துறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே

மீசை – சிறுகதை – இரா.முருகன்

நான் நாக அரவிந்தன். எனக்கு ஏழு வயசில் மூக்குக் கண்ணாடி போட்டார்கள். அப்போது அனுபவமான கதை இது. நடந்து அறுபது வருஷமாகி விட்டது. நடந்து என்றால், எல்லாம் உண்மையா? நிஜமும் உண்டு.

ஒரு ஆஸ்பத்திரியில் நடந்தது இது. சும்மா மருந்து கலக்கிக் கொடுக்கிற ஆஸ்பத்திரி இல்லை. ஆபரேஷன் செய்கிற இடம். அந்த ஆஸ்பத்திரியை நான் இன்னும் வெள்ளை வெளேர் என்று பளிங்கு மாளிகையாகத்தான் நினைவில் வைத்திருக்கிறேன். அங்கே டெட்டால் வாடை அடிக்கிற டாக்டர்கள், நர்சுகள், ஓரமாகப் போய் புகையிலை குதப்பும் வார்ட் பாய்கள் எல்லாரும் உண்டு.

வார்ட் என்பது அப்பா போல ஆபரேஷன் ஆனவர்கள் தங்கும் இடம். வலது வசத்தில் ஆறும் இடது வசம் இன்னொரு ஆறுமாக மொத்தம் பனிரெண்டு அறைகள். ஒவ்வொன்றிலும் இரண்டு படுக்கைகள். ஒன்று நோயாளிக்கு. மற்றது அவரைக் கவனித்துக் கொள்ள வந்தவருக்கு.

நான் அங்கே போனது ரொட்டி தின்ன. அப்பா கையை உடைத்துக் கொண்டு அங்கே படுத்திருந்தபோது அவருக்கு ஒரு சிறிய ஆபரேஷன் நடந்தது. டாக்டர் அப்படித்தான் சொன்னார். அப்புறம் அங்கேயே ரெண்டு வாரம் ரெஸ்ட். தினம் சாயங்காலம் ரெண்டு துண்டு தணலில் வாட்டிய ரொட்டியில் மிதமாக வெண்ணெய் பூசி நோயாளிக்கு டீயோடு தருவார்கள். அப்பா நான் அவரைப் பார்க்கப் போகும்போது ரொட்டியை எனக்குக் கொடுத்து விடுவார்.

அப்பா பேங்க் மேனேஜர். அவரைப் பார்க்க அவருடைய சிநேகிதர்கள், சக ஊழியர்கள் என்று யார் யாரோ வருவார்கள். எல்லோரும் ஆரஞ்சுப் பழம் வாங்கி வந்து கொடுப்பார்கள். ஆஸ்பத்திரி வாசலில் காம்பவுண்ட் சுவரை ஒட்டி ஒரு பழக்கடை உண்டு. அங்கே வாங்கி, அப்பாவுக்குக் கொடுத்து, அவர் போதும் என்றுபட வார்ட் பாய்களுக்குக் கொடுத்து அதெல்லாம் மறுபடி பழக்கடைக்கு வந்துவிடும். அப்பாவும் அவரோடு அந்த ஆஸ்பத்திரியில் படுத்திருந்தவர்களும் ஆரஞ்சுப் பழ வாடையோடு இருப்பார்கள்.

அம்மா ஆலப்புழையில் வாங்கிவந்த சாறு பிழியும் மரச்செப்பில் ஒன்றும் இரண்டுமாக ஆரஞ்சுப் பழங்களை உரித்துப் போட்டு மேலே அழுத்தித் திருகுவார். விஞ்ஞானப் பாடத்தில் வரும் பந்துக்கிண்ண மூட்டு மாதிரி இருக்கும் அந்த சாதனம். அம்மா ஜூஸ் பிழிந்தால் சீனியே சேர்க்காமல், ஆரஞ்சு விதை அரைபடாமல் அவ்வளவு நேர்த்தியாக இருக்கும்.

அம்மா, அப்பா பகலில் சாப்பிடப் புளி குறைத்து பருப்பு ரசம், புனர்பாகமாக, அதாவது ஏகத்துக்குக் குழைய வடித்த சாதம், எண்ணெய் கம்மியாக விட்டு வதக்கிய காய்கறி, சுட்ட அப்பளம் இப்படி சித்தப்பாவிடம் கொடுத்தனுப்புகிறாள். சித்தப்பா அதை ஆஸ்பத்திரியில் கொடுத்து விட்டு, என்னையும் அங்கே விட்டுவிட்டு, ஆபீஸ் போய்ச் சேருவார். உப்புத்தாள் காகிதம் செய்யும் மிஷின்கள் கொண்ட ஆபீஸ் அது. அதைப் பற்றி அப்புறம் சாவகாசமாக ஒரு நாள். இப்போது அப்பா இருந்த ஆஸ்பத்திரி. சித்தப்பா என்னை இங்கே விட்டுவிட்டு இப்போது தான் கிளம்பிப் போனார்.

அரை வருஷப் பரீட்சை முடிந்து எனக்கு டிசம்பர் லீவு ஆரம்பித்ததும் அப்பா பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையை உடைத்துக் கொண்டு ஆஸ்பத்திரியில் வந்து படுத்துக் கொண்டார். அது போன வெள்ளிக்கிழமை. அப்போதிலிருந்து, முந்தாநாள் வியாழன் வரை அம்மா என்னோடு ஆஸ்பத்திரிக்கு வந்தாள்.

அப்பா பாதி நேரம் தூங்கினார். இல்லாவிட்டால் கமலாம்பாள் சரித்திரம் என்று ஏதோ புத்தகத்தை வீட்டில் இருந்து வரும்போதே கொண்டு வந்து, பேண்டேஜ் கையால் மெல்லப் புரட்டிப் படித்து முடித்து விட்டார். அவர் பேங்கில் நாள் முழுக்க வேலை பார்க்கிறபோது பெரிய நோட்டுப் புத்தகங்களைத்தான் எப்போதும் படித்தும் எழுதியும் கணக்குப் போட்டுக்கொண்டிருப்பார். இங்கே படிக்கத்தான் கமலாம்பாள் சரித்திரம்.

எனக்கு ’ஆத்திசூடி கதைகள்’ என்று ஒரு கதைப் புத்தகத்தை அப்பா போன மாதம் வாங்கி வந்து கொடுத்தார். அவரைப் பார்க்க ஆஸ்பத்திரி போக அம்மாவோடு கிளம்பியபோது ஞாபகமாக கண்ணாடி போட்டுக் கொண்டேன். ஆனாலும், வெறுங்கையோடு தான் போனேன். புத்தகத்தை எடுத்து வந்திருந்தால் உபயோகமாகப் படித்துப் பொழுதைக் கழிக்கலாமில்லியோ என்று அப்பா கேட்டபோது என்னிடம் பதில் இல்லை. ஏழு வயசுப் பையன் பள்ளிக்கூடத்தில் படிக்காத என்னத்தை ஆஸ்பத்திரியிலே உக்கார்ந்து படிக்க என்று அம்மா கேட்டாள். இருந்தாலும் அடுத்து ஆஸ்பத்திரிக்கு நான் கிளம்பியபோது அப்பாவுக்குச் சாப்பாடோடு எனக்கு ஆத்திசூடி கதைகளும் தேங்காய்ச் சட்னி வாடையோடு இருந்தது.

ஒரு பக்கம் படிப்பதற்குள் ஆஸ்பத்திரி ஜன்னல் வழியாக ஒரு பட்டாம்பூச்சி அறைக்குள் வந்து விட்டது. அது எல்லா வண்ணத்திலும் மினுமினுத்துப் பறந்து வரும்போது காத்தி நர்ஸும் கதவைத் திறந்து கொண்டு வேகமாக உள்ளே வந்தாள். டாக்டர் போல் சிடுசிடுக்காத சதா சிரித்த முகம் அவளுக்கு.

”அர்வி என்ன பண்றே”? அவள் கேட்டாள். அர்வி என் பெயர் இல்லையே? சும்மா பட்டாம்பூச்சியையே பார்த்தபடி இருந்தேன். ”உன் பெயர் அர்வி இல்லையா?”, என்று கேட்டாள் காத்தி.

இல்லை. அது அரவிந்த். அப்பா அப்படித்தான் கூப்பிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். பள்ளிக்கூட சிநேகிதர்கள் கூட அப்படித்தான் கூப்பிடுகிறார்கள். காத்தியிடம் இதைச் சொல்ல, ”அவ்வளவுதானே, அரவிந்தா, ஜன்னலைத் திறந்து வை. பட்டாம்பூச்சி ஃபேனில் அடிபடாமல் இருக்க நான் சுவிட்சை ஆஃப் செய்கிறேன்” என்றாள். ”ரொம்ப அழகான பட்டாம்பூச்சி இல்லே அது?” என்று என் பக்கம் குனிந்து அவள் முகத்தில் பரு பக்கத்தில் பெரியதாகத் தெரியக் கேட்டாள். கன்னத்தை செல்லமாகத் தட்டித்தான் பெரியவர்கள் சிறியவர்களோடு பிரியமாகப் பேசுவார்கள். காத்தி நர்ஸ் அப்படி எல்லாம் பேசவில்லை. ஒரு வேளை நான் மூக்குக் கண்ணாடி போடாமல் இருந்தால் அப்படிச் செய்திருக்கலாம்.

நான் எம்பிக் குதித்து ஆஃப் செய்ய கஷ்டப்பட்ட பேன் சுவிட்ச் அது. காத்தி நர்ஸ் ஈசியாகச் செய்து விட்டாள். இன்னொரு பட்டாம்பூச்சியும் என்ன விஷயம் என்று பார்க்க அப்பா படுக்கைக்கு அருகே வந்தது அப்போதுதான்.

கடிக்குமா என்று கேட்டேன் காத்தி நர்ஸை. ”என்னை மாதிரி பரமசாது” என்று அவள் பொம்மை போல் கண்ணைச் சிமிட்டியபடி கூறினாள். கட்டிலுக்குப் பின்னால் இருக்கும் இன்னொரு ஜன்னலையும் திறந்து வைக்கலாம் என்றாள். நான் அவசரமாக அங்கே ஓட அப்பா விழித்துக்கொண்டார்.

”நீ புத்தகம் படிக்கலையோடா?”

”இல்லே அச்சா. பட்டாம்பூச்சி பார்க்கறேன். அதுக்கு மலையாளம் என்ன?”

“சித்ரசலபம்”. காத்தி நர்ஸ் அப்பா சொல்வதற்குள் சொல்லி விட்டாள். சொல்லி விட்டு, பட்டாம்பூச்சி பறப்பது போல அப்பாவைப் பார்த்துக் கையசைத்தாள். அழகாகத்தான் இருந்தது. ஆனால் எனக்கு அது பிடிக்கவில்லை.

சித்ரசலபம் சரிதானா என்று அப்பாவிடம் கேட்டேன். ரொம்ப சரி என்று அவர் சொல்லி விட்டு அவர் சிரிக்கும்போது காத்தி நர்ஸ் அப்பா சிரிப்பில் சேர்ந்து கொண்டாள். துறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே.

காத்தி நர்ஸ் என்னை ஓரமாக உட்காரச் சொல்லிவிட்டு அம்மா கொடுத்தனுப்பியிருந்த சாப்பாட்டை தட்டில் வைத்து அப்பாவிடம் நீட்டினாள். இரண்டு கையிலும் பேண்டேஜோடு அப்பா அதை வாங்க முயற்சி செய்ய, வேண்டாம் என்று தலையசைத்து, அவருக்கு ரசஞ்சாதம் துளித்துளியாக ஊட்டி விட்டாள் காத்தி. எனக்கு ஏனோ சங்கடமாக இருந்தது.

நான் மெல்ல அடுத்த ரூம் பக்கம் நடந்தேன். அங்கே படுத்திருந்த மீசைக்காரர் என்னைப் பக்கத்தில் அழைத்தார். “அப்பா தூங்கிட்டிருக்காரா?” அவர் என்னைக் கேட்டார். அப்பாவை இவருக்கு எப்படித் தெரிந்திருக்கும்?

“உங்கப்பாவை எப்பவும் சிரிச்ச முகமா பேங்க் உள்ளாற சுத்தி வந்திட்டு இருக்கறதைப் பார்த்துப் பாத்து, இப்படி படுத்திருந்தா பார்க்க பிடிக்கலே, என்ன செய்ய?” பிரியத்தோடு சொன்னார் அவர். அவருடைய கொத்து மீசை தவிர மற்றபடி அவரைப் பிடித்திருந்தது. கேட்டே விட்டேன்

“ஏன் மாமா இத்தனை பெரிசா மீசை வச்சுட்டிருக்கீங்க? கொள்ளைக் காரனா?” “கொள்ளைக் காரன் இல்லே தம்பி. சினிமா நடிகன்”.

எனக்குத் தெரிந்த ஒரே சினிமா ‘டாக்சி ட்ரைவர்’ தான். சித்தப்பா ராஜகுமாரி தியேட்டரில் பார்க்கக் கூட்டிப் போயிருந்தார். அந்த சினிமாவில், மூக்கால் ஒருத்தர் ‘ஜாயே தும் ஜாயே கஹான்’ என்று பாடியபடி டாக்சியை ஓட்டிக் கொண்டு சுற்றி வந்தார். எல்லாரும் புரியாத ஒரு பாஷையில் பேசினார்கள். ஹிந்தி என்றார் சித்தப்பா. பாட்டு, சண்டை, சிரிப்பு, கடல் எல்லாம் வந்தது.

“நீங்க டாக்சியிலே சுத்தி வந்து ஹிந்தியிலே பேசுவீங்களா?” அடுத்த ரூம்காரரை கேட்க அவர் இல்லை என்றார். “தமிழ் சினிமாவே சான்ஸ் கிடைக்க கஷ்டமா இருக்கு. இந்தி படத்துக்கு நான் எங்கே போக?” பரிதாபமாகப் பார்த்தபடி கேட்டார் அவர். உடனே கடகடவென்று சிரிக்கவும் செய்தார். அந்த மீசையின் பயங்கரம் ரொம்பவே குறைந்தது சிரிப்பில்.

நாளைக்கு வா, நிறையப் பேசலாம் என்று என்னிடம் சொல்லி விட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டார். போகும் முன் பக்கத்து டப்பாவில் இருந்து பாரீஸ் தேங்காய் சாக்லெட் எடுத்துக் கொள்ளச் சொன்னார். அந்த இனிப்புக்கு முன் வேறே சாக்லெட் நிற்காது.

அப்பா அறையில் காத்தி நர்ஸ் படுக்கைக்குப் பக்கத்தில் நின்றிருந்தாள். அப்பாவிடம் ஏதோ பத்திரிகையைக் காட்டி செம்மண் மீசை என்றாள். என்னப் பார்த்து விட்டு அதை மடித்து மேஜையில் வைத்தாள் அவள்.

”எங்கேடா போனே?” அப்பா கேட்டார். நான் எங்கேயும் போகமாட்டேன் என்று அவருக்குத் தெரியும். பக்கத்து படுக்கைக்காரர் பற்றிச் சொன்னேன். “அப்பா அவர் சினிமாவிலே நடிக்கறாராம். நிஜமாவா?”

”ஆமாடா, நம்மூர் சினிமாவிலே நடிச்சிருக்கார். என் ப்ரண்ட் தான்”.

“மாம்பலம் சினிமாவா?” ”நம்மூர்னா சிவகங்கை மானாமதுரைடா”.

நான் பார்க்காத ஊர்ப் பெயர்களைச் சொன்னார். அங்கே என்ன சினிமா?

”மருது சகோதரர்கள் சரித்திரம். இவர் சின்ன மருதுவா நடிச்சிருக்கார் செம்மண் சீமை படத்திலே”. அப்பா சொன்னது புரிந்த மாதிரி இருந்தது.

“ஏன் பெரிய மீசை வச்சிருக்கார்?” விடாமல் கேட்டேன்.

“நம்ம ஊர்ப் பக்கம் மீசை பெரிசாத்தான் வச்சுப்பாங்க”.

“நீங்க வச்சுக்கலியே”.

“உங்க தாத்தா விடமாட்டேனுட்டாரே”. அப்பா இல்லாத மீசையைக் கன்னத்தில் விரலால் வரைய, அவரோடு காத்தி நர்ஸும் சிரித்தாள்.

“எனக்கு செம்மண் சினிமா பாக்கணும்”, என்றேன். அப்பா செம்மண் சீமை என்று திருத்திச் சொன்னார்.

“என்னை ப்ரிவ்யூவுக்கு கூப்பிட்டிருந்தார் கவிஞர். ஆனா நான் இங்கே வந்து படுத்துட்டேன். கம்பெனி கொடுக்க சின்ன மருதுவும் இங்கேதான்”. அப்பா காத்தி நர்ஸிடம் சொன்னார்.

“அவர் மட்டும் தான் கம்பெனி கொடுப்பாரா?” செல்லமாகக் கேட்ட காத்தி நர்ஸ் ”நான் பரமசாது” சொன்ன மாதிரி படபடவென்று கண் சிமிட்டினாள்.

அவள் அப்பாவுக்கு ஊசி போட்டுவிட்டு அவர் கையை நீவி விட்டபடி செம்மண் மீசை என்று அவர் முகத்துக்குப் பக்கம் குனிந்து சொல்ல, அப்பா எத்தனையாவது தடவையாகவோ சிரித்தார். அவர் தனியாகச் சிரித்தால் சரிதான். காத்தி நர்சும் அவரோடு சிரித்தது பிடிக்காமல் போனது.

நான் பார்த்துக் கொண்டிருக்க, பட்டாம்பூச்சி ஜன்னல் வழியே அறைக்குள் பறந்து வர, காத்தி நர்ஸ் ஒரு கையால் அவசரமாக அதை விரட்டினாள். பட்டாம்பூச்சி எவ்விப் பறந்தது. மேலே சுற்றிக் கொண்டிருந்த ஃபேனில் அடிபட்டு, சொத்தென்று கட்டிலை ஒட்டித் தரையில் விழுந்தது. யாரும் பேசவோ, சிரிக்கவோ இல்லை. காத்தி நர்ஸ் தினப் பத்திரிகையால் அதை வாசலுக்குத் தள்ளிவிட்டு, அடுத்த அறைக்குப் போனாள்.

நான் வாசலுக்கு நடந்தேன். சித்தப்பாவோடு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பும் சந்தோஷத்தை எதிர்பார்த்து நான் ஆஸ்பத்திரி படியில் உட்கார்ந்திருந்தேன். சித்தப்பா ராத்திரி வந்து அப்பாவோடு தங்குவார். ராத்திரி பட்டாம்பூச்சி வருமோ தெரியவில்லை.

நான் வீட்டுக்குப் போனதும் அம்மா உடனே குளித்து விட்டு வேறு ட்ராயரும் சட்டையும் போட்டுக் கொள்ளச் சொன்னாள். “ஆஸ்பத்திரியிலே என்ன மாதிரி கிருமிகளோட மனுஷா படுத்திண்டிருப்பாளோ. நீ வேறே அங்கேயே சுத்திட்டு வந்திருக்கே. குளிச்சுட்டு சுத்தமா டிபன் சாப்பிட வா. உப்புமா கொழக்கட்டை பண்ணி வச்சிருக்கேன்”, என்றாள் அவள்.

செம்மண் சீமை அறைக்குப் போனதால் வியாதி வரும் என்று எனக்குத் தோன்றவில்லை. அந்த அறை நாங்கள் அப்பாவின் இடத்தை வைத்துக் கொள்வதை விட இன்னும் சுத்தமாக இருந்தது உண்மை. இருந்தாலும் உப்புமா கொழக்கட்டைக்காக உடனே குளிக்கக் கிளம்பினேன்.

குளித்து விட்டு கொஞ்சம் பழசாக ஒரு டிராயரும் சட்டையுமாக உப்புமா கொழக்கட்டை சாப்பிட உட்கார்ந்தபோது அம்மா கேட்டாள், “எப்படிறா முழு நேரம் ஷிப்ட் வேலை பார்த்த மாதிரி ஆஸ்பத்திரியிலே இருந்துட்டு வந்திருக்கே. சரியான அப்பா கோண்டு. அவர் இருந்தா போதும், உனக்கு வேறே எதுவும் வேணாம்”. அது புகார் இல்லை. சந்தோஷத்தோடு சொன்னது.

கொழக்கட்டையை உதிர்த்து புளி இஞ்சியில் தொட்டு நாக்கைச் சப்புக்கொட்டிக்கொண்டு சாப்பிட்டபோது அம்மா மெல்லக் கேட்டாள் “அப்பாவுக்கு சாப்பாடு எப்படி கொடுத்தே? உக்கார்ந்து சாப்பிட்டாரா?”

“அவர் படுத்துண்டிருந்தார்” நான் இன்னொரு கொழக்கட்டையை எச்சல் கையால் எடுத்தபடி கேட்டேன். மற்ற நேரமாக இருந்தால், “எச்சப்பத்து இல்லையாடா ராட்சசா. நான் என்ன செத்தா போயிட்டேன். கேட்டிருந்தா எடுத்து போட்டிருக்க மாட்டேனா? இந்தா அத்தனையும் திங்கணுமா, தின்னு” என்று சினிமா காட்சி மாதிரி விறுவிறுப்பாக பேசித் தீர்த்திருப்பாள்.

“அப்பா தலைகாணியை சாச்சு வச்சு உட்கார்ந்தபடிக்கு சாப்பிட்டார்”.

“அதாண்டா சொன்னியே, நீ ஊட்டி விட்டியா? உனக்கே ஊட்டி விடணுமே”.

“இல்லேம்மா. காத்தி நர்ஸ் அப்பாவுக்கு ஸ்பூனாலே ஊட்டி விட்டாங்க. அப்பாவுக்கு ஸ்பூன்லே சாப்பிட என்னை மாதிரியே தெரியலே. மேலே எல்லாம் சிந்திண்டு சாப்பிட்டார். அப்புறம் கையாலே ஊட்டி விட்டாங்க”.

”இருமல் வந்திருக்குமே? நெஞ்சை தடவியிருப்பாளே?”. அம்மா அடுத்த நிமிஷம் என்ன பேசுகிறாள் என்ற தெளிவில்லாமல் கையை ஆட்டி ஆட்டி என்னிடம் ஏதோ கேட்டாள். நான் நல்ல வேளையாக அதற்குள் சாப்பிட்டு விட்டிருந்தேன். புளி இஞ்சி தொட்டுக்கொண்டு இன்னும் ஒன்றிரண்டு உப்புமாக் கொழக்கட்டை உதிர்த்துச் சாப்பிட நினைத்திருந்ததை உடனே கைவிட்டேன். எதிரே தோட்டக்காரர் வீட்டு செங்கழனி இருந்தால் கிரிக்கெட் விளையாடலாம். இருந்தான். பட்டாம்பூச்சி ராத்திரி எங்கே போகும் என்று அவனைக் கேட்டேன். அதெல்லாம் மரத்தில் தூங்கும் என்றான் அவன்.

நானும் சித்தப்பாவும் மறுபடி ஆஸ்பத்திரி கிளம்பத் தயாரானோம். அப்பா ராத்திரி சாப்பிட இரண்டு இட்லி. அப்புறம் ஒரு சின்ன கிளாஸ் அரிசி நொய்க் கஞ்சி. கஞ்சியில் ஒரு கரண்டி பாலும் சும்மா பேருக்கு சர்க்கரையும் இருக்கும். நொய்க் கஞ்சியோடு நிறையச் சர்க்கரையும், காய்ச்சிய பாலும் சேர்த்து திட உணவுக்கும் திரவ உணவுக்கும் மத்தியிலே இருக்கிற போரிட்ஜ் எனக்கு குடிக்கக் கிடைக்கும். சித்தப்பா ஸ்ட்ராங்க் காப்பியை நடு ராத்திரிக்கு எழுப்பிக் கொடுத்தாலும் குடிப்பார். ஆனால், எனக்கும் சித்தப்பாவுக்கும் இன்றைக்கு குடிக்க ஒன்றும் கிடைக்கவில்லை.

“நீங்க போங்கோ. நான் வந்துண்டே இருக்கேன். நானாச்சு, மத்தவாளாச்சு..”. அம்மா சாமி அலமாரி முன்னால் உட்கார்ந்து விரசாக கந்தசஷ்டிக் கவசம் சொன்னாள். அவள் டங்கு டங்குகு என்று சொல்லிக் கொண்டிருந்தபோது நானும் சித்தப்பாவும் ஆஸ்பத்திரிக்குப் போய்ச் சேர்ந்திருந்தோம்.

அப்பா அறை வாசலில் இன்னும் இறகு படபடக்கப் பட்டாம்பூச்சி கிடந்தது. கூட்டமாக எறும்புகள் அதை இழுத்துப் போக முயன்று கொண்டிருந்தன.

அப்பா இருந்த அறையில் ஒரே சத்தம். யாரோ பேசப் பேச மற்றவர்கள் சிரிக்கும் சத்தம். நான் உள்ளே போனபோது அப்பா படுக்கைக்குப் பக்கம் நாற்காலியில் உயரமான ஆஜானுபாகுவாக ஒருவரும் எதிர் நாற்காலியில் மகா ஒல்லியாக ஒருத்தரும் அமர்ந்திருந்தார்கள். ஆகிருதியானவர் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருக்க, ஒல்லி மனிதர் குரல் ஓங்கி ஒலித்தது. உலகத்திலேயே பெரிய மீசை அவருடையதாகத்தான் இருக்க வேண்டும்.

”தோஸ்த்துக்கு சின்ன கதாபாத்திரம் தான். இந்தப் படத்திலே ஆகிருதியா பெரிய மீசை வச்சுக்கிட்டு வந்து போகணும். உன்னாலே முடியுமான்னு கேட்டேன். இந்தாள் மகா பெரிசா இப்படி வளர்த்துட்டு வந்து அடுத்த படத்துக்கும் சேர்த்து அட்வான்ஸ் மீசைன்னா என்ன அர்த்தம்?”

உயர்ந்தவர் கேட்க அப்பா கட்டிலில் உட்கார்ந்தபடியே சிரித்து கொண்டிருந்தார். அடுத்த அறை மீசைக்காரரும் அங்கே சேர்ந்து சிரித்தார்.’

“நாலு மகளிர் தவிர வேறே எல்லோருக்கும் மீசைதான்னு படம் ஆரம்பிச்சபோதே கவிஞர் அண்ணாச்சி சொன்னாப்பல. அட்வான்ஸ் வாங்கும்போது மேனேஜர் ஒட்டுமீசையான்னு இழுத்துப் பார்த்துட்டுத்தான் காசு கொடுத்தார்” என்றார் நின்றபடிக்கு, அடுத்த அறைக்காரர்.

”நீ சின்ன மருது. மீசை இல்லாம வேலைக்கு ஆகாது” என்றார் உயர்ந்தவர். “வேலை முடிச்சுட்டு பாத்ரூம்லே வழுக்கி விழுந்து கையை உடச்சுக்கிட்டியே, அதுக்கே கவிஞர் அடுத்த பட அட்வான்ஸ் தரலாம்” என்றார் தோஸ்த்.

”கவிஞரே, பள்ளத்தூரார் பத்திரிகையிலே, படம் செம்மண் சீமை இல்லே; செம்மண் மீசைன்னு எழுதியிருக்காங்களாமே. ஆபீஸ்லே இருந்து பார்க்க வந்தவங்க யாரோ சொன்னாங்க” என்றார் அப்பா. ஆமாம் என்றார் தோஸ்த். அப்பாவுக்கு ஞாபக மறதி. காத்தி நர்ஸ் தானே அப்படிச் சொன்னது.

”உங்க மகனா, கே எஸ்?” அப்பாவை உயர்ந்தவர் கேட்க, அப்பா “அதே,, கவிஞரே” என்றபடி என்னை முன்னுக்கு வரச் சொன்னார். கண்ணாடியோடு முன்னே போக, ஒல்லிப் பிச்சான் தோஸ்த் என் கையைப் பிடித்து, “பேரு என்னடா ராஜா?” என்றார். சொன்னேன். “நம்ம சீமையிலே சோமசுந்தரமும், காளீஸ்வரனும் தான் அதிகம். ரெண்டும் மருதிருவரோட தொடர்பு உள்ள கோவில் மூலவர் பெயர். நீங்க இவனுக்கு அரவிந்தர் மேலே பக்தியால் பெயர் வச்சிட்டீங்க போல. பாம்பு வேறே இருக்கு”, என்றார் கவிஞர்.

“ஆமா, பெயர்லே வர்ற பாம்பு, வீட்டுப் பெயர்” என்றார் அப்பா. அப்புறம் என்னவோ நினைவு வந்தவராகக் கவிஞரைக் கேட்டார் – “அது என்ன, முகாரியிலே டூயட் வச்சிருக்கீங்க? நல்லா இருக்குதான். ஆனாலும் முதல் தடவையா இப்போதான் கேக்கறேன்”.

“முகாரின்னா அழுமூஞ்சின்னு பொது அபிப்ராயம் இருக்கு. அதை மாத்தத்தான்” என்றார் கவிஞர். தோஸ்த் மெல்லிய குரலில் ‘கனவு கண்டோம் நாம் கனவு கண்டோம்” என்று பாடினார். அவர் ஒரு குரல் அழுதிருக்கலாம்.

“மருது சோதரர்கள் பெரிய சிவபக்தர்கள். அதை அழுத்தமா சொல்லியிருக்கலாம்னு வாரியார் சாமி சொன்னாராம். நிறைய சொல்லியிருக்கேன். அவருக்கு அது போதாதுதான். நான் இந்தக் கட்சியிலே இல்லாம இருந்து நெறைய சாமி பாட்டும் போட்டிருந்தா அவருக்கு ரொம்ப பிடிச்சிருக்கும்” என்றார் உயர்ந்த கவிஞர்.

“நீங்க சீக்கிரமே வெளியே வந்து பக்தி பக்தி, பக்தின்னு எழுதப் போறீங்க பார்த்துக்கிட்டேயிருங்க” என்றார் அப்பா. அவர் கண் பாதி மூடி இருந்தது.

“செம்மண் பூமியிலே மீசையே இல்லாதுபோனா நான் பக்தி இலக்கியம் எழுதுவேன்” கவிஞர் சிரித்தபடி சொன்னார் . ”இன்னும் ஒரு வாரமாவது தங்கி ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க கே எஸ். உங்களுக்கு பேமிலி பாஸ் எடுத்து வைக்கச் சொல்லியிருக்கேன்” என்றார் அப்பாவிடம்.

அப்புறம் கவிஞர் கைக்கடியாரத்தைப் பார்த்தபடி எழுந்து கொண்டார். “கே எஸ், வரேன் சார். தம்பி முசாபர், உன் உடம்பையும் கவனி, நம்ம பேங்க் ஏஜெண்டையும் கவனிச்சுக்க. அடுத்த படத்துக்கு இவர் பேங்க்லே தான் கணக்கு”. பக்கத்து அறைக்காரர் பெயர் முசாபர் என்று தெரிந்தது. சின்ன மருது என்று ஏதோ சொன்னாரே? அதுவும் இன்னொரு பெயரோ.

தோஸ்த் என்னைத் தமிழோட கூட மலையாளமும் படிக்கச் சொன்னார். ”பாட்டித் தள்ளை கிட்டே கத்துக்க” என்றார். பாட்டி இங்கே இல்லை. அம்மாவோடும் அப்பாவோடும் கோபித்துக் கொண்டு அத்தையோடு இருக்கிறாள். அதை அவரிடம் சொல்வதற்குள் பட்டாம்பூச்சியை மிதிக்காமல் ஜாக்கிரதையாக அடி வைத்து வெளியே நடந்தார்.

அவர்கள் போன பிறகு காத்தி நர்ஸ் நாற்காலியில் இருந்த மீசை மருதுவிடம், “உங்க சாப்பாடு வந்துடுச்சுன்னா சொல்லுங்க. கொடுத்திட்டு போறேன்” என்று சொல்லி பட்டாம்பூச்சி போல் வேகமாக வெளியே போனாள். “இதோ வந்தாச்சும்மா” என்றபடி அவர் அப்பாவிடம் மெல்லிய குரலில் சொன்னார் –

“படம் முதல் வாரம் ரிப்போர்ட் சுமார். இனி அடுத்தடுத்த வாரம் எப்படியோ. பாவம் கவிஞர் நெறையச் செலவழிச்சிருக்கார்” என்றார். “நம்ம பக்கம் நல்லா போகும். பாருங்க அடிச்சுட்டு வரும்” என்றார் அப்பா. ”அப்படியே எனக்கும் அடுத்த படம் சீக்கிரமா கிடைக்கும்னு நல்ல வார்த்தை சொல்லுங்க உங்க வாயாலே”. மருது குரல் ஆர்வமாக ஒலித்தது.

காத்தி நர்ஸ் மருதுவின் டிபன் டப்பாவோடு திரும்ப உள்ளே வந்து, ”அப்பா, மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருக்கு” என்றாள். என் கையில் இருந்து டிபன் காரியரைப் பறித்துக் கொண்டாள். நேரமாச்சு என்று சொல்லியபடி மருதுவுக்கும் அப்பாவுக்கும் ஊட்ட ஆரம்பிக்க, அம்மா அறைக்குள் வந்தாள்.

”ஒவ்வொருத்தரா ஊட்டி நான் எப்போ கொடைக்கானல் போறது. போன வாரம் மூணு பேஷண்ட் சர்ஜரிக்கு வந்தாங்க. கூட்டாஞ்சோறு ஊட்டினேன். இப்போ ஏஜெண்டு சாரும் மருது சாரும் தான். ரெண்டு பிள்ளைங்க எனக்கு. எறைக்காம சாப்பிடணும். புரியுதா? கூட்டிப் பெருக்க ஆள் கிடையாது. அதையும் நான் தான் செஞ்சாகணும். முடிச்சு ரெண்டாம் பெட்டிலே பேஷண்டுக்கு பெட்பான் வைக்கணும். தொடச்சு விடறதும் நானே”. அவள் அம்மாவைப் பார்த்துச் சிரிக்க, அம்மா அவளிடம் சொன்னாள்.

”காத்தியம்மா, கூஜாவிலே பால்பாயசம் இருக்கு. உங்க பிள்ளைகளுக்கு கொடுங்க. நீங்களும் சாப்பிடுங்க. அரவிந்தா, சொல்லலியாடா?” எதை?

அம்மா குரல் இன்னும் மனதில் இருக்கிறது. இந்த அறுபது வருடத்தில் எல்லோரும் போய்ச் சேர்ந்து விட்டார்கள். காத்தி நர்ஸ் இருக்கிறாள். முதியோர் இல்லத்தில் தொண்டு கிழவியாக வளைய வருகிறாள் அவள். அப்பாவுக்கு காத்தி நர்ஸ் ஸ்பூன் இல்லாமல் வெறுங்கையால் ஊட்டி விட்டதும், அப்பா கன்னத்தில் தன் கன்னம் உராய அவரோடு சிரித்ததும் சரியில்லை என்று லாஜிக் இல்லாமல் அவ்வப்போது இன்னும் தோன்றுகிறது. போகட்டும். அப்பா சொன்னபடி கவிஞர் பக்தி பக்தி என்று எழுதிக்கொண்டு இருந்து அளவில்லாத புகழோடு மறைந்தார். நான் இன்னும் செம்மண் மீசை சினிமாவை யூடியூபில் கூட பார்க்க வாய்க்கவில்லை. அந்தப் பாட்டு, ’கனவு கண்டோம்’ என்ற முகாரி ராக டூயட், அது மட்டும் எனக்குப் பிடித்த கானமாகி விட்டது. அப்பாவுக்குத் தெரிந்தால் சந்தோஷப்படுவார்.

(நிறைவு)

‘குமுதம் தீராநதி’ ஜூலை 2019 இதழில் பிரசுரமானது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன