறிப்பை எல்லாம் நாளைக்கு எழுதலாமே என்று பிள்ளைவாள் பெண்ஜாதி சொல்ல அதுவும் சரிதான் என்று ராமோஜியிடம் சொல்லி, பிறகும் சொன்னார் –

”முரட்டாண்டிச் சாவடி வயணம் சொல்லும். அப்படியே நீரும் ரெண்டு தோசையும் துவையலும் ருசிபாரும். அரிசி நம்ம வயலில் விளைந்த நெல்லைப் புழுக்கியது. உழுந்தும் நம் தோட்டம் துரவில் வளர்த்து அறுவடை செய்தது. துவையலுக்கான தேங்காய் நம் தோப்பில் இருந்து வந்தது. பச்சை மிளகாய் நம் தோட்டத்துக் காய். உப்பு நம் உப்பளத்தில் காய்ச்சியது. ஆக எல்லாமே பெருமாள் தயவில் நம் இடத்திலேயே தோன்றி வளர்ந்து நம் இடத்தில் உபயோகமும் ஆகிறது. நாராயணாய நம”.
அவர் சொல்ல ராமோஜியும் ஓம் நமோ நாராயணாய நம என்று கிழக்குப் பார்த்து முழங்கினான்.

அவருக்குக் கொஞ்சம் இடம் தள்ளி பின்னாலும் நகர்ந்து ராமோஜி தோசை சாப்பிட்டபடி, காதறுத்தல் பற்றிச் சொன்னான்.

ராமோஜி, வைசியாள் தெருவிலிருக்கும் தன் வீட்டுக்குக் கிளம்பியபோது கையைக் கூட அலம்பாமல் பிள்ளைவாள் நித்திரை போயிருந்தார்.

இப்படி திடீரென்று எழுந்து கொள்ள, திடீரென்று சாப்பிட, திடீரென்று நித்திரைபோக கொஞ்ச நாளாக அவருக்கு அனுபவமாகிறதாக பிள்ளைவாள் மனைவி சொன்னாள். நடுராத்திரியில் எழுந்திருக்கிற கஷ்டம் எதுவும் இல்லையே என்று ராமோஜி கேட்க இல்லை என்றாள். இருந்தாலும் சொல்வாளோ.

விளக்குகளைத் திரி தாழ்த்த ஆரம்பித்து வாசல் கதவை சாத்தும்போது ஒற்றை மாட்டுவண்டி ஒன்று ஆனந்தரங்கம் பிள்ளையவர்களின் மாளிகை வாசலில் வந்து நிற்பதை ராமோஜி கவனித்தான்.

நீளத் தலைப்பாகையும், சீராக வெளுத்து உடுத்த பாளைத்தார் வேட்டியும் காதில் கடுக்கனுமாக நடுவயது ஆடவர் ஒருத்தர், வைத்தியர் மாதிரி தெரிந்தவர், வீட்டுக்குள் போக அவசரம் காட்டினார்.

”ஐயா, பிள்ளையவர்கள் உடல் நலம் சற்றே குன்றி ஓய்வில் இருக்கிறார்கள். இப்போது அவரை சந்திக்க ஏலாது. எப்போது அவர் சுபாவமாக ஆரோக்கியம் கொண்டு இருப்பாரோ அப்போது வந்து சந்திக்கலாம்” என்றான் ராமோஜி.

வந்தவர் சங்கடத்துடன் நிற்க, ”சந்தர்ப்பம் கிட்டுமா என்று சந்தேகமே படவேண்டாம். என்னை வந்து பார்த்தால் நான் அனுமதி வாங்கித் தருவேன்; ராமோசி ராயன் என்றால் எல்லோருக்கும் தெரியும். பிள்ளைவாளுக்கு அணுக்கத் தொண்டன். நானும் புடவைக் கிடங்கு வைத்து சாயம் தோய்த்து பல தேசத்துக்கு அனுப்பி வியாபாரம் செய்கிறேன்” என்றான் அவன்.

வந்தவரின் உடம்பில் குளிரக் குளிர ஜவ்வாது வாடை அடித்தது. அவர் ராமோஜியிடம் சொன்னார் –

”ஐயா நானும் ராயன் தான். கவிராயன். அருணாசலக் கவிராயன் என்று என்னை அழைப்பார்கள். பிள்ளைவாள் அவர்கள் ஊக்கம் கொடுத்தபடி ராமநாடகக் கீர்த்தனைகள் என்று முழு ராமாயணத்தையும் தனித்தனி ராகத்தில் அமைந்த பாடல்களாகப் பாடி இருக்கிறேன்”.

இங்கே நிறுத்தினார். பிள்ளைவாள் வீட்டு விளக்குகள் அணைக்கப்பட, அவர் பெயர் கொண்ட அந்தத் தெரு முழுக்க இருட்டிலும் மௌனத்திலும் ஆழ்ந்தது.

Excerpts from my forthcoming novel RAMOJIUM

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன