ராமோஜியம் – எழுதி நிறைவு செய்யப்படும் நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி – திருக்கருகாவூர் 1945

திங்கள்கிழமை ஆபீசில் வேலை மும்முரத்தில் இருந்தபோது ட்ரங்க் கால் என்று பந்துலு சார் அழைத்தார். அவர் இடத்தில் தான் ஆபீஸ் டெலிபோன் வைத்திருக்கிறோம்.

”நான் கும்பகோணத்திலே இருந்து விட்டோபா பேசறேன்.. அனா மாவன்னா மளிகைக்கடையிலே இருந்து பேசறேன்..ட்ரங்க் கால் புக் பண்ணி பேசறேன்.. ராமோஜி ராவ்ஜியை தயவா கூப்பிடணும். நான் அவருக்கு ஆப்த சிநேகிதன். அவர் திருக்கருகாவூர் போக, அடுத்த சனிக்கிழமை..”.

என்னைப் பேசவே விடவில்லை விட்டோபா. ராமோஜி பேசறேன் என்று நடுவில் பத்து தடவையாவது சொல்லியிருப்பேன். என்னாச்சு லைன் சரியா இல்லையா என்று பந்துலு குச்சிப்புடி அபிநயம் எல்லாம் பிடித்து என்னை சைகையில் விசாரிக்க ஒரு வழியாக விட்டோபா நிறுத்தி என்னைப் பேச அனுமதித்தார்.

”சார், ராமோஜி ராவ் ஜி கிட்டே கொஞ்சம் போனைக் கொடுங்கோ” என்றார் அடுத்து. நாசமாப் போச்சு, நான் தான் ராமோஜி என்று பிரகடனப்படுத்திப் பேச ஆரம்பித்தேன்.

”கும்பகோணம் டூ திருக்கருகாவூர் டிஸ்டர்பன்ஸ் டுவெல்வ் மைல்” என்று காலேஜ் புரபசர் மாதிரி விட்டோபா இங்க்லீஷில் எடுத்துவிட, அவர் வேறே கிரகத்தில் இருந்து பேசுகிறதுபோல குரல் போய்ப் போய்த் திரும்பி வந்தது.

விட்டோபா சொன்ன தகவலை மிக கவனமாகக் காதில் வாங்கியதன் சாரம்

கும்பகோணத்தில் இருந்து திருக்கருகாவூர் பனிரெண்டு மைல் தூரம். அங்கே போக பஸ் உண்டு. கும்பகோணத்திலேயே கார் வாடகைக்கு இப்போது கிடைக்கிறது. கருகாவூர் போய், தரிசனம் முடித்து, திரும்பி வர நான்கு மணி நேரமாவது குறைந்தது ஆகும். கார் வாடகை ரூ50. காரில் முன்னால் டிரைவர் தவிர ஒருத்தரும் பின்னால் இரண்டு அல்லது மூன்று பேரும் சௌகரியமாக உட்கார்ந்து வரலாம் … வாடகையில் பெட்ரோல் செலவு சேராது. எல்லாம் முடிந்த பிறகு டிரைவர் பேட்டாவாக ஐந்து ரூபாயோ மேலுமோ கொடுப்பது திருப்தியைப் பொறுத்தது.

”சரி வாடகைக்கார் தயார்ப் பண்ணி வைங்க ப்ளீஸ். ரொம்ப தேங்க்ஸ்” .

டெலிபோனை வைத்து விட்டு வியர்த்து விறுவிறுத்து பந்துலு சார் மேஜைக்கு எதிர் நாற்காலியில் அவர் அனுமதி இல்லாமலேயே உட்கார்ந்தேன். அவர் எனக்கு போனில் பேசிப் பழக்கம் இல்லை என்று நினைத்திருக்கக் கூடும்.

போன் திரும்ப அலறியது. பந்துலு சார் எடுத்து ஒரு நிமிடம் கேட்டபடி இருந்தார். நான் நாற்காலிக்குத் திரும்ப நடக்க ஆரம்பித்தபோது சொன்னார் – ”ராமோஜி, உம்ம பார்ட்டி திரும்பவும் கூப்பிடறார்”.

நான், இதேதடா விடமாட்டேன் என்று அன்புத் தொல்லை தருகிறாரே இந்த மனுஷர் என்று மறுபடி போனை வாங்க, அடியைப் பிடியடா பரதபட்டா என்று திரும்பவும் அறிமுகம் எல்லாம் செய்துகொண்டு, என்னைப் பேச விட்டார் விட்டோபா.

அவர் ரயில் வந்து சேரும் சனிக்கிழமை காலையில் கும்பகோணம் ஸ்டேஷனில் காத்திருப்பார். ப்ளாஸ்கில் வீட்டில் போட்ட காப்பி எடுத்து வரணுமா, டீ வேணுமா?

”எதுக்கு விட்டோபா உங்களுக்கு சிரமம்? ஜங்க்ஷன்லேயே பார்த்துக்கலாம்”.

”இல்லே ப்ளாஸ்க் புதுசா வாங்கியிருக்கேன். எத்தன மணி நேரம் சூடு தங்கும்னு பார்க்கணும்”.

நான் சிரித்தபடி போனை வைத்துவிட்டு வேலையில் மூழ்கினேன். வீரையா நமஸ்காரமு சார் என்று சல்யூட் வைத்தான். வழக்கத்தை விட அதிகமான சிரிப்பு முகத்தில். சரசு என்று ஆரம்பித்தான். இப்போ வேணாம் என்றேன். என்ன விஷயம் என்று விசாரிக்க எனக்கு நேரமில்லை. சரசு ஒற்றைநாடியா?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன