நினைத்தது நினைத்தபடி

 

புத்தகக் கண்காட்சியில் நுழைந்ததுமே எதிர்ப்பட்ட அன்பர் கழுத்தில் துண்டு போட்டு இழுக்காத குறையாகக் கேள்விக் கணை தொடுத்தார்.

‘லண்டன் டயரி எங்கே சார்?’. நான் சத்தியமாக ஒளித்து வைக்கலே. எதது எங்கே இருக்கணுமோ அதது அங்கேதான் இருக்கும்.

தப்பிக்க முடியாமல் நெட்டித் தள்ளிக் கொண்டு என்.எச்.எம் என்ற கிழக்கு ஸ்டாலுக்கு கொண்டு வந்தார். ராகவனிடம் தஞ்சம் புகுந்தேன்.

பான்பராக் போடுவதை புத்தாண்டில் விட்டுவிட்ட அவர் (அவர் சார்பில் நான் புத்தாண்டு பிரதிக்ஞை எடுத்திருக்கேன்) எந்த withdrawal symptom-மும் உடம்பிலோ பேச்சிலோ தட்டுப்படாது உற்சாகமாக லண்டனைத் தேட, கூடவே இன்னும் இரண்டு பேர் சேர்ந்து மேலும் கீழும் சீராகக் குதித்து புத்தக வரிசைகளைப் பார்வையிட, ஊஹும், லண்டன் டயரி போன தடமே தெரியலை.

வித்துப் போச்சு. ரெட்டைத் தெருவும் நல்லாப் போனது.

உற்சாகமாகச் சொன்னார் ராகவன். என் கையை விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டு நிற்கிற அன்பருக்கு அந்த உற்சாகம் தொற்றிக் கொள்ளாததால், எப்பக் கிடைக்கும் புத்தகம் என்று கெத்தாகக் கேட்டார். ராகவன் அசரவே இல்லை.

நாளைக்கு வாங்க, எடுத்து வச்சிருக்கச் சொல்றேன்.

இது நடந்து ரெண்டு நாள் ஆகிவிட்டது, இன்றைக்கு கண்காட்சி கடைசி நாள். இதுவரை ஐந்து பேர் விசாரித்து விட்டார்கள் – லண்டன் டயரி எங்கே?

அஞ்சு பேர்! நிஜமாகவே ரொம்ப பெரிய விஷயம்.

பதறியடித்து பத்ரியை விளித்தேன். ‘தீர்ந்து போச்சு முருகன். எங்க ஸ்டால்லே புத்தகம் கேட்டவங்க முகவரியை எல்லாம் குறிச்சு வைச்சிருக்கோம். அடுத்த வாரம் தொடர்பு கொண்டு புத்தகம் போய்ச் சேர ஏற்பாடு செஞ்சிடறோம்’.

மார்கழியிலும் மழை பெய்ய ஒரு நல்லார் – என் பப்ளிஷர் இருக்கார். வாழ்க.
8888888888888888888888888888888888888888888888888

நேற்று கமல் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது அயல் மாநில எழுத்தாளர் ஒருத்தர் திரைக்கதையோடு பார்க்க வந்திருந்தார். அவர் சட்டென்று multi-colour flier ஒன்றை எடுத்து நீட்டினார். சாப்ட்வேர் ப்ராடக்ட் கம்பெனிகள் anti money launderng, SEPA card dispute handling, securitization இன்னபிற சிக்கலான விஷயங்களை ஊதித் தள்ளும் விதமாக user friendly application தயார் செய்து விற்பனைக்கு இறக்கிவிடும்போது போடுகிற வர்ண மயமான பிராடக்ட் இன்பர்மேஷன் ப்ரோஷர் எல்லாம் இந்த எழுத்தாளரின் bio-data flier-க்கு உறை போடக் காணாது.

ஷேம்பு போட்டு தலை குளித்த மாடல்களை வைத்து விளம்பரப் படுத்தாத குறையாக அவர் நாலு திசையிலும் உற்று நோக்கும் புகைப்படங்களோடு, வாங்கிய விருதுகள், எழுதிய புத்தகங்கள், புகழுரைகள், துதிபாடல்கள் என்று அழுத்தமான அட்டையில் அருமையான ஆங்கிலத்தில் அடித்து வைத்திருக்கிறார்.

இவ்வளவு கஷ்டப்படுவதற்கு பதில் இணையத் தளம் திறந்து விடலாமே என்று கேட்டேன். அவங்க மொழியில் இன்னும் அது சூடு பிடிக்காத ஒண்ணு என்றார்.

தமிழ் இந்த விஷயத்தில் அதிர்ஷ்டம் செய்த மொழி. இணையமும், அச்சும் கடந்த பத்து வருடத்தில் நல்ல வளர்ச்சி.

இணையக் கட்டுரைகளைப் புத்தகமாக்கி இரண்டுக்கும் இணைப்புப் பாலமும் ஜரூராகப் போடப் பட்டுக் கொண்டிருக்கிறது. இது என்னமோ இப்போதுதான் புதிதாக வந்ததாக ஒரு மாயத் தோற்றத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மலேசியா தமிழறிஞரும் அகத்தியர் இணையக்குழு தலைவருமான டாக்டர் ஜெயபாரதி (ஜேய்பி சான்) தான் எட்டு வருஷம் முந்தியே அவருடைய இணைய எழுத்தைத் திரட்டி இப்படி ஒரு நூலை வெளியிட்டார். என் ‘ராயர் காப்பி கிளப்’ அடுத்து 2004-ல் வந்தது.

தன் ட்விட்டர் எழுத்து புத்தகம் ஆகிறதாக பேயோன் எழுதியிருந்தார். வாழ்க.
8888888888888888888888888888888888888888888888888888888888888

ராஜ்மோகன் உண்ணித்தான் கேரளத்தில் காங்கிரஸ் பிரமுகர். கேரள வழக்கப்படி சுறுசுறுப்பாக இன்னொரு கோஷ்டி காங்கிரசில் ஏற்படுத்தி அவர் பங்குக்கு தேச சேவை செய்யாமல், இரண்டு வாரம் முன்னால் காங்கிரஸ் சேவாதளத் தொண்டர் ஒருத்தரை தான் தங்கியிருந்த விடுதிக்கு ராத்திரியில் வரவழைத்து விடிய விடிய நாட்டு, மாநில, மாவட்ட, வட்ட அரசியலை விவாதித்துக் கொண்டிருந்தார். அந்த சேவாதள தொண்டர் இளம்பெண். அவ்வளவே.

மார்க்சிஸ்ட் மாணவர் சங்கம் எஸ்,எஃப்.ஐ, மகளிர் இயக்கங்கள், இந்தியக் கம்யூனிஸ்ட் இளைஞர் இயக்கம் (நிஜமா இருக்கு, நம்புங்க) டி.ஒய்.எஃப்..ஐ இப்படியான ‘சமூக, நாட்டு நலனில் அக்கறை கொண்ட ஆர்வலர்கள்’ ராத்திரியோடு ராத்திரியாக போலீசைக் கூட்டிக்கொண்டு வந்து உண்ணித்தான் தங்கியிருந்த விடுதியைச் சூழ்ந்து அவரைக் ‘கையும் களவுமாகப் பிடித்தார்கள்’. அவரையும், கூட இருந்த காங்கிரஸ் சேவாதளப் பெண் தொண்டரையும் போலீஸ் கைது செய்து உள்ளே வைத்திருக்கிறார்கள். இது கேரள செய்தி.

நேற்று (ஜனவரி ஒன்பது) பையனூரில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பங்குபெற வந்த மலையாள எழுத்தாளர் சக்கரியா இதைப் பற்றி மேடையில் பேசினார் – இது ஒரு தனிமனிதனின் சுதந்திரம். தனிமனித உறவு பற்றிய சட்ட திட்டங்களை இப்படி இயக்கங்கள் ‘அடிச்சேல்பிக்குன்னது’ (கட்டாயப்படுத்திக் கடைப்பிடிக்க வைப்பது) தவறென்பது சகாரியாவின் கருத்து. இதைச் சொன்னதற்காக, சக்கரியா காரை நொறுக்கி அவரையும் அடித்துப் போட இந்த அரசியல் அணிகளைச் சேர்ந்தவர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள். தெய்வம் தம்ப்ரான் புண்ணியத்தில் சக்கரியா ரக்ஷப்பட்டார்.

இடதோ, வலதோ, இந்தியாவில் ரெண்டு தரப்புமே அடுத்தவனின் தனிமனித விவகாரத்தில் மூக்கை நுழைப்பதில் தாலிபானை மிஞ்சி விட்டார்கள்.

கேரள முன்னாள் எம்.பி கே.எஸ். மனோஜ் மார்க்சிஸ்ட் கட்சியை விட்டு விலகிவிட்டார். தெய்வ நம்பிக்கை தவறு என்கிற கட்சிக் கொள்கை எனக்கு உடன்பாடு இல்லை, மனசாட்சிக்கு விரோதமாகக் கட்சியில் தொடரமாட்டேன் என்கிறார் மனோஜ்.

மாலை போட்டு சரணம் விளித்து மகர விளக்கு தரிசித்து விட்டு மாவட்ட கம்யூனிஸ்ட் மாநாட்டில் பங்கெடுக்கும் சகாக்கள் உள்ள கட்சியில் மனோஜுக்கு என்னத்துக்கு இப்படி குற்ற உணர்ச்சி என்றுதான் புரியவில்லை.
888888888888888888888888888888888888888888888888888888888888

இன்றைய (ஜனவரி பத்து) மாத்ருபூமியில் ‘பழசிராஜா’ இயக்குனர் ஹரிஹரன் பேட்டி

படத்தில் நடிகர்கள் ஒத்துழைப்பு எனக்குக் கிடைத்திருந்தால் இன்னும் பிரமாதமாக பழசிராஜா உருவாகி இருக்கும். பல சீன்களில் கால்ஷீட் பிரச்சனைகளால் நடிகர்களை டூப் போட்டு எடுக்க வேண்டிப் போனது.

ரிகர்சல் செய்ய நேரமே இல்லை. கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியை ரெண்டே நாளில் முடிக்க வேண்டிய கட்டாயம். நடிக்க வந்த நடிகர்களோ இந்தக் கதையின் சரித்திரப் பின்னணி தெரியாமல் வில்லையும் அம்பையும் வைத்து இஷ்டத்துக்கு விளையாடிக் கொண்டிருந்ததால் ஏகப்பட்ட படச்சுருள் வீணாகிப் போனது.

கப்பலோட்டிய தமிழன் எடுத்த பந்துலு இதுக்கும் மேலே சொல்லியிருப்பார் பாவம்.

888888888888888888888888888888888888888888888888888888888888

நேற்று சென்னை பிரசாத் திரைப்பட அகாதமியில் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்காக திரைக்கதை வகுப்பெடுத்தேன்.

ரொபீந்தர்நாத் தாகோரின் ‘போஸ்ட் மாஸ்டர்’ சிறுகதை எப்படி சத்யஜித்ராயின் கைவண்ணத்தில் ‘தீன் கன்யான்’ திரைப்படத்தில் ஒரு பகுதியாக இடம்பெற்றது என்று கதையைப் படித்து, படத்தைக் காட்டி விளக்கினேன்.

கதையில் வரும் ரத்தன் என்ற சிறுபெண், ராயின் படத்தில் சிறுமிப் பருவம் கழிந்து திடசித்தம் உள்ள கன்னியாக மாறும் நுட்பமான மாற்றத்தை, ராய் scene அமைத்திருப்பது, shot வைத்திருப்பது, வசனம் என்று நுட்பமாக ஆய்வு செய்தோம்.

இப்படி வகுப்பெடுக்கப் படிக்கும்போது, பார்க்கும்போதுதான் தெரிகிறது – இன்னொரு தாகூர் வரலாம். சத்யஜித்ராய் போன்ற மேதைகள் இனி இங்கே பிறந்து வரப் போவதில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன