ராமோஜி : எழுதப்படும் என் புதிய நாவல் – சில பகுதிகள்

Excerpts from my forthcoming novel, ‘Ramoji’

சைரன் ஒலித்த ராத்திரி
—————————————-
நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். கற்பகாம்பாள் சந்நிதியிலிருந்து பெரிய குருக்கள் கையில் தீபாராதனைத் தட்டோடு வெளியே வந்தார்.

“வாரும் ஓய் ராமோஜி. என்ன தேடிண்டிருக்கீர்?” அவர் கேட்டார்.

“இங்கே வெடவெடன்னு ஒரு சின்ன வயசுக் குருக்கள் நாயன்மாருக்கெல்லாம் தினசரி உடுத்தி விடுவாரே, இருக்காரான்னு பார்க்கறேன்.. அழுக்கு வேஷ்டி இல்லேயேன்னு அறுபத்து மூணு நாயன்மார்கள்.. சரி மூணு பெண் நாயன்மார்களை விட்டுடலாம்.. அறுபது நாயன்மார்கள் ஓன்னு அழறாங்க”. நான் நமுட்டுச் சிரிப்போடு விசாரித்தேன்.

“இதானே வேணாங்கறது..உடுத்தி விடற குருக்களா? யாரு நம்ம மிருத்யுஞ்ஜெயனா? ரெண்டு நாளா ஆப்சென்ஸ் வித்தவுட் லீவ் .. அவோல் .. ஆளே காணோம். அவா ஏரியாவுலே குண்டு விழுந்ததாமே?” பெரிய குருக்கள் யாரோ பரப்பிய பரபரப்பான வதந்தி நியூஸை என்னிடம் எடுத்து விட்டார்.

“அவர் என்ன லண்டன் பக்கத்திலே இருக்காரா சாமிகளே, ஜெர்மன்காரன் குண்டு போட்டு சேதமாகி குத்த வச்சு உக்காந்திருக்க? மேல மாம்பலத்துலே தானே ஜாகை? கவலைப்படாதேயும்.. அங்கே ஜப்பான்காரன் வரமாட்டான், கோழிக்குஞ்சு சைஸ்லே கொசு இருக்கே, அது பறந்து வந்து ப்ளேனை எல்லாம் ஓட ஓட விரட்டியடிச்சுடாது?” நான் சிரித்துக்கொண்டே கேட்டேன்.

“நீர் இப்படியே விகடம் பண்ணிண்டிரும். அவா மாம்பலம், உம்ம புரசவாக்கம், நான் இருக்கப்பட்ட மந்தவெளி இப்படி எல்லாத்தையும் ஒரு ராத்திரி அலாரம் வச்சு எழுந்திருந்து பந்து மித்ராள் சகிதமா புஷ்பக விமானத்திலே கிளம்பி வந்து ஒரு வழி பண்ணப்போறான் ஜப்பான்காரன்…” என்றார் பெரிய குருக்கள்

”நீங்க எவாகுவேஷன் பண்ணிப் போகல்லியா குருக்களைய்யா?” ரத்னா அவரை விசாரித்தாள். இந்தக் கேள்வி சம்பிரதாயமானதாக மாறி ஒரு வாரமாகி விட்டது.

“ஏண்டி பொண்ணே, எல்லோரும் போயிட்டா கபாலியையும் கற்பகத்தையும் யார் வேளைக்கு ஸ்நானம் பண்ண வச்சு, உடுத்தி விட்டு, ஆகாரம் கொடுக்கறது? வயசான அம்மாவும் அப்பாவும் இந்த ஆத்திலே இருக்கா.. அவாளை விட்டுட்டு போக முடியுமா?” அவர் கர்ப்பகிருஹத்துக்குள் உரிமையோடு கைகாட்டிச் சொன்னபடி உள்ளே போனார்.

குருக்கள் ஒற்றைக் கற்பூரத்தை ஏற்றித் தீபம் காட்டினார். நானும் ரத்னாபாயும் அந்த ஒரு நிமிட பிரகாசத்தில் அம்மாவின் கடாடசத்தில் கரைந்து லோக ஷேமத்துக்காகவும் யுத்தம் நிற்கவும் வேண்டிப் பிரார்த்தித்து உருகினோம். எப்போதும் சேர்ந்து கைகூப்பிக் கண் மூடி நின்று பிரார்த்தித்துக் குழந்தை வரம் கேட்போம். இன்றைக்கு ரெண்டு பேரும் அதை இன்னொரு நாள் சாவகாசமாக இந்தப் பெரிசுகளிடம் பேசிக்கலாம் என்று வைத்து விட்டோம்.

“என்னைக் கேக்கறேளே, பட்டணமே பாதிக்கு மேலே காலியாயிடுத்தே.. நீங்க என்ன பண்றேள்?”

நான் அர்ச்சனைத் தட்டில் போட்ட ஐந்து ரூபாயை எடுத்து வைத்துக்கொண்டபடி குருக்கள் சிரித்தார்..

“ஸ்வாமிகளே, ரிடையர்ட் கவர்மெண்ட் உத்தியோகஸ்தர்களோட பென்ஷன் மாசாமாசம் கணக்குப் பண்ணி கூப்பிட்டு கொடுக்கற வேலைக்கு என்னை மாற்றிட்டாங்க. ஜப்பானியன் வந்தாலும் ஜெர்மன்காரன் வந்தாலும், பிரிட்டீஷ் ராஜ் வேலைக்காரன் நான். ட்யூர்ரிக்குப் போயாகணும்”

“எசன்ஷியல் சர்வீஸஸ். அதுதானே? கெசட்டட் ரேங்க்லேயும் அது உண்டா? வார் டைம் ஆச்சு பாருங்க.. வார் ஃப்ரண்ட்லே எக்கச்சக்கமா ஜாப் இருக்கும்.. டென் ஏ ஒன் போஸ்டிங்குக்கும் எசன்ஷியல், நாநெஷன்ஷியல்னு கேடகரைஸ் பண்ணி அனுப்பிடடலாம்னு வைஸ்ராய் யோஜிக்கறாராம்.” குருக்கள் பொழிந்தார்.

“அடியேன் கெசட்டட் இல்லே ஸ்வாமி..” என்றேன் தன்னிலை விளக்கமாக. “என் ஜி ஓ ஆக இருந்தா என்ன, ஃபோர்ட் செயிண்ட் ஜார்ஜ் அபீஷியல் ஆச்சே.. பத்து கெஸட்டட் ஆபீசர்களுக்கு சமானம்..:” என்று விடாமல் பிடித்தார் பெரிய குருக்கள். அதிகார வர்க்கம், அதன் அமைப்பு, தோற்றம், வளர்ச்சி, மற்றும் அதன் செயல்முறை பற்றி விரிவாகப் பேச, அலசி ஆராயத் தேவையான அறிவு அவரிடம் உண்டு என்று எனக்குத் தெரியும்.

நான் பார்த்தவரை தேவையோ தேவையில்லையோ சகலவிதமான அறிவையும் எங்கே எங்கே என்று தேடிப் போய் வாங்கி மூளையில் சேர்த்து வைத்துக் கொள்வது தவிர்க்க முடியாத பழக்கமாகி விட்டிருக்கிறது. கோயில் சுயம்பாகி என்ற மடைப்பள்ளி சமையல்காரர் ஒருத்தர், என்னமோ ஆர்வம் தூண்ட, டைப்ரைட்டிங் வகுப்புக்கு வந்து கொண்டிருந்ததை அடுத்த தெருவில் பார்த்திருக்கிறேன். அவரிடம் யாரோ சுதந்திரம் கிடைத்ததும் டைப் அடிக்கத் தெரிந்த எல்லோருக்கும் சர்க்கார் டைப்பிஸ்ட் வேலை கொடுக்கப் போகிறார்கள் என்று சொன்னதாகக் கேள்வி.

அந்த சுயம்பாகி இருக்கிறாரா என்று குருக்களை விசாரித்தேன்.

“அதை ஏன் கேக்கறேள். முதல்லே போனவன் சுயம்பாகி கோவிந்தன் தான். சாமியைப் பட்டினி போடலாமா? தெரிஞ்ச வரைக்கும் நானே பிரசாதம் பண்ணி நைவேத்தியம் செஞ்சுண்டிருக்கேன்.. என்ன பாருங்கோ.. எனக்குத் தெரிஞ்ச சமையல் வெண்பொங்கல் தான்.. தினம் அதைத்தான் சுவாமியும் அம்பாளும் சாப்பிடறா.. அலுத்துப் போய், பிராணதார்த்தி, என்னைத்தான்.. நாங்க மாடவீதி மெஸ்ஸுலே கோதுமைத் தோசை சாப்பிட்டுக்கறோம்னு எழுந்து போய்ட்டு வரப்போறா ரெண்டு பெரியவாளும்”.

ப்ராணதார்த்தி குருக்களோடு சேர்ந்து நாங்களும் சிரித்தோம்.

“குருக்களய்யா, நான் தினம் ஒரு வேளை நைவேத்தியத்துக்கு வீட்டிலே பிரசாதம் செஞ்சு எடுத்து வரட்டா?” ரத்னா அவரிடம் அவசரக் கோரிக்கை வைத்தாள்.

ஒரு சங்கடமான மௌனம் நிலவியது. “இப்போதைக்கு வேணாம்.. அப்புறம் தேவைன்னா சொல்றேன்”, குருக்கள் அவசரமாகச் சொல்லி சுவாமி சந்நிதிக்குள் நடந்தார். ரத்னாவும் நானும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்தபடி வெளிப் பிரகாரத்துக்கு நடந்தோம். கேட்டிருக்கக் கூடாதோ என்று என் முகத்தைப் பார்த்தாள் ரத்னா. சிரித்தேன்.

நாங்கள் ட்ராம் நிற்கும் இடத்துக்கு நடக்க ஆரம்பித்தபோது தெருவிளக்குகள் ஒன்று இரண்டு தவிர மற்ற எதுவும் எரியவில்லை. ஒரு நிமிடம் நின்றோம். கோவில் குளத்துப் பக்கம் நடந்து போய் அங்கிருந்து கோபுரத்தைத் தரிசித்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டு வருவதில் ரத்னாவுக்கு ஏகப் பிரியம் உண்டு. போகலாம் என்றாள் அவள்.

”இந்த முக்கால் இருட்டுலே குளத்துக்குப் பக்கம் போகணுமா? பூச்சி பொட்டு ஊர்ந்துக்கிட்டிருக்கும். செயினைப் பறிக்க இருட்டில் எவனாவது நிற்பான். மிருகக் காட்சிசாலையில் இருந்து முதலை ஏதாவது தப்பி வந்து குளத்தில் மறஞ்சு இருந்து நீயும் நானும் போகிறபோது காலைக் கவ்வி இழுக்கும். முதலை என்ன, ஜூவில் இருந்து தப்பிச்சு சிங்கம் புலி கூட ஊர்லே திரியறதுன்னு கேள்வி. அதெல்லாம் கூண்டை விட்டு வெளியே வந்தா?”.

நான் மெதுவாகச் சொன்னேன். சொல்லும்போது நானே அதை எல்லாம் நம்ப ஆரம்பித்து விட்டேன். ரத்னாபாய் ஒரு வினாடி யோசனையில் நின்றாள்.

”சரி வேணாம், இங்கே பக்கத்திலே ஏதாவது மெஸ் திறந்திருந்தால், ரெண்டு இட்லி தின்னுட்டுப் போகலாமா?”, ரத்னாபாய் மெல்லிய குரலில் கேட்டாள்.

ஆச்சரியப்பட்டுப் போய் அவளைப் பார்த்தேன். என்னிடம் வெளியிடத்தில் சாப்பிடலாமா என்று அவள் கேட்டது இதுதான் முதல் தடவை.

மாடவீதியில் தெரு ஓரம் வைத்து விற்கும் ஒன்றிரண்டு இட்லிக் கடைகள் திறந்திருக்கும். அங்கே ஒரு பின் தெருவில் மத்தள ராயர் மெஸ் என்று வீட்டுச் சாப்பாடு போடும் இடம் இருக்கிற ஞாபகம். எவாகுவேஷன் நேரத்தில் இட்லி அவித்து விற்க யார் மெனக்கெடுவார்கள்? .

என்னோடு கூட போட்டி போட்டு வேகமாக நடக்கிற ரத்னாபாய் இன்றைக்கு என்னமோ கொஞ்சம் நடை தளர்ந்து மெல்ல நடந்து வந்தாள். அவள் பக்கத்தில் நடக்கிற நினைப்பில் நான் பேசிக்கொண்டே வந்து சட்டென்று நின்றால் கொஞ்சம் பின்னாடி அவள் வந்து கொண்டிருந்ததைக் கவனித்தேன்.

“என்னாச்சும்மா, இருட்டிலே நடக்கக் கஷ்டமா இருக்கா? ஜட்கா, கை ரிக்ஷா ஏதாவது வருதா பார்க்கட்டுமா?”

ஆதரவாகக் கேட்டேன். உடம்பு அனுபவிக்கும் வாதனை ஏதோ உண்டென்று கோடி காட்டுவது போல் அவள் முகம் சுருங்கியது. மெல்ல எழுந்து உள்ளே பரவி உயரும் ஏதோ வலியைப் பொறுத்தபடி இடுப்பில் கை வைத்து நின்றவள் என் கையை மெல்லப் பற்றியபடி பார்த்தாள். எனக்கு உடம்பு முழுக்க ஒரு அதிர்ச்சி பரவி ஓடியது. என்ன ஆச்சு என் ரத்னாபாய்க்கு?

”ஒண்ணும் இல்லேங்க. கொஞ்சம் வயத்து வலி மாதிரி”.

அவள் கொஞ்சம் என்றாலும் முகக்குறிப்பு அதிகமாக வலியைச் சொன்னது. தெரு என்றும் பார்க்காது அவள் வயிற்றில் கை வைத்து மெல்லத் தடவினேன். தோளில் முகம் புதைக்க வைத்து தலையை வருடினேன்.

சட்டென்று சைரன் சத்தம். குண்டு வீசித் தாக்கும் எதிரி விமானங்கள் வந்து கொண்டிருக்கின்றன, உயிருக்கு அபாயம் என்று சங்கு ஊதி சர்க்கார் தரும் எச்சரிக்கை. தெருவில் நடக்காமல், வண்டி ஏறிப் போகாமல் அங்கங்கே பள்ளம் பறித்துக் கட்டியிருக்கும் தங்குமிடங்களுக்கு உடனடியாகப் போய்ச் சேர வேண்டும்.

நான் ரத்னாவை இரண்டு கையையும் ஏந்திக் கட்டித் தூக்கிக் கொண்டு பக்கத்தில் இருக்கும் ஷெல்டருக்கு அவசரமாக நகர்ந்தேன்.

தெரு இருட்டில் கிடந்தது. சைக்கிளில் இருட்டில் முட்டி மோதி வந்த ஏஆர்பி வார்டர் பிகில் எடுத்து ஊதி “சீக்கிரம்.. சீக்கிரம்.. ஏன் அவங்களை தூக்கிட்டு போறீங்க..நடத்தி கூட்டிப் போங்க. இன்னும் ரெண்டு நிமிஷத்துலே ஷெல்டர்லே இருக்கணும். குண்டு போட ஆரம்பிச்சு உசிரு போச்சுன்னா என்னைக் கேட்காதீங்க” அவர் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தார்.

ஷெல்டருக்குள் இறங்க ரத்னாபாய் கொஞ்சம் சிரமப்பட்டாள். ஆச்சா ஆச்சா என்று ஏ ஆர் பி வார்டன் தடியன் மேலே இருந்து எட்டிஎட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். ராமோஜியும் ரத்னாபாயும் இன்றைய இலக்கு. அவர்களை மெட்றாஸில் எங்கே இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து தலையில் குண்டு போடு என்று ஜப்பான் அரசாங்கமும் ஜெர்மனி கவர்மெண்டும் அவரவர் விமானப்படையை அனுப்பியிருப்பார்கள் என்று ஹிட்லரோ வேறே யாரோ அவனிடம் சொல்லி இருக்க வேண்டும்.

சைரன் ஒலித்து அடங்கும் போது நானும் ரத்னாபாயும் ஷெல்டரில் போட்டிருந்த மர பெஞ்சில் உட்கார்ந்திருந்தோம். அவளால் அசைய முடியவில்லை. வயிற்றைக் கையால் பற்றியபடி இன்னொரு கையால் என் தோளில் கைவைத்து அலைபாய்ந்தாள். நான் மெல்ல பெஞ்சில் அவளைப் படுக்க வைத்தேன். தலைமாட்டில் உட்கார்ந்தபடி வானத்தை நிமிர்ந்து பார்த்தேன்.

கையில் வைத்திருந்த டார்ச் லைட்டை வானத்தை நோக்கி அடித்தேன். ராஜாங்க விரோதக் காரியம் தான். கை இருட்டில் சும்மா இருக்காமல் ஏதாவது செய்கிறதால் இப்படி விபரீதம். எதிரி விமானம், வேறே கிரகத்திலிருந்து யாராவது விநோதப் பிறவி, ஏதாவது ராப்பறவை, ஒரு யந்திரம், வகைப்படுத்த முடியாத உயிரினம் என் நாலு பேட்டரி எவரெடி பிராண்ட் டார்ச் வெளிச்சத்தை அடையாளம் கண்டு என் பக்கம் திரும்புகிறதோ. எதுவுமில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன