பெரீஸ் பிஸ்கட்டும் ஞாயிற்றுக்கிழமையும் அம்புலுவும் – ராமோஜி – என் புது நாவல்

மங்கலாக மின்னிக் கொண்டிருந்த நாலைந்து நட்சத்திரங்களும் ஒரு ராப்பறவையையுமாக ஆகாசப் பரப்பு கிடந்தது. நான் போர் விமானங்கள் எந்த வினாடியும் எங்கள் தலைக்கு மேலே பறந்து கம்பளம் விரித்தது போல் நெருக்கமாக எங்களைச் சுற்றிக் குண்டு வீசும் என்று எதிர்பார்த்து, ஷெல்டருக்குள், ரத்னா தோளில் தலை சாய்ந்திருந்தேன். ஒரு சத்தமும் இல்லை. ஒரு விமானமும் பறந்து போகவில்லை.

அரைமணி நேரத்தில் விமானத் தாக்குதல் இல்லை என்று அறிவிக்கும் ஆல் க்ளியர் சைரன் கேவல் இன்றி நீண்டு தீர்க்கமாக ஒலித்தது.

ரத்னாபாய் மெல்ல எழுந்து பெஞ்சில் உட்கார்ந்தாள். எதுக்கு இங்கே உட்கார்ந்திருக்கோம்? அவள் என்னை உலுக்கி எழுப்பிக் கேட்டாள்.

“வீட்டுக்குப் போக வேண்டியதுதான்.. வா போகலாம்”. நான் கை தவறிக் கீழே விழுந்த டார்ச் லைட்டை எடுத்துத் தோளில் தொங்கிய பையில் போட்டுக் கொண்டு கிளம்ப அவசரம் காட்டினேன். இன்னொரு தடவை குண்டு வீச்சு வருவதாக எச்சரிக்கும் சைரன் முழங்கினால், இங்கே இன்னொரு அரை மணி, ஒரு மணி நேரம் தங்க முடியாது. ரத்னாவைக் கைத்தாங்கலாகவாவது பிடித்துக் கூட்டிக் கொண்டு வீட்டுக்குப் போக வேண்டும்.

கதவை வாசல் கதவையும், ரேழி கடந்து ஹாலுக்குள் வரும் கம்பிகள் வரிசையாகப் போட்ட அழிக்கதவையும் அடைத்துப் பூட்டி சாவிக்கொத்தை படுக்கையில் தலகாணிக்குக் கீழே வைத்துவிட்டு ரத்னாவைக் கட்டிப் பிடித்துக்கொண்டு நித்திரை போகவேண்டும்.

ராத்திரியில் சைரன் சத்தம் கேட்டால் ஜன்னலில் கருப்புத் துணி மறைப்பையும், வீட்டில் விளக்கு எரியாததையும் உறுதி செய்துகொண்டு, சைரன் ஒலி நிற்கும் வரை எல்லா எதிரி விமானங்களையும் கற்பனை செய்துகொண்டு, குண்டு போட எந்த நிமிடமும் அவர்கள் தயாராகத் தாழப் பறக்கப் போகிறார்கள் என்று பதைபதைத்து, கட்டிலில் உட்கார்ந்தபடி காது கொடுத்துச் சின்னச் சின்ன சப்தங்களையும் மனசில் வாங்கிக்கொண்டு நேரம் போக்க வேண்டும்.

இன்னும் ஒரு முறை சைரன் ஒலித்து எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டதாக அறிவித்ததும் என்ன செய்ய வேண்டும்?

வேறே ஒன்றுமில்லை. ரத்னாவோடு ரமிக்க அதுதான் நேரம். அடுத்த சைரன் கேவிக் கேவி ஓலமிட்டாலும் என்ன போச்சு? பட்டணம் பொடி வாசனையோடு காத்திரமான அந்த சுகம் அனுபவிப்பது போல் வேறென்ன உண்டு?

இந்த ராத்திரிக்கு அது வேண்டாம். அந்த அறியாப் பெண் நிம்மதியாக உறங்கட்டும்.

நாங்கள் நடக்கத் தொடங்க கச்சேரி ரோடில் அபூர்வமாக டாக்சி ஒன்று கிட்டியது. கூலி பேசாமல் ஏறி உட்கார்ந்தோம். வீடு போனால் போதும்.
****************************** *****************
ஜப்பான்காரனுக்கும் ஜெர்மனியனுக்கும் பயப்படாமல் இன்னொரு பொழுது விடிந்தது. ரத்னாபாயைத் தொந்தரவு செய்யாமல் காப்பி சேர்த்து அவளையும் எழுப்பிக் குடிக்கக் கொடுத்தேன். நேற்றைக்கு டீகாக்ஷன் பெரிய பில்டரில் போட்டு வைத்திருந்ததாலும், ஓவல்டின் டப்பா நிறைய சர்க்கரை எடுத்து வைத்திருந்ததாலும் காப்பி சேர்ப்பது சுலபமாகி விட்டது.

பெரீஸ் பிஸ்கட் டின்னையும் அலமாரியில் மேல் அடுக்கில் அஞ்சறைப் பெட்டிக்குப் பின்னால் இருந்து எடுத்தேன்.

ஞாயிற்றுக்கிழமை விடியும்போது பிஸ்கட் டின் காணாமல் போய்விடும். வீட்டில் டாய்லெட்டும் பாத்ரூமும் தவிர எங்கெங்கோ மறைவில் அதை இருத்துவது ரத்னாதான்.

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்தால் அதுவும் பகலுக்கு அப்புறம் ராகுகாலத்தோடு ஒட்டி நாலரை மணியிலிருந்து ஆறு வரை நான் வீட்டுக்குள் சுற்றி வந்து போகவரத் தின்று வயிற்றில் உப்புசம் கண்டு திங்கள்கிழமை விடிந்து ஆபீசுக்குப் போக இடைஞ்சலாகி நான் திண்டாடுவது அடிக்கடி நடப்பதால் ஞாயிற்றுக்கிழமை பிஸ்கட்டுகள் என் கண் பார்வையிலிருந்து மறைந்து விடும் வழக்கம்.

நேற்று தமிழ் வருஷப் பிறப்புக்காக ரஜா என்பதால், ஞாயிற்றுக்கிழமை போல பிஸ்கட்டுகள் காணாமல் போயிருந்தன.

கடிக்க சிரமமான ரஸ்க்குகள் மட்டும் தினசரிப் பேப்பரில் மடித்து சமையல்கட்டில் சுலபமாகக் கைக்கு அகப்படும். ஒரு தடவை இந்துநேசனில் மடித்து வந்த ரஸ்க் சாப்பிடக் கிடைத்தது. இடுப்பு அழகி அம்புலுவின் அட்டகாசம் என்று திருநெல்வேலி வட்டாரத்தில் ஒரு ரெட்டைத் தெரு அம்புலு தினசரி ஒரு மைனரோடு அடங்காமல் ஆடுகிறதாக நியூஸ், அதற்கான சிருங்கார சேர்மானங்களோடு லகரியான நடையில் எழுதப்பட்டுக் கிடைத்தது. அதிலிருந்து எப்போது ரஸ்க் வாங்கி வந்தாலும் அம்புலுவைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

அதென்னமோ பத்திரிகை விளம்பரம் கொடுப்பது போல உசிலம்பட்டி பெரீஸ் பிஸ்கோத்தும் காலைக் காப்பியும் இணை பிரியாத ஜோடியாக இதுவரை இருந்து வருகிறது. காலையில் பிஸ்கட்டைத் தோய்த்து சூடான காப்பி குடிக்கும்போது உலக மகா யுத்தமும் ஜப்பான் குண்டு வீசித் தாக்கும் அபாயமும் ஹிட்லரின் கம்பளிப்பூச்சி மீசையும் அவ்வளவு பயமுறுத்துவதில்லை. ஊரோடு காலி செய்து கொண்டு போனாலும், இன்னும் கொஞ்சம் நாள் தாக்குப் பிடிக்கலாம் என்று ஒரு வினாடி தோன்றுகிறது.
Excerpts from my forthcoming novel ‘Ramoji’ – to be edited

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன