வந்திடும் மறுபடி ரதங்கள் பார்க்கணும் முடிந்தால், ஆயுசு சொற்பம்

‘நடையானந்தா கவிதைகள்’ நூலில் இருந்து –
//

ராத்திரி முழுக்க ரதங்கள் ஊரும்
பூக்களைக் குவித்துச் சுமந்த வண்ணம்.
சாமியோ மானுட சாதியோ உலாவில்
வருவது இல்லை எல்லாம் மலர்களே.

பிள்ளைவயல் காளி சின்ன உருவம் மேல்
பூவெல்லாம் கவிந்து மணத்து இருக்க
வருடம் ஒருமுறை மலர்களின் திருவிழா.

பூக்களைப் பறித்து பூக்களை அடுக்கி
பூக்களைத் தேரேற்றி, பல்லக்கில் பூசுமந்து
பூக்களை சொரிந்து பூக்களை அகற்றி
பூக்களை மேலும் சொரிந்து குவித்து
இரவு நகர்ந்து புலரி வரைக்கும்
பூக்களை நேசித்து பூக்களை சுவாசித்து
வந்தவர் அனைவரும் பூக்களாய் மாறுவர்.

வாசனைப் பூக்கள்தாம் வேணும் என்று
பிடிவாதம் யாரும் பிடிப்பதில்லை
கனகாம்பரமும் வயலட் பூவும்
கூடை நிறையக் கொண்டுவந்து
தூவிச் செரிய மல்லியோடு சிரிக்கும்.
அரளியும் தும்பையும் பார்த்த நினைவு
காட்டுப் பூக்களும் ஒருமுறை வந்தன.

பூக்களின் ஊர்வலம் சும்மா நடக்காது
கடைத்தெரு வணிகர்கள் ஒன்று திரண்டு
தெருவை அடைத்து பந்தல் போட்டு
கச்சேரி நடத்துவர் இளைஞர் விருப்பமாய்.
சினிமா பாட்டு பாடும் கூட்டம்
மதுரையில் திருச்சியில் கூட்டி வந்து
பளபளவென்று கலர் விளக்கெரியப்
பாட வைப்பர் உச்ச ஸ்தாயியில்.

சினிமாவில் மட்டும் பார்த்திருக்கின்ற
கிதாரும் அகார்டியன் டிரம்ஸும் நேரே
வாசிப்பது கண்டும் கேட்டும்
சொர்க்கம் போவார் ஊர்முச்சூடும்.
திருச்சியில் இருந்து ஓர்முறை நாகாஸ்
என்ற பெயரில் மிமிக்ரி கலைஞர்
அண்ணா குரலில், காமராஜர்,
பெரியார், கலைஞர் போலெலாம்
பேசிக் காட்ட கரங்களின் கடல் ஒலி.
பேசிக் கொண்டிருந்தவர் திடுதிப்பென்று
சிங்கார வேலனே தேவா
பாட்டின் முதலில் மிதந்து வரும்
ஜானகி குரலில் ராகமிழுத்துப்
பாட மீண்டும் கரவொலி.
நகாசுவேலை இன்னுமுண்டு
மூக்கை ஒருபக்கம் முழுக்க மூடி
காருகுறிச்சி நாகஸ்வரமாய்
ஜானகி குரலைப் பின்தொடர்ந்தார்
கூடவே சாவித்திரி ஜெமினி குரலில்
பாடு சாந்தா பாடு
உச்சகட்ட மகிழ்ச்சியில் கூட்டம்
ஓஓஓவென்று ஆர்பரித்தது.

திறந்தவெளி அரங்கம் மேலும்
ராத்திரி என்பதால் வெப்பம் இல்லை
கச்சேரி கேட்க வந்தவர்க்கெல்லாம்
குழல் விளக்குகள் அலங்கரித்த
நிஜாம்லேடி புகையிலை வேனில்
காகித விசிறி இலவசமாக வழங்கினர்
விசிறி தோறும் தேவிகா புகைப்படம்
வியர்க்காமல் விசிறிய பின்னர்
காலை விடிந்து ஆயிரக் கணக்கில்
வீடுகள் போனார் தேவிகா களைத்து.

பூக்கள் சுமந்து முதல் ரதம்
பெரிய ஆஸ்பத்திரி பின்னால் புறப்படும்
சுத்தபத்தமாய் அலம்பித் துடைத்த
மண்கொண்டு போகும் டிப்பர் லாரியில்
அட்டை கொண்டு அரண்மனை போல்
கட்டி நிறுத்தி கோபுரம் செய்து
நடுவில் பீடம் பட்டுத் துணிசுற்றி
மேலே பத்திருபது மூங்கில்
தட்டுக்கள் நிறைய ரோஜா
மல்லிகை ஜவ்வந்தி பூக்கள்
பட்டில் போர்த்திய கோபுரக் கலசம்
பூபோல் எலக்ட்ரிக் வேலை கலரில் சுழலும்
வாசனை போதாதென்று செண்ட் தெளித்து
ரதம் அருகில் வரும்போது கிறக்கமானது.

கடைத்தெரு இருந்து ஒன்றில்லை மூன்று
ரதங்கள் கிளம்பும் எல்லாம் அட்டையும்
பலகையும் அறுத்துச் சமைத்த கோவில்;
மலையில் அருவி வீழும், விண்மீன்கள்
மின்னி ஒளிரும் விளக்குகள் சுழலும்
எலக்ட்ரீஷியன் தஸ்தகீர் வடித்தது.
மதுரையில் கொள்முதல் வண்டி நிறைத்த
குண்டு மல்லிகை, முல்லை, பிச்சிப்பூ
எடுத்துப்போக பாதை மணக்கும்.
ரதத்தைத் தொடர்ந்து கடைத்தெரு பிரமுகர்
கூடி நடப்பர் சச்சரவின்றி
நின்றுநின்று கரகம், நாயனம்
விடியுமுன் ஊர்வலம் கோவில் சேரும்.

வடக்கு ராஜ வீதி அன்பர்கள்
தெற்கு கோவில் தெருக்காரர்கள்
ஆனந்தபவான் பெத்தவாரு, மெஸ்காரர்கள்
பஜ்ஜி ராயர், மிட்டாய்க்கடை சொக்கநாதன்
மிலிட்டரி ஓட்டல் உடமையாளர்கள்
பரோட்டா கடை இக்பால் நண்பர்கள்
சாயாக்கடை சங்கத்தார்
அனைவரும் அங்கங்கே ரதங்கள் செய்து
பூக்களை எடுத்து கோவில் புகுவர்
கண்முழிப்பவர்க்கெல்லாம்
டீ ஸ்டால், மிட்டாய்க்கடை சப்ளையாய்
பால் டீ இலவசம் காராசேவும் உண்டு
இட்லி கட்டி எடுத்துக் கொண்டு
ஆனந்த பவான் காரர் வந்து போவார்.

குவிந்த பூக்களால் பிள்ளைவயலில்
சன்னிதி மறைய காளி நகைப்பாள்
அத்தனை பூவும் காலைநேரம்
பக்கம் ஓடும் ஓடையில் மிதந்து
மெல்ல நகர்ந்து ஓடி மறைய
அருகில் ஓடும் நூத்தியொண்ணு
மதராஸ் ராமேஸ்வரம் போட்மெயில் வண்டி.

பூக்கள் ஒருநாள் முழுக்க ஆளும்
விழாவின் விவரம் இன்னுமுண்டு
பூக்கள் குறைந்து போனதால் என்றும்
பூத்திருவிழா நின்றது இல்லை.
காட்டுப் பூக்கள் வயலட் பூக்கள்
அரளியும் இருவாட்சியும் மகிழமும்
வந்திடும் மறுபடி ரதங்கள்
பார்க்கணும் முடிந்தால், ஆயுசு சொற்பம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன