மலையாள மகாகவி உள்ளூர் பரமேஸ்வர ஐயர் நினைவு இலக்கிய விருது 2019

வரும் ஜூலை 23 செவ்வாய்க்கிழமை மலையாள மகாகவி உள்ளூர் பரமேஸ்வர ஐயர் நினைவு இலக்கிய விருது வழங்கும் விழா திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

உங்கள் அன்பான வாழ்த்துகளோடு, அடியேன் விருது பெறுகிறேன்.

அழைப்பிதழை இணைத்துள்ளேன்.

அனந்தை, சுற்று வட்டாரத்தில் வசிக்கும் நண்பர்களை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

உள்ளூர் எஸ். பரமேஸ்வர ஐயர்

மலையாளத்தின் மகாகவிகளில் ஒருவர் உள்ளூர். இவரது இயற்பெயர் பரமேஸ்வர ஐயர். இவர் 1877 ஜூன் 6 ஆம் நாள் சங்கனாச்சேரி என்ற இடத்தில் பிறந்தார். பின்னர் நீண்டகாலம் திருவனந்தபுரத்தில் உள்ளூர் என்ற இடத்தில் வாழ்ந்ததால் உள்ளூர் பரமேஸ்வர ஐயர் என அறியப்பட்டார். பின்னர் உள்ளூர் என்ற இடப் பெயராலேயே பிரபலமானார்.

இவர் அரசின் பல்வேறு உயர்ந்த பதவிகள் வகித்தவர். ஆனாலும் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். வேலைப்பளுவுக்கு இடையேயும் கவிதைகள் இயற்றுவதில் ஈடுபட்டிருந்தார்.

உள்ளூர் பிரபல மலையாளக் கவிஞர்களான வள்ளத்தோள் நாராயண மேனோன், குமாரன் ஆசான் ஆகியோரின் சமகாலத்தவர். இம்மூவரும் மலையாள மொழியின் முப்பெரும் கவிஞர்கள் என அறியப்படுகின்றனர்.

இவர் எழுதிய மகாகாவியம் ‘உமாகேரளம்’. உமாகேரளத்திற்குப் பின் கர்ணபூஷணம், பிங்களா, பக்தி தீபிக போன்ற சிறு காப்பியங்களை இயற்றினார். இவற்றுள் மகாபாரதக் கர்ணனின் பெருமை கூறும் கர்ணபூஷணம் மிகவும் பேசப்பட்ட ஒரு படைப்பு. மேலும் அருணோதயம், தாராஹாரம் (நட்சத்திர மாலை), கிரணாவலி, ரத்ன மாலா, தரங்கிணி, சித்ரசாலா போன்ற தலைப்புக்களில் ஏராளமான கவிதைகள் படைத்துள்ளார்.

உள்ளூர் தம் கவிதைகளில் எதுகை, மோனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். இவரது கவிதைகளில் வமொழியின் ஆதிக்கம் அதிகம் என்பர். சற்று அதிகமாகவே உவமைகளைக் கையாண்டுள்ளார் என்றும் கூறுவர். உள்ளூரின் கவிதைகள் செவ்விலக்கியத் தன்மை வாய்ந்தவை.

உள்ளூர் மகாகவி என்று அறியப்பட்டாலும் அவர் எழுதிய ‘கேரள சாகித்ய சரித்திரம்’ (கேரள இலக்கிய வரலாறு) எனும் பல தொகுதிகளாக அமைந்த மலையாள மொழி – இலக்கிய வரலாற்று நூல் மிகவும் பாராட்டுக்குரியது. மலையாளம் உள்ளளவும் உள்ளூரின் பெயரைச் சொல்ல இது ஒன்றே போதும் என்பர்.

1949 ஜூன் 15 ஆம் நாள் தமது 72 ஆம் வயதில் உள்ளூர் இயற்கை எய்தினார்.

மகாகவி உள்ளூர் விருது

மலையாள மொழியின் முப்பெரும் கவிஞர்களில் ஒருவர் உள்ளூர் எஸ். பரமேஸ்வர ஐயர். அன்னாரின் நினைவாக ஆண்டுதோறும் விருது ஒன்று வழங்க அவரது உறவினர்கள் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தில் அறக்கட்டளையொன்றை நிறுவியுள்ளனர். 1997 ஆம் ஆண்டு இவ் அறக்கட்டளை நிறுவப்பட்டது. மலையாளத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து மலையாளத்திற்கும் மொழிபெயர்ப்பு செய்வோரிலிருந்து ஒவ்வொருவரைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்பட்டு வந்தது. 2018 ஆம் ஆண்டிலிருந்து ஓராண்டு தமிழ்-மலையாள மொழிபெயர்ப்பாளருக்கும், அடுத்த ஆண்டு மலையாள-தமிழ் மொழிபெயர்ப்பாளருக்கும் என மாறிமாறி வழங்கலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.

1997 லிருந்து இதுவரை இதுவரை இருபத்தொன்று பேர் மலையாளம் – தமிழ் மொழிபெயர்ப்புக்கும், பத்தொன்பது பேர் தமிழ்- மலையாளம் மொழிபெயர்ப்புக்கும் விருது பெற்றுள்ளனர்.

தமிழகத்திலிருந்து விருது பெற்றவர்களில் திருவாளர்கள் சிற்பி பாலசுப்பிரமணியம், எம். சிவசுப்பிரமணியம், குளச்சல் யூசப், குறிஞ்சி வேலன், சிதம்பரம் இரவிச்சந்திரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். மலையாளத்தில் திருவாளர்கள் கே.எம். ஜார்ஜ், ஐயப்பப் பணிக்கர், புதுச்சேரி ராமச்சந்திரன், ஜி. பாலமோகன் தம்பி, ஆற்றூர் ரவிவர்மா ஆகியோர் முக்கியமானவர்கள்.

இவ்வாண்டு தமிழ் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான இரா. முருகன் (சென்னை) அவர்கள் விருதுபெற உள்ளார்.

திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம்

திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் 1963 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. சாலையில் ஒரு கடையின் மேல்மாடியில் ஒரு சிறு அறையில் ஆரம்பிக்கப்பட்ட சங்கம் இன்று இரண்டுநிலை சொந்தக் கட்டடத்தில் இயங்கி வருகின்றது. தமிழ் ஆர்வலர்கள், சான்றோர்கள், புரவலர்கள் இவர்களின் ஒத்துழைப்பும் உறுதுணையும்தான் சங்கத்தின் வியக்கத்தக்க வளர்ச்சிக்குக் காரணம்.

கேரளத்தில் வாழும் மொழிச் சிறுபான்மையினரான தமிழர்களை ஒருங்கிணைத்தல், அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக ஆவனசெய்தல், அவர்தம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணல், தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு போன்றவற்றை ஊக்குவித்தல், தமிழ்க் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல், தமிழ்- மலையாள உறவை வலுப்படுத்தல் போன்றவை சங்கத்தின் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்கவை.

தமிழ்ச்சங்கத்தின் சார்பில் மகளிரணியும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது.

சங்கத்தில் சுமார் ஆயிரம் வாழ்நாள் உறுப்பினர்களும், ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்டு உறுப்பினர்களும் உள்ளனர். சாகித்ய அகாதமி விருதாளர்களான கேரளத்துத் தமிழ் எழுத்தாளர்களான நீல பத்மநாபன், ஆ. மாதவன், பேராசிரியர் வ. வினாயப்பெருமாள் போன்றோர் தமிழ்ச்சங்கத் தலைவர்களாக இருந்துள்ளனர்.

சங்கத்தில் கேரள நூலகக் குழுவின் அங்கீகாரத்துடன் நூலகம் ஒன்றும் மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றது. சுமார் முப்பதாயிரம் தமிழ்ப் புத்தகங்கள் இங்கு உள்ளன. பெரும்பான்மையான தமிழ் இதழ்களும் நாளேடுகளும் வருகின்றன.

சங்கம் மாதம் தோறும் ‘கேரளத்தமிழ்’ என்ற பெயரில் தமிழ்சங்க செய்தி இலக்கிய இதழொன்றை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. இது தவிர அவ்வப்போது சில சிறப்பிதழ்களும், இலக்கிய நூல்களும் வெளியிடுகின்றது.
.
2013 ஆம் ஆண்டு தமிழ்ச்சங்கம் தனது பொன்விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. இப்போது ஐம்பத்தேழாம் ஆண்டை நோக்கி வெற்றிநடை போடுகிறது. கேரளத்தில் செயல்படும் பிற தமிழ்ச் சங்கங்களோடு மட்டுமன்றி இந்திய அளவிலும் உலகளவிலும் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் தொடர்புகொண்டுள்ளது.

மாதம் தோறும் கவியரங்கமும் கதைவேளையும் நடத்திவருகின்றது. திருவள்ளுவர் விழா, பாரதி விழா, பொங்கல் விழா, நீலபத்மம், தலைமுறைகள் விருது வழங்கும் விழா, உள்ளூர் விருது விழா, ஆண்டுதோறும் நிலாவிருந்து அறக்கட்டளைகள், பாராட்டு விழாக்கள், கருத்தரங்கங்கள் போன்றவை திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் தொடர்ந்து நடத்திவரும் விழாக்கள். சில விழாக்களை ஒட்டி பள்ளி, கல்லூரி மாணவ் மாணவியருக்கான பல்வேறு போட்டிகள் நடத்திவருகின்றோம். சுதந்திரதின விழா, குடியரசுதின விழா ஆகிய விழாக்களும் கொண்டாடி வருகின்றோம். இடையிடையே இலவச மருத்துவ முகாம்களும் நடத்தி வருகின்றோம்.

சிறந்த முறையில் செயல்படும் தமிழ்ச் சங்கத்திற்கு, தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கிவரும் தமிழ்த்தாய் விருது 2015 ஆம் ஆண்டு திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்திற்குக் கிடைத்தது என்பது பெருமைக்குரியது.

வாழ்க தமிழ், வளர்க தமிழர் நலன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன