ராமோஜி – நான் எழுதிக் கொண்டிருக்கும் அடுத்த நாவலில் இருந்து

1944 மார்ச்

”ரத்னா, என் சீமாட்டி, என் சக்ரவர்த்தினி, குட் மார்னிங்க். உன் பெயர் தினசரி பேப்பரில் வந்திருக்கே. பார்த்தாயோ. க்யாதி மிகுந்து விட்டாயடி பெண்ணே. ஆயிரம் அபிநந்தனம் சொல்லி உன் காலைப் பிடித்து நமஸ்காரம் செய்கிறேன்”.

ஊஞ்சலில் ஜோடியாக அமர்ந்து, கையில் விரித்துப் பிடித்த வாரப் பத்திரிகையோடு ரத்னாவின் இடுப்பை வளைத்த நான், மனம் முழுக்க அடர்ந்து பொங்கிய பெருங் களிப்போடு சொன்னேன்.

“இது காலுமில்லை, அது டெய்லி பேப்பரும் இல்லை” என்று நானும் கூடச் சேர்ந்து சொல்லும்படியாக ரத்னா கிண்கிணிச் சிரிப்போடு தொடர, இன்னொரு ஞாயிற்றுக்கிழமை சுப உதயம் ஆனதாக வீட்டுத் தோட்டத்தில் பறவைகள் அறிவித்துப் பாடிக் கொண்டிருந்தன.

“இதோ பார் பாரதி நினைவு மண்டபத்துக்கு நீ நிதி உதவி செய்த விவரம்” என்று வாரப் பத்திரிகைப் பக்கத்தில் விரல் ஓட்டிக் காட்டினேன்.

”நானா, நிதியா? எப்போ? கனவிலா?”. அழகாக ஆச்சரியப்பட்டாள். சுட்டப்பட்ட இடத்தில் அச்சடித்திருந்ததை அவள் சத்தம் கூட்டிப் படித்தாள் – பழைய வண்ணாரப்பேட்டை கஸ்தூரி மாதர் சங்கத்தின் சார்பாக தலைவி ரத்னாபாய் ஒரு ரூபாய்.

“இது யார் இன்னொரு ரத்னாபாய்? என் சக்களத்தியா? அவள் ஏன் பாதிரியாருக்கு தானம் தரணும்? அதுவும் முழுசாக ஒரு வெள்ளி ரூபாயை எடுத்து இந்தாரும் வச்சுக்கும் என்று?

“இது மாதாக்கோவிலுக்கு பூசை வைக்கப் போகிற பாதிரிகள் யாருமில்லை. இவர் பாரதியார். சுப்பிரமணிய பாரதியார்” என்றேன். அவள் முகத்தில், இதெல்லாம் எனக்கு ஒண்ணும் புரியறதில்லே எனும் அறியாப் பேதை பாவம்.

“பாரதியார் தெரியாதா? நீ வியாசர் விருந்து படிக்கிற அதே பத்திரிகையில் அவர் கவியே இல்லை என்று அறிவித்து, பிறகு கரணம் அடித்து அவரே மகாகவி என்று விடாமல் எழுதுகிற வழக்கம் உண்டே. அதொண்ணும் நீ படிக்கிறதில்லையா?” எனக் கேட்டேன்.

“அவ்வளவு நுட்பமாகப் பத்திரிகை படிக்க நேரம் எங்கே கிட்டுகிறது நாதா” என்றபடி அச்சடித்த பத்திரிகையின் அச்சுமை வாடை நுகர்ந்து, நாசி சுருக்கி, முகம் சுளித்தாள் ரத்னாபாய். நான் இதற்காகவே காத்திருந்த மாதிரி அவள் மனக் குறிப்பை அறிந்தவனாக, ஊஞ்சலுக்குப் பின்னால் இருந்து பட்டணம் பொடிச் சிமிழை எம்பி எடுத்துத் திறந்து ஒரு சிட்டிகை அள்ளி எடுத்து அந்த அழகான மூக்கின் வெளியே விரலைக் கிடைமட்டத்தில் வைத்தேன்.

ஒற்றை உறிஞ்சில் அதை முகர்ந்து சுகம் கொண்டாடி ஈடுபட்டுத் தும்மி என்மேல் பட்சமாகச் சிரித்தாள் பேரழகி. என் மேல்துண்டால் அந்த நாசியைத் துடைத்து அவளை முஸ்தீபே இல்லாமல் அணைத்துக் கொண்டேன். அவளுக்கு பாரதியார் தெரியாவிட்டால் பரவாயில்லை. என்னைத் தெரிந்தாலே எதேஷ்டம்.

ரத்னாபாய்க்கு மராத்தி அபங்க் தோத்திரப் பாடல்களும், மராத்தி ராமாயணமும், இந்தி ராமன்கதை துளசிதாசரின் ராமசரித மானஸும் கரதலப்பாடமாக புத்தியில் உண்டே, அதொண்ணும் எனக்குப் பாடமில்லையே.

இதை முச்சூரும் இத்தனை கோர்வையாக வராமல் துண்டு துணுக்காக வெளிப்படுத்தி அவளிடம் நைச்சியமான குரலில் சொல்ல, உடன் திருப்தியடைந்தாள்.

“சரி, பாரதியார் சுகமாக ஜீவிக்கட்டும். இந்த ரத்னாபாய் யார்? இதென்ன நம் ஆளுகைக்கு உட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டையில் திடுதிப்பென்று ஒரு கஸ்தூரி மாதர் சங்கம்?”.

அவள் கேள்விக் கணைகளால் என்னைத் துளைத்தெடுக்க, சமையல்கட்டில் கால் நீட்டி சுவரில் சாய்ந்து ஒரு ஐந்து பத்து நிமிடம் அவளோடு சல்லாபம் செய்தபடி சற்றே நேரம் போக்க உத்தேசித்தேன். இது பழைய தமிழில் வந்து போகும் சல்லாபம். சும்மா பேசிக் கொண்டிருப்பது.

“ஊரோடு, தமிழ் பேசுகிற எத்தனையோ தேசங்களில் இருந்து நிதி வசூல் செய்து பாரதியார் என்ற கவிஞருக்கு நினைவு மண்டபம் எழுப்பப் போகிறது. அறிவாய். அவர் இப்போது உசிரோடு இல்லை. அவர் பிறந்த ஊரில் இந்த மண்டபம் கட்ட, எல்லோரும் நன்கொடை தருகிற மாதிரி, கோட்டை கிளார்க் ராமோஜி ராவும் ஒரு ரூபாய் அன்பளிப்பு மணியார்டர் அனுப்பினேன். என் பெயரில் எதுக்கு என்று உன் பெயரைப் போட்டபோது மாதர் சங்கமும் மனதில் உதிச்சு வந்தது. அதான் கஸ்தூரிபா மாதர் சங்கத் தலைவி ரத்னாபாய். நீயே தான்”.

“கஸ்தூரி மாதர் சங்கம்னு நீங்க சொல்லிக் கேட்ட மாதிரி இருந்துது”, அவளுக்குப் பாம்புச் செவி.

”கஸ்தூர்பான்னு போட வேண்டாம், நான் சர்க்கார் உத்தியோகஸ்தன். அதுனாலே சங்கம் பேர் கஸ்தூரி மாதர் சங்கம். பூரணம் எப்படி இருந்தா என்ன, கொழக்கட்டை வெந்திருந்தா சரிதான்”.

நான் பெருமையோடு சொன்னாலும், இந்த வாதம் பொத்தலானது என்று தெரியும்.

”அது கிடக்கட்டும். நீங்க தானே நிதி கொடுத்தது. உங்க பெயர் பத்திரிகையிலே வந்தா கௌரவமா இருக்குமே. நான் எங்கே நடுவிலே வந்தேன்?”

ரத்னாபாய் கேட்க, “சர்க்கார் உத்யோகஸ்தன் அரசாங்க விரோதமானதாகக் கருதக்கூடிய, சர்க்காரை விழுந்துவிடும்படிக்கு அசைக்கப் பார்க்கும் காரியம் எதுவும் செய்யலாகாது பெண்ணே. ஒருவேளை சுதந்திரம் கிடைத்தால் சங்கத்தோட பெயரை கஸ்தூரிபா சங்கம்னு மாத்திடலாம். அதுக்குள்ளே கஸ்தூரிபா யார்னு நம்ம ஆளுங்க மறக்காமல் இருக்கணும்” என்று விளக்கம் சொன்னேன்.

”மகாகவி, உலகமே பாராட்டி துதிக்கறாங்கன்னு சொல்றீங்க. அவருக்கு நீங்க ஒரு ரூபாய் கொடுத்தா பிரிட்டீஷ் சர்க்கார் எப்படி ஆட்டம் காணும்? அது எப்படி ராஜதுரோகமாகும்? காசு வசூல் பண்ணிக் கட்டற கட்டடம் எப்படி தேசவிரோதமாகும்? தேசத் துரோகம் என்றால், அதைக் கட்ட கொத்தனார், சித்தாள் எங்கேயிருந்து கிடைப்பாங்க? இங்கிலீஷ்கார துரைகளும் துரைசானிகளும் சாரத்திலே ஏறி சும்மாடு வச்சுக்கிட்டு வேலை பார்ப்பாங்களா? செங்கல் சிமெண்ட் யார் கொடுப்பாங்க?”.

வரிசையாக நேர்த்தியாக அடுக்கினாள் அவள்.

அவள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் நகர்ந்தேன். தொடர்ந்து வந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில், அண்டை அயலில் ஏழெட்டு பெண்களை மஞ்சள் குங்குமம் வாங்க அழைத்து ஜமக்காளம் விரித்து உட்கார வைத்து அவல் கேசரி கிண்டி உபசரித்து பத்து நிமிஷம் என் துணையோடு ரத்னா பிரசங்கம் செய்தாள். நான் அவ்வப்போது கைதட்டி கூட்டத்தையும் கைகாட்ட, மாதர் சங்கம் சுகப் பிரசவம் ஆனது. மஞ்சள் குங்குமத்தோடு தோட்டத்தில் காய்த்த பச்சுபச்சென்று பிஞ்சு வெண்டைக்காயும் வந்து சிறப்பித்த சகல மாதருக்கும் பிரசாதமாக ஈயப்பட்டது.

வாசலில் சின்னதாக ஒரு தகரப் பலகையில் சங்கம் பெயர் எழுதித் தொங்கவிட்டால் நேர்த்தியாக இருக்கும் என்று கேசரியை ருசித்துச் சாப்பிட்ட ஸ்திரிகள் அபிப்பிராயப்பட, அது அப்புறம் பார்த்துக்கலாம் என்று அவசரமாக ஒத்திவைத்து, சங்கத்தில் என்ன எல்லாம் செய்யலாம் என்று ஆலோசனை தரத் தொடங்கினேன்.

முதல் அட்டவணை ஐட்டம் தேசபக்தி, தெய்வ பக்தி கானங்கள் பாட உறுப்பினர்களுக்கும் சககுடும்பத்தினருக்கும் சொல்லிக் கொடுப்பது.

”இதுக்கு காசு எதுவும் தரவேண்டியது இல்லையே?”

சுபாங்கி அம்மாள் கேட்டாள்.

“ஒரு தம்பிடி கூட யாரும் யாருக்கும் தர வேண்டியதில்லை. பாடிப் பாடி தொண்டை கட்டினால் பெப்ஸ் இருமல் மாத்திரை வாங்க ஒரு அணா செலவு பிடிக்கலாம். சும்மா தொண்டை கட்டினாலே அந்தச் செலவு உண்டே”. என்றேன் சமாதானமாக.

”பெப்ஸு எல்லாம் எதுக்கு? சித்தரத்தையைத் தட்டிப்போட்டுக் காய்ச்சி ரெண்டு வேளை அந்த வென்னீர் குடித்தால் போதும்” என்று விலாசினி சொன்னாள். எதிர் வீட்டு கேளப்பன் நாயர் மனைவி.

டைப்பிஸ்ட் குடும்பம் அவர்களுடையது.

ஆல் இந்தியா ரேடியோ மதறாஸில் பாடவும் பேசவும் வித்வான்களையும், பேச்சாளர்களையும் கேட்டுக்கொண்டு அனுப்பும் கோரிக்கைக் கடிதம் கேளப்பன் ரேடியோ காரியாலயத்தில் ஹால்டா டைப்ரைட்டரில் டைப் அடித்துத் தான் போகும்.

மலையாள பூமிக்குச் சொந்தமான அபாரமான வனப்பும் அபரிமிதமான வளமும் கொண்ட விலாசினி ராணுவ ஆபீசில் சாத்வீகமான டைப்பிஸ்ட். அவளுடைய ஆபீஸ் ரெமிங்டன் டைப்ரைட்டரில், பட்டாளத்தில் சேர, ஆன்சிலரி நர்ஸிங் சர்வீஸில் சேர மனுப்போட்டவர்களுக்கு நியமனக் கடிதம் போகும். கடிதத்தில் தொடங்கும் டியர் சாரில் டியருக்கும் சாருக்கும் இடையே நாற்காலி போட்டு உட்காரலாம். யுவர்ஸ் ட்ரூலி என்று இறுதியாகக் கையெழுத்துப் போட இடம் விட்டுப் பெயர் கீழே தரும் இடத்தில் வெற்று வெளியில் படுத்துக் கொள்ளவும் கூடும். அவ்வளவு இடைவெளி ஏன் வந்தது என்று அவளுக்குத் தெரியும்.

டைப்பிஸ்ட் உத்தியோகத்தில் பெரும்பாலும் ஆங்கிலோ இண்டியன் மாதர்களே இதுவரை இந்தியா முழுக்கக் கண்ணில் படுகிறார்கள் என்றாலும், விலாசினி, டைப் அடிக்கும் முதல் மலையாள, தென்னிந்திய வனிதை. விலாசினி ரத்னாபாய்க்கு உற்ற தோழி என்பதில் எனக்கு சந்தோஷமே. கேளு நாயர் தோளில் சதா மாட்டி இருக்கும் சீலைக் குடை மட்டும் அவரிடம் எனக்குப் பிடித்த அம்சம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன