திருக்கருகாவூர் 1945 – ராமோஜியம் நாவலில் இருந்து

சாயந்திரம் நாலு மணிக்கு அடுத்த மாதத்தில் இருந்து புதுசாகப் பென்ஷன் தரவேண்டிய ரிடையர்ட் ஊழியர்களின் பைல்கள் பதினேழு வந்து சேர்ந்தன. கையெழுத்துப் போட்டு அவற்றை வாங்கி மேஜையில் வைத்தபோது எல்லா பைலும் அங்கே உட்கார இடம் இல்லை என்று தெரிந்தது.

வேறே பெரிய அகலமான மேஜை வேண்டியிருக்கும் என்று பந்துலு சாரிடம் அறிவிக்கப் போனேன். அவர் தேவலோகத்தில் இருப்பவராக, உற்சாகமாக டெலிபோனில் பேசிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தபடி போனில் சொன்னது –

“ராமோஜிக்கு நூறு வயசு. வந்திருக்கார். இரு. தரேன்”.

விட்டோபாவா? அவரை பந்துலு சாருக்குத் தெரியாதே. பின்னே? அத்தங்கா என்றார்.

பந்துலு இன்னும் வெல்ல அச்சாகக் கரைந்துபோக, போனில் தெலக்ஸ் புவனா. ஜோசியர், மாகாணிக் கிழங்கு, ஆவக்காய், சத்யநாராயண பூஜை.. ஒவ்வொன்றாகக் கேட்டேன். சத்யநாராயண பூஜைக்கு, கரெக்ட் சொன்னாள்.

”ஆமா, வரும் வெள்ளிக்கிழமை எங்க வீட்டுலே வரலட்சுமி நோன்பு, பூஜை. ரத்னா அக்காவை கூட்டிட்டு வாங்க. அவங்களையும் நான் நேரில் வந்து அழைக்க ஆசை. ஷூட்டிங்க் இருந்துகிட்டே இருக்கு. தப்பா நினைக்க வேணாம்னு சொல்லுங்க..”.

”சரி மேடம்.. சரி மேடம்..”

”மேடம்லாம் என்னதுக்கு ராமோஜி சார்.. நான் ரொம்ப சின்னவள்.. புவின்னே கூப்பிடுங்க..”.

விலு மாதிரி இன்னொரு அழகான செல்லப் பெயர்.. புவி.. சொன்னால் ராத்திரி வீட்டில் புவா கிடைக்காது. ஃபோனில் அப்படி அழைத்தால் ரத்னா கேட்கவா போகிறாள், புவி?

என்ன எல்லாம் செல்லப் பெயர் வைக்கிறார்கள்.. விலு புவி.. விபு புலி .. புலி வீட்டிலே பூஜையாம் ..

”என்ன உளறிக்கிட்டே வர்றீங்க.. மறுபடி மோகினிப் பிசாசா?” என்று ரத்னா கேட்டாள்.

”என்னமோ ஞாபகம் .. ஆபீஸ்லே பந்துலு சார் போன் பேசிட்டு இருக்கறபோது குறுக்கே போனேன் நீயும் பேசுன்னு கொடுத்திட்டார்… அப்புறம் வாங்கின மரியாதைக்காவது ரெண்டு வார்த்தை பேசணுமே”

”சரி சரி, தெலக்ஸ் புவனா கூட போன்லே பேசிட்டு வர்றீங்க.. அம்புட்டுதானே.. நீங்க ஒரு வார்த்தை கூட சொல்லாட்டாலும் துப்பறியும் சாம்பு மாதிரி இப்படி வழிசலா அசட்டுச் சிரிப்பு இருக்கே .. இது சொல்லிடும்.. ஆனா சாம்புவோட புத்திசாலித்தனத்துலே ஒரு சிமிட்டா உண்டான்னா சந்தேகம் தான்”

நான் தேவன் என்ற எழுத்தாளரையும் அவருடைய மிடில் க்ளாஸ் ஹீரோ சாம்புவையும் சபித்தேன். கஸ்தூர்பா மாதர் சங்கத்தின் தலைவி, உபதலைவி, அங்கத்தினர்கள் எல்லோரையும் பத்திரிகைக் கதையாக வந்து கட்டிப் போட்டிருக்கிறார்கள் இவர்கள். படிக்க எடுத்தால் உலகமே மறக்கும்.

பாம்பே காஜாவும், கீரைவடையுமாக சாயந்திர டிபன். சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடும்போது, ”வெள்ளிக்கிழமை உனக்கு வேறே ஏதாவது எங்கேஜ்மெண்ட் இருக்கா?” என்று தோரணையாக ரத்னாவைக் கேட்டேன்.

”எங்கேஜ்மெண்டா, ஏழு வருஷம் முந்தி ஒரு அசட்டை எனக்கு புருஷன்னு இச்சலகரஞ்சியிலே எங்க வீட்டுலே நிச்சயம் செஞ்சு, எங்கேஜ்மெண்ட் ஆச்சு.. இனிமே இந்த ஜீவிதத்திலே எனக்கு வேறே எங்கேஜ்மெண்ட் கிடையாது.”

செண்டிமெண்ட் ஆன பதிவிரதையை இறுக அணைத்து கண் இமைகளில் மென்மையாக முத்தமிட்டேன்.

”வெள்ளியா? நாம் போட் மெயில் பிடிச்சு கும்பகோணம் போறோமே” என்று ஆர்வமாகச் சொன்னாள் ரத்னா. அது அடுத்த வெள்ளிக்கிழமை, அன்பே.

“சரி இந்த வெள்ளி எங்கே போகணுமாம்? தெலெக்ஸ் தோழியோட அடுத்த படம் – ‘அபூர்வ சூளாமணி’ சினிமாவா, இல்லே, ‘என் புருஷன்’ டாக்கியா?”.

”எதுவும் இல்லே .. தெலெக்ஸ் வீட்டு வரலட்சுமி நோன்பு பூஜைக்கு உன்னைக் கூப்பிட்டிருக்கா.. கூடவே டவாலி சேவகன் மாதிரி நானும் வருவேன்”

ஒரு வழியாக சமாச்சாரம் சொல்லி முடித்தேன்.

”நேர்லே வந்து கூப்பிட்டிருக்கலாமில்லே” என்று முகத்தை உணர்ச்சி இல்லாதபடி வைத்துக்கொண்டு கேட்டேன். ”தப்பு தான்” என்றேன் அடுத்து.

”என்ன தப்பு? உங்க மாதிரி ஆபீஸ் போய் நாலு பேப்பர்லே கிறுக்கிட்டு வர்ற வேலையா, என்னை மாதிரி வீடு, மாதர் சங்கம்னு நான் நினைச்சபடி பிசியா இல்லேன்னா ஓய்வா இருக்க முடியுமா? ஒரு சின்ன சீன் சினிமா எடுக்க எத்தனையோ மணி நேரம் ஆகுமாம்.. பாவம் அவளும் சின்னப் பொண்ணுதானே.. எல்லாத்தையும் சம்ப்ரதாயப்படி செய்யணும்னு நாம எதிர்பாக்கறது தப்பு இல்லையா?”

புவனா ஆதரவு பிரச்சாரமாக ரத்னா சொற்பொழிய, இன்பத்தேன் வந்து காது, மூக்கு என்று, வாய் தவிர மற்றாங்கே எங்கும் பாய்ந்தது எனக்கு. இதைத் தானே எதிர்பார்த்துக் காய் நகர்த்தினேன்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன