New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 32 இரா.முருகன்

எமிலி ஆந்த்ரோசா அழ ஆரம்பித்தாள். குளிர்ச்சியான அறை. நடுவிலே, மிக உயரமான கட்டில். அதில் தான் அவள் படுத்திருக்கிறாள். பழைய கட்டிலை அகற்றி விட்டு இந்தக் கட்டிலை அறையில் சேர்த்தார்கள். இரவு சிறு ஏணியைக் கட்டிலில் சார்த்தி வைத்துத்தான் அவளைக் கட்டிலில் ஏறிப் படுக்கச் செய்தார்கள்.

இவ்வளவு உயரமாக இருந்தால் நடுராத்திரி நான் மூத்திரம் போக எப்படி இறங்குவது? குளிர் அதிகம் என்பதால் அடிக்கடி போக வேண்டியிருக்கு. என்ன செய்யணும் நான்?

எமிலி கேட்டபோது ராணுவ அதிகாரிகள் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் எல்லோரும் பெண் அதிகாரிகள்.

சிறுநீரை எல்லாம் பூவாக்கி கட்டில்லே போட்டு வச்சா?

பெரிய பெரிய எறும்புகள் வரும். என்னை அரிச்சு முழுக்க கடிச்சு தின்னுடும்.

எறும்புகள் நகராம இருக்க நீ மந்திரம் செய்வியே.

எறும்புகள் என் கனவில் வந்து மிரட்ட, நான் படுக்கையை நனைச்சுடுவேனே.

ஒண்ணுக்குப் போகாமலே இருக்க மந்திரம் செய்ய முடியாதா?

அவர்கள் எல்லோரும் ஒரே கணத்தில் கேட்கத் தலையைப் பலமாக ஆட்டி மறுத்தாள் எமிலி ஆந்த்ரோசா.

வயத்த வலிக்கும். சின்னப் பொண்ணு தானே நானு?

அவளைப் பத்து வயதுச் சிறுமியென அதிகாரம் செய்யவும் முடியவில்லை. ஆயிரம் வருடம் சேர்ந்து செழித்த தெய்வத் தன்மை சிலநாள் குடியேறிய, கடவுளின் சகோதரியுடைய சுண்டுவிரலாக, பொழுது தோறும் மகிமைப் படுத்தவும் முடியவில்லை. ரொம்ப வற்புறுத்தினால் அழுகிறாள். சிறுமி தானே.

அவள் படுக்கையை உயரம் தணிக்கவும் குளிர்சாதனத்தை அவ்வப்போது நிறுத்தி வைத்து மீண்டும் இயக்கி தூக்கம் கெடாமல் பார்த்துக் கொள்ளவும், இன்னும் கனமான கம்பளிப் போர்வை போர்த்தி விடவும் ஒரு பெண் உதவியாளரை உடனடியாக நியமிக்க முடிவானது. இது போன ஞாயிறன்று நடந்தது.

ஆடும் பறவை நிறைந்திருக்கும் கடவுளின் சகோதரியுடைய வீட்டு முகப்பில் இந்தப் பெண் உறங்க முடியுமானால், எந்தத் தொந்தரவும் எட்டிப் பார்க்காது

அந்த இடத்தைக் கடக்கவே எல்லோரும் பயப்படுகிறார்கள். ஆடும் புனிதமான பறவை தீமையை இனம் கண்டு சர்வ நாசம் விளைவித்து ஒழிக்க மாபெரும் வல்லமை கொண்டது என்று குக்கிராமங்களிலும் நம்பிக்கை வந்திருக்கிறது.

ஊரூராகப் போய் ஊர்ப் பொதுவில் இருந்து கானம் பாடி, உணவும் உடுப்பும் வாங்கிப் போகும் நாடோடிப் பாடகர்கள், ஆடும் புனிதமான பறவை பற்றிப் புனைந்த பாடல்கள் எங்கும் மக்களால் விரும்பிக் கேட்கப் படுகின்றன.

அழகும் கால் நகங்கள் குத்திக் கிழித்து இருதயத்தைக் கீறி எடுத்து முறித்துப் போடும் வலிமையும் கொண்ட பறவை எங்கும் உபாசிக்கப் படுகிறது.

கடவுளின் மூத்த சகோதரியும், அவள் தன் சுண்டு விரலளவு மேன்மையும் சக்தியும் தற்காலிகமாகக் குடியேற்றக் கிள்ளிக் கொடுத்த சிறுபெண் எமிலியும் வழிபடப் பட வேண்டியவர்கள் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால், பறவை ஆடும் முன்றிலில் யாரும் இருக்க அனுமதி இல்லை. அவர்கள் அந்தக் காட்சியின் உக்கிரத்தால் இதயம் வெடித்து இறந்து போகலாம்.

எமிலி இந்த ஒரு வாரமாக வினோதமான இந்த இடத்தில் இருக்கவும் உறங்கவும் கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறாள். நந்தினியின் படுக்கை அறைக்குக் கொண்டு விடும் முன் நடை அது. கடவுளின் சகோதரியாக எப்போதும் நிறைந்திருக்கும் நந்தினியின் படுக்கை அறை கவனமாகப் பூட்டப்பட்டிருக்கிறது. முன் நடையில் ஒரு கட்டிலும், ஓரமாக பெரிய நிலைக் கண்ணாடியும், சுவரில் பதித்த அலமாரியில் ஒன்றிரண்டு கார்ட்டூன் புத்தகங்களுமாக எமிலிக்கு இருப்பிடம் அமைக்கப் பட்டிருக்கிறது.

அவள் சாப்பிடவும், குளிக்கவும், கழிப்பறையைப் பயன்படுத்தவும் மட்டும் இந்த இடத்தை விட்டுப் பத்து அடி கிழக்கிலோ மேற்கிலோ அந்தந்த அறையை நோக்கி நடக்க வேண்டும்.

இரவானாலும் படுக்கை அறை தவிர மற்ற அறைகள் எல்லாவற்றிலும் விளக்கு எரிகிறது. எமிலியின் வரவை எதிர்பார்த்து யாராவது ஊழியர் தூங்கி வழிந்தபடி நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார்.

நந்தினி இருக்கும் போது இங்கே இருபத்து நாலு மணி நேரமும் ராணுவம் காவல் செய்து கொண்டிருக்கும். கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்ட நேரம் இது.

நந்தினி ஆடும் பறவைகளின் நாட்டுக்கு அரசாங்க விருந்தினராகப் போயிருக்கிறாள். அவள் பிறந்த புண்ணிய பூமியுமாகும் அது. இரு வாரப் பயணம். வரும் திங்களன்று திரும்பி விடுவாள். அதுவரை எமிலி தான் அவளுடைய பிரதிநிதி.

உள்ளே வரலாமா?

எட்டிப் பார்த்துக் குரல் கொடுத்த பெண் அதிகாரியை எமிலிக்குப் பழக்கமில்லை. என்றாலும் அவளுடைய சிநேகிதமான சிரிப்பு எமிலிக்குப் பிடித்திருக்கிறது. எல்லாப் பெண் ராணுவ அதிகாரிகளும் எமிலியைப் பார்த்ததும் நேசமாகச் சிரிக்கிறார்கள். அவர்களுக்கு அதற்கான பயிற்சி கொடுக்கப் பட்டிருக்கிறது என்று எமிலி நம்புகிறாள். அவள் இங்கே, கடவுளின் மூத்த சகோதரியின் திருமாளிகைக்கு இருக்குமிடத்தை மாற்றிக் கொண்டபோது, முதலில் அவளைச் சந்தித்தவர்கள் உயரமும், கனமும், காக்கி உடுப்பும், கண்டிப்புமான ஆண் அதிகாரிகள். எமிலி மிரண்டு அழுத தருணமது.

அப்புறம் தான் முழுக்கப் பெண் அதிகாரிகளே கடவுளின் சகோதரியுடைய சிறு விரலான எமிலியோடு தொடர்பு கொள்ள அனுப்பப் பட்டார்கள். இன்றைக்கு வந்திருக்கிறவள் போல, மூத்த, அம்மா, அத்தை, மாமி பிம்பங்களை எழுப்பும் பெண்மணிகள் அவர்கள் எல்லோரும். அத்தை உள்ளே வந்தாள்.

படுக்கையில் உட்கார்ந்து தேநீர் பருகிக் கொண்டிருந்த எமிலி, அந்தப் பெண் அதிகாரி வரும் போது நறுமணம் மிகுந்த வெளிர் நீலத்தில் பெண்கள் கைக்குட்டை ஒன்றை இடது கரத்தைச் சற்றே அசைத்து உருவாக்கினாள். வெள்ளை நிறத்தில் அது இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனாலும் நேர்த்தியான கைக்குட்டை தான் அது.

பெண் அதிகாரி சற்றே குனிந்து உடனே நிமிர்ந்து எமிலி கையில் இருந்து கைக்குட்டையை வாங்கிக் கொண்டு இடது கண்ணோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டு வணக்கமும் நன்றியும் சொன்னாள்.

அதிகாரிகள் தரையில் மண்டியிட்டு வணங்கிப் பேசுவது நந்தினிக்கு மரியாதை காட்ட மட்டும். என்றாலும், வீட்டில் இருக்கும் மூத்த பணிப்பெண்ணான சிஞ்சுவா அப்பனெ எமிலிக்கும் மண்டியிட்டு வணங்குகிறாள். இந்த வீட்டில் கட்டிலிலும் நாற்காலியிலும் அமரும் எல்லாத் தெய்வங்களுக்கும் மண்டியிட்டு வணங்கி ஊழியம் செய்ய அமர்த்தப் பட்டேன் என்றாள் சிஞ்சுவா எமிலியிடம்.

எமிலி அந்தக் கிழவிக்காகக் கையைத் தட்டி வரவழைத்த சாக்லெட் துண்டுகளை அவள் நன்றியோடு வாங்கிக் கொண்டாள் தான். ஆனால் தனக்கு இனிப்பு அண்டக் கூடாது என்று டாக்டர் சொல்லி விட்டார் என்றும், பேரக் குழந்தைகளுக்கே இந்த சாக்லெட்கள் என்றும் சொல்லி எடுத்துப் போனாள்.

அது நேற்று நடந்தது. சிஞ்சுவா எடுத்துப் போன சாக்லெட் பொட்டலத்தை தெருக் கோடி குப்பைத் தொட்டியில் அவசரமாக வீசுவது எமிலி நேற்று ராத்திரிச் சாப்பாட்டுக்கு உட்கார்ந்தபோது அவள் மனதில் காட்சியாக வந்தது. எமிலிக்குக் கோபம் ஏதுமில்லை. மந்திரவாதம் செய்த இனிப்புகளை வீட்டுக் குழந்தைகளுக்கு வழங்க வேண்டாம் என்ற ஜாக்கிரதை உணர்ச்சி கிழவிக்கு இருக்கலாம். எமிலிக்கு அது புரியும். இந்த அதிகாரிகளையும் அவள் அறிவாள்.

கைக்குட்டையை மரியாதை விலகாமல் காக்கிச் சட்டைப்பையில் இட்டு புன்னகையோடு நின்ற அதிகாரியை எதிரே இருந்த நாற்காலியில் அமரச் சொல்லிக் கேட்டுக் கொண்டாள் எமிலி. அவள் இதற்காகவே காத்திருந்தது போல் அந்த நாற்காலியில் உட்கார்ந்து, கையில் பிடித்திருந்த கிளிப் செருகிய அட்டையில் மேலாக இருந்த காகிதத்தை அவசரமாகப் படிக்கத் தொடங்கினாள்.

இரவு நன்றாக உறங்கினீர்களா என்பதில் தொடங்கி, காலை உணவு, தேநீரின் சுவை வரை கேள்வியாக்கப்பட்டுக் கேட்டு உறுதி செய்யப்படும் தகவல் தொகுப்பு அது. நந்தினியிடம் நேரம் எடுத்து அக்கறையோடு கேட்டு அவள் தலையசைக்க நீண்டு முடியும் இந்தச் சடங்கு எமிலிக்குக் காகிதத்தில் தட்டச்சு செய்து அதை சைக்ளோஸ்டைல் செய்து எடுத்த கேள்வித் தொகுப்பாகியது.

அவசர அவசரமாக ஒவ்வொரு கேள்வியாக அதிகாரி கேட்க, பள்ளிக்கூடத்தில் அட்டண்டென்ஸ் எடுக்கும்போது உள்ளேன் ஐயா என்று பதில் சொல்வது போல் ஒவ்வொரு கேள்விக்கும் ஆம் என்று பதில் சொன்னாள் எமிலி. எழுந்து நிற்கவில்லை என்பது தான் வேற்றுமை.

கேள்விகள் முடிந்ததும், இன்றைய நிகழ்ச்சிகளின் விவரம் படிக்கப் பட்டது.

காலை ஒன்பது மணிக்கு, அதாவது இன்னும் ஒரு மணி நேரத்தில், கோழிப் பண்ணை வைத்திருப்போர் சங்க நிர்வாகிகளோடு சந்திப்பு. பதினோரு மணிக்கு, ஆப்பிரிக்க உடுப்புகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் பிரதிநிதிகளோடு உரையாடல், நடுப்பகல் விருந்து நாட்டுப்புற இசைக் கலைஞர்களோடு, பிற்பகல் மூன்று மணிக்கு கடவுளின் மூத்த சகோதரியோடு மின்குழாய்த் தொடர்பு மூலம் உரையாடுதல், மாலை ஐந்து மணிக்கு, ஜப்பானிய முரசுகள் முழக்கும் இசை நிகழ்ச்சி, எட்டரை மணிக்கு இரவு உணவு. உறக்கம்.

இந்த நிகழ்ச்சிகளின் உங்கள் பங்களிப்பு என்ன?

கேள்வி புரியவில்லை என்றாள் எமிலி.

விளக்குகிறேன் என்று சொல்லிப் பெண் அதிகாரி எழுந்திருந்தாள். அவளுடைய கையில் பிடித்திருந்த அட்டையில் செருகிய க்ளிப் நெகிழ்ந்து, காகிதங்கள் அறையெங்கும் பறந்தன.

இது உங்கள் வேலை தானே?

கண்டிப்பான ஆசிரியை போல், ஆனால் முகத்தில் சிரிப்பு மாறாமல் கேட்டாள் அதிகாரி. இல்லை என்று அவசரமாக மறுத்தாள் எமிலி. போனால் போகட்டும் என்ற முக பாவத்தோடு அதிகாரியை ஏறிட்ட அவள் தரையில் கிடந்த காகிதங்களைப் பார்க்க, அவை சற்றே எழும்பிப் பறந்து அதிகாரி கையில் பிடித்த அட்டையில் மறுபடி ஒட்டியபடி நின்றன.

நன்றி. ஆனால் நான் வைத்திருந்த ஒழுங்கு அமைப்பு குலைந்து போய்விட்டது.

அதிகாரி புகார் செய்யும் குரலில் சொன்னாள். காகிதங்களை மறுபடி அட்டையில் செருகத்தான் எமிலியால் முடியும். முன்னால் இருந்த வரிசையில் அடுக்குவது கடவுளின் சகோதரியால் ஒருவேளை செய்ய முடியுமாக இருக்கலாம். அதற்கான மந்திரவாதம் படித்துத் தேர்ச்சி அடைவதற்குள் எமிலி வயதான மூதாட்டி ஆகி விடக் கூடும். கைகளிலும் கால்களிலும் நடுக்கம் ஏற்பட, முகத்தில் தோல் சுருங்கிய கிழவி.

எமிலி எதிரே இருந்த நிலைக் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டபோது அங்கே அழகான ஓர் இளம்பெண் தென்பட்டாள். சே, இவள் நானில்லை என்றாள் அவசரமாக எமிலி. ஆனாலும் மனதில் மகிழ்ச்சி ஊற்றாகப் பெருகி இருந்தது. இதை லட்சியமே செய்யாமல் காகிதங்களை அடுக்கிய பெண் அதிகாரி, சற்று எம்பி, கட்டிலில் எமிலி அருகே அமர்ந்தாள். கடைசியில் இருந்த காகிதத்தை முன்னால் வைத்துக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தாள்.

இன்றைய நிகழ்ச்சிகளில் நீ செய்யப் போகும் சிறு மந்திரவாத நற்செயல்கள் என்னவாக இருக்கும்?

அவள் சிரித்தபடி கேட்க, எமிலி அவள் கையை அன்போடு பற்றி முத்தமிட்டாள். பெண் அதிகாரி இறுக்கம் தளர்ந்து, மெல்ல எமிலியின் தலையில் வருடினாள். அந்தக் கணத்தில் அம்மாவும் பெண்ணுமாக அவர்கள் ஆன அந்த மந்திரவாதத்தை எமிலி செய்யவில்லை தான்.

முதல் நிகழ்ச்சியில் சிறு பட்டாம்பூச்சி பொம்மைகளைக் கையசைத்து உருவாக்கிக் கோழிப்பண்ணை சங்க நிர்வாகிகளில் வந்து வணங்கும் முதல் மூவருக்கு அன்பளிப்பாகத் தருவாள் எமிலி. இது அங்கீகரிக்கப் பட்டுள்ளது என்றாள் பெண் அதிகாரி.

அடுத்து, ஊசிகளைப் பூப்போட்ட சிறு பட்டுத் துணியில் அழகாகச் செருகி அன்பளிப்பாக ஆப்பிரிக்க உடுப்பு ஏற்றுமதியாளர்களின் பிரதிநிதிகளுக்கு வழங்கலாம் என்றாள் அதிகாரி. அது கையசைத்து வரவழைத்துத் தரச் சற்றே கடினமானது என்றாள் எமிலி.

இதற்கு மந்திரவாதம் செய்ய வேண்டாம், இந்த ஊசிகள் செருகிய பட்டுத் துணிகளை நேற்று நேசமான வல்லரசு நாட்டில் இருந்து அன்பளிப்பாகப் பெற்று பத்திரமாக வைக்கப் பட்டுள்ளது என்றாள் அதிகாரி.

அங்கீகரிக்கப் பட்டது என்று குரல் உயர்த்திச் சொன்னாள் எமிலி. எனக்கும் அந்தப் பட்டுத்துணி ஒன்று வேணும் என்று அவள் கூட்டிச் சேர்க்க, அதிகாரி உதட்டில் கை வைத்து புன்னகையோடு அவளைச் சும்மா இருக்கச் சொன்னாள்.

என் ராஜாத்தி, உனக்கு இல்லாத ஊசிகளா?

கருணையோடு சொன்ன பெண் அதிகாரியின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள் எமிலி.

ரோஜாப் பூக்களை வரவழைத்து மற்ற நிகழ்ச்சிகளில் ஒரு சில பேருக்கு வழங்கலாம் என்று அதிகாரி சொன்ன யோசனையை உடனடியாக அங்கீகரித்தாள் எமிலி. தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் கையசைத்து ரோஜாப்பூவைக் கொண்டு வந்து விடுவாள் அவள். மெனக்கெடவே தேவையில்லை.

எல்லா நிகழ்ச்சிகளிலும் எமிலி புதிய அரசாங்கத்தின் வலிமை பற்றியும், நாடு வேகமாக முன்னேறி வருவது குறித்தும் விளக்கி, எதிரிகள் எறும்புப் புற்றிலும் ஆள்கொல்லிச் சிலந்தி வலைகளிலும் சிக்குண்டு இறக்கப் போவதாக எச்சரித்து அரசு ஆதரவு உறுதிமொழி எடுக்கச் செய்வாள்.

அதற்கான சிற்றுரையை அவள் மனப்பாடமாக்கிக் கொண்டிருக்கிறாள். இருந்தாலும் மறந்து விடக்கூடாதென்று அந்தப் பெண் அதிகாரி இன்னொரு காகிதத்தை அடுக்கில் இருந்து மேலே எடுத்து அந்த உரையை உரக்கப் படிக்க, எமிலி ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தாள்.

உறுதிமொழிக்கு மாறாக அவர்கள் யாராவது நடந்து கொண்டால், ஆடும் பறவை அகவி வெளியிடும் சாபங்களில் அவர்கள் குலம் நசிக்கும். எல்லோரும் நடுநடுங்கும், அவரவர் எதிரிக்கும் வர வேண்டாத நிலை இது.

அதிகாரி எமிலிக்கு அருகே இன்னும் நெருங்கி அமர்ந்தாள். ரகசியமாகச் சேதி சொல்கிற பொறுப்பும் அன்பும் கண்டிப்பும் அவள் பார்வையில் இருந்தது.

நேற்றைய நிகழ்ச்சிகளில் ஒரு சிறு தவறு.

பெண் அதிகாரி எமிலியைக் கூர்ந்து பார்த்தபடி சொன்னாள்.

நேற்றைக்கு முதல் நிகச்சியில் பள்ளிக்கூடப் பிள்ளைகள் கடவுளின் மூத்த சகோதரியுடைய பிரதிநிதியான எமிலியைச் சந்திக்க வந்திருந்தார்கள். இந்த சந்திப்புக்காக அதிகாலையில் புறப்பட்டு வந்ததால் வீட்டுப் பாடங்களை எழுத முடியாமல் போனதென்று அந்தப் பிள்ளைகள் சொன்னார்கள்.

எமிலியின் மந்திரவாதத்தால் வீட்டுக் கணக்குகளையும், ஆங்கிலப் பாடப் பயிற்சியையும் எழுதித் தர முடியுமா என்று அவர்கள் கேட்டார்கள். அது தன்னால் முடியாது என்று வருத்தத்துடன் சொன்னாள் எமிலி.

அச்சு மை வாடை அடிக்கும் பாடப் புத்தகங்களும், கிடை மட்டத்தில் நான்கு வரிகளாகக் கோடுகள் இட்ட ஆங்கிலப் பயிற்சி நோட்டுகளும், செங்குத்தான, கண்டிப்பு நிறைந்த மூன்று கோடுகளோடு வரும் கணிதப் பயிற்சிப் புத்தகமும், பாட்டுகளும், மனனம் செய்த சிறு கவிதைகளை ஒப்பிப்பதுமாக இருக்கும் பள்ளிக்கூட உலகத்துக்கு அவள் திரும்பப் போக ஆசைப்பட்டாள்.

வீட்டுக் கணக்கு செய்யாமல் போய் மைதானத்தைச் சுற்றி ஓடி வரத் தண்டனை விதிக்கப்படும் மகிழ்ச்சி அவளுக்கு வேண்டி இருந்தது.

நேற்று அந்தப் பிள்ளைகளின் சிநேகிதியாக எமிலி முனைப்போடு இருந்து கைகளைப் படகு ஓட்டுவது போல் வீசி வீசி அசைத்து வெட்டவெளியில் இருந்து வரவழைத்த ரொட்டித் துண்டுகளையும் கேக்குகளையும் ஆர்வமும் கூச்சலுமாக அவர்கள் சாப்பிட்டார்கள். அவர்களோடு சேர்ந்து எமிலியும் அவற்றை ரசித்து உண்டாள்.

அங்கே தான் தவறு.

பெண் அதிகாரி கனிவு பொங்கச் சொன்னாள். அவள் தொடர்ந்தாள் –

நாட்டில் பசியும் பட்டினியும் இல்லாமல் செய்வது அல்லது இருப்பதைக் கொண்டு மன நிறைவடைய வழிப்படுத்துவது என்பதெல்லாம் அரசாங்கத்தின் பொறுப்பு. கேக்குகளையும் ரொட்டித் துண்டுகளையும் எமிலியின் மந்திரவாதம் உருவாக்கிக் கொடுப்பது சர்க்காரின் நடைமுறையில் குறுக்கிடுவதாகும். புரியவில்லையா? ஆகாரம் எதுவும் இனி மந்திரவாதத்தால் வரவழைக்காதே.

சரி என்று தலையசைத்துக் கேட்டுக் கொண்டாள் எமிலி.

அடுத்து, இது உன் மாமனைப் பற்றியது. அவர்கள் கிராமத்தில் வற்புறுத்தி கோழிகளைக் காணிக்கையாகத் தரச் சொல்கிறாராம். தராமல் போனால், அவர்களை ஆடும் பறவை சபிக்கும் என்றும் மிரட்டுவதாக அறிகிறோம்.

இதற்குத் தான் என்ன செய்ய வேண்டும் என்று புரியாமல் எமிலி பார்த்தாள். அவரை ரத்தம் உறிஞ்சிக் கொல்லும் செடிகளுக்கு நடுவே விட்டிருக்கிறார்கள் என்று ஏனோ தோன்ற அவள் பார்வையில் மருட்சி தெரிந்தது.

கவலைப்பட வேணாம். உன் தாய்மாமனை எச்சரித்தாகி விட்டது. இன்று கடவுளின் சகோதரியோடு உரையாடும்போது அவர்கள் கேட்டால் சொல்லவே இந்தத் தகவல்.

அதிகாரி அவள் கன்னத்தில் செல்லமாகத் தட்டி விட்டு வெளியே நடக்க, அம்மா என்று அழைத்தாள் எமிலி. திரும்பி நின்றபடி அவள் எமிலியை நோக்கினாள்.

நான் வீட்டுக்கு போகணும். எமிலி முறையிட்டாள்.

எதிர்பார்த்தது தான். அந்தப் பெண் அதிகாரி விறைப்பாக நின்றாள்.

கடவுளின் சகோதரி வந்து சேர்ந்ததும் நீ வீடு திரும்பலாம்.

இல்லை, நேற்று இரவில் இருந்து எனக்கு உடம்பு சுகமில்லை.

எமிலியின் குரலில் அவசரமும் பிடிவாதமும் தென்படத் தொடங்கியிருந்தன.

டாக்டரை வரச் சொல்கிறேன். நாளைக்கு முழுக்க ஓய்வெடுக்கலாம். ஞாயிறு.

நைச்சியமாகச் சொன்னாள் பெண் அதிகாரி.

இல்லை, வயிறு வலிக்கிறது. இப்போதும் கூட.

எமிலி அவசரமாகக் குளியல் அறைக்குள் போனாள். சற்று நேரத்தில் அங்கே இருந்து அம்மா என்று விளிக்கும் சத்தம்.

பெண் அதிகாரி அங்கே நடந்தாள். அட்டையில் செருகிய காகிதங்கள் மறுபடி கீழே சரிந்தன. சாவகாசமாக அவற்றை அடுக்கிக் கொள்ளலாம் தான்.

ஐந்தே நிமிடத்தில் எமிலியைக் கைத்தாங்கலாக அழைத்து வந்து கட்டிலில் அமர்த்திய அதிகாரி, தொலைபேசியில் எண்களைச் சுழற்றிப் பேசியது –

இந்தப் பெண் குழந்தை பூப்படைந்தாள்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன