புது நாவல் – ராமோஜிகளின் கதை – அத்தியாயம் 3 பகுதிகள்

புது நாவல் – ராமோஜிகளின் கதை அத்தியாயம் 3 பகுதிகள்
இரா.முருகன்

1944 டிசம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை

ராத்திரி ஏழரை மணிக்கு ’யுத்தம் முடியும்வரை கண்டிப்பாக தேசிய சர்க்கார் கிடையாது’ என்று வைஸ்ராய் வேவல் பிரபு சொன்னதாக ரேடியோவில் நியூஸ் படித்து முடிந்த பிறகு ரேடியோவை அணைத்து விட்டு, ஏர் ரைட் வார்டன் வேஷம் கட்டத் தயாரானேன்.

சாப்பிட்டு விட்டுப் படி இறங்கலாம் என்று ரத்னாபாய் தடுப்பாள். அவள் வார்த்தைக்கு இன்றைக்கு மட்டுமாவது தலை வணங்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். இல்லாவிட்டாலும் இன்றைக்கு வாயைத் திறந்தது எல்லாம் ஆகாரத்துக்கு என்றானதால் கொஞ்சம் ஓய்வு வயிற்றுக்குத் தரவும் தீர்மானம் செய்தேன்.

ஆபீஸுக்கு நாளை உடுத்திப் போக ட்வீட் பேண்ட் வைத்திருந்தேன். வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமை துவைத்து இஸ்திரி போட்டு ஐந்து செட் ரெடி பண்ணி வைத்திருப்பாள் ரத்னாபாய். சனிக்கிழமை மட்டும் தழையத் தழைய வேட்டி உடுத்தி உத்தியோகத்துக்குப் போவது வழக்கம்.

ராத்திரி ஏ ஆர் பி ரோந்து போக பேண்ட் போட்டுக்கொள்ள வேண்டாமா? போனால் மிடுக்காக இருக்கும். ஆனால் ஆபீஸுக்கு உடுத்திப் போக என்ன செய்ய? தினசரி ஏ ஆர் பி வார்டன் ரவுண்ட்ஸ் போனால் ஆபீஸ் உடுதுணி இருப்பு கணிசமாக அடி வாங்குமே.

வித்வானுக்கு ஒரு செட் துணி கொடுத்ததால் நடைமுறையில் மேலும் வித்தியாசம் கொண்டுவர வேண்டி இருக்கும். இரண்டு நாள் வேட்டி கட்டிப் போக வேண்டி வரும். அல்லது ஒரே பேண்டை கசங்கியிருந்தாலும் பரவாயில்லை என்று தொடர்ந்து இரண்டு நாள் போட்டுக்கொண்டு போகலாம். ரத்னாபாயின் கண்ணுக்கு இந்த விஷயம் தெரியாமல் போகாது. கேட்பாள். ஏதாவது சமாளிக்க வேணும்.

நாளை தூங்கி விழித்து முதல் காரியமாக பாரீஸ் கார்னரில் ஜூனஸ் சேட் கடைக்கு போய் இன்னும் ஐந்து ஜதை உத்தியோக உடுப்பு தைத்துக் கொள்ளலாமா? இந்த மாதம் இன்னும் பதினைந்து நாள் இருக்க, துணியில் பணம் முடக்க நினைப்பது அறிவீனம் அன்றோ.

உடுப்பு பற்றி நினைத்து ஊஞ்சலண்டை உறைந்து போய் நின்றபோது வெளியே இருந்து மான் குட்டி போல் குதித்து படி கடந்து உள்ளே வந்தாள் ரத்னா. தோளில் துண்டாகத் துவண்டு, என்ன என்று பார்க்க, துணி. எல்லாம் நான் கடந்த ரெண்டு வருஷமாக ஆபீஸுக்குப் போட்டு பழசாக்கி, தெருவில் எவர்சில்வர் பாத்திரக்காரன் வரும்போது தூக்கிப் போட்டு ரெண்டு ஸ்பூனோ சின்ன கிண்ணியோ வாங்க ரத்னாபாய் உத்தேசித்து பத்திரமாக பீரோ கீழ்த் தட்டில் வைத்திருந்தது.

“என் பழந்துணிகளை என்ன செய்தாய் பெண்ணே?”

“அதான் இது. பாத்திரக்காரன் வரும்போது பார்த்துக்கலாம். என் ஜரிகைப் புடவை இருக்கு. போட்டுட்டு பால் காய்ச்ச ஒரு வாலாம்பு வாங்கிடலாம்னு இருக்கேன்”

நான் வாலும் தலையும் புரியாமல் பார்த்தேன்.

”எப்படியும் நீங்க ஏ ஆர் பி வார்டனா வலம் வர இடுப்பிலே துணி வேணும். அது உடனே வேறே வேண்டியிருக்கும். என்ன செய்யலாம்னு மதியம் நீங்க தூங்கறபோது யோசிச்சேன். சட்டுனு தோணிச்சு. குருசாமி டெய்லர் கிட்டே சொல்லி இது ரெண்டு. போட்டுப் பாருங்க”.

அவள் கொடுத்த இரண்டும் அரை நிஜார்கள். என் பழைய பேண்ட்களை நேர்த்தியாக பாதியாக வெட்டி கீழே பெரிய பட்டையாக மடித்துத் தைத்து ஏ ஆர் பி அரைக்கால் நிஜார் தயார். பழைய கைத்தறிச் சட்டையும் டக்கு பிடித்து இறுக்கமாகத் தைத்து உடுக்க ரெடியாக அவள் மென்தோளில் என் கை போல் சுற்றிக் கிடந்தது.

வந்த உடுப்புகளை உள்ளே போய்ப் போட்டுப் பார்த்தேன். கன கச்சிதமாக இருந்தது. பத்து வயசு குறைந்த மாதிரி வேறே தோன்றியது.

“சரியா இருக்கா?”

சகதர்மிணி உள்ளே வந்து சுவாதீனமாக டிராயரை கீழே கை வைத்து இழுத்து முழங்கால் மூட வைத்தபடி கேட்க, சரி எனக் கூறினேன். வேறே எதாவது வேணுமா என்று கரிசனத்தோடு அவள் விசாரிக்க ஆரஞ்சு மிட்டாய் என்றேன். அந்த உடுப்புக்கு அதுதான் நினைவு வந்தது.

நான் கிளம்பலாமா என்று சட்டைப் பொத்தான்களைப் போட்டபடி அவளைக் கேட்டேன் ஊஞ்சலுக்கு அருகே சின்ன மேஜையில் ஒரு பிரம்பு இருந்ததை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டேன். அது என் மாமனார் வந்திருந்தபோது காலையில் லாந்தப் போகும் நேரம் நாய் மேலே விழுந்து பிடுங்காமல் செங்கோலாக அசைத்துப் போவது.

’மாந்த்ரீகன் போல பிரம்பு எதுக்கு? கௌரவமா டிராயர் போதாதோ’ என்றபடி செங்கோலைப் பிடுங்கிக் கொண்டு, என்னைப் பிடித்து ஊஞ்சலில் உட்கார்த்தி விட்டு உள்ளே போனாள் ரத்னாபாய்.

”வெறும் வயிற்றோடு போக வேணாம். சொன்னா கேளுங்க. புனர்பாகமா நிறைய நீர் விட்டு கொதிக்க விட்டு சாதம் பண்ணியிருக்கேன். மோர் கலந்து கரைச்சுத் தரேன். நாலு டம்ளர் குடிச்சுட்டு போங்க. வயித்துக்கு இதமா இருக்கும்”.

சாதக் கரைசலும் தொட்டுக்கொள்ள நார்த்தங்காயுமாக நாலு டம்ளர் குடித்ததும் பாதரட்சையைத் துடைக்கக் குனிந்தால் அது பாலீஷ் வாசனையோடு மின்னிக் கொண்டிருந்தது.

”எதுக்கு நீ செருப்பை பாலீஷ் போட்டிருக்கே?” என்று கண்கள் பனிக்கப் பரவசப்பட்டு அவளைக் கேட்க, ’நான் எங்கே போட்டேன்’ என்று என் காலைப் பார்த்தாள்.

“ஹோய் அது என் புதுச் செருப்பாக்கும். கடிக்கறதை குறைக்க நார்த்தங்கா ஊறின உப்புத் தண்ணி போட்டு வச்சிருந்தேன். உங்களுக்கு ஊறுகாய். செருப்புக்கு ஊறுகாய்த் தண்ணி. கால்லே இருந்து கழட்டுங்க” என்றாள் ரத்னா. கழற்றி மரியாதையாக எடுத்து மடியில் வைத்துக் கொள்ள, பிடுங்கித் தரையில் போட்டாள்.

“உத்தியோக சின்னம் வேறே ஏதாவது உண்டா?” குறுகுறுவென்று பார்த்து வினவினாள் அடுத்து.

”தலையில் வைத்துக் கொள்ள ஒரு ஹெல்மெட் தருவாங்க. டபிள்யூ அப்படீன்னு ஒற்றை எழுத்து எழுதி பக்கத்திலேயே நாலு சின்ன ஓட்டை போட்டிருக்கும். ஊர்க்காவல் உத்தியோகத்துக்கானது, யுத்தத்துக்கு போட்டுக்க லாயக்கு இல்லேன்னு அந்த நாலு துளையோட தாத்பரியம்”.

இல்லாத ஹெல்மெட்டை தலையில் வைத்துக் கற்பனை செய்து நிலைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டேன். கொஞ்சம் தொந்தி போட்டிருக்கிறது. இருந்தாலும் வார்டன் களை இருப்பதாக கண்ணாடி உத்தேசமாகச் சொன்னது.

“அந்த கவசம் வரும்போது வரட்டும். இது நாம போன வருஷம் பண்டரிபுரம் போனபோது வாங்கின காந்தி குல்லா. இதை மாட்டிப் போங்க” என்று பீரோவில் இருந்து எடுத்துக் கொடுத்தாள் ரத்னா.

நான் காந்தி மித்ரன் தான். ஆனாலும் இந்த ஏ ஆர் பி வேலை கவர்மெண்ட் சங்கதி. ராத்திரியில் நான் காங்கிரஸ்காரனாக காந்தி குல்லாவோடு சுற்றி வந்து சர்க்காருக்கு சங்கடம் கொடுக்க மாட்டேன். மற்றபடி என் தேச பக்தி மற்ற யாருடைய மேற்படி பக்திக்கும் கிஞ்சித்தும் குறைந்ததில்லையே. வேண்டுமானால் ஒரு நாள் முழுக்க காந்தி குல்லாய் தரித்து வீட்டுக்குள் சுற்றி வருகிறேன். சந்தேகப்படும் சபாபதிகள் வந்து பார்த்துக் கொள்ளலாம்.

”கதவை பத்திரமா உள்ளே தாழ்ப்பாள் போடாம பூட்டிக்கோ. நான் ஒரு சாவி எடுத்துப் போறேன். நடு ராத்திரி கழிஞ்சு திறந்துக்கிட்டு உள்ளே வந்துடறேன்”. நான் சொல்லி முடிப்பதற்குள் ரத்னா வாசலில் நின்றாள்.

“வெட்டியா இங்கே படுத்து உருண்டுக்கிட்டு இருக்காம, இன்னிக்கு நானும் உங்க கூட ரவுண்ட்ஸ் வரேன். அஸ்து பாட வேண்டாம். முதல் நாள். வாங்க, போகலாம்”.

ஆக, கையில் நியமன உத்தரவு வந்து சேராமலேயே எங்கள் வீட்டிலிருந்து இரண்டு கௌரவ ஊர்க்காவல் உத்தியோகஸ்தர்கள் ஞாயிறு முன்னிரவில் ரோந்துப் பணிக்குப் புறப்பட்டாகி விட்டது.

தினசரி ராத்திரி எட்டு மணிக்கு ஏ ஆர் பி நபர்கள் எங்களுக்கு அடுத்த காருணீகர் தெரு ஹைஸ்கூல் காம்பவுண்டில் கூடி இருந்து, அன்றைக்கான ’யார் எந்த எந்தத் தெருக்களில் உலா வர வேணும்’ என்ற ட்யூட்டி ரோஸ்டர் முடிவாகும் என்று கேட்டிருந்ததால் என் மலேயா ராலே சைக்கிளில் ஸ்கூலுக்குப் போனேன். ஊர் வேடிக்கை பார்க்க வந்த டி.ஆர்.ராஜகுமாரி மாதிரி ரத்னாபாய் நாலு திசையும் சுவாரசியமாகக் கண்டு களித்தபடி சைக்கிள் பின்னால் கேரியரில் புஷ்டியும் சந்துஷ்டியுமாக ஆரோகணித்து வந்தாள்.

டிராயர் அணிந்து, பள்ளிக்கூட மரபெஞ்சில் உட்கார, வீட்டுப் பாடம் நினைவு வந்தது. வழக்கமான ஸ்கூல் அம்சம் எதுவும் குறைவு படாது கால் ஆடும் பெஞ்ச், டெஸ்கில் இங்க் கறை, கமர்கெட் உறை, சாக்பீஸ் தூசி, அழித்து சுத்தமாக வைத்த கரும்பலகை என்று இருந்த பள்ளி.

”வாய்யா ராமோஜி. ஏர் ரைட் வார்டன் உத்தியோகம் இப்போ ஜோடி ஜோடியா கொடுத்திடறாங்களா?” என்றபடி ரிடையர்ட் ஹெட் மாஸ்டர் ரத்னாபாயின் உச்சந்தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்துவிட்டுக் கேட்டார்.

“சார், இன்னும் உத்தரவு வரலே.. நான் சும்மா கலந்துக்கலாமா? நாள் நல்லா இருக்குன்னு என் சம்சாரம் சொல்றா”

“பேஷா சேர்ந்துக்க. தாசீல்தார் ஆபீசிலே உன் பெயரும் ததிங்கிணதோம் நாயக்கர் பேரும் நேத்தே ஒட்டி வச்சிட்டாங்க. ஆக நீங்க ரெண்டு பேரும் ட்யூட்டியிலே இருக்கறமாதிரி தான். ஏற்கனவே ரெண்டு வார்டன்கள் வயோதிகம், கால்வலின்னு சுருண்டுட்டாங்க. ஆள் இல்லாம சிரமப்பட்டோம். இப்போ நீங்க வாங்க, இளந்தாரி”

“சார், நான் என்ன எல்லாம் செய்யணும்?”, மரியாதையோடு கேட்டேன்.

”இந்தப் பேட்டைக்கு நான் தான் முழுநேர வார்டன். ஆக, ஸ்கூல்லே படிச்சபோது நான் சொன்னதைக் கேட்ட மாதிரி இப்பவும் அப்படியே கேட்டு சிறப்பாக வேலை பார்த்து, சர்ச்சிலுக்கும், ரூஸ்வெல்டுக்கும், ஸ்டாலினுக்கும் ஆதரவா யுத்தத்தை நடத்தித் தந்து ஹிட்லர் பயலையும் முசோலினி பயலையும் ஜப்பான் ராஜாவையும் துண்டைக் காணோம் துணியக் காணோம்னு தோற்று ஓட வைக்கணும், வாரத்திலே நாலு நாள் வேலை. மற்ற நாளும் வர்றது உங்க இஷ்டம். அது கடமைன்னு நினைச்சா உங்களுக்கு அனந்தகோடி நமஸ்காரம், வைஸ்ராய் ஆர்சிபால்ட் வேவல் பிரபு சார்பிலே”.

இந்த சேவைக்காக எனக்கு வாரம் ஒருதடவை இரண்டு ரூபாய் ஆக மாதத்துக்கு எட்டு ரூபாய் கௌரவ சம்பளம் கிடைக்கும் என்றும் அவர் சிபாரிசு செய்தால் ரத்னா பாய்க்கும் அது கிடைக்கலாம் என்றும் சொன்னார் ரிடையர்ட் ஹெட் மாஸ்டர்.

“அவருக்கு முழுநேர வார்டனா எம்புட்டு கிடைக்குது?” ரத்னா என் காதில் கேட்டாள். ஐம்பது ரூபாய் இருக்கலாம் என்று எங்கேயோ கேட்ட தகவலை அவளிடம் பகிர்ந்து கொண்டேன். ’பரவாயில்லே, சும்மா வீட்டுலே இருக்கறதுக்கு அவருக்கு நல்ல வருமானம்’ என்றாள் குரல் எழுப்பாமல்.

மிருதங்கம் நாயக்கர் தடாலென்று காக்கி நிஜாரும் மிலிட்டரி சட்டையுமாக ஆளே அடையாளம் தெரியாத யுத்தகாலக் கோலத்தில் உள்ளே நுழைந்தார். என் பேண்ட் எங்கே? என் கஞ்சிரா எங்கே?

“அதுவா, புத்தம் புது பேண்டை இடுப்பிலே கட்ட மனசு வரலே. லஜ்ஜையை விட்டு வேறே என்ன மார்க்கம்னு எட்மாஸ்டர் சார் கிட்டே கேட்டேன். ஏன் கேக்கறீங்க? தையல்கடை தோத்துது. வீடு முழுக்க ரோந்துக்கார உடுப்பு தான் குவிச்சு வச்சிருக்கார். சப்ளை காண்ட்ராக்ட் எடுத்திருக்காராம். நானும் ஒரு ஜதை வாங்கிக்கிட்டேன்.”

பெருமையோடு தன் நிஜாரை இழுத்துவிட்டுக் கொண்டு புன்சிரித்தார்.

என் கஞ்சிரா கனவுகள் கரைய, விடிகாலை பஜனையில் அரை நிஜாரோடு டேப் அடித்துப் பாடிப் போகும் ரிடயர்ட் ஹெட்மாஸ்டர் ஒரு கணம் மனதில் வந்து போனார். அது டேப்தான். கஞ்சிரா இல்லை என்பதில் ஒரு சின்ன ஆசுவாசம் எனக்கு.

“நம்ம வீட்டுலேயும் வரச் சொல்லியிருக்கேன்” என்று பொதுவாக அவர் சொன்னது அவருடைய பெண்டாட்டியையும் ரோந்து போகக் கூட வருவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார் என்று புரிந்து கொண்டேன்.

ஹெட்மாஸ்டர் எனக்கு எங்கள் தெருவுக்கு மேற்கே வரிசையாக மூன்று தெருவும், தென்மேற்கே ஒன்றுமாக இன்றைக்கு ரோந்து போக டியூட்டி கொடுத்தார். பூட்டி வைத்திருந்த மேஜையைத் திறந்து எனக்கும் நாயக்கருக்கும் நீளமாக ஆளுக்கொரு பிகிலும் எடுத்துக் கொடுத்தார். நான் வெளியே வந்து இருட்டில் நின்று ஆசை தீர விசில் ஊதினேன். இதுக்காகவே இன்னொரு உலக யுத்தம் வரட்டும் என்று அல்பமான ஆசை மனதில் படர்ந்தது. ரத்னாபாய் குரல் கேட்டது – “வார்டரே, இருட்டுலே பூச்சி பொட்டு ஏதும் கண்ட இடத்திலேயும் கடிச்சுதுன்னா உம்மாலே ட்யூட்டி பார்க்க முடியாது. உள்ளே வாங்க”.

“என்ன மாதிரி ட்யூட்டி பார்க்கணும்?” ஹெட்மாஸ்டரைக் கேட்டார் மிருதங்கம் நாயக்கர்.

“என்ன, தெருவிலே யார் வீட்டுக்கு உள்ளே இருந்தாவது வெளிச்சம் தெரிஞ்சா, விளக்கை அணையுங்கன்னு சத்தம் போடணும். பிகில் ஊதணும். அப்படியும் அணைக்கலேன்னா, வீட்டுக்கு உள்ளே போய் எச்சரிக்கை செய்யணும். இன்னொரு தடவை லைட் போட்டு இருந்தா, போலீஸ்காரரை கூட்டி வருவோம்னு இதமா பதமா சொல்லணும். ஜன்னல்லே கருப்பு காகிதம் கிழிசல் இல்லாம ஒட்டியிருக்கான்னு அங்கங்கே செக் பண்ணனும். கிழிஞ்சாலும் கதை கந்தல் தான். சந்தேகத்துக்கு இடமானபடி நடமாடறது, தெரு ஓரமாக குத்த வைக்கிறது இப்படியானதும் கண்ணுலே பட்டா போலீஸ் மாதிரி விசாரிக்கணும்.. எச்சரிக்கணும்.. அப்புறம், ஜெர்மன் ப்ளேன் குண்டு போட வந்தா சைரன் சங்கு பிடிச்சு … அதை நாளைக்கு சாவகாசமா சொல்றேன். ஜெர்மன்காரன், ஞாயித்துக்கிழமை இன்னிக்கு ஒரு நாள் பிள்ளைகுட்டி, பெண்ஜாதியோடு சுகமா இருந்துட்டுப் போகட்டும்”

வேலை விவரங்கள் உபதேசிக்கப்பட்டு, சைக்கிளில் ரவுண்ட்ஸ் புறப்பட்டோம். ரத்னாபாய் முதலில் தென்மேற்கு திசைத் தெருவில் ஆரம்பிக்கலாம் என்றாள். அவளுடைய சிநேகிதி ஒருத்தி அங்கே உண்டாம். நல்ல டீ போடுவாள் அவள் என்று உபரி தகவலும் தந்தாள்.
(to be edited)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன