ராமோஜியம் – வெளியாக இருக்கும் என் அடுத்த நாவலில் இருந்து – திருக்கருகாவூர் 1945

வாசலில் மறுபடியும் சத்தம். ஓசை எழுப்புகிறவர்கள் வாழ்த்தப்படட்டும்.

தெலக்ஸ் புவனாவின் ஆஸ்தான அறிஞர் ராமண்ணா ஜோசியரும், கூடவே இன்னொரு குடுமிக்காரரும் வாசல் கதவைத் தட்டாமல் தட்டி உள்ளே நுழைந்து கொண்டிருப்பதைக் கவனித்தேன். யாராக இருந்தாலும் வாழ்க. இன்னொரு மணி நேரம் இங்கே என்னோடு பேசிக் கொண்டிருந்தால் போதும்.

தெலக்ஸ் புவனா அவ்வப்போது வந்து போய் எனக்கும் ரத்னாவுக்கும் நல்ல சிநேகிதமாகி விட்டதால் என் மனதின் அறையைக் காலி செய்து கொண்டு போய் விட்டாள். தேவைப்பட்டால் நேரில் போய்ப் பார்த்து விட்டு வந்துவிடுவேன். பார்த்தால் ஏற்படும் பரவசம் அடங்கி, பழக்கமான நல்ல சிநேகிதம் அவளோடு ஏற்பட்டிருக்கிறது.

இப்போது அவள் மேல் வைத்தது சகோதரியோடு கொண்ட பிரியமா என்று கேட்டால் நிறைய யோசித்து இல்லை என்று தான் சொல்வேன். என்ன செய்ய, ஆண்டவன் படைப்பில் ஆண் வர்க்கம் அப்படித்தானே.

”கும்பகோணத்து பக்கத்திலே திருக்கருகாவூர்லே இருந்து என் ஷட்டகர் வந்திருக்கார்”.

ராமண்ணா ஜோசியர் கூட வந்த ரெட்டை நாடி மனுஷரை அறிமுகப்படுத்தி வைத்தார். ஷட்டகர் என்றால் கோ-பிரதராம். சகலபாடி என்று புரிந்து கொண்டேன்.

”திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷாம்பிகை கோயில் கேட்டிருப்பேளே. கும்பகோணத்துக்கு ரொம்பப் பக்கம். ரொம்ப பிரசித்தமானது. அங்கே ஸ்ரீகார்யம் பண்றார் ஷட்டகர். கோவில் புனருத்தாரணம். நிதி திரட்ட மெட்றாஸ் வந்திருக்கார்” என்று சற்று நிறுத்த, ஷட்டகர் நெருக்கி அச்சிட்ட ஒரு ரோஜா வண்ண நோட்டீசை என்னிடம் மரியாதையோடு கொடுத்தார்.

”கர்ப்ப ரக்ஷாம்பிகா சமேத முல்லைவனநாதர்’ என்று பெயரே இனிமையும் கம்பீரமும் பாதுகாப்பு தருவதுமாக, படித்ததும் மனம் நிறைந்து போனது.

ரத்னா, வந்தவர்களுக்கும், சேர்ந்து பருக எனக்கும், காப்பியோடு வந்தாள்.

“குழந்தை வரம் கேட்டு அம்மாவிடம் தம்பதியா யார் வந்தாலும் வெறும்கையா போனதில்லே..” என்றார் ஜோசியர். ரத்னா முகம் ஆயிரம் தீபம் ஏற்றினது போல் ஒளிர்ந்ததைக் கவனித்தேன்.

நோட்டீசில் நெய் பிரசாதம், விளக்கெண்ணெய் பிரசாதம், புனுகு சட்டடம் என்று பிரசாத விவரம் பார்த்து நான் கோவில் குருக்களைக் கேட்டேன் –

”பொங்கல் பிரசாதம், லட்டு பிரசாதம், பாயசம், பஞ்சாமிர்த பிரசாதம் தெரியும். அதென்ன விளக்கெண்ணெய் பிரசாதம்?”

வந்தவர் கைப்பையில் இருந்து சிறியதாக ஒரு புத்தகத்தை எடுத்தார். கோவில் வழிபாடும் பூஜைகளும் என்று விவரம் தரும் புத்தகம் அது. ரத்னாவிடம் புத்தகத்தைக் கொடுத்துவிட்டுச் சொன்னார் –

”நீங்களே படிச்சுப் பாருங்கோ. ரொம்ப அபூர்வமானது அதெல்லாம். வேறே எங்கேயும் கேட்டிருக்க மாட்டேள்”.

காப்பி குடித்து, கோவில் நிதிக்கு ஐம்பது ரூபாய் கொடுத்து அவர்களை வழியனுப்ப வாசல் வரை வந்தபோது, “மாமியோட கூட எப்போ தரிசனத்துக்கு வர்றதா இருந்தாலும், என் ஷட்டகர் கிட்டே ஒரு வாரம் முன்னாடி சொல்லிடுங்கோ. எல்லா ஏற்பாடும் பண்ணி வைக்கறேன்” என்று அபயமளித்தார் வந்தவர்.

எல்லா நல்ல நம்பிக்கையும் வேண்டி இருக்க, நிச்சயமா செய்யறேன் என்றபடி உள்ளே நடந்தேன்.

எப்போ கருகாவூர் போகலாம் என்று ரத்னாவைக் கேட்டேன். வழக்கமாக சுறுசுறுப்பு காட்டி பிரயாணத்துக்கு முன்கை எடுக்கும் ரத்னா, இப்போது சிரத்தையே காட்டாதது வியப்பாக இருந்தது.

”போய்ப் போய் என்ன கண்டோம்? கொள்ளு ஊறப்போட்டு தின்னு, அகத்திக்கீரை மசியல் சாப்பிடு, சந்நிதியை சுற்றி உருண்டு கொடு, மாதா ஸ்வரூபத்துக்கு முன்னாடி ரெண்டு மணி நேரம் ஒருவாரம் தினம் மண்டி போட்டு வேண்டிக்கோ, சாதர் வாங்கித் தலையிலே வச்சு தர்க்காவுக்கு எடுத்துப் போய் சூஃபி மகான் சமாதியிலே போர்த்தி தொழுதுட்டு வா… எல்லாம் செஞ்சாச்சு.. இப்ப இதுவா?”

அவள் கண்ணில் நீர் நிறைந்து வழிய என்னை அணைத்துப் பிடித்துக் கொண்டாள்.

“ராஜா, நீ இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கப்பா, நான் முழுமனசோட சம்மதிக்கறேன்” அவள் கேவி அழுது துக்கம் கரைத்தாள்.

”சும்மா ஏதாவது உளறாதே. எனக்கு நீ உனக்கு நான். போதும் நமக்கு”.

அவளை நாற்காலியில் உட்கார்த்தி அலமாரியில் மேலே இருந்த புத்தகத்தை எடுத்துக் கையில் கொடுத்தேன். ’மழலை பட்டாளம்’. தலைப்பைப் பார்த்ததும் ரெண்டு பேரும் சிரிக்க ஆரம்பித்தோம்.

“இது என்ன அம்மன் கோவில்னு சொன்னாங்க?” ரத்னா தான் ஆரம்பித்தாள். சொன்னேன். எங்கே இருக்குதாம்? சொன்னேன். கும்பகோணத்திலே இருந்து பத்து, பனிரெண்டு மைல் தூரம்.

கும்பகோணம் என்ற பெயர் நான் எதிர்பார்த்தபடியே அவளை நிமிர்ந்து உட்கார வைத்தது. ”கும்பகோணம் பக்கதிலேயா? ஏன் முன்னாலேயே சொல்லலே?” என்று என்னைக் கோபித்துக் கொண்டாள்.

கும்பகோணம் எனக்கும் பிடித்த ஊர் தான். புது வருஷத்துக்கு சமைக்கும் வேப்பம்பூ சேர்த்த மாங்காய் வெல்லப் பச்சடி மாதிரி இனிப்பும் அல்லாதவையுமாக எத்தனையோ நினைவுகள் அந்த மண்ணைச் சுற்றி, என்னை, ரத்னாவை, எங்களைச் சுற்றிச் சூழ்ந்து, என்றும் வலம் வருகின்றன.

அடுத்த சனிக்கிழமை வச்சுக்கலாமா? நான் கேட்டேன். வேண்டாம் என்று தீர்மானமாக மறுத்து விட்டாள். நான் மடத்தனமாக மீண்டும் வற்புறுத்த “உங்களுக்கென்ன ஆம்பளை.. போகலாம்னு நினைச்சா அடுத்த நிமிஷம் மூட்டையைக் கட்டிக்கிட்டு, என்னடா சுப்பான்னா எட்டு மணிக்கு தயார்னு ரெடியாகிடுவீங்க.. நாங்க தான் சதா கணக்கு போடணும்.. மாசாந்திரச் சனியன் எப்போ வரும்னு ஞாபகம் வச்சுக்கணும் .. மறக்காம துணி எடுத்து வச்சுக்கணும்.. என்ன சிரமம் இருந்தாலும் சிரிச்சுக்கிட்டே ஒதுங்கணும்..”

வரும் வெள்ளிக்கிழமைக்கு அடுத்த வார வெள்ளிக்கிழமை ராத்திரி போட் மெயில் என்ற ராமேஸ்வரம் போகும் ரயிலில் கும்பகோணம் புறப்பாடு. பொலபொல என்று அடுத்தநாள் சனிக்கிழமை விடியும்போது கும்பகோணம். அங்கிருந்து திருக்கருகாவூர். தரிசனம் முடித்துத் திரும்ப கும்பகோணம். அங்கேயும் ஆலய தரிசனம். அரட்டை. நினைவு கூர்தல். சாயந்திர நடை. ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் மெட்றாஸுக்கு ரயில் ஏறுதல். பிரயாணப் பட்டியல் ஒருமாதிரி ரெடியானது.

விட்டோபாவுக்குக் கடிதம் எழுதி, வரப்போவதைத் தெரியப்படுத்தினேன். கும்பகோணத்திலிருந்து திருக்கருகாவூர் போய்வர உசிதமான வாகனம் எதுவோ அதை வாடகைக்கு எடுத்து வைக்கக் கோரினேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன