புது நாவல் – ராமோஜிகளின் கதை – பகுதிகள் – இரா.முருகன்

புது நாவல் – ராமோஜிகளின் கதை அத்தியாயம் 4 பகுதிகள் இரா.முருகன்

1944 டிசம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை

தென்மேற்கு திசைத் தெருவுக்கு அதேபடிக்குத்தான் பெயர் இருக்கும்.

ஜம்பமாக ரத்னாபாயிடம் சொல்லி விட்டு சைக்கிளில் இரண்டு பேரும் ஏறிக்கொண்டு முன்நோக்கி ஊர, தென்மேற்கிலே கிடக்கும் தெருவுக்கு இந்த ராத்திரி விடிவதற்குள் போய்ச் சேருவோம் என்றே தோன்றவில்லை. மார்கழிக் குளிர் சன்னமாகக் கூட வர நீண்ட பாதை.

மேலே அட்டை ஷேடு வைத்து அடைத்த பெட்ரோமாக்ஸ் விளக்கோடு யாரோ சைக்கிளில் எதிரே வர என் வாகனத்தை நிறுத்தினேன். கேரியரில் பெட்ரோமாக்ஸ் விளக்கோடு சைக்கிள் மிதித்து நகர்ந்து போக யுத்தகால பிளாக் அவுட் தடை எதுவும் இல்லையா? இருக்கும், இல்லாவிட்டால் தான் என்ன, புதுசாக சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான். ஜெர்மன் விமானம் பெட்ரோமாக்ஸைத் துல்லியமாக இனம் கண்டு விடும். ஜாக்கிரதை தேவை.

”அண்ணா, முப்பது வருஷம் முந்தி எம்டன் மெட்றாஸ் ஆர்பர்லே குண்டு போட்டபோது எங்கே இருந்தீங்க?” என்று வந்தவனைக் கேட்டேன். பேச்சை இப்படித்தான் சுபாவமாக ஆரம்பிக்க வேண்டும்.

”ஏன் சார் ராத்திரி வழி மறிச்சு கேட்க இது என்ன ராஜாங்க ரகசியமா, இங்கே தான் இருந்தேன்”. அவன் பெட்ரோமாக்ஸை கேரியரில் இன்னும் நேராக வைத்தபடி சொன்னான். பேச்சு முடிந்து கிளம்ப ஏதோ அவசரம் தெரிந்தது. அவனுக்கு அவசரம், எனக்கு சாவகாசம்.

”எம்டன் குண்டு தெரியும். ஆனா ப்ளாக் அவுட் நேரத்திலே கையிலே விளக்கோட திரியக்கூடாதுன்னு தெரியாது போச்சு, அப்படித்தானே?” அடுத்த தர்க்கபூர்வமான கேள்வியை எடுத்தேன்.

”அப்போ எங்க ஆத்தா ஒக்கல்லே சுமந்து போனதாலே ப்ளாக் அவுட் எல்லாம் கவனிச்சிருக்க மாட்டேன். ரெண்டு வயசு இருப்பேனா?”.

என்னைக் கேட்டா? அவனிடம் கேட்க வாயைத் திறந்தபோது, வந்தவன் என் வயசுக்காரன் தான் என்று மனசில் பட்டது. அவனுடைய முழு வழுக்கைத் தலை வயசான தோற்றத்தைக் கொடுத்ததோ என்னமோ.

விசாரிக்க வேண்டும். பெட்ரோமாக்ஸ் விளக்கைத் திருடிக்கொண்டு போகிற ஆளாக இருக்கலாம். அதைக் கொளுத்தி வைத்து ஏன் கொண்டு போக வேண்டும்? மனம் கேட்க புத்தி உடனே பதில் சொன்னது – கொளுத்திய விளக்கைத் திருடிப் போகிற அவசரமாக இருக்கலாம். விசாரி விசாரி விசாரி. ஏஆர்பி வார்டனாக செயல்படு.

”பெட்ரோமாக்ஸ் லைட்டோட யுத்தகால ராத்திரியிலே வெளியே போறது தப்பாச்சே. இனிமே போகாதீங்க” என்று பொறுப்பான சர்க்கார் உத்தியோகஸ்தனாகப் புத்திமதி சொல்ல, ரத்னாபாய் சரிதான் என்று தலையசைத்து ஆதரவு தருவாள் என்று எதிர்பார்த்தேன்.

“பெட்ரோமாக்ஸ் விளக்கு எடுத்துப் போகக்கூடாதுன்னு எந்தச் சட்டத்திலே எழுதி இருக்கு?” அவள் ஆர்வமாகக் கேட்க, அதானே என்றபடி என்னைப் புழுப்போல் பார்த்து அவன் சைக்கிளை ஓங்கி மிதித்து என்னைக் கடந்து போனான். வெறுத்துப் போனது. என் செய?

நான் ஒன்றும் பேசாமல் சைக்கிள் மிதித்து உத்தேசமாக வந்த பாதி இருட்டுத் தெருவாகத்தான் இருக்க வேண்டும் நாங்கள் தேடிப் போய்க் கொண்டிருக்கும் தென்மேற்கில் அமைந்த தெரு.

முதல் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த பெரியம்மாவிடம் ‘அவ்வா, இது என்ன தெரு?” என்று கேட்டாள் ரத்னாபாய். “ஏன் கண்ணு, என்ன சந்தேகம், இது கிழக்குத் தெருவே தான்’ என்றாள் கிழவி.

தென்மேற்கு திசைத் தெருவுக்குக் கிழக்குத் தெரு என்று பெயர் சூட்டியவர்கள் யாராக இருந்தாலும் சரி, ஒரு மைக், நாலு ஒலிபெருக்கி, ஜவ்வந்திப் பூ மாலை, கலர், ஜரிகைத் துண்டு, நாலு பேச்சாளர்கள், ஒரு தலைவர் என்று ஏற்படுத்தி மீட்டிங் போட்டு அவர்களின் அபரிமிதமான அறிவைப் பாராட்டியே ஆக வேண்டும் – லோக்கல் கவர்மெண்ட் அனுமதி கொடுத்தால். ஆமா, அது ரொம்ப முக்கியம்.

அந்தத் தெருவில் கடைசிக்கு முந்தைய வீடு ரத்னாபாயின் சிநேகிதி இருப்பது என்று அதற்குள் பத்து தடவை சொல்லிவிட்டாள் அவள்.

சைக்கிளை அந்த வீட்டு ஆளோடியில் நிறுத்திப் பூட்டினேன். தம்பதி சமேதராக, அடைத்திருந்த வாசல் கதவுக்கு அருகே போகும்போது, வீட்டில் குழந்தைகள், பெரியவர்கள் இருக்கலாம், வெறுங்கையோடு வந்திருக்கோமே என்று பட, ரஸ்க் வாங்கிக்கொண்டு அப்புறம் வரலாமா என்று ரத்னாவைக் கேட்டேன்.

”ரோந்து போறபோது இதெல்லாம் பார்த்தா தினம் சைக்கிள் கேரியர்லே பேக்கரிக்காரர் மாதிரி ரொட்டி, பன், பிஸ்கட் அடைச்சுக்கிட்டுத்தான் போகணும்”, என்றாள் அவள்.

வாசல் ஓரமாகச் சுருண்டு படுத்திருந்த ஒரு சோனி நாய் குரைக்க, தொலைவில் எங்கேயோ அதை ஏற்று வாங்கி இன்னும் இரண்டு அலற, வாசல் கதவைத் திறந்தபடி வந்து நின்ற பெண்ணை ஊர்மிளா என்று அன்போடு விளித்தாள் ரத்னா. சவுக்கியமா இருக்கியாடி என்று ராத்திரி எட்டு மணி சொச்சத்துக்கு பொதுவாக நலம் விசாரிக்க, அந்தப் பெண் சகரும் சௌக்கியம் என்று நற்சொல் இயம்பி எங்கள் இரண்டு பேரையும் வரவேற்று உள்ளே கூட்டிப் போனாள்.

ரொம்ப வருஷம் ஆச்சு பார்த்து என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்க, சும்மா புன்சிரித்தபடி வீட்டைச் சுற்றிக் கண்ணை ஓடவிட்டு வார்டனாகப் பார்த்தேன். ஜன்னலில் கருப்புக் காகிதம், குறைந்த பட்ச விளக்குகள் எரியும் வீட்டு ஹால், இருட்டில் சமையல்கட்டு, சத்தம் குறைத்து வைத்த ரேடியோ என்று பிரிட்டீஷ் அரசாங்கத்து ஆதரவான யுத்தகால நடுவாந்திர வர்க்கத்தின் வீடு அது.

ரேடியோவுக்கு முன்னால் ஈசிசேர் போட்டு உட்கார்ந்து ஊர்மிளா மணாளன் என்று சொல்லத் தக்க என் வயசுக்காரன் கச்சேரியில் முழுகி இருந்தான். ராத்திரி எட்டு முதல் ஒன்பது மணி இருபது நிமிடம் வரையான கச்சேரியில் மதுரை மணி ஐயர் சுஸ்வரமான சங்கீதம் பொழிந்து கொண்டிருந்தார். நானும் ரேடியோ பக்கம் போய் நின்றேன்.

“பிள்ளைங்க பாட்டி வீட்டுக்கு, அதான் என் பிறந்த வீட்டுக்குப் போயிருக்காங்க” என்றாள் ஊர்மிளா என்னும் பெண் பொதுவாக. தலையசைத்துச் சிரித்து வைத்தேன். அடடா என்றாள் ரத்னாபாய் குழந்தை இல்லாதது பற்றிய கவலையைச் சற்றே வெளிப்படுத்தி. எங்களுக்கு அந்தப் பாக்கியம் இல்லாததற்கும் சேர்த்துத் தான் அது.

சார், உக்காருங்க என்று ஊர்மிளா ஒரு மர முக்காலியைப் போட அவள் புருஷன் அதில் உட்கார்ந்து என்னை ஈசிசேரில் உட்காரச் சொல்லிக் கண்ணால் விண்ணப்பித்துக் கொண்டான்.

”தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த”.

ரேடியோவில் மணி அய்யர் தோடி உருப்படியை எடுத்து இனிமையைக் குழைத்து பெருக விட்டபடி இருந்தார். ’காலினில் சலங்கை கொஞ்ச’ என்ற அடிக்கு வந்தார் அவர். அங்கே சர்க்கரை மண்டபத்தில் உட்கார்த்தித் தேன் ஒரு கோப்பை நிறையக் கொடுத்தது போல் சரம் சரமாக நிரவல் செய்து அவர் குரல் கொஞ்சி, கெஞ்சி யசோதாவிடம் கண்ணனைப் பற்றி நிறுத்தாமல் நல்ல வார்த்தை சொன்னது. தோடி ராகம் முடியாமல் தொடர்ந்து போகட்டும் என்று மனம் கோரிக்கை விடப் பாட்டைக் காதில் வாங்கிக் கண்ணை மூடி அது வெளியே போகாமல் மனதில் தேக்கி அதில் அமிழ்ந்தேன்.

இப்படி நாலு கச்சேரி வாரம் முழுக்கக் கேட்கக் கிடைத்தால், வைஸ்ராய் வைகவுண்ட் வேவல் மகாத்மாவை ஜெயிலில் போட்டிருக்க மாட்டார். கஸ்தூர்பா காலமாகி இருக்க மாட்டார். தீரர் சத்யமூர்த்தி முதுகெலும்பு தளர்ந்து மரித்திருக்க மாட்டார். நேதாஜி விமானத்தில் போய்க் காணாமல் போயிருக்க மாட்டார். ஹிட்லர் அடங்காமல் ஆட மாட்டான். ஜின்னா, காந்தியோடு பேச்சு வார்த்தைக்கு சம்மதித்திருப்பார். உலகமே சீராக இயங்கிக் கொண்டிருக்கும்.

ரேடியோவோடு சேர்த்து பக்கத்தில் இசைத்தட்டு கேட்கும் ரேடியோகிராம் வசதியும் இருந்ததைக் கவனித்தேன். பிலிப்ஸ் கம்பெனி தயாரிப்பு. என்னுடையது போல் உள்ளூர் சரக்கு இல்லை.

தோடியோடு கச்சேரி முடிய சரியாக ஒன்பது மணி.

இதென்ன ராத்திரி விஜயம் என்ற ஊர்மிளாவின் நியாயமான கேள்விக்கு திருப்தியோடு ரத்னாபாய் ஏ ஆர் பி வார்டன் நியமனம் பற்றிய பெருமையை தன் அன்புச் சிநேகிதியிடம் பகிர்ந்து கொள்ள ‘பாம்பே ஹல்வா ஹவுஸ் ஜிலேபி கொடுத்து சொல்ல வேண்டிய சந்தோஷ சமாசாரம் இது. பரவாயில்லே நாளைக்கு ஸ்வீட் கொண்டு வா” என்று சலுகை காட்டினாள் ஊர்மிளா.

ஊர்மிளா வீட்டுக்காரன் நான் எதிர்பார்த்தபடி மத்திய சர்க்கார், லோகல் கவர்மெண்ட், பஞ்சாயத்து போர்ட் என்று எங்கும் உத்தியோகஸ்தனாக இல்லை. ப்ரசிடெண்சி காலேஜில் இங்கிலீஷ் லெக்சரர் ஆக இருக்கிறானாம். ஊர்மிளாவும் சௌகார்பேட்டை பெண்கள் பள்ளியில் எஸ் எஸ் எல் சிக்கு அல்ஜீப்ராவும் ஜாமெட்ரியும் போதிக்கிற கணக்கு வாத்தியாரம்மாளாம். உள்ளே தூங்கிக் கொண்டிருக்கிற ப்ரபசரின் அப்பா ஆப்பிரிக்க நாட்டில் பள்ளிக்கூட வாத்தியாராக இருந்து ரிடையர் ஆகி ஊரோடு ஒதுங்கி ஒரு வருடம் தான் ஆகிறதாம். உள்ளபடிக்கே கற்றோர் அவை அந்த வீடு, அங்கே எனக்கும் ரத்னாவுக்கும் என்ன வேலை என்று மனசு விசாரித்தது. அதுவும் ஏ ஆர் பி வார்டனாக முதல் ரோந்து போகும் தினத்தில்.

”உங்களுக்கு ரெகார்டுலே மியூசிக் கேக்கற விருப்பம் உண்டா?” ப்ரபசர் கேட்டார். அவர் பெயர் சங்கரன் என்று அவர்தான் ஒரு செகண்ட் முன் சொல்லி இருந்தார். ரிக்கார்டிலே மூன்று நிமிஷத்தில் ’சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்’ என்று அடித்துப் புடைத்து தரிசனம் செய்ய என்னால் ஆகாது என்று அவரிடம் சொன்னேன். மாயாமாளவ கௌளம் காலில் வென்னீரைக் கொட்டிக்கொண்ட பதைபதைப்போடு பாடி முடிக்கிற ராகமா என்ன?

”எனக்கு ரேடியோ -ரேடியோகிராம் சரிப்பட்டு வரலே சார். அது ரிப்பேர் ஆச்சுன்னா ரேடியோவிலே முள்ளு திருப்ப முடியாம, திருச்சி ஸ்டேஷன்லே போய் நின்னுடுது” என்று என் டேர்ன் டேபிள் ரேடியோகிராம் பற்றிய புகாரைப் பகிர்ந்து கொண்டேன்.

“இந்த மாதிரி உருப்படி கேட்கறதுக்கு பதில் திருச்சி ரேடியோவிலே பிரசங்கம் கேட்கலாம். இதுவும் தோடிதான். கேளுங்க” என்று ப்ரபசர் சங்கரன் ஒரு ரிக்கார்டை எடுத்து, ஈசிசேரில் தலைக்குப் பின்னால் விரித்துப் பரத்தி இருந்த குற்றாலத் துண்டில் துடைத்து விட்டு அதை டர்ன் டேபிள் ரேடியோகிராமில் வைத்து சுழலவிட்டார்.

”உண்டு குலதெய்வம் ராமன்” என்று அவசரமாக ஒரு குரல். தோடியில் இன்னுமொரு உருப்படி. சரசரவென்று வழுக்கிக்கொண்டு வந்து ’கோதண்டபாணி என்னும் தீன சரண்யன்’ என்ற அடி. நிரவல் செய்கிறேன் பேர்வழி என்று கோவோடு முறித்து தண்டபாணி என்னும் தீன சரண்யன் என்று கோதண்டபாணியை கோ-தண்டபாணியாகக் காலை உடைக்கிற கொடுமை தீர ரிகார்ட் சுழன்று நின்றது. பயங்கரம் என்றார் ப்ரபசர். ஆமா என்றேன். நிச்சயமாக அப்படித்தான்.

“பால் காய வைச்சு சூடா ஒரு டீ போடறேன். குடிச்சுட்டு ரெண்டு பேரும் ரேடியோகிராம் வித்வானை கரிச்சுக் கொட்டுங்க” என்றாள் ஊர்மிளா.

“இன்னொரு நாள் வரோம். ட்யூட்டியிலே இருக்கோம்” என்று சட்டென்று எழுந்தாள் ரத்னாபாய்.

அங்கே போன காரியமும் நான் உத்தியோகம் பார்க்கிற நேரத்தில் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்ற அவலமும் மனதில் மேலெழுந்து வர, நானும் உடனே வெளியே போக அவசரப்பட்டேன்.

“அப்ப வெதுவெதுன்னு பால்லே காப்பி தரேன். டிகாக்ஷன் இப்பத்தான் போட்டு வச்சேன். குடிச்சுட்டு தெம்பா ரோந்து போய் ஜெர்மன் ப்ளேனை விசில் ஊதி விரட்டுங்க” என்று ஊர்மிளா இருண்ட சமையல்கட்டுக்குப் போக ரத்னா அவளைப் பின் தொடர்ந்தாள்.

அவள் ரெண்டு நிமிஷத்தில் கொண்டு வந்த லேசான சூடு காப்பியில் எல்லாம் இருந்தும் ஏதோ குறைந்ததாகத் தோன்றியது. அதை மேலே எடுக்க வேண்டாமென்று, சாவகாசமாக ஒருநாள் வந்து சங்கீதம் பற்றிப் பேசறேன் என்று ப்ரபசரிடம் பிரியாவிடை பெற்றேன்.

விசிலை நீளமாக ஊதிக் கொண்டு சைக்கிள் விட்டுப்போக, சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்துக்கு ரெண்டாவது உலக மகா யுத்தத்தில் ஜெயம் ஜெயம் என்று ராப்பறவை ஒன்று தலைக்கு மேல் மெல்ல சத்தம் போட்டுச் சொல்லிப் போனது. ஏஆர்பி விசிலூதினேன்.

“திருடன் .. திருடன் வந்திருக்கான்” என் ஏஆர்பி வார்டன் விசில் சத்தத்தை மீறி இரைச்சலாக யாரோ சத்தம் போட்டார்கள். கிழக்குத் தெருமுனை வீட்டுத் திண்ணையில் கிழவி சுருண்டு படுத்திருக்க வாசல் கதவு திறந்து முண்டாசும் வலை பனியனுமாக யாரோ.

“புத்தம்புது சைக்கிளை தூக்கிட்டு போயிட்டானே எவனோ”. அவர் குரல் விட்டுக்கொண்டு எங்களைப் பார்த்தார். “தீஃப் சார்” என்றார். சோர் சோர் என்று அடுத்து இந்துஸ்தானியிலும் அறிவித்தார். நான் பார்த்துக்கொண்டு நின்றேன். விசில் ஊதினேன். வேறே என்ன செய்ய?

ஆக பெட்ரோமாக்ஸ் விளக்கு இல்லை களவு போனது.

”ஜாக்கிரதையா இருக்கணும் யுத்தகாலத்திலே சைக்கிள் போன்ற தளவாடங்களை பத்திரமா வச்சுக்கணும். வீண் செலவு தடுக்கணும்”.

சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் சீரியஸாகப் புத்திமதி சொல்லி விட்டுப் புறப்பட்டோம். வீடு திரும்பலாம் என்றாள் ரத்னாபாய். சரி என்றேன். வண்டி நகர, அவள் நிறுத்தச் சொன்னாள். கொஞ்சம் பொறுங்க என்றபடி தெரு முனையில் குந்தி அமர்ந்தாள் பாவை.

”ஊர்மிளா நம்ம அவசரத்துலே குழம்பிப்போய் உறைகுத்தி வச்ச பால்லே காப்பி போட்டுக் கொடுத்திட்டா”.

முதல்நாள் ஏ ஆர் பி வார்டன் வேலை ஒரு மணி நேரம் அரட்டை, பத்து நிமிஷம் ட்யூட்டி என்று விசில் நாலு தடவை ஊதியது, பத்து நிமிஷம் ஓரமாக இருந்து வாந்தி எடுத்தல் என்று கடந்து போனது. வீட்டுக்குத் திரும்பியபோது பத்து மணி அடித்தது. நாளைக்கு உத்தரவு கைக்குக் கிடைத்ததும் வார்டனாக இருக்கத் தொடங்கலாம், யார் வீட்டுக்கும் போக வேணாம் என்றபடி ரத்னாபாய் கதவடைத்து வந்தாள்.

சந்தனம் மணக்கும் அவள் தேக சூட்டுக்குள் பத்திரமாக ஐக்கியமானபோது வெளியே நீளமாக ஏர் ரைட் வார்டனின் விசில். ஜன்னலில் தட்தட்டென்று தட்டும் ஒலி. கேட்டபடி கண்ணை மூடிக் கொண்டேன். நாளைக்காவது கர்ப்யூவுக்கான கருப்புக் காகிதம் புதிதாக வாங்கி வந்து வாசல் ஜன்னலில் பத்திரமாக ஒட்ட வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன