ஒரு கவிதை – ஒரு கடிதம்

 

  

கலாப்ரியா, அருள்நம்பி கடிதங்கள்

அன்புள்ள முருகன்

வெந்தணலில் மெழுகெனவே வேதனையில் சிங்களரால்
நொந்து படுகின்றார் நம்தமிழர் – செந்தமிழா
கடலெல்லை தாண்டிக் களம்கண்ட நம்மாந்தர்
இடர்ப்பட்டுப் போவதுஏன் இன்று.

கொடுமைகண்டு பொங்கும் குணமெங்கே எந்தமிழா
கடமை மறந்தனையோ? கற்சிலையாய் அடிமைஎனும்
விலங்குடுத்து வாழ்கின்றார் விலங்கினும் கடையராய்
இலங்கையில் தமிழரெலாம் இன்று.சொ.ச.அருள்நம்பி
***************************************8
நன்றி கவிஞர் நம்பி. உங்கள் உணர்வுகள் என்னுடையவையும் கூட.

இரா.மு
*************************************************

கலாப்ரியா கடிதம்
——————————————————————————————–
அன்புள்ள முருகன்
பொதுவாய் அன்புமிக்க என்று ஆரம்பித்து, என்றும் உங்கள் என்று முடிக்கிறவழக்கம். அன்புமிக்க- கல்யாணியிடமும் என்றும் உங்கள் வண்ணநிலவனிடமும் படித்து, பிடித்து எடுத்துக் கொண்டது.

தீபாவளி முடிந்தது. 1960 தீபாவளிக்கு மன்னாதி மன்னன். 61-தாய் சொல்லைத் தட்டாதே, 62-விக்கிரமாதித்யன்,63-பரிசு,64-படகோட்டி,65-தாழம்பூ’66-பறக்கும் பாவை,67-விவசாயி 68-காதல் வாகனம்69-நம் நாடு70-களில்(இருபது வயது இளமை?யில்) நினைவு தப்பத்தொடங்கி நினைவை சினேகிதி நிறைத்துக் கொண்டுவிட்டாள்..அப்புறம் எம் ஜி ஆர் படங்களும் விசேஷமாக வரவில்லை…அந்த தீபாவளிகளின் எளிமையும் மகிழ்ச்சியும் இனிமேல் என்றைக்கும் வராது…ஆவியில் எளிமை நிறைந்த பாக்கியமான காலங்கள்..

..பி.ஏ கிருஷ்ணன் எனக்கு ஆசிரியர். 66-67களில். அவருக்கு நினைவில்லை. தற்செயலாய் போன புத்தக காட்சியில் அவருடைய புத்தகத்தை..யாரோ வெளியிட ஸ்டாலில் நின்று கொண்டிருந்த நான் பெற்றுக் கொண்டேன்.மற்றபடி அவரது நாவலில் வருகிற ஜங்ஷன் பெருமாள் கோயில்த் தெருவெல்லாம் எனக்கு அத்துப் படி.கிரிக்கெட் பைத்தியமானது..

அப்போதுதான். சாயீ என்றொரு பையன் இந்து காலேஜ் டீமில் பிரமாதமாக விளையாடுவான். சேவியர் கல்லூரிக்கு எதிராக அவர்கள் விளையாடிய போது அவர்களை உற்சாகப் படுத்தவும் தகாராறு வந்தால் அல்லது தகராறு பண்ணி சண்டை இழுக்கவும் நங்கள் போனது. அப்புறம் கிரிக்கெட் பார்க்கிற/கேட்கிற பைத்தியம் பிடித்துக் கொண்டது.இந்தியன் நியூஸ் ரீலில் கடைசி ஒரு நிமிஷத்தில் ஸ்போர்ட்ஸ் செய்தியில் 30 செகண்ட் காண்பிப்பான் பட்டோடி ஒரு சிக்சர் அடிப்பதற்குள் நியூஸ் முடிந்து விடும் அல்லது முடித்து விடுவார்கள். இதற்காக அந்த ரீல் ஒடுகிற தியேட்டருக்கு அது என்ன படமானாலும் போவோம். தியேட்டர் மானேஜரிடம் I.N.R (INDIAN NEWS REEL) ஓடுகிறதா என்று செக் பண்ண அதிகாரி வந்திருப்பதாக பொய் சொல்வோம்..அந்த 68-69 எல்லாம் இனி வரவா போகிறது..இப்போது திகட்டத் திகட்ட டி.வி யில் கிரிக்கெட்…எனக்கு பார்க்கத்தான் தெரியும் சாயீ(சாயி சோபர்ஸ் என்று கல்லூரி நோட்டுகளில் `இடைவெளியில்லாமல்எழுதி’ வைத்திருப்பான்.கொஞ்ச நாள் சாயி கவாஸ்கர் என்று எழுதிவந்தான் அப்புறம் மறுபடி சாயி சோபர்ஸுக்கு தாவிவிட்டான்) இந்தியா சிமெண்ட்ஸில் வேலை கிடைத்ததாக நினைவு.ஓரிருநாள் விளையாட காலேஜ் கிரவுண்டுக்கு கூட்டிப் போனான்.இரண்டாம் நாள் மட்டும் நாற்பது ரன் எடுத்தேன் அப்புறம் ஃபுல் டாஸ் பந்தை ஒரு காட் அண்ட் போல்ட் கேட்ச் பிடிக்கப் போய் கை வலி பின்னி விட்டது. போடா சாயி நீயும் உன் கிரிக்கெட்டும்…ஒளிவிளக்கு என்ன வசூலோ இன்னிக்கி சாயந்தர ஷோ.நேற்றே 1.66பைசா டிக்கெட் முடியவில்லை..என்று மறுநாள் ஓடிவிட்டேன் நாலரை மணிக்கு மேல் காலேஜில் நானாவது இருப்பதாவது….

நினைவு, நினைவு, நினைவைத் தவிர என்னிடம் என்ன இருக்கிறது..நானோ டெக்னாலஜி ஸ்பிரெட் ஷீட் என்று ஒரு எழவும் தெரியாது..அதற்கெல்லாம்தான் நீ இருக்கிறாயே.அப்புறம், நீ புத்தகம் அனுப்பவில்லை..
என்றும் உன்
கலாப்ரியா

*******************************************

2008/10/29 <eramurukan@eramurukan.in>
அன்புள்ள கலாப்ரியா

நலம் தானே? தீபாவளி எல்லாம் நன்றாக நடந்து முடிந்ததா? இங்கே தீபாவளி நேரம் பார்த்து ஆபீசில் நெட்டி முறிக்கிற வேலை. லேப் டாப் கம்ப்யூட்டரும் இண்டெர்நெட்டும் சகலமான நாட்டுக்கும் உடனுக்குடன் தொலைபேசும் வசதியும் (?!) இருப்பதால், வீடு விடுமுறை நாளில் ஆபீஸ் ஆகி விடுகிற நிகழ்ச்சி. இதுலே ஒரு கஷ்டம் என்னன்னா வீட்டுக்கு வந்து சவுகரியமான்னு நாலு வார்த்தை கேட்கறவங்க கிட்டே முகம் கொடுத்துப் பேச முடியாது. அந்த் நேரத்திலே நியூயார்க்கிலே ஒருத்தர் கூட உப்புப் பெறாத விஷயம் பத்தி தல போற விவாதம் நடத்திட்டு இருப்போம். இல்லே, ஒரு ஸ்ப்ரெட்ஷீட்டில் கணக்கு உதச்சு சரி பண்ணிட்டு இருப்போம். வீட்டுக்கு வந்தவங்க சரி, இவருக்கு நம்மோடு பேச விருப்பம் இல்லேன்னு முடிவு பண்ணிட்டுப் போற கொடுமை. அடுத்த தடவை வரும்போது இல்லே வழியிலே வச்சுப் பார்க்கும்போது நாமதான் முன்கை எடுத்துச் சிரிச்சுப் பேசணும். அப்போ வேறொருத்தர் மொபைலில் லண்டன்லேருந்து கூப்பிட்டுட்டு இருப்பார்!

உங்க ப்ரமோஷன் வந்துடுச்சா? இங்கே போனவாரம் நம்ம நண்பர்கள் கிட்டே
( பெரும் பதவியாளர்கள் இப்போ) விசாரிச்சேன். அதைத் தவிர வேறே எதை வேணும்னாலும் பேசு ரேஞ்சில் ஒதுங்கறாங்க. ஆபிசர் ப்ரமோஷன் இப்ப என்ன மத்திய மந்திரி பதவி மாதிரி பெரியகை விஷயம் ஆயிடுச்சா? இத்தனைக்கும் புதுசா ரெக்ரூட்மெண்ட் இல்லையேன்னு கேட்டா, இன்னும் ரெண்டு வருஷ்த்துலே இந்திரா காந்தி பேட்ச் (நேஷனலைஷேசன் டயத்துலே உள்ளே வந்தவங்க – என்னை மாதிரி) ரிட்டையர் ஆவாங்க. அப்போ நிறைய வேகன்சி வரும்னு பதில். அது சரி, அறுபதுக்கு அப்புறம் வேலை பார்க்க இது என்ன இங்கிலாந்தா (அங்கே ரிடயர்மெண்ட் வயசு 65). …

சரி பிறகு பார்க்கறேன். பிள்ளையை சேப்பாக்கம் மைதானத்துலே பிராக்டிசுக்குக் கொண்டு விட்டுட்டு ஆபீஸ் கிளம்பணும். ஆஸ்திரேலியா கால். அவங்க ஐந்து மணி நேரம் நமக்கு முந்தி.

அன்புடன்
இரா.மு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன