மீசை டாக்டர் நாயரும் காந்தியும் – எழுதிக் கொண்டிருக்கும் ‘ராமோஜி’ நாவலில் இருந்து

பாரிஸ் ஸ்வீட்ஸ் கம்பெனியாரின் தேங்காய் துருவிப் போட்ட மெல்லிசுத் தட்டைச் சாக்லெட்களையும் முரமுரவென்ற பெரீஸ் வெண்ணெய் பிஸ்கட்களையும் ரத்னா மூக்குத் தூளுக்கு அடுத்தபடி நேசிக்கிறாள். பாலில் தோய்த்தால் விநோதமாக சீரக வாடை அடிக்கக் குழைந்து போகும் மில்க் ரஸ்க் கூட அவளுக்கு இஷ்டம் தான். வாராவாரம் வெள்ளிக்கிழமை ஆபீசில் இருந்து வரும்போது பிராட்வே பேக்கரிக்கடையில் இந்த உருப்படிகளை வாங்காமல் வருவதில்லை. இப்போதெல்லாம் ராயர் நெய்மிட்டாய்க் கடைக்குப் போவதில்லை. கடை அடைத்து வைத்திருக்கிறது. ஊர் பற்றி எரியும்போது, அல்வாவும், குலோப்ஜாமுனும். ஜாங்கிரியும், பாதுஷாவும் யார் கிண்டிக் கிளறிச் சாப்பிட விற்கிறார்கள்?

ராயர் குடும்பத்தோடு உடுப்பி போய்விட்டதாக கடையில் உலோகத் தராசில் பூந்தி நிறுத்துக் கொடுத்த கோபிகிருஷ்ண ராவ் சொன்னான். ’பரியாயம் முடிஞ்சு தான்’ வருவாராம். கன்னட பூமியில் மாத்வ மடாதிபதி நிர்வாக நியமனத்துக்கும் மதறாஸ் சௌகார்ப்பேட்டையில் ராயர் மிட்டாய்க்கடை கதவு திறந்து மைசூர்பாகு விற்பதற்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை.

கோபி இப்போது கோட்டை காண்டீனில் தலை எண்ணி, கலந்த சாதம் பண்ண காண்டீன்கார பஞ்சாபகேச அய்யருக்குத் தோராயமாகக் கணக்கு தருகிறான். ரேஷன் கடையில் போய் கேண்டீனுக்கான கோதுமையும் அரிசியும் வாங்கித் தலையில் வைத்துக் கொண்டு வருகிறான். அரசாங்கச் செலவில் தினசரி காலையில் டீ போட்டு உத்தியோகஸ்தர்களின் மேஜைக்கு எடுத்துப் போய்த் தருகிறான்.

வெள்ளிக்கிழமை மதியம் பிஸ்கட் வாங்கவோ, செவ்வாய்க் கிழமை தோறும் சாயந்திரம் தமிழ்ப் பத்திரிகை வாங்கவோ இப்போதெல்லாம் வேலைப் பளு காரணமாக எனக்கு அநேகமாக முடியாமல் போகும்போது அவன் தான் அதெல்லாம் பிற்பகலில் போய் வாங்கி வந்து என் மேஜைக்கு வலது ஓரம் பையோடு வைத்து விடுகிறான். வேலையைப் பொறுத்து அவனுக்கு ஒவ்வொரு ஏவலுக்கும் காசு. சில்லறைத் தட்டுபாட்டுக் காலம் என்பதால் தனித்தனியாகத் தரக் கஷ்டமாக இருக்கிறது. பெரிய ஓட்டல்களே சில்லறைத் தட்டுப்பாட்டில் தத்தளிக்க, ரிசர்வ் பேங்க் வாராவாரம் கியூ நிறுத்தி அவர்களுக்குக் கணிசமாகச் சில்லறை விநியோகிக்கிறது. கோபிக்குச் சில்லறை தர ரிசர்வ் பேங்குக்குப் போக முடியாது.

மாதம் ஒரு கணிசமான தொகை கொடுத்து இப்படியான குற்றேவல் பணி எல்லாம் ஒட்டுமொத்தமாகச் செய்ய வைக்கலாம் என்று யோசனையோடு அவனைக் கேட்க, தத்துவார்த்தமாக கோபி சொன்னது –

”ராமோஜி ஸ்வாமின், மாதம் பிறந்து சம்பளம் மாதிரி வாங்கலாம் தான். ஆனால் நாளைக்கு விடிந்து நானிருப்பேனா தெரியாது. மதறாஸ் இருக்குமா, லண்டன் இருக்குமா, கல்கத்தாவும் டெல்லியும் இருக்குமா அறியோம். அடுத்த மாசம் வரை உசிரோடு நாம் இருப்போமா, கோட்டையில் இந்த ஆபீஸ் இருக்குமா, கோட்டை இருக்குமா, டீ போட பால் கறக்க எருமை இருக்குமா, கேண்டீனுக்கு பாலும், ரேஷன் ஆபிஸ் பெர்மிட்டோடு அரிசியும் இனியும் வருமா தெரியாது. இத்தனை தெரியாதுகள் இருக்கறபோது மாசச் சம்பளம் பேசி என்ன பிரயோஜனம்? அப்பப்ப முடிச்சு வாங்கிக்கறேன். நீங்க மறந்து போனாலும் என்ன போச்சு? அடுத்து இன்னொரு வேலை வரும்போது அதோடு சேர்த்து வாங்கிக்கறேன். பெரீஸ் பிஸ்கட்டுலே உப்பு பிஸ்கட் டிமாண்ட் நிறைய இருக்கு. உங்களுக்கு எடுத்து வைக்கச் சொல்லியிருக்கேன். யார் இருந்தாலும் போனாலும் பெரீஸ் பிஸ்கோத்து அன்னிக்கு கண்டமேனிக்கு அழிவில்லாம என்றும் இருக்கும்.. வாராந்திர ரெஸ்ட் எடுத்து திங்கள்கிழமை ஆபீஸ் வரும்போது புதுப் பையும் பிஸ்கட்டுக்கு ரெண்டு ரூபாயும் மாமிகிட்டே நான் சொன்னேன்னு கேட்டு வாங்கிண்டு வாங்கோ ..” என்று கோபி சொல்லி அனுப்பியிருந்தது நினைவு வர ரத்னாவைப் பார்த்தேன். அவள் மறுபடி உறங்கப் போயிருந்தாள்.

கடந்து போன ராத்திரியில் ரத்னாவுக்கு மறுபடியும் வயிற்று வலி கண்டது. லேசாகத்தான் என்றாள். அதற்காக சும்மா விட்டுவிட முடியுமா? வலி மட்டுப்பட உமியைத் துணியில் கட்டி, அவள் வாராவாரம் எண்ணெய் தேய்த்துக் குளித்து கூந்தலுக்கு தூபம் போடும் சின்னக் குமுட்டி அடுப்பை ஹாலுக்கு நகர்த்தி, அந்த நெருப்பில் உமி மூட்டையை வாட்டி அவள் அடிவயிற்றில் இதமாக வைத்துப் புரட்டியபடி இருந்தேன்.

உங்களுக்கு ஏன் இடைஞ்சல், போய்ப் படுங்க என்று அவள் பிடிவாதமாக என்னை விலக்கப் பார்த்தாலும் அவள் தேகம் படும் வாதனையை அவளால் மறைக்க முடியவில்லை.

விடிகாலையில் கொஞ்சம் உறங்கியிருக்கிறாள். நான் சேர்த்த காப்பியை அரைகுறை பிரக்ஞையோடு கையணைத்து வாங்கி, சீப்பிக் குடித்து விட்டு ராத்திரி கண்விழிப்புக்கு கொஞ்சமாவது ஈடுகட்டும் உறக்கம் அது.

ஒரு பிஸ்கட்டும் காப்பியுமாக ஹால் தரையில் உட்கார்ந்தபோது என் தலையைக் குறி வைத்து சுதேசமித்திரனும் ஹிந்து பத்திரிகையும் வாசலில் இருந்து வந்து விழுந்தன.

அதிரடியாக நேற்று ராத்திரி சகலருக்கும் நல்ல புத்தி வந்து சகலமான போர்முனைகளிலும் யுத்தம் முடிவுக்கு வந்தது என்று நியூஸ் வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஒருநாள் ஆபீசுக்கு லீவு சொல்லி விட்டு ஊர் முழுக்க ட்ராமிலும் பஸ்ஸிலும் ஏறி இறங்கிக் கால்போனபடி சுற்றி அதைக் கொண்டாடலாம். இன்றைக்கு முடியாது.

ரத்னாவுக்கு இப்போது வலி தணிந்தாலும் இன்னும் உள்ளே ஏதோ குழப்பம் இருந்து கொண்டிருக்கிறது.

அவளைக் கூட்டிக்கொண்டு மீசை நாயர் டாக்டரைப் போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்று தீர்மானம் செய்து கொண்டேன்.

டாக்டர் நாயர், ஜஸ்டிஸ் கட்சிக்காரர். சும்மா வகைதொகை இல்லாமல், மகாத்மாவைக் கேலி செய்வார். அதற்குப் பார்த்தால் முடியாது. நமக்கு உடம்பு ஸ்வஸ்தம் ஆக வேணுமே. மீசை நாயர் டாக்டரின் அரசியல் பிரசங்கத்தை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிட்டு வர வேண்டியதுதான். புரசைவாக்கத்திலிருந்து ஸ்பர்டாங்க் ரோடு வழியாக கிழக்கு மாம்பலம் போனால் அவருடைய கிளினிக்கில் கூட்டம் அலைமோதும் அங்கே போக வேண்டாமல் இப்போது புரசைவாக்கம் டவுட்டனிலும் டிஸ்பென்சரி வைத்து தினம் நாலு மணி நேரம் வருகிறார். அது மதியம் ரெண்டு மணி தொடங்கி சாயந்திரம் ஆறு மணி வரை.

இன்று சில ரிடையர்ட் உத்தியோகஸ்தர்களுக்கு தாமதமாக பெங்களூரில் இருந்து சாங்க்ஷன் ஆகி வந்த பென்ஷனைப் பட்டுவாடா செய்ய வேண்டும். ஆபீஸ் போய் பகலுக்குள் அதை முடித்து, மதியம் அரை நாள் லீவு சொல்லி விட்டு வந்து ரத்னாவை டாக்டரிடம் அழைத்துச் செல்ல முடிவு செய்தேன்.

பரபரவென்று சாதம், வற்றல் குழம்பு, சுட்ட அப்பளம் என்று மதியச் சாப்பாட்டுக்குத் தயார் செய்து வைக்க உத்தேசம். வற்றல் குழம்புக்கான கரைசல் திடப்படுத்தப்பட்டு பாட்டிலில் அடைத்து வருகிறது. மெட்றாஸில் ஐயர் ஓட்டல்காரர்களும், கும்பகோணத்தில் டி எஸ் ஆர் கம்பெனியும், ’உடனே இட்லி’, ’உடனே உப்புமா’ என்று யுத்த காலத்தில் நூதனமான ஆகாரங்களை விற்க ஆரம்பித்திருக்கிறார்கள். டிஎஸ் ஆர் வற்றல் குழம்பு கரைசல் பாட்டில் பூஜை அறையில் கிருஷ்ணன் விக்ரகத்துக்குப் பின்னால் கிடைத்தது.

“ஞாயிற்றுக்கிழமை பிஸ்கோத்து முழுங்கறதோட இந்த உடனே. உடனுக்குடன் ஆகாரம் வேறே உங்களுக்கு மஹா இஷ்டம்.. வாயிலே கன்னுக்குட்டிக்கு வைக்கற மாதிரி வைக்கோல் மூடி போட வேண்டிய விஷயம். வெங்கலப்பானை நிறைய சாதம் வடிச்சு வச்சதை ஒரு பத்து நிமிஷம் அடுத்த வீட்டுக்குப் போய்ட்டு வரதுக்குள்ளே புளியோதரை கரைசல் ஊத்திக் கலந்து முழுங்கி வச்சிருக்கீங்க. வயறு என்னத்துக்கு ஆகும்? வாரம் ஏழு நாளும் ஆபீஸ் வைக்கக் கூடாதா” என்று போனவாரம் தான் ரத்னா பிரலாபித்தாள். நேற்று வருஷப் பிறப்பு விடுமுறை என்று டிஎஸ் ஆர் பாட்டிலும் கிருஷ்ண விக்கிரகத்துக்குப் பின்னால் போய் உட்கார்ந்துவிட்டது.

குளித்து விட்டு அரை மணி நேரத்தில் சமையல் முடித்தேன். வெள்ளிக்கிழமை வாங்கி வந்த பாக்கி ரொட்டி இருந்ததைக் கவனித்தேன். உதிர்த்துப் போட்டு பச்சை மிளகாய், இஞ்சி, மிளகாய்ப்பொடி, நல்லெண்ணெய் கலந்து கடாயில் உப்புமா செய்து ரத்னாவுக்குக் கொஞ்சம் ஊட்டலாமா என்று பார்த்தால் அவள் வேண்டாம் என்று சொன்னது மட்டுமில்லை, அதிரடியாக எழுந்து உட்கார்ந்து சமைக்கப் போவதாக அறிவித்தாள்.

ஒருநாள் ஓய்வு கொண்டாடி விட்டுச் சமைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லி, மதியச் சாப்பாட்டு பதார்த்தங்களை சமையல்கட்டில் அணைத்த அடுப்பு மேல் தாம்பாளம் இட்டு வைத்து விட்டு ஆபீஸ் கிளம்பினேன்.

ரத்னா வாரப் பத்திரிகையைப் படித்தபடி எனக்கு விடைகொடுத்தது ஆசுவாசமாக இருந்தது. திரும்ப உறங்கப் போயிருந்தால் அந்தக் கோலத்தில் விட்டுவிட்டு ஆபீஸ் போக மனம் இருந்திருக்காது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன