New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 49 இரா.முருகன்

இங்கிலீஷ்காரி.

அகல்யாவுக்குத் தெரியும். இந்தப் பெண் அங்கே, லண்டனோ, வேறே பட்டணமோ, இங்கிலாந்தில் இருந்து வந்து இறங்கி இருக்கிறாள்.

கறுப்பு தான். சரி, மாநிறம். அகல்யா சிவப்பு. சரி, சரி, கூடுதல் மாநிறம். அகல்யாவுக்கு, கற்பகம் பாட்டி சொல்வது போல, கொடி போல் உடல்வாகு. பிள்ளை பெற்றால் ஊதிப் போகலாம். இந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் ஆகியிருக்கும் என்று தோன்றவில்லை. உருண்ட தோளோடு கன்னம் வழுவழுத்து, மார்பு திரண்டு, பூசினால் போல் வடிவாக வந்து நிற்கிறாள். அகல்யாவை விட ஒரு குத்து உயரமும் கூட.

மூக்கில் ஒரு பக்கம் மட்டும் குத்தி, இத்தணூண்டுக்கு ஒரு மூக்குத்தி. மூக்குத்தி கூட இல்லை. மூக்குப் பொட்டு. காதிலே சின்னச் சின்னதாக புஷ்பராகக் கல் வைத்து நேர்த்தியான செய்வேலையோடு தாமரைப்பூ டிசைனில் தோடு.

கழுத்தில் போலாக, அதான், லேசாக, அரை அல்லது ஒரு பவுனில் சின்னச் சின்னதாக வார்த்த முல்லை மொட்டுச் சங்கிலி. சன்னமான பொடிக் கல்வேலை வளையல் இடது கையிலும், வெள்ளிக் காப்பு வலது கையிலும் வம்பு பேசிக் கலகலக்கிறது. வலது கை மோதிர விரலில் நீண்டு சுற்றிய நெளி மோதிரம்.

இதெல்லாம் இவள் இந்தியாக்காரி என்று ஓங்கி அறிவிக்கிறது.

இந்திரா காந்தி மாதிரி பாப் கட் செய்த தலையும், திமிர்த்து வளர்ந்த, இன்னும் பள்ளிக்கூடம் விடாத பெண் போல இறுக்கமான நீல பேண்டும், ஆண்பிள்ளை சட்டையும், வேறே தேசத்துக்காரி என்கின்றன.

அகிலா, ஏய் இவளே, எப்படி இருக்கே?

ஏகக் கூச்சலாகக் கழுத்தைக் கட்டித் தூக்கிச் சுற்றி இறக்கி விட்டாள் பழிகாரி. அகிலாவுக்கு அவளை உடனே பிடித்துப் போனது. யாராக்கும் அவள்?

தெரிசா மதாம்மயை பார்க்க வந்திருக்கீங்களா?

அகல்யா ஒரு சிரிப்பில் முகம் பிரகாசமாக அவளைக் கேட்டாள். பஸ் கண்டக்டர் மாதிரி தோல்பையை இரண்டு தோளியும் வழிய அணிந்தபடி, வந்தவள் அவள் கையைப் பற்றியபடி பதிலாகக் கூவியது –

லூசே, உன்னைப் பாக்கத்தான் வந்தேன். நீ அகல்யாதானே?

விடியல் நேரம் கழிந்து, நாராயணீயம் கோவில் ஒலிபெருக்கியில் கேட்கிற ஆறு மணிப் பொழுது. இன்னும் கொஞ்ச நேரம் படுக்கையில் புரண்டு கொண்டிருக்கலாமா அல்லது காப்பிக்கு எழுந்து உட்காரலாமா? நிச்சயமில்லாது திலீப் கண் மூடிக் கிடக்க, வாசலில் எழுந்த திடீர் கூச்சல் அவனை உடனே எழுப்பி உட்கார வைத்தது. யாராக்கும்?

அவசரமாக வாசலுக்கு வர அகல்யாவை இறுக அணைத்தபடி ஜனனி.

அவனைப் பார்த்ததும் அகல்யாவை விட்டுவிட்டு கன்றுக்குட்டி போல ஓடி வந்து திலீப் முகத்துக்கு நேரே கை நீட்டிச் சொன்னாள் ஜனனி –

சொல்லாம கல்யாணம் பண்ணிண்டே? நீ உருப்படவே மாட்டேடா.

அப்போ எனக்கு வெரஸோவாவிலே லாண்டரிக்கடை வச்சுக் கொடு. உருப்படி எண்ணித் துவைச்சு இஸ்திரி போட்டுக் கொடுத்து பிழச்சுக்கறேன். தர்றியா?

திலீப் அவள் தலையை பாசத்தோடு வருடியபடி கேட்டான்.

அவனை இறுகக் கட்டி பிடித்து, மனநிலை மாறி, அழலானாள் ஜனனி.

அப்பா போயிட்டார்டா. போயாச்சு. அப்பா இல்லே.

அழுகைக்கு நடுவே அவள் மறுபடி மறுபடி சொன்னது இது மட்டும்தான்.

வந்திருப்பது யாரென்று அகல்யாவுக்கு அர்த்தமாகியது. கல்யாணத்துக்குக் கூட வரமுடியாமல் வெளி நாட்டில் படிக்கப் போன நாத்தனாரை இப்படி சோகமான செய்தியோடா முதலில் சந்திக்க வேணும்? விடிந்த நேரம் சரியில்லை இன்று.

அழுகிறவளை அழவிட்டு, ஆறுதல் சொல்கிறவனைச் சொல்ல விட்டு அவள் வீட்டுக்குள் போனாள். இருக்கும் பாலில் இன்னும் இரண்டு டம்ளர் சாயா மட்டும் உண்டாக்கலாம். போகிறது. அவள் இன்றைக்கு டீ இல்லாமல் ஆபீஸ் போவாள்.

ஒரு நாள் டீ இல்லாவிட்டால் என்ன? ஜனனி குடிக்கட்டும். உசிருக்கு உசிராக வளர்த்த அப்பாவைப் போக்கடித்திருக்கிறாள் அவள். அகல்யா இன்னும் அப்படி இழக்காவிட்டாலும் அந்த துக்கம் புரியும். ஜனனி மினிஸ்டர் பெரியப்பாவுக்கு ஒத்தைப் பொண்ணு. அகல்யா போல. திலீபை அதிகமாகப் பாதித்த துக்கம் அது.

போன வாரம் பிஸ்கட் சாஸ்திரி ஒரு சாயந்திரம் டெலிபோன் அசுபமாக அடிக்க ஒரு நிமிடம் அடடா அடடா என்று பேசி விட்டு திலீப்பிடம் துக்கச் செய்தியைப் பகிர்ந்து கொண்டபோதே அவன் தகர்ந்து போய் உட்கார்ந்து விட்டான்.

மினிஸ்டர் பெரியப்பாவின் மரணம் கோடைகாலப் பிற்பகலில் ஏற்பட்டது. வருஷங்கள் முன்னால் நேரு காலமான அதே மே 27-ம் தேதி. அதே நேரம், பகல் இரண்டு மணிக்குப் பெரியப்பாவின் ஆவி பிரிந்தது. நேருவுக்கு ரத்தத் தமனியில் அடைப்பு ஏற்பட்டு மரணம். பெரியப்பாவுக்கு மாரடைப்பால் சாவு. நேரு தில்லியில் அவர் வசிப்பிடமான தீன் மூர்த்தி பவனில் காலமானார். பெரியப்பா, நான்கு நாள் அரசு முறை நல்லுறவுப் பயணமாக இரான் நாடு போயிருந்த போது, அங்கே அதிபரான மன்னர் ஷா ரேஸா ஃபலாவியின் விருந்தினராக டெஹ்ரான் சாதாபாத் அரண்மனையில் செத்துப் போனார். நேரு யமுனா நதிக்கரை நகரமான தில்லி சாந்தி வனத்தில் சகல அரசு மரியாதைகளோடும் தகனம் செய்யப்பட்டு அஸ்தி இந்தியாவெங்கும் மண்ணோடும், நீரோடும் கலந்தது. மினிஸ்டர் பெரியப்பாவின் உயிரில்லாத தேகம் சீக்கிரம் நிலை குலைந்து போனதால் – ராத்திரி எட்டு மணி நேரம் ஏர்கண்டிஷனரை அணைத்து விட்டு, திரும்பப் போடத் தெரியாமல் மிக அதிகம் வியர்த்து, வெப்ப மிகுதியால் உடல் நலம் மோசமானதாக மருத்துவ அறிக்கை தெரிவித்தது – இரான் மாமன்னர் ஆலோசனைப்படி டெஹ்ரானிலேயே தனியிடத்தில் எரியூட்டப்பட்டு, அஸ்திக் கலையம் அவர் மனைவி சியாமளாவிடமும், மகள் ஜனனியிடமும் துக்கத்தோடும் பரிவோடும் அனுதாபத்தோடும் அளிக்கப்பட்டது.

சியாமளா சோவியத் பயணத்தைப் பாதியில் நிறுத்தி வைத்து ஈரான் வந்திருந்தாள். அங்கே அர்ஜுன நிருத்தம் பற்றியும் தென்னிந்திய நாட்டிய, நாட்டுப்புறக் கலைகள் பற்றியும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியிருந்தாள். இந்த வாரம், லுமும்பா பல்கலைக் கழகத்தில் அவளுக்கு இந்தியக் கலாச்சார ஆய்வாளர் என்ற முறையில் சிறப்பு டாக்டர் விருது அளிக்கப் படுகிறது.

பத்திரிகைகளில் செய்திகள் இன்னும் வருகின்றன. விரிவான தகவல் எல்லாம் இங்கிலீஷ் பத்திரிகைகளைப் படித்துத்தான் திலீப் தெரிந்து கொண்டான்.

நான் உனக்கு உப்புக்கு சப்பாணியா தம்பியா இருக்கேன் ஜனு. உனக்கு ஒரு கஷ்டம்னா போட்டது போட்டுட்டு ஓடி வர வேணாமோ. முடியலே. சியாமளா பெரியம்மாவுக்கு, நான் இருக்கேன் பெரியம்மான்னு திடமா ஒரு ஆதரவு? அதுவும் கிடையாது. அசடனா, நான் இங்கேயே எண்ணெய் குடிச்ச மூஞ்சூறு மாதிரி சுத்திண்டிருக்கேன். போறது, நீ ஒரு தந்தியாவது அடிச்சிருக்கலாமேடீ?

எந்த அட்ரஸுக்கு அடிக்க என்று திரும்பக் கேட்டாள் ஜனனி.

உண்மைதான். இவன் இருப்பதும், தின்பதும், கழிவதும், போவதும் வருவதும் எல்லாம் மினிஸ்டர் மரணம் போல் பத்திரிகைச் செய்தியா என்ன? நாடன் கலா சம்மேளனம் என்று மலையாளப் பத்திரிகை மூன்றாம் பக்கத்தில் கொசகொசவென்ற புகைப்படத்தோடு ரெண்டு காலம் அடித்து வருவதில் இன்னார் பிரசங்கிச்சு என்ற தகவலில் ஒரு பெயராகக் கூட திலீப் வர மாட்டான்.

நீ கல்யாணம் செஞ்சுண்டதுக்கு உனக்கும், சமத்தா டீ கொடுத்துட்டு ஓரமா நிக்கற இந்த அழகுப் பொண்ணுக்கும், உக்காரேண்டி கட்டில்லே ஓரமா உக்கார இடம் இருக்கு உனக்கும், ரொம்ப அழகுடா உன் பொண்டாட்டி, நான் ஆம்பளையா இருந்தா இவளைக் கல்யாணம் பண்ணிண்டிருப்பேன். உங்க ரெண்டு பேருக்கும் பிரிட்டன்லே இருந்து திரும்ப வரும்போது நல்ல கிப்ட் வாங்கலாம்னு இருந்தேன். அதெல்லாம் ஒண்ணுமில்லாம போச்சு. தி கால் ஏர்போர்ட்லே இதான் வாங்கினேன். பழுது பங்கரை இல்லே, கேட்டியா.

ஜனனி தேசலாக, ஆனால் அழகான வேலைப்பாட்டோடு ஒரு தங்கச் செயினை அகல்யாவுக்கும், பஞ்ச வர்ணமும் கூடுதலாக இன்னும் ரெண்டும் பூசித் தள்ளிய பதிக் சட்டைகளு,ம், ஜீன்சுகளும் திலீப்புக்கும் தன் பெட்டியில் இருந்து எடுத்துக் கொடுத்தாள். முறம் போல பெரிசாக சாக்லெட் கட்டிகளும் தரத் தவறவில்லை.

ஜீன்ஸை நீயும் போட்டுக்கலாம் அகல்யா. இது எப்படி இருக்கு?

அகல்யா அதே சிரிப்போடு பதில் சொன்னாள் –

ரொம்ப நல்லா இருக்கு ஜனனி. பார்த்துப் பார்த்து நருவிசா வாங்கி, பத்திரமா கொண்டு வந்த கரிசனத்துக்கு, நீ ஆம்பளையா இருந்து, இவரையும் நான் பார்க்காம இருந்தா, கண்ணை மூடிண்டு உனக்குப் பொண்டாட்டி ஆகியிருப்பேன். இதுல்லாம் இல்லாம வந்தாலும், நீ ரொம்ப ஸ்வீட் பொண்ணே.

அவர்கள் இரண்டு பேரும் வருடக் கணக்காகப் பழகியது போல் நிறைவாகச் சிரித்தபடி இருக்க, திலீப் அதிசயமாகத் தன் அடுத்து வரும் நாட்களைப் பற்றி யோசித்தபடி இருந்தான்.

மாதம் பிறந்ததில் இருந்து நாட்டுப்புறக் கலை ஆராய்ச்சி மையம் பூட்டித்தான் கிடக்கிறது. போன மாதமாவது சும்மா உட்கார்ந்து, விழா பற்றி வந்திருந்த பத்திரிகைச் செய்தியையும், ஆட்டக்காரர்களுக்கும், பேச வந்தவர்களுக்கும் பட்டுவாடா செய்த தொகை பற்றிய விவரங்களையும் தட்டச்சு செய்து பைல்களில் செருகி வைத்துக் கொண்டிருந்தான். பத்தாம் தேதி பிஸ்கட் சாஸ்திரி, இது உப்புப் பணம் என்று சம்பளத்தை முழுக்க ஐந்து ரூபாய் நோட்டுகளாகக் கொடுத்தார். உப்புப் பணம்னா என்னன்னு கேட்க மாட்டியா என்று அவர் கட்டாயப்படுத்தினார். திலீப் தாடையைச் சொறிந்தபடி பக்கா மலையாளியாக வேட்டி, சட்டை, தாடி கோலத்தில் நிற்க, சால்ட் மணி புராணம் அரங்கேற்றப் பட்டது.

ஆத்துலே நல்ல காரியம், அல்லாத காரியம், சர்ப்பம் கொத்தி விஷம் ஏறினதுக்கு உடனடி சிகிச்சை, மந்திரவாதம் பண்ணி, மூத்ரம் ஒழிச்சுண்டிருக்கறபோதே அதுக்கான சாதனம் இத்துப் போய் விழறது, மோகினி வசியத்திலே அகப்பட்ட சிரம், கரம் வெளிப்படுத்தி, வாய் எச்சல்லே ரோமம் துப்பிண்டே மீண்டு வர்றது இதுக்கெல்லாம் நம்பூதிரிக்கும் கணியனுக்கும் தட்சணை தர, இப்படியான அத்தியாவஸ்ய செலவுக்காக வீட்டுலே பத்திரமா உப்பு ஜாடிக்குள்ளே போட்டு வச்சிருக்கற பணம் இருக்கு பாரு, அதான் சால்ட் மணி. இந்த மாசம் நிர்வாகி அம்மா சம்பளப் பட்டுவாடாவுக்குப் பணம் அனுப்பாததாலே என் கைக்காசு போட்டு உனக்குக் காசு தரேன். இது நான் உழைச்சு சம்பாதிச்ச பணம். ஜாக்கிரதையா வச்சுக்கோ. வாட்ச்மேன் கிழவனை இந்த மாசத்தோட நின்னுக்கச் சொல்லி நூறு ரூபா கொடுத்தேன். உன் கிட்டே கேட்டா, இல்லேன்னு சொல்லு. இதை தாரை வாத்துட்டு வழிச்சுண்டு நிக்காதே. ஆத்துக்காரி வேறே குடித்தனம் நடத்த வந்து இறங்கியிருக்கா. புத்தியா பொழச்சுக்கோ.

அவர் சொன்னது அனைத்துக்குமாக ஒரு நன்றி மட்டும் சொல்லிப் படி இறங்கினான் அப்போது. பிஸ்கட்டுக்கு குறி அறுந்து விழாமல் இருக்கட்டும் என்று அவன் பிரார்த்திப்பான். யட்சிக்கு வாய் நிறைய உபச்சாரம் செய்து திருப்திப் படுத்தும் விஷயத்தை அவன் எடுத்துக் கொள்ளத் தயார். யட்சி எங்கே தட்டுப்படுவாள் என்று பிஸ்கட் மாமா சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்.

அகல்யாவிடம் சொன்னபோது, ஊர்ப் பெண்கள் எல்லாம் உமக்கு யட்சிதானே, தெப்பக் குளத்துலே குளிக்கப் போறபோது, வேண்டாம், சுத்தம் பத்தாது, வர்ற போது, பரிசுத்தமா, வாசனையா இருப்பா, கூப்பிட்டு வச்சு சகலமும் நடத்திக்கும் என்றாள். பழிகாரி. வார்த்தைக்கு வார்த்தை சொல்லாடுகிறாள். திலீப் ரசிக்கிறான். கல்யாணமான பெண் என்ற சுதந்திரம் எல்லாம் பேச வைக்கும். அரை மரியாதையோடு மிரட்ட வைக்கும். அதுவும் சிருங்காரத்தில் சேரும் தான்.

அறிவுரையோ உப்புக் காசோ தராமல் பிஸ்கட் சாஸ்திரி கல்கத்தாவுக்கு போன மாசக் கடைசியில் புறப்பட்டுப் போனவர் போனவர் தான். திரும்புவாரா தெரியவில்லை. ஜனனியிடம் சம்பளம் வராததைத் தலை போகிற பிரச்சனையாக எடுத்துச் சொல்ல திலீபுக்குத் தயக்கமாக இருந்தது. அதுவும் அப்பா இறந்து போய் துக்கத்தில் அவள் இருக்கிற இந்த நேரத்தில். நல்ல வேளை, அகல்யா, கொச்சியில் மீன்வளத் துறையில் வேலைக்குச் சேர்ந்து விட்டதால் குடும்பம் நடக்கத் தடையேதுமில்லை தான். ஆனால் பெண்டாட்டி வருமானத்தில் சுகம் கண்டு கொண்டு அவன் எத்தனை நாள் இருக்க முடியும்?

அம்மாவும் உன்னோட பம்பாய்க்கு வந்திருக்கா தானே?

அகல்யா ஜனனியைக் கேட்க அகல்யாவைப் புது மரியாதையோடு பார்த்தான் திலீப். இப்படிக் கேட்கத் தெரியாமல் போனதே அவனுக்கு.

அம்மா வரல்லே. இந்த வாரக் கடைசியிலே மாஸ்கோவிலே டாக்டர் பட்டம் வாங்கிண்டு வரட்டான்னு கேட்டா நான் ஈரான்லே இருந்து பம்பாய்க்கு கிளம்பின போது. சரின்னு சொல்லிட்டேன். வேறே என்ன சொல்ல முடியும்?

ஜனனி சந்தோஷமே துளியுமின்றிச் சிரித்தாள்.

வைத்தாஸ் இக்வனோ ரெட்டின்னு ஒரு ஆப்பிரிக்க தேசத்து தூதுவர் அம்மாவுக்கு லண்டன்லே ரொம்ப நெருங்கிய சிநேகமாகி இருக்கார். பெரிய எழுத்தாளராம். புக்கர் பரிசு வாங்கப் போறார்னு கேள்வி. அம்மாவுக்கு அந்தச் சூழலும் சிநேகிதமும் வேண்டி இருக்கு. சதா வைத்தாஸ் ஜபம் தான் அவளுக்கு.

மறுபடியும் சிரித்தாள் ஜனனி. மினிஸ்டர் பெரியப்பாவும், அவர் நேரு நினைவுகளை அகழ்ந்தெடுக்க சகல ஒத்தாசையும் செய்த கொங்கணி நடுவயதுப் பெண்மணியும் திலீப் நினைவில் பட்டுக் கடந்து போனார்கள்.

வைதீக காரியம் எல்லாம் அங்கே லண்டன்லேயே பாத்துக்கற மாதிரியா?

திரும்பவும் கேட்டாள் அகல்யா.

அதுவா, அது அம்மா வந்த பின்னாலே தான். பிஸ்கட் அங்கிள் ஒண்ணுக்கு பத்தாக சாஸ்திரிகளை, கனபாடிகளை, ச்ரௌதிகளை, தீட்சிதர்களை எல்லாம் கேட்டு எக்ஸ்பெர்ட் ஒபீனியன் வாங்கி வச்சிருக்காரம். இந்த மாசக் கடைசிக்குள்ளே செய்யலாமாம். பிராயச்சித்தம் அடிஷனலாம். நான் எதுவும் செய்யறதுக்கு இல்லே. முழுக்க முழுக்க ஆம்பிளை ராஜ்ஜியம். அநேகமா திலீப் தான் கர்மா எல்லாம் செஞ்சு தர வேண்டி வரும். செய்வே இல்லேடா?

ஜனனி தலையைச் சாய்த்து திலீபைப் பார்த்தபடி கேட்டாள். இதமாக அகல்யாவின் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள் அவள்.

திலீப் கண்ணில் நீர் நிறைந்தது. பெரியப்பா பேரில் அவனுக்கு என்ன பகை? இன்னும் கொஞ்சம் அவரோடு பிரியத்தைக் காட்டியிருக்கலாம். பெரியம்மாவுடன் இன்னும் அனுசரணையாகப் பழகி இருக்கலாம். கொடுத்த காசுக்கு வேலை பார்த்து ஒப்பேத்துகிற ஊழியனாக மட்டும் இல்லாமல் பொறுப்பை இழுத்துப் போட்டுக் கொண்டு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம். பிஸ்கட் சாஸ்திரியை தவிர்த்து வேலை பார்க்கிறதில் முனைப்பாக இருந்ததில் சியாமளா பெரியம்மா வெறும் நிர்வாகி ஆகிப் போனாள்.

ஜனனி, நீ குளிச்சுட்டு என் புடவையைக் கட்டிக்கோ. புதுசு. தர்மாவரம். உனக்குத்தான் எடுத்து வச்சிருக்கேன். மல்பரி பட்டு. பார்டர்லே சின்னச் சின்னதா ஜரிகை புட்டா. உனக்கு எடுப்பா இருக்கும். அம்பலத்துள்ளே போக முடியாட்டாலும், ஸ்ரீபலி நேரத்துலே வாசல்லேயாவது நின்னு தொழுதுட்டு வரலாம். மாரார் எழஞ்சு எடக்க வாசிச்சபடி பாடப்பாட கிருஷ்ணனே இறங்கி தெப்பக்குளக் கரையிலே வந்து பாயசம் குடிக்கக் கொடுன்னு கேட்டுண்டு நிப்பான், பார்த்துக்கோ.

கண் மூடி லயித்துச் சொன்னாள் அகல்யா. அவள் கட்டி வைத்த மாலையும், மாசு நீக்கி வைத்த துளசியும் இதோ இன்னும் அரை மணி நேரத்தில் எம்ப்ராந்தரியிடம் ஒப்படைத்து விடுவாள், சகல பெருமையும் சந்தோஷமுமாக.

விடியல் காலையில் ஒரு நாள் தவறாமல் நாலு மணிக்கு எழுந்திருக்கிற மலையாளப் பெண்ணாகி விட்டாள் அவள். தெப்பக் குளத்துக்கு மட்டும் தன் துணை இல்லாமல் போக வேண்டாம் என்று சொல்லி விட்டான் திலீப். கெட்ட பயலுகள் எல்லோரும். அது என்னமோ இந்தப் பிரதேசத்துப் பெண்களுக்கு ஸ்தனபாரமாகவும் மற்றபடிக்கும் கூடுதலாகச் சதை வைத்து அனுப்பி விடுகிறான் பிரம்மன். அம்பலக் குளத்துக் கரையில் அதெல்லாம் தடையில்லாமல் பார்க்கக் கிடைக்கிறது இப்படியான காலை நேரங்களில் தான். எத்தனை முகங்கள். எத்தனை ஸ்தனங்கள். முகத்தைப் பார்த்து அடையாளம் காண்பதை விட மற்றதை வைத்துக் காண்பது சுலபமாகப் போயிருக்கிறது. அகல்யாவை அப்படி யாரும் அடையாளம் காணக் கூடாது. அவனைத் தவிர.

வென்னீர் போடட்டுமா உனக்கு ஜனனி?

அகல்யா கேட்க, அவசரமாக மறுத்தாள் ஜனனி. எரணாகுளத்தில் விடுதியில் தங்கியிருக்கிறாள். எங்கே என்று கேட்டான் திலீப். நடாஷா இடம் தான். அதே அறையா தெரியாது.

இவளைத் திரும்பக் கொண்டு விட திலீப் போனால் ஹோட்டல் ரிசப்ஷனில் இருக்கும் அந்தக் கிழவன் எப்படிப் பார்ப்பான்? திலீப்பைப் பார்ப்பது இருக்கட்டும். ஜனனியை.

செருப்பாலே அடிப்பேண்டா கிழவா.

அவன் தன்னிச்சையாகக் காலை சுவரில் ஓங்கி மோத, என்னாச்சுடா என்றாள் ஜனனி. ஆச்சரியமாகப் பார்த்தாள் அகல்யா.

என்ன ஆச்சு, டாய்லெட் வரலையா?

உள்ளங்கால்லே கொசு கடிச்சுது.

அகல்யாவும் ஜனனியும் ஏக காலத்தில் சிரித்தார்கள்.

பாட்டி தான் ரொம்ப தளர்ந்து, சுருங்கிப் போய்ட்டாடா. ஜனனி சொன்னாள்.

பார்த்தியா? எப்போ? திலீப் ஆர்வமாகக் கேட்டான்.

மெட்ராஸ் போய்த்தான் வந்தேன். பாட்டியைப் பார்க்க சகிக்கலேடா. ரெண்டு பிள்ளையையும் பறி கொடுத்துட்டு நிக்கறா. என் சித்தப்பா, அதான் உங்கப்பான்னாலும் ஏதோ தொலைஞ்சு தான் போனார், எப்பவாவது திரும்பி வருவார்னு நம்பிக்கை கொஞ்சமாவது இருக்கு. இது, எங்கப்பா, ஸ்ட்ரெயிட்டா அட்டண்டெண்ஸ் ரிஜிஸ்டர்லே பெயர் அடிச்சாச்சு. ஆட்டத்துலே இருந்து அவுட்.

அவள் ஒரு வினாடி பேசாமல் இருந்தாள். வேட்டியை மடித்துக் கட்டியபடி திலீப்பும், வேம்பாவில் வென்னீர் போடத் தீ மூட்ட காக்கடாவோடு புறப்பட்ட அகல்யாவும் கூட மௌனமாக இருந்தார்கள்.

அகல்யா மெல்ல சகஜ நிலைக்கு மீண்டு, கைப்பையில் இருந்து ஒரு வெள்ளைக் கவரை எடுத்துக் கொடுத்தாள் திலீப்பிடம்.

உனக்கு ரெண்டு மாசமா சம்பளமே தரல்லேன்னு அம்மா சொன்னா. இதிலே மொத்தம் ஆறு மாசத்துக்கு, போன மாசத்தையும் சேர்த்து பணம் இருக்கு. அம்மா சீக்கிரம் வந்து சீக்கிரமே ஆபீஸ் திரும்ப ஆரம்பிச்சுடும். அது வரைக்கும் உன் செலவுக்கு இது. உன் பணம் தான். அட்வான்ஸ்னு வேணா வச்சுக்கோயேன்.

ஜனனி குரலில் வலிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்றிச் சொன்னாள்.

ஆபீஸ் கட்டிடத்தை ஒரு தெரிசா மதாம்மை வாங்க இருப்பதாக இவளிடம் சொல்லலாமா? திலீப் யோசித்தான்.

தெரிசா அவனை விட அகல்யாவுக்கு அதிகம் பழக்கமாகி இருக்கிறாள். காலையில் அகல்யா துளசியோடு கோவிலுக்குப் போகும் போது அவளும் குளித்துத் தொழுது நிற்கிறாள். கிட்டத்தட்ட இந்து மதத்தில் இருக்கப்பட்ட பெண் ஆகி விட்டாள். இந்திய குடியுரிமையும் வந்து இங்கிலாந்து அடையாளம் எல்லாம் களைந்து விட்டாள் அவள். அம்பலப்புழை சமையல்கார அந்தணர்கள் கூட்டுக் குடும்பமாக இருந்த வீட்டை எம்பிராந்திரி மூலம் விலைக்கு வாங்கி அங்கே நல்ல சைவ சாப்பாடும் பழைய தோதில் பலகாரங்களும் சுத்தமாக உண்டாக்கி விற்க ஓட்டல் திறக்கிற மும்முரத்தில் இருக்கிறாள். திலீப் அவளுக்கு சகல உதவியும் செய்து வருகிறான். ஓட்டல் திறந்தால் கல்லாவில் அவன் தான் உட்கார்வான். மோதக் போல் ஸ்டெயின்லெஸ் வாளியொடு சாம்பார் களவாடிப் போகக் கூட்டமாக வந்தால் அவனால் மராத்தியும் இந்தியும் பேசி விரட்டிவிட முடியும். ஜனனிக்கு மோதக் பற்றித் தெரிந்து என்ன ஆகப் போகிறது

திலீப், ஒரு சின்ன யோசனை.

என்ன ஜனும்மா?

நான் அம்மா கிட்டே சொல்றேன். போர்ட் பவுண்டேஷன் நிதியோடு அவள் ஆபீஸை தொடர்றது இங்கே இருந்து இல்லாம, மெட்ராஸ் நுங்கம்பாக்கத்திலே நம்ம பரம்பரை வீட்டுலே இருந்து செஞ்சா என்ன? அங்கேயே கற்பகம் பாட்டிக்கு துணையா நீயும் அகல்யாவும் தங்கிக்கலாம். அகலுக்கு இன்னொரு டிரான்ஸ்பர் வேண்டி இருக்கும். நான் அப்பாவோட சிநேகிதர்கள் மூலமா அதுக்கும் ஏற்பாடு பண்றேன். மெட்றாஸ் உனக்கும் அகல்யாவுக்கும் பெர்ஃபெக்ட் ஃபிட்டா இருக்கும்

அகல்யா ஆபீசுக்கு உடுத்திப் போவதற்கு வேண்டிய சேலையும் ரவிக்கையும் தோளில் போட்டபடி உள்ளே இருந்து வந்தாள்.

அகிலா, இப்போத்தான் தடால்னு ஒரு முடிவு நான் எடுத்தேன். எல்லாருமே அப்படி எடுத்திருக்கறது புரியறது. என் டர்ன் முடிஞ்சு போச்சு. இனி ஆற்றோட போய் கரை ஒதுக்கற போது ஒதுங்கிக்க இஷ்டம். மெட்ராஸ் இப்பவே போகணுமான்னு தெரியலே. இவருக்கும் வேறே மாதிரி, ஓட்டல் நிர்வாகம், புஸ்தகம் பப்ளிகேஷன்னு புதுசா சந்தர்ப்பம் கூடி வந்துண்டிருக்கு. கற்பகம் பாட்டிக்கு ஆள் போட்டுடலாம். நாங்களும் எங்க் பங்குக்கு அந்தக் கட்டணம் அடைச்சிடறோம். ஆறு மாசத்துக்கு ஒருக்காலோ மூணு மாசத்துக்கு ஒருக்காலோ அவாளைப் போய்ப் பார்த்துக்கறோம். நீயும் படிப்பு முடிஞ்சு வந்துடுவே தானே? அங்கே லண்டன்லே செட்டில் ஆகிற உத்தேசம் இல்லேயே?

ஜனனி சிரித்தபடி அவளைப் பார்த்தாள். அதில் திரும்ப உற்சாகம் கலந்திருந்ததை திலீப் கவனிக்கத் தவறவில்லை. அவள் திரும்ப வரமாட்டாள் என்று அவனுக்குத் தோன்றியது.

நீ புத்தகம் பப்ளிகேஷன் வேறே பார்த்துப்பியா? ஜனனி ஆர்வமாகக் கேட்டாள்.

திலீப் சொன்னான் – தெரிசா பார்த்துப்பாங்க. அவளுக்கு நான் ஒத்தாசை செய்வேன்.

அப்பாவோட நேரு நினைவுகளை எழுதின வரைக்கும் புத்தகமா கொண்டு வரணுமே. மிசிஸ் ரூபா ஷெனாய், அதான் கொங்கணி மாமி, அவங்களை உனக்கு அனுப்பச் சொல்லட்டா. சொல்லட்டா என்ன? அனுப்பி வைக்கறேன், நீ தான் புஸ்தகமாக கொண்டு வரப் போறே. செலவு எல்லாம் என் கணக்கு.

ஜனனி புறப்படும் போது அகல்யா மறக்காமல் குங்குமம் கொடுத்ததோடு சொன்னாள் –

நான் ஆபீஸ்லே மீனு, நண்டு, திமிங்கிலம்னு சமுத்திர ஜீவிகளோடு இழைஞ்சிட்டு வரேன். சாய்ந்திரம் இவர் உன் ஹோட்டலுக்கு வந்து உன்னைக் கூட்டிண்டு வரட்டும். மணக்க மணக்க சமைச்சுடறேன். பெரியப்பா பெயரைச் சொல்லி நல்லதா ஒரு செறிய பார்ட்டி. என் கல்யாணத்துக்கும் கொண்டாட்டம்.

இவ வயத்துலே இருக்கற சிசுவுக்கும் சேர்த்து.

திலீப் சேர்த்துக் கொண்டான்.

அகல்யாவை அணைத்துக் கொண்டு ஜனனி குஜராத்தியில் சந்தோஷமாகப் பாடியது தெப்பக்குளக் கரை வரை கேட்டிருக்கும்.

அடி அழகுப் பெண்ணே
தூரம் குளிக்காத பெண்ணே
பொன் வயத்துலே
பிள்ளை சுமந்த பெண்ணே
சாம்பல் தின்னும் பெண்ணே
புளிக்காரிப் பெண்ணே

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன