New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 48 இரா.முருகன்

நாற்பத்தேழு அத்தியாயம் எழுதி முடித்து விட்டேன்.

வைத்தாஸ் சொன்னான்.

பதில் இல்லை. தொலைபேசியைக் காதோடு பொருத்திக் கொண்டு இன்னொரு தடவை கொஞ்சம் உரக்கவே சொன்னான் –

நாற்பத்தேழு அத்தியாயம் என் நாவலை எழுதி விட்டேன்.

தொலைபேசியின் அந்தப் பக்கத்தில் இருந்து மெல்லிய ஆனாலும் கண்டிப்பான குரல் கேட்டது –

வாழ்த்துகள். எங்கள் நாட்டின் இணையற்ற அரசியல் மற்றும் கலாசாரத் தூதுவரின் இலக்கியச் செயல்பாடுகள் சிறப்பாக நடைபெறுவது குறித்து அமைச்சரகத்தின் தலைமை அமைச்சர் என்ற முறையில் மகிழ்ச்சி.

இந்தியப் பின்னணியில் எழுதிய நாவல் இது. நாற்பத்தேழு அத்தியாயம் எழுதி விட்டேன். இன்னும் ஐந்தே தான்.

இந்தியப் பின்னணியில் நீங்கள் நாவல் எழுதியது குறித்து மக்கள் அதிபரின் சார்பில் ஆனந்தத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். மீதி ஐந்து அத்தியாயங்களையும், லண்டன் நகரில், மனதுக்கு இதமான சூழலில் இருந்து எழுதி முடித்து, அலுவலகப் பணிகளைத் தொடர வாழ்த்துகள்.

மகிழ்ச்சியும் நன்றியும். ஆனாலும் எனக்கு, நாற்பத்தைந்து வயதைத் தொடும் இந்த வைத்தாஸுக்கு ஓய்வு தேவை. நாடு திரும்ப வேண்டும். வருடக் கணக்காக வெளியே இருந்தாகி விட்டது.

நாடு திரும்ப வேண்டும் என்பது நல்ல சிந்தனை தான். மக்கள் அரசாட்சி அமைப்பின் தலைமை அமைச்சர் என்ற முறையில் மகிழ்ச்சி. எனினும் இப்போது திரு. வைத்தாஸ் உடனே லண்டனுக்குப் புறப்பட வேண்டும். அங்கே இருந்த தூதர், நாட்டுக்குத் திரும்ப அழைக்கப் பட்டுள்ளார். நிலவியலும் வரலாறும் சார்ந்த சமூகப் புரிதல் அடிப்படையிலும், சர்வதேச அரசியல் அணியமைதல் வழியிலும் அங்கே இருந்து செயல்படத் தகுதியான பிரதிநிதி வைத்தாஸ் இக்வனோ ரெட்டி என்று மக்கள் அதிபர் கருதுகிறார்.

நந்தினியிடம் இந்த மாதம் வருவதாகச் சொல்லி இருக்கிறேன். அவளுக்கும் என்னைப் பார்க்க வேண்டும் என்று ஆர்வமும் விருப்பமும் உண்டு.

மக்கள் அதிபர் அவர்களுக்கு உங்களை மறுபடி சந்திக்க ஆவலும் விருப்பமும் உண்டு என்பதில் மகிழ்ச்சி. நீங்கள் நாளையே பொறுப்பை ஒப்புக் கொடுத்து விட்டு லண்டன் போக வேண்டும் என மக்கள் அதிபர் கூறியிருக்கிறார்.

நான் மக்கள் அதிபரின் கணவன். பதினேழு வருட தாம்பத்தியத்தில்

நீங்கள் மக்கள் அதிபரின் கணவர் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பதினேழு வருடத் தாம்பத்தியத்தில் என்று தொடங்கியது முழுக்கக் கேட்காவிட்டாலும் அந்தக் கால அளவு குறித்து மறுபடியும் மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்த வாரம், எண் 10, டௌணிங் தெரு முகவரியில் பிரிட்டீஷ் பிரதமரை நீங்கள் அதிகாரபூர்வமான தூதராக மரியாதை நிமித்தம் சந்தித்து உரையாடி வர ஏற்பாடு செய்யப் படுகிறது.

என் நாவல். அதை முடித்துக் கொண்டிருக்கிறேன். பெயர் வைத்தாகி விட்டது.

அதை உடனடியாகப் புத்தகமாக்க முடியுமானால் மக்கள் அதிபர் சார்பில் ஒரு பிரதி பிரிட்டீஷ் பிரதமருக்கு அளிக்கக் கோருகிறேன். அதனால் இரு நாட்டு உறவுகளும் கலாச்சார ரீதியாக மேம்படும் என்பதே மக்கள் அதிபரின் ஆசை. தங்களுக்கு நான் ஏதும் உதவி செய்ய வேண்டுமா?

சட்டை இல்லாத மேலுடலைப் பார்த்துக் கொண்டான் வைத்தாஸ். மார்பில் அப்பியிருந்த நரை புரண்ட முடிகள் ஆடி முடித்து சீக்கிரம் மேலே தகப்பன் வீட்டுக்குப் போகணும் என்று நினைவு படுத்தின. போகணும். அதற்கு முன்னே.

உதவியா, உங்களிடமா? எனக்கா?

டெலிபோனில் பேசியபடிக்கே பைஜாமாவைச் சரடு பிரித்து நழுவ விட்டு முழு நக்னன் ஆனான் அவன்.

தொலைபேசியைத் தாழ்த்திப் பிடித்துத் தன் அரைக்கெட்டிலும் பிருஷ்டத்தில் இறங்கி ஆசன வாயிலும் அதன் காதுப் பகுதியை அழுத்தித் தேய்த்து நன்றி சொல்லித் திரும்ப வைத்தான்.

பிரம்மாண்டமான ரெட்டைக் கட்டிலின் ஓரமாகப் படுத்தபடி பலமாகச் சிரித்தான் வைத்தாஸ். தூதரக முதல் தளத்தில் பெரிய படுக்கையறையில் எதிரும் புதிருமான சுவர்களில் முழுக்க நிறைத்திருந்த நிலைக் கண்ணாடிகளில் குறி சுருங்கி, முட்டைக் கண்ணாடியோடு கட்டிலில் ஓரமாகப் படுத்திருந்த நடு வயசு இளம் வயோதிகர்கள் போகலாம், புறப்படு என்றார்கள்.

நாவலை முடித்ததும் புறப்படலாம் என்றான் வைத்தாஸ். நீ உயிர் வாழ்வதே அதற்காகத் தானா என்று நிலைக் கண்ணாடி விருத்தர்கள் எதிரும் புதிருமாக நின்று அசிங்கமாகச் சைகை செய்தார்கள்.

இங்கே உனக்கு என்ன இருக்குன்னு இன்னும் கூடுதல் நாள் இருக்கப் பார்க்கறே?

வீராவாலி என்றான் சற்றும் யோசிக்காமல். கண்ணாடியில் நிறைந்திருந்த நடுவயது தொட்ட இளம் வயோதிகர்கள் கைகொட்டிச் சிரித்தார்கள்.

அவள் உனக்குக் கிடைக்க மாட்டாள் என்றார்கள் அவர்கள்.

கிடைக்காமலா அவள் வந்து நிறைந்து துளும்பி இருக்க நாற்பத்தேழு அத்தியாயம் நாவல் எழுதினேன்?

வீராவாலி கிடைக்காவிட்டால், கிடைத்தவள் எல்லாம் உனக்கு வீராவாலி தான்.

அவன் புரண்டு புரண்டு சிரித்தான்.

நந்தினியையும் வீராவாலி ஆக்கியிருந்தால் மக்கள் அதிபரோடு மட்டற்ற மகிழ்ச்சியில் நிலைத்து காலம் உறைந்து நிற்கக் கலவி செய்திருக்கலாமே என்று யோசனை கொடுத்த நிர்வாணமான அந்த இளம் வயோதிகர்களைப் பன்றிகளோடு கூடிச் சுகித்திருக்கப் போகச் சொல்லி நிலைக் கண்ணாடிகளின் மேல் முழுக்க வரும்படி திரையைப் பரத்தினான் வைத்தாஸ். பரபரப்பாக எழுந்து நின்றான் அவன்.

பரபரப்பாகச் செயல்பட்டு உருப்படியாக ஏதும் செய்யாமலிருக்க இன்று முதல் சில நாட்கள் கழியும். அதற்கு அப்புறம் வேறே மாதிரி பரபரப்பு. வேறே மாதிரி செயலின்மை. ஆனாலும் நாட்கள் நகரும். காலம் வேகம் கொள்ளும்.

இங்கே வேஷம் கட்டி ஆடுவதற்கும் வெள்ளை தேசத்தில் ஆடுவதற்கும் வித்தியாசம் உண்டென்பதை வைத்தாஸ் அறிவான். இங்கே ஆசியக் கறுப்பனும் ஆப்பிரிக்க நல்ல கருப்பனும் ஒரே போல என்று, கொஞ்சம் முயன்றால் நம்ப வைத்து முஷ்டி மடக்கிக் கை உயர்த்திக் காட்டி உறவு கொண்டாட வைக்கலாம்.

தில்லியில் பஞ்சாபிய கோதுமை வர்ணப் பெண்களும் ஆண்களும் மெக்சிக்கன் முகச் சாயைகளோடு வைத்தாஸை போடா கறுப்பா என்று பார்ப்பது தெரிந்தது தான். இங்கே நீக்ரோ என்பது இன்னும் செல்லுபடியாகும் சொல். வசை இல்லை.

இனக் கலப்பில் பிறந்து, சுருட்டை முடி இல்லாமல் கறுப்பு மட்டும் அதிகம் கொண்டு இந்திய முகச் சாயையோடு வருகிற வைத்தாஸ் அவன் உயரத்தாலும் பலத்தாலும் தான் அவமரியாதைகளில் இருந்து காக்கப் படுகிறான்.

சோனியான, குள்ளனான கலப்பு இனத்தவனை இங்கே காலில் போட்டுத் துவைத்து மிதித்து, நாட்படத் தேங்கி நாறும் சாக்கடையில் மல்லாக்கக் கிடத்தி வாயில் மூத்திரம் பெய்திருப்பார்கள்.

லண்டனில் அதை எல்லாம் மனதில் நடத்திப் பார்த்து விட்டுத் துரைகள் நல்ல இங்கிலீஷில் பொய் மரியாதை காட்டுவார்கள். மஞ்சள் பல் ஈறுவரை தெரிய சிரித்து நட்பு கொண்டாடுவார்கள். அவ்வப்போது வைத்தாஸுக்கு அனுபவப்பட்ட அந்தக் கள்ள உபச்சாரம் இனி சில வருடம் தொடர்ந்து கிடைக்கலாம். அடுத்த நாவலை அங்கே ஆரம்பித்து அங்கேயே முடிக்கலாம்.

டெலக்ஸ் இயந்திரம் உயிர் பெற்றது. யட்சி வந்து புகுந்தது போல் தலை அச்சு இடமும் வலமும் பிசாசு வேகத்தில் நகர்ந்து, காகிதத்தை உருட்டி உயர்த்தி தொடர்ந்து தட்டச்சு செய்து நிற்க, வந்த டெலக்ஸை நோட்டமிட்டான் வைத்தாஸ்.

நாளை மறுநாள் லண்டன் புறப்பட விமான டிக்கெட் எடுக்கப் பட்டது என்ற அறிவிப்பு. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை பிரிட்டீஷ் நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவரோடும் அன்று மதியம் பிரதமரோடும் முன்னிரவில் ஆளுங்கட்சித் தலைவரோடும் சிறு சந்திப்புகள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன என்று குறிப்பு எடுத்துரைத்தது. என்ன எல்லாம் பேச வேண்டியிருக்கும் என்ற பட்டியலும் அடித்து இறங்கியிருந்தது.

மக்கள் அதிபர் விருப்பப்படி, இதெல்லாம் இதே படிக்கு ஒரு பிசகும் ஏற்படாமல் நடக்க வேண்டும் என்ற குறிப்போடு டெலக்ஸ் செய்தி முடிந்திருந்தது.

நந்தினிக்கு கற்பனையில் முத்தம் கொடுக்கக் கூட அவனுக்கு அனுமதி இல்லை. அவளை எப்படியோ இழந்திருக்கிறான் வைத்தாஸ். அவளை மட்டும் தனியாக நாடு திரும்ப அனுப்பியிருக்கக் கூடாது. ராணுவ ஆட்சியோ, வலிந்து புகுந்த குழு ஆட்சியோ, பெண்கள் கூடு திரும்ப ஒரு உத்தரவாதமும் இல்லை. மயில்கள் இருப்பது ஆட, அதிகாரமாக நடை பயில. அகவியபடி அச்சுறத்த. ஆண் பறவையோடு முயங்க இல்லை அவை எல்லாம் உயிர் கொண்டது. நந்தினி.

அவசரமாகக் குளித்து, அவித்த முட்டைகளை காலை உணவாக்கி, கண்ணியமானது என்று கனவான்கள் வகுத்த உடை அணிந்து, காரில் ஏறினான் வைத்தாஸ். நாட்டின் அதிகார பூர்வமான தூதராக, தூதரகத்தின் சிறப்புக் காரில் அவன் இங்கே பயணம் போவது முடியும் காலம் நெருங்கி வருகிறது. நந்தினி.

வேனலில் தகிக்கும் தில்லித் தெருக்களில் கார் கடந்து போனது. கைகளால் கரகரவென்று சுற்றிக் கரும்பு பிழிந்து அழுக்கு துணி மூட்டைக்குள் சுத்தியல் கொண்டு ஓங்கி அடித்து ஐஸ்கட்டிச் சிதறல் எடுத்துப் போட்டுத் தரும் தெருவோர வண்டிகள் ஊர் முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. பெரிய வெங்காயத்தைக் கடித்து மென்றபடி ஆக்ரோஷமான ஒரு சர்தார் பையன் தலைப்பாகையைத் தட்டி நேராக்கிக் கொண்டு கை காட்டினான். அரிசிச் சோறும் பருப்பும் கலந்து தட்டுகளில் நிறைத்து விற்கிற கடைகளை அடுத்து நின்ற குளிர் நீர் வண்டிக்காரர்கள் மெசின் கா டண்டா பானி என்று கூவிக் கொண்டிருந்தார்கள். பேட்டரி வைத்துச் சுழன்ற சக்கரங்களோடு அவற்றில் இருந்து கண்ணாடிக் குவளைகளில் பிடித்த குளிர் நீரைக் குடிக்க ஊரே அலை மோதியது. இனி இந்தக் காட்சிகளைக் காணப் போவதில்லை என்றைக்கும்.

பெரிய குவளை நிறைய ஐஸ் கட்டிகளைப் போட்டுக் கருப்பு நிறத்திலும் ரத்தச் சிவப்பு நிறத்திலும் கெட்டியாக இனிப்புச் சாறை அடுக்கடுக்காக விட்டு அவை பாளம் பாளமாக இடை கலக்காமல் தனித்தனியாக நிற்க, வெள்ளரி விதைகளையும், சப்ஜா விதைகளையும், வேக வைத்த சேமியாவையும் பெய்து விற்றுக் கொண்டிருந்த கடை வாசலைக் கார் கடந்து போனது. நந்தினி.

கொஞ்சம் காரை நிறுத்து.

அவசரமாகச் சொன்னான் வைத்தாஸ்.

வேனிற்காலப் பகலைத் தெருவில் நடந்து அனுபவிக்கும் உத்தேசத்தோடு கடை கடையாகப் பார்த்தபடி வந்த பஞ்சாபி மூதாட்டிகள் உற்சாகமாகக் கூச்சலிட்டபடி சூழ்ந்து நின்று ஏக காலத்தில் கடைக்காரனுடன் பேசினார்கள்.

ஜிகர்தண்டா வேணுமா சாப்?

கடைக்காரன் காருக்குள் குனிந்து பார்த்துக் கேட்டான்.

வேண்டாம், நீ அதிலே பால், பழம்னு, பிரசாதம் போல எல்லாம் போட்டுடுவே. அந்த கலவை சர்பத் தான் வேணும். இருக்கறதிலேயே பெரிய கிளாஸ் எடு.

கை காட்டினான் வைத்தாஸ்.

அது குழந்தைகளுக்கானது சார்.

டிரைவர் உத்தம் கபூர் கண்டுபிடித்ததைச் சொல்லும் தெளிவான குரலில் அறிவித்தான். அவனுக்கு அழகு காட்டினாள் கண்ணாடிக் குடுவையில் அந்த கலவை சர்பத் சுவையில் மூழ்கியிருந்த முதுபெண். பஞ்சாபியில் ஏதோ சொன்னாள் அவள் சிரிப்பு மங்காமல்.

கழுதைகளுக்கு அல்போன்ஸா மாம்பழ வாசனை தெரியுமோன்னு கேக்கறாங்க பாட்டியம்மா.

சிரித்தபடியே சொன்னான் டிரைவர் உத்தம் கபூர். அவனுக்கு இந்தச் சீண்டல் வேண்டித்தான் இருந்தது. எத்தனை வயசானால் என்ன, எதிரினத்தின் கிண்டலும் கேலியும் யாருக்குப் பிடிக்காமல் போகும்? போடி கிழவி, போடா பயலே என்று ஓங்கிக் கூவி, நிமிட நேரம் சிநேகிதம் பூண்டு குதூகலிக்க யாருக்கு இஷ்டமில்லை?

படாவாலா கிளாஸா சாப்? வென்னீர் விட்டு சுத்தம் செய்யச் சொல்லட்டா?

பதில் எதிர்பார்க்காத கேள்வியோடு இறங்கிய டிரைவர் கிழவிகளோடு உல்லாசமாகப் பேசியபடி, சர்பத் கலந்து தரக் காத்திருந்ததில் ஒரு காட்சி நேர்த்தி தெரிந்தது வைத்தாஸுக்கு. கறுப்பிந்திய கலாச்சார அழகு. நந்தினி.

ஆரஞ்சுச் சுளை போல வண்ணம் பூசிய உதடுகளோடு கலாசார அமைச்சரகத்துக்குள் நுழைந்தபோது கையில் ஃபைல்களோடு, கீழ் உத்தியோகஸ்தர்கள் சூழ, எங்கேயோ போய்விட்டு, அண்டர் செக்ரட்டரி சங்கரன் உள்ளே வந்து கொண்டிருந்தது கண்ணில் பட்டது.

சென்ன சங்கரன் சாப் நலந்தானா?

அவன் கேட்க சின்னச் சங்கரன் ஓரடி முன்னால் வந்து, அவன் கையைக் குலுக்காமல் மார்போடு அணைத்துக் கொண்டான். ரொம்ப இயல்பாக நேசம் பாராட்டியதாக அது இருந்தது. வைத்தாஸுக்கு அது பிடித்திருந்தது.

ஒன்று வைத்தாஸின் இந்திய முகமும் உடல் மொழியும் அவனைச் சக இந்தியனாக, விந்திய மலைகளுக்குத் தென்புறம் இருந்து இங்கே உத்தியோக நிமித்தம் வந்த திராவிடனாகக் காட்டி இருக்கும். வாயில் ஆரஞ்சு நிறச் சாயம் அவனை இன்னும் நெருக்கமான, சின்னச் சின்ன சந்தோஷங்களை மறுக்காத, பானகம் குடித்த சக இந்துவாக அடையாளம் சொல்லி இருக்கும்.

இதெல்லாம் இல்லாவிட்டால் சங்கரனுக்கும் வெளிநாட்டு பணி மாற்றம், அதுவும் ஐரோப்பிய நாட்டுக்குக் கிடைத்திருக்கும். லண்டன் போய் அங்கே பத்து வருடம் இருந்தால் இந்த உடல்மொழி உதிர்ந்து போகலாம்.

மூன்றாவதாகவும் ஒரு காரணத்தை வைத்தாஸின் எழுதும் மனது கற்பனை செய்தது. இந்த சங்கரனுக்குப் புதுசாகப் பெண் சிநேகம் கல்யாணத்துக்கு வெளியே கிட்டி அந்தப் பெண்ணை அணைத்து அணைத்து புது அணைப்பின் சுகத்துக்காக இவன் அலைகிறானாக இருக்கும். ஆண் தான். பாதுகாப்பாக அணைப்பில் ஒடுங்கி ஒரு வினாடி நிற்க வரும் நிம்மதி உணர்ச்சி அலாதியானது என்பதை வைத்தாஸ் அறிவான். ஒவ்வொரு வீராவாலியும் முதலில் கொடுக்கிற பாதுகாப்பு உணர்ச்சி ஆலிங்கனத்தில் தான் தொடங்கும். சற்றே காதைக் கடித்து பின் கழுத்தில் முகர. இது வீராவாலி இல்லை. சங்கரன்.

சங்கரன் தன் கேபினுக்கு வைத்தாஸை வழிநடத்திப் போனபடி கேட்ட்டான் – மக்கள் அதிபரின் தூதர் எம் இலாகாவிற்கு எழுந்தருளியதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறேன். கலாச்சார விழா ஏதும் உண்டா?

இல்லை என்று புன்சிரித்தான் வைத்தாஸ். நிறைந்த மார்போடு, எக்கச்சக்கமாக லிப்ஸ்டிக் அணிந்த, முப்பத்தைந்து வயது மதிக்கத் தக்கவளாக, அழகான ஒரு பெண் ஷங்கர் சாப் என்றபடி எதிரே வந்தாள். கூப்பிட்டபடி, வைத்தாஸ் மேல் இடிக்காமல் நாசுக்காக ஓரம் போனாள் அவள். போனபோது சங்கரன் மேல் முழுக்க மோதிப் போனதைக் கவனிக்கத் தவறவில்லை வைத்தாஸ். நந்தினி.

கேரள் ஊரில் இருந்து ஃபோன் வந்தது உங்களுக்கு என்று சங்கரனிடம் செய்தி சொல்லி விஷமமாகச் சிரித்த அந்தப் பெண்ணைத் தன்னை மறந்து கண் கொட்டாமல் ஒரு வினாடி பார்த்தான் வைத்தாஸ். அவன் நகர் நீங்கப் போகிற தில்லி, கலவை சர்பத்தோடு கூட, மதர்த்த பஞ்சாபிப் பெண்களாலும் ஆனது. நந்தினி.

கேபினுக்குள் இதமாகக் காற்றைச் சுழல விட்டுக் கொண்டு ஒரு ஏர் கூலர் இயங்கிக் கொண்டிருந்தது. அதன் முன்னால் நின்றிருந்த நான்கைந்து பெண் எழுத்தர்கள் சங்கரன் வரக் கண்டு சிரிப்போடு இருக்கைகளுக்கு ஓடியது ரம்மியமாக இருந்தது. இந்தியப் பெண்களைப் பிரியப் போகிறான் வைத்தாஸ். அவர்கள் பற்றிய எல்லாமே அழகாகத் தோன்ற ஆரம்பித்திருக்கிறது.

நந்தினி. இங்கே பிறந்தவள் தானே அவளும். எப்படி இழந்தான்? ஏன் இழக்கணும்? நந்தினி.

நந்தினி. நந்தினி. நந்தினி. நந்தினி. நந்தினி. நந்தினி. நந்தினி. நந்தினி.

உங்கள் அவர், திருமதி மக்கள் அதிபருக்கு பரத நாட்டியமும் தெரியுமாமே?

சங்கரன் கேள்வி வைத்தாஸை இந்த உலகுக்குக் கொண்டு வந்தது.

அவன் பரதநாட்டியம் ஆடும் கலைஞன் போல் அழகாகப் புன்னகைத்துக் கைகூப்பினான்.

அவருடைய நாட்டியத்தை மறுபடி நான் பார்க்க சந்தர்ப்பம் வந்து கொண்டிருக்கிறது. நான் திரும்புகிறேன்.

அளவான ஆச்சரியத்தை வெளிக்காட்டிய சின்னச் சங்கரன், உங்கள் வருங்காலம் பிரகாசமாக, தொட்டதெல்லாம் துலங்க இருக்கட்டும் என வாழ்த்தினான்.

வேறு நாட்டுக்கு தூதராகிறீர்களா? தில்லியில் இருந்து எங்கே பயணம்?

லண்டன் என்றான் வைத்தாஸ். அற்புதமான வாசகத்தைக் கேட்டது போல் இருகையும் மேலே உயர்த்தி ஆனந்தத்தை வெளிக்காட்டினான் சங்கரன்.

இந்த நாட்டில், முக்கியமாகத் தென்னியந்தர்கள் நடுவே, அதுவும் பிராமணர்களிடையே லண்டனும் பிரிட்டனும் புனிதமான ஸ்தலங்களுக்கும் பிரதேசங்களுக்கும் உரிய ஈடுபாடும், அன்பும், மதிப்பும் கொண்டு நினைக்கப் படுவது வைத்தாஸுக்குப் பழக்கமானது தான். இன்னும் காலனி மனப்பாங்கில் இருந்து வெளிப்படாத, அனுபவிக்காமல் படித்தும் படம் பார்த்தும் உணர்ந்து கொண்ட பழமையின் சுகம் கொண்டாடுதலை, சிவப்புச் சிந்தனையாளர்கள் கூட பிரியமாக வெளிப்படுத்தும் இந்த நாட்டை அவன் பிரிந்துதான் போகிறான்.

உங்கள் தோழி நலமாக இருக்கிறார்களா?

வைத்தாஸ் விசாரிக்க, சங்கரன் முகத்தில் பிரகாசமான சிரிப்பு மறுபடி குமிழிட்டது. அந்த அழகான, துறுதுறுப்பான யார்க்‌ஷயர் பெண்ணை நினைத்தாலே சந்தோஷமடைகிற அண்டர்செக்ரட்டரி நல்ல நண்பன் மட்டும் தானா அவளுக்கு?

தெரிசா இங்கே இருந்தபோது ஒரு சாயந்திர நேரத்தில் கன்னாட் பிளேஸ் கடை வீதியில் வைத்தாஸை அவர்கள் தற்செயலாகச் சந்தித்தார்கள். ஐந்து நிமிட உரையாடல் பக்கத்து விடுதியில் சாயாவும் பிஸ்கட்டுமாக இன்னும் பத்து நிமிடம் நீள, தெரிசா இந்திய வம்சாவளிக்கு மனுச் செய்திருக்கும் செய்தி வைத்தாஸுக்கு அறிவிக்கப் பட்டது.

அம்பலப்புழையில் வைத்தாஸும் இன்னும் மினிஸ்டரின் மனைவியும், தானும் கூட வாங்க ஆசைப்பட்ட பழைய வீட்டை தெரிசா வாங்க விரும்புவதாகச் சொன்னான் சின்னச் சங்கரன் அப்போது. மற்றவர்கள் அதன் உரிமை மேல் ஆர்வமில்லை என்று தெளிவாகச் சொன்னால், தெரிசாவுக்கு வீடு கிடைக்க வாய்ப்பு உண்டு என்றான் அவன். வீட்டு சொந்தக்கார மலியக்கல் தோமை குடும்பத்தின் சார்பில் விற்பனையை நடத்த இருக்கும் எம்ப்ராந்திரியிடம் அப்படியே தகவல் தெரிவித்து விடலாம் என்றும் சொன்னான்.

நான் வாங்கப் போவதில்லை என்று மிசிஸ் தெரிசாவிடம் சொல்லி விட்டேனே என்றான் வைத்தாஸ் அப்போது. எம்ப்ராந்தரியிடமோ அவர் மனைவியிடமோ அதைச் சொல்ல முடிந்தால் நன்றாக இருக்கும் என்றாள் தெரிசா.

வைத்தாஸ் கோட் பாக்கெட்டில் இருந்து ரோஜா நிறத்தில் ஒரு காகித உறையை எடுத்தான்.

நான் அவசரமாக நாடு திரும்புவதால் எம்ப்ராந்திரியை சந்திக்க முடியவில்லை. இந்தக் கடிதத்தில் அவருக்கு எழுதியிருக்கிறேன்.

வைத்தாஸ் படிக்கச் சொல்லிக் கொடுத்த கடிதத்தில், நந்தினியின் பெயரில் அந்த வீட்டை வாங்கி இளம் பெண்களின் முன்னேற்றதுக்காகவும் தொழிற்கல்விக்காகவும் பயன்படுத்த விருப்பம் தெரிவித்து எம்ப்ராந்தரி மனைவியிடம் கொடுத்திருந்த முந்தைய கடிதத்தை விலக்கிக் கொள்வதாகவும், வீட்டுக்காக முன் பணமாகக் கொடுத்த ஆயிரம் ரூபாயைக் கோவில் திருப்பணிக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கோரியும், வீட்டை வேறு யாருக்கும் விற்பதில் தனக்கு மகிழ்ச்சியே என்றும் வைத்தாஸ் எழுதியிருந்தான்.

இதெல்லாம் எதுக்கு? நீங்க சொன்னீங்கன்னு தகவல் அறிவிச்சாலே போதும்.

சங்கரன் மரியாதையோடு சொல்லி, சேவகன் கொண்டு வந்த சாயாவை அன்போடு கொடுத்து உபசரித்தான். செண்ட் வாசனை மூக்கில் குத்த கேபின் உள்ளே வந்த பஞ்சாபிப் பெண் சங்கரனிடம் சிரிப்போடு தெரியப்படுத்தினாள் –

உங்கள் மீட்டிங் நேரம் வருகிறது சார்

நன்றி தில்ஷித் என்றபடி அவன் எழுந்தான். வைத்தாஸும் நன்றி சொல்லி எழ, அந்தப் பெண் ஒரு சிறு நோட்டுப் புத்தகத்தை நீட்டினாள்.

சார் பெரிய எழுத்தாளர்னு கேள்விப் பட்டேன். என் தங்கைக்கு இங்கிலீஷ் இலக்கியத்தில் ரொம்பவே ஆசை. சார் ஆட்டோகிராப் போட்டுக் கொடுக்கணும்.

புன்முறுவல் மாறாமல் கையில் ஆட்டோகிராப் புத்தகத்தை வாங்கிக் கையொப்பமிட்டுக் கொடுத்தான் வைத்தாஸ்.

தில்ஷித்துக்கு காலேஜ்லே படிக்கிற தங்கை உண்டுன்னு தெரிஞ்சிருந்தா, நானும் ஒரு புத்தகம் எழுதியிருப்பேனே.

சங்கரன் சொல்ல, அந்தப் பெண் உலகில் உன்னதமான நகைச்சுவையைக் கேட்டது போல் குலுங்கிச் சிரித்தாள். பொய்க் கோபத்தோடு உதட்டைக் கடித்தபடி சங்கரனைப் பார்த்த பார்வையில், வைத்தாஸ் மட்டும் இல்லாவிட்டால் இன்னும் விஸ்தாரமாக இங்கே மெல்லிய சிருங்காரம் பூசிய ஒரு களியாட்டம் நடந்தேறி இருக்கும் என்று வைத்தாஸுக்குத் தோன்றியது.

இந்த இந்திய அதிகாரி இத்தனை சிங்காரம் பாராட்டுவதற்கு இடையிலும் பைல் படித்து பைல் நகர்த்தி பைல் உருவாக்கி வேலை பார்க்கிறான் என்பது மனதிலாக வைத்தாஸ் அவனை வாழ்த்திப் புறப்பட்டான். நிர்வாகத்தில் சிறந்த, பணிக்கு நடுவே காமம் பாராட்டுவதை நாசுக்காகச் செய்யும் அதிகாரிகள் கொண்ட நாட்டை அவன் பிரிந்து போகிறான். என்றென்றைக்குமாக.

அமைச்சர்கள், காரியதரிசிகள் என்று ஒவ்வொருவராக விடைபெற்று பிரதமரின் செயலாளரைச் சந்திக்க இரவு ஏழு மணி ஆனது.

பிரதமர் கொலம்பியா போயிருக்கிறார். வைத்தாஸ் நாடு திரும்புகிறார் என்று அறிய அவரும் துக்கம் அடைவார் என்று செயலாளர் சொன்னார்.

வந்த துக்கத்தையும் வரப் போகும் துக்கத்தையும் இல்லாமல் போக்க ரிப்போர்ட்டர்ஸ் க்ளப்பில் குளிர் பதனப்படுத்தப்பட்ட அறையில் தண்ணீர் கலக்காத ஸ்காட்ச் விஸ்கியும், ரம்மும் அருந்திச் சற்றே ஆறுதல் அடைந்தார்கள்.

அவன் வீடு திரும்ப ராத்திரி பதினோரு மணி.

எல்லா வியர்வைத் தடமும் கசகசப்பும் போக ஷவரில் நீராடி விட்டு வைத்தாஸ் படுக்கை அறைக்கு வர, கட்டிலில் உட்கார்ந்திருந்தவள் எழுந்து நின்றாள்.

வீராவாலி?

எதிரே நின்று கை நீட்டிக் கேட்கிற முழு நக்னனான கறுப்பரைக் கண்டு மலைத்த அந்தப் பெண் வெட்கத்தோடு தலை தாழ்த்தியதும் ஒரு அழகு தான்.

பியாரி என்று தன் பெயர் சொன்னாள் அவள்.

செப்பு நிறத்தில் வழவழத்த இடுப்பும், உருண்ட தோள்களும், சற்றே அகன்ற பற்களும், மை தீட்டிய இடுங்கிய கண்களுமாக, அவள் வீராவாலி இல்லை என்றால் வேறே யார் வீராவாலி?

கட்டிலில் அமர்ந்து அவளை மடியில் இருத்திக் கட்டியணைத்துக் கொண்டு பிடரியில் அழுந்த முத்தம் வைத்து வைத்தாஸ் சொன்னான் –

நீ வீராவாலி தான்.

அந்தப் பெண் ஒரு வினாடி மௌனமாக இருந்தாள். அப்புறம் சொன்னாள்-

வீராவாலி என் அம்மா பெயர்.

சத்தம். பெரிய மரம் தரையில் சாய்ந்தது போல் தரையில் விழுந்தான் வைத்தாஸ். அந்த வேகத்தில் நிலை தடுமாறிக் கட்டிலில் சாய்ந்தாள் அவள். பார்வை தரையில் பதிந்திருந்தது. எழுந்து சுவர் ஓரமாக நின்றாள்.

நிலைக்கண்ணாடிகளில் எதிரும் புதிருமாக நக்னமான வயோதிகர்கள் வைத்தாஸைப் பார்த்தபடி மௌனமாக இருக்க, டெலெக்ஸ் உயிர் பெற்றது.

மக்கள் அதிபரின் விடுதலைத் தின உரை என்று பக்கம் பக்கமாக அது அச்சு மை பூசி நகர்ந்து போக அவசரமாகப் படுக்கை உறையை உருவி எடுத்து இடுப்பில் அணிந்து கொண்டான் வைத்தாஸ். தரையில் மண்டியிட்டு அமர்ந்து வெடித்து அழுதான் அவன்.

தவழ்ந்து, சுவரோரம் குனிந்து, அந்தப் பெண்ணின் பாதங்களை மென்மையாக முத்தமிட்டு, வைத்தாஸ் சொன்னான் –

நீ என் மகள்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன