வீடியோ விளையாட்டுப் பிள்ளை

 

கல்கி ‘டிஜிட்டல் கேண்டீன்’ பத்தி

டியூப்லைட் இல்லாத கல்யாண மண்டபமும், கேதோட் ரே டியூப் இல்லாத வீடும் காணக் கிடைப்பது அரிது. கேதோட் ரே டியூப்? சுருக்கமாக சி.ஆர்.டி. நம் வீட்டு டெலிவிஷன் திரையாக, உள்ளேயிருந்து மின்கதிரை திரைக்கு அனுப்பும் ‘எலக்ட்ரான் துப்பாக்கி’யாக வடிவெடுத்தது சி.ஆர்.டிதான். இதன் எளிய வடிவம், மின்னலையைத் திரையில் நகரும் புள்ளியாகக் காட்ட வசதி செய்யும் ஆசிலோஸ்கோப். இந்த சி.ஆர்.டியும் ஆசிலோஸ்கோப்பும் அறிமுகமாகி நூறு வருடமாகி விட்டது. செஞ்சுரி போட்ட இவற்றின் உடன் பிறந்த சகோதரி, வீடியோ விளையாட்டு. இந்த உ.பி.சவின் தற்போதைய வயசு ஐம்பது சொச்சம். முதலில் ஆசிலோஸ்கோப்பில் ஒளிப் புள்ளியை அசைய வைத்து, திரையில் பின்னணியாக கடைத்தெரு, தோட்டம் துரவு என்று வரைந்து விடியோ விளையாட்டென்று காப்புரிமை பெற மனுப்போட்டார்கள். அமெரிக்காவில் ‘துப்பாக்கி சுடும் விளையாட்டு’ என்ற பெயரில் அதிரடி அறிமுகமானது. அசைகிற ஒளிப்புள்ளி தான் துப்பாக்கிக் குண்டு. திரையில் வரைந்து வைத்ததைக் குறிபார்த்துச் சுடுவதற்கு ஒளிப் புள்ளியை நகர்த்த வேண்டும். அவ்வளவுதான்.

இதைத் தொடர்ந்து டிவி திரையிலேயே புள்ளியைப் பந்தாக நகர்த்தி விளையாடும் சுலபமான டென்னிஸ் அறிமுகமானது. இப்படி விளையாட்டாகக் கோடு போட்ட தடத்தில் ரோடு போட்டு, நாடு நகரமெல்லாம் வீடியோ பார்லர்கள் திறக்கப்பட்டன. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே திரையிலோ அடுத்தடுத்த திரைகளிலோ ஒரே விளையாட்டைத் தேர்ந்தெடுத்து இயக்கி விளையாடும் இந்த வீடியோ கடைவீதி விளையாட்டுகள் 1980களில் உச்சத்திற்குப் போய், இன்று காணவே காணோம்.

பெர்சனல் கம்ப்யூட்டரும் லேப் டாப் மடிக் கணினியும் பரவலாக உபயோகத்துக்கு வந்த கடந்த பத்தாண்டுகளில் வீடியோ விளையாட்டுகள் இன்னொரு சுற்று வெற்றிகரமாக வலம் வர ஆரம்பித்தன.. அலை இன்னும் ஓயவில்லை. ஒளி, இசை, பேச்சு, கிராபிக்ஸ், சுவாரசியமான கதையமைப்பு என்று சினிமாப் படம் போல் வீடியோ விளையாட்டு மாறிப் போனது. டெக்னாலஜியும் கலையும் கலக்கலாகக் கைகோர்த்து லட்சக்கணகில் பணம் புரளும் இன்னொரு ஊடகம் இது. சோனி போன்ற நிறுவனங்கள் திரைப்படம், வீடியோ விளையாட்டு என்று இரண்டு துறையிலும் பிரபலமானதால், படத்தை வெளியிட்டு விட்டு, கூடவே அதன் அடிப்படையில் வீடியோ விளையாட்டு சி.டியையும் ரிலீஸ் செய்து, வசூல் ராஜாக்களாக காசு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தமிழிலும் வரப்போகிறது.

சினிமாவில் இல்லாத இன்னொரு சிறப்பு, வீடியோ விளையாட்டில் உண்டு விளையாடுகிறவர்கள் கதையில் பங்கு பெற்று ஆட்டத்தை நடத்திப் போக வழி செய்யும் சுவாரசியம் இது. விடீயோ கிரிக்கெட்டில் டெண்டுல்கருக்கு சமமாக எதிர் முனையில் மட்டை பிடித்து ரன்னை அள்ளிக் குவித்து ஆஸ்திரேலியா அணிக்கு டின் கட்டும் இந்திய நட்சத்திர ஆட்டக்காரர், சாட்சாத் நீங்கள்தான்.

இண்டர்நெட்டும் ப்ராட்பேண்டும் பெர்சனல் கம்ப்யூட்டர் உலகில் ஆதிக்கக் கொடி நாட்டியபின், வீடியோ விளையாட்டிலும் நல்ல முன்னேற்றம். எங்கெங்கோ இருக்கக்கூடிய ஏகப்பட்ட பேர் இணையத்தின் மூலம் ஒரே நேரத்தில் ஒரே வீடியோ விளையாட்டில் ஈடுபடுவதற்கான சாத்தியம் அதிகமானது. இரண்டு வருடம் முன்பு ஈவ் ஆன்லைன் வழங்க, 36000 பேர் இப்படிக் கலந்து கொண்ட இண்டர்நெட் வீடீயோ விளையாட்டு பஞ்சாயத்து தேர்தல் மாதிரி பரபரப்பு செய்தி.

பிரபலமான வீடியோ விளையாட்டுகளில் ஏமாற்றி வெற்றி பெறவும் பலபேர் ராத்தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு இண்டர்நெட்டில், இலவச யோசனை வழங்குகிறார்கள். விளையாட்டு மென்பொருளில் குற்றம் குறை இருப்பதைத் தோண்டித் துருவி, இதுபோல போங்கு ஆட்டத்துக்கு வழி செய்யப்படுகிறது.

வீடீயோ விளையாட்டில் ஈடுபாடு உள்ள மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர்களையும், ஈடுபடாத சர்ஜன்களையும் வைத்து ஆய்வு செய்து சமீபத்தில் பரபரப்பான சர்வே நடத்தி முடிவு வெளியிட்டிருக்கிறார்கள். வீடியோ கேம் ஆடிய டாக்டர்கள் கத்தி பிடித்து அறுவை சிகிச்சை நடத்தும் கச்சிதத்தில் ஆகட்டும், செயல்படும் வேகத்தில் ஆகட்டும், விளையாடாத டாக்டர்களை விட 27 சதவிகிதம் அதிகமாக முன்னணியில் இருக்கிறார்களாம். அது மட்டுமில்லை, கம்ப்யூட்டரில் ஒரு ரவுண்டு வீடியோ ரம்மி ஆடிவிட்டு ஆப்பரேஷன் தியேட்டரில் நுழைகிற டாக்டர்கள் அறுவை சிகிச்சையில் மகத்தான வெற்றி பெறுகிறார்கள்.

வீடியோ விளையாட்டு சாம்பியனான டாக்டரைத் தெரிந்தால் சொல்லுங்கள். நம்மாள் ஒருத்தருக்கு சிரசில் பைல்ஸ் ஆப்பரேஷன் செய்யணுமாம். சரசு சரசு என்று வீட்டுக்காரியைத் தலையிலே தூக்கி வச்சுக்கிட்டுக் குதிச்சா இப்படித்தான்.

(போன வாரம் கல்கி – கடைசி paragraph தவிர)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன