புது நாவல்: அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 33 இரா.முருகன்


கற்பகத்தை டாக்சியில் ஏற்றி செண்ட்ரல் ரயில் நிலையத்துக்குக் கூட்டிப் போவது அவ்வளவு ஒன்றும் சுலபமானதாக இருக்கவில்லை.

ஒரு வாரம் கூடத் தங்கி இருந்து, கூடவே சாப்பிட்டு, கூடத்தில் பகலில் பக்கத்திலேயே உட்கார்ந்து வாயோயாமல் அரட்டை அடித்து, சமயோசிதமாகப் பேசி நல்ல வார்த்தை சொல்லி மெல்ல மெல்ல வழிக்குக் கொண்டு வர வேண்டியிருந்தது.

திலீபும், ஜனனியும் பம்பாயில் இருந்து கிளம்பும்போதே பேசி வைத்துக் கொண்டு வந்த மாதிரி கச்சிதமாகச் சேர்ந்து செயல் பட்டார்கள். அது இல்லாமல் இருந்தால், அவர்கள் இன்னும் நாலு நடை நடந்த பிறகு கூட கற்பகம் கிளம்பி இருக்கப் போவதில்லை.

ஜனனி பார்த்துப் பார்த்துச் செய்தாள். தெருக்கோடிக் கடைக்கு, கற்பகம் கவனிக்காத நேரத்தில் போய் டீத் தூள் வாங்குவதில் சாத்வீகமாகத் தொடங்கியது அது.

பேத்தி கடை கண்ணிக்குப் போவதில் பாட்டிக்குக் குற்றம் சொல்ல ஏதுமில்லை. புடவை கட்டுவேனா என்று அடம் பிடிக்கிறாள் கழுதை. உடம்பு விஷயத்தில் கொப்பும் குழையுமாகத் தன்னைக் கொண்டிருக்கிறாள் பேத்தி என்பதில் கற்பகத்துக்கு சொல்ல முடியாத பெருமை. ஆனாலும் ஊர்க் கண், கொள்ளிக் கண் ஆச்சே. வந்தான் போனான் கண்ணெல்லாம் மாரில் இல்லையோ இருக்கும்.

பாஷாண்டி, கோசாயி மாதிரி அது என்னடி லாலீன்னு உடுப்பு? உங்கப்பனைப் பள்ளிக் கூடத்துலே போட்ட போது, இப்படித்தான் பாவாடை கட்டிண்டு பாதிரிக் கட்டேலே போவான் அவனை வெதர்லே நிமிண்டுவான்.

பாட்டி நீட்டி முழக்கி ஆரம்பிக்க, திலீப் ஓடியே போய் விடுவான். ஜனனி நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டு பாட்டியை இழுத்துப் பிடித்துப் பக்கத்தில் உட்கார வைப்பாள்.

வெதர்னா மழை வருமா வெயில் அடிக்குமா, உஷ்ணம், குளிர் இதானே. அதுக்கும் பாதிரி கிள்றதுக்கும் என்ன சம்பந்தம் பாட்டி?

அடி பொண்ணே அதெல்லாம் உனக்கெதுக்கு? சொன்னா கேட்டுக்கணும்

திலீப் கிட்டே கேட்டுக்கணுமா?

அந்தக் கடங்காரன் கிட்டே இதெல்லாம் வாயே திறக்கக் கூடாது. அக்காளும் தம்பியும் பேசற பேச்சாடி இது?

கடன்காரன் உள்ளே இருந்து பிஸ்கட்டை வேணுமென்றே எச்சில் படுத்திக் கடித்துக் கொண்டு வந்து இன்னொரு வசவைப் பாட்டியிடம் வாங்கிக் கொண்டு ஆனந்தமாகச் சிரிப்பான். தாத்தா சாவுக்கு வந்த இடத்தில் தான் அவனுக்கு சந்தோஷம் என்று விதிக்கப் பட்டிருக்கிறது.

காப்பி போடட்டுமா பாட்டி?

போடறது இல்லேடி கொழந்தே. காப்பி சேர்க்கணும்.

கற்பகம் தஞ்சாவூர் வளமுறையைப் பேத்திக்குக் கற்றுக் கொடுத்த பெருமிதத்தில் பேரன் இந்திச் சினிமாப் பாட்டு பாடறதை ரசித்துக் கொண்டிருப்பாள்.

தோஸ்த் தோஸ்த் நா ரஹா.

திலீப் பாட பாட்டி அதிசயப்படுவாள் –

அது ஏண்டா தோஸ்த் நாறணும்? மொறிச்சுனு சோப்பு போட்டுக் கஷ்கத்துலே நன்னாத் தேச்சு குளிக்கச் சொல்லு.

திலீப்போடு கூட சிரித்தபடி ஜனனி தட்டில் மூன்று கோப்பை நிறைத்து எடுத்து வந்து பில்டர் காப்பி என்று கொடுப்பது கோல்டன் டஸ்ட் டீயாக இருக்கும்.

இரண்டே வாரத்தில் மத்தியானம் மூணு மணிக்கு பிஸ்கட்டை உதிர்த்துத் தின்றபடி மெல்ல உறிஞ்சிக் குடிக்க வேண்டியது டீ என்று வாழ்க்கை பூரா காப்பியில் அடித்து நிறுத்தி வைத்த கற்பகத்தை ஒரேயடியாக மாற்றினாள் ஜனனி.

என்றாலும், மெட்ராஸை விட்டு பம்பாய்க்கு வந்து இருக்க அவளை சம்மதிக்க வைப்பது டஸ்ட் டீத்தூள் பதமாகவோ, தொட்டதும் உதிர்ந்து நாக்கில் கரையும் பிஸ்கட்டாகவோ சிரமமில்லாமல் வசப்படவில்லை.

பம்பாய்லே எனக்கு யார் இருக்கான்னு வரச் சொல்றே?

கற்பகம் திருப்பித் திருப்பிக் கேட்டாள்.

கல்யாணம் முடிந்து பதினைந்தே வயதில் பிறந்தகம் விட்டுப் பட்டணத்தில் புக்ககம் வந்தவள் அவள். பிறந்து சிற்றாடை கட்டி ஓடித் திரிந்து அவள் வளர்ந்த திருவாரூர்த் தெரு எப்போதாவது சொப்பனத்தில் தட்டும்போது நீலகண்டனிடம் ஆச்சரியமாக அதைச் சொல்வாள். அந்த நினைவே முழுக்க கலைந்து போக மெட்ராஸ் குடித்தனமும், குழந்தை வளர்ப்பும், அகத்துக்காரன் ஆபீஸ் போக டிபன் கட்டிக் கொடுப்பதும், ராத்திரி அணைத்துக் கொண்டு படுப்பதும், எல்லாம் ஓய, பீத்துணி துவைத்து உலர்த்துவதுமாக ஒரு வாழ்க்கையே மெட்றாஸோடு பின்னிப் பிணைந்து கிடக்கிறது.

அந்த ஊரை விட்டு வெளியே போகிறபோது அவள் கற்பகமாக இருந்தாலும் சுய அடையாளம் தொலைத்த பேரில்லாக் கிழவியாகி விடுவாள். அதுக்குச் சாகலாம்.

பம்பாயில், சித்திவினாயகர் கோவில் பக்கத்தில் இருக்கு. மகாலட்சுமி மந்திர் காரில் போனால் பத்தே நிமிஷம் தான். மெட்ராஸ் மாதிரி பம்பாயிலும் அலை அடிக்கும் சமுத்திரம் உண்டு. இங்கே ஒரே ஒரு நாள் கொண்டாடும் சதுர்த்தி அங்கே பத்து நாள் கோலாகலமாக ஊரோடு கொண்டாடுவார்கள்.

பயணிகளுக்கு பம்பாய்ச் சுற்றுலா ஏற்பாடு செய்கிற கம்பெனியின் விற்பனையாளன் மாதிரி திலீப் பத்திரிகையையும் புத்தகத்தையும் திறந்து படம் காட்டி, வாசித்து விளக்கி உற்சாகப்படுத்தினான். பாட்டிக்கு ஒரு எட்டு போய் பம்பாய் போய் ஊர் வினோதம் எல்லாம் கொஞ்சம் போல பார்க்க ஆசை தான். ஆனால் அங்கேயே மிச்ச ஆயுசைக் கழிப்பது பற்றி அவளுக்கு நிச்சயம் உடன்பாடில்லை.

ஜனனி அடுத்த அஸ்திரத்தைப் பிரயோகித்தாள்.

ஒரு மாசம் ரெண்டு மாசம் எங்களோட அங்கே வந்து இருந்து பாரு பாட்டி. உனக்குப் பிடிக்கலே, பிடிச்சிருக்கு ஆனா ஏனோ சரிப்பட்டு வரலே, சரிப்பட்டு வருது ஆனா பிடிக்கலே இப்படி எந்த மாதிரி இருந்தாலும் சரி, கேள்வியே கேட்காமல் உன்னை இங்கே கொண்டு வந்து விட்டுட்டுப் போயிடறோம் ஓகேயா?

ஜனனி நைச்சியமாகச் சொல்ல, திலீப் இன்னும் ஆதரவாகக் கூட்டிச் சேர்த்தான் –

இங்கே வீட்டை வாரம் ஒரு தடவை பெருக்கித் தொடச்சு, அப்பப்போ பெரியப்பா கட்சி ஆளுங்க மூலமா வரி கட்ட, மினிமம் கரண்ட் சார்ஜ் கட்டி கனெக்‌ஷன் எப்பவும் இருக்க, வீட்டு வரி கட்ட, நானாச்சு. ஏற்பாடு பண்றேன். நீ எப்ப வேணும்னாலும் திரும்பி வரலாம். வந்தா, வீடு இப்போ இருக்கறதுக்கு எந்த வித்யாசமும் இல்லாம இருக்கும். வந்த உடனே உப்பு உரைப்பாச் சமைக்க உப்பு, புளி, மிளகாய், பொலபொலன்னு வடிக்க சம்பா அரிசி கூட வாங்கி வச்சுடறேன்,

ஒரு வழியாகத் திருவாரூர்த் தேர் அசைந்து கொடுத்தது. மெல்ல ஊர்ந்தது. தயங்கி இன்னும் கொஞ்சம் நகர முற்பட்டது. பேரப் பசங்கள் உற்சாகமாகக் கூவி முன்னால் பிடித்து இழுக்க, இதோ தேர் ஓட ஆரம்பித்து விட்டது.

செண்ட்ரல் ஸ்டேஷனின் பிரம்மாண்டம் எப்போதுமே கற்பகத்தை மருட்டும். வடக்கத்திய வாடை அடிக்கிற இடம் அது. மூக்கு வைத்த பித்தளை கூஜாக்களைக் கையில் பிடித்துக் கொண்டு, இழுத்துக் கட்டப்பட்ட படுக்கைகளையும் எல்லா சைஸிலும் டிரங்குப் பெட்டிகளையும் சுமந்து வருகிற கூட்டத்தில் நிச்சயம் கற்பகம் வயதுக் கிழவிகள் சுறுசுறுப்பாக நகர்வார்கள். அவர்கள் சரளமாக இந்தியில் பேசிக் கொண்டு போவார்கள். இங்கே அந்த மொழி மட்டும் தான் செல்லுபடியாகும் போல. கூடவே கலம் அழுக்கு கெட்டியாக செண்ட்ரல் முழுக்க ஒட்டியிருக்கும். பக்கத்தில் கலங்கிய நீரும் சால் கட்டி குடலைப் புரட்டும் வாசனையோடு கூடவே வரும்.

அது மட்டுமில்லாமல், கற்பகத்தின் மனதில் பதிந்த செண்ட்ரலில், கோசாயிகள் சதா வடக்கிலிருந்து தெற்குக்கும், மேற்கிலிருந்து கிழக்குக்கும் போவதற்காக சாவதானமாகப் புகுந்து புறப்பட்டு மாடிப் படியெல்லாம் புகை பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். கௌபீனம் விலகச் சகலமானதையும் காட்டிக் கொண்டு தூங்குவார்கள். பட்டணத்துக்கு அந்நியமான நெய்ச் சப்பாத்தியும், புளிப்புக் காடியில் ஊறிய மாங்காயும் இருபத்து நாலு மணி நேரமும் இங்கே ஆட்சி புரியும்.

அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, கற்பகத்தை ஏகமாகப் பயமுறுத்துகிறவை செண்ட்ரலில் நடுநாயகமாக நிற்கும், வரும், போகும் ரயில்கள்.

என்ன இருந்தாலும் எழும்பூர் ஸ்டேஷன் போல வருமா?

கும்பகோணமோ, தஞ்சாவூரோ போக வர, இருக்கிற ஊருக்குப் பாந்தமாக. எப்பவும் பளிச்சென்று துடைத்து வைத்த மாதிரி இருக்கப்பட்டதாச்சே எழும்பூர்.

எல்லா அழகும் குவிந்து தஞ்சாவூர்ப் பெண் மாதிரி அந்நியோன்யமும் கருக்கடையும் சுறுசுறுப்புமாக சதா இருக்கும் அந்த ஸ்டேஷன், கல்யாணம் நிச்சயமான சந்தோஷத்தில் திளைத்து மற்றவர்களுக்கும் சந்தோஷத்தைக் கடத்தும் பெண்ணரசி போல கற்பகத்துக்குப் பிரியமானது அது.

எழும்பூரில் வந்து நின்று கூச்சல் முழக்கிக் கூப்பிடும் ரயில்கள் பிரம்மாண்டமானவை இல்லை. மீட்டர்காஜ் எதோ நீலகண்டன் பெயர் பரிச்சயப்படுத்தி இருக்கிறான்.

அந்த மாதிரி வண்டியில் பர்ஸ்ட் கிளாஸ் டிக்கட் வாங்கி, அதுவும் ரெண்டே இருக்கை இருக்கற கூப்பேயில் அவளோடு ரமித்தபடி ராமேஸ்வரம் போக வேண்டும் என்ற அவனுடைய இச்சை இனி அடுத்த ஜன்மத்தில் தான் நிறைவேறும். மீட்டர்கேஜும் முதல் வகுப்பும் அதில் கூப்பேயும் அப்போதும் இருந்தால்.

வெகு அருகில் ஆயிரம் மயில்கள் சேர்ந்து அகவுகிற மாதிரி, மதயானை பிளிறல் போல கூர்மையான இரைச்சல். கற்பகம் ஜனனி கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.

கொஞ்சம் தள்ளி அகல ரயில் பாதையில் வரும் வண்டி அது. எல்லா ரயில் பெட்டிக்கு வெளியிலும் முழுக்க இந்தியில் எழுதி, உள்ளே, இந்தியில் மட்டும் மூச்சும் குசுவும் விடுகிற கும்பலை முக்கி முக்கி அடைத்துக் கொண்டு பிரலாபிக்கிறது போலக் கத்திக் கொண்டு எங்கிருந்தோ வந்த ரயில் நின்றது.

நிக்க வர்றதுக்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்? போற காலத்துலே நான் பம்பாய் போய் சீலம் கொழிக்கப் புறப்பட்ட மாதிரி முடிஞ்ச யாத்திரைக்கு மேளக் கொட்டு.

ஏ கிழவி சும்மா வர மாட்டே.

ஜனனி அவள் உள்ளங்கையில் அழுத்தக் கிள்ளினாள்.

பிசாசே, உசிர் போற மாதிரி வலிக்கறது. கிள்ளுப் பிடுங்கி.

பாட்டி வெறுமனே வைதாலும், கையை விடுவித்துக் கொள்ளவில்லை.

இதான் இந்த டப்பா தான், போய்ட்டே இருக்கியே.

திலீப் பின்னாலிருந்து அவசரமாகக் குரல் கொடுத்து நிறுத்தினான்.

பம்பாய் மெயிலின் முதல் வகுப்பு. அழுக்கும் கண்ணாடி ஜன்னலும், அகலமாக மெத்தை பரப்பிய இருக்கையுமாக பாதி இருட்டில் கிடந்தது அது.

மெல்லக் கையைப் பிடித்து உள்ளே ஏற்றி விட்டான் திலீப். இந்த இருட்டில் இன்னும் இரண்டு ராத்திரி போக வேணும் என்று நினைக்க மலைப்பாக இருந்தது கற்பகத்துக்கு. ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போகணும்னா தட்டுத் தடுமாறித் தடவிண்டு போய் வேறே யாரோ உக்காந்திருக்கற இடத்திலே அசுத்தம் பண்ற மாதிரி ஆகலாமோ? நினைக்கவே சங்கடமாக இருந்தது.

எங்கேடி போனே ஜனனி?

பின்னாலே தானே வந்துண்டிருக்கேன். ஏன் பொகாரோ எக்ஸ்பிரஸ் மாதிரி அலர்றே?

இப்போ வந்தது பொக்காரம் எக்ஸ்பிரஸா?

குனிந்து ஜன்னல் வழியே அடுத்த பிளாட்பாரத்தில் வந்து நின்ற ரயிலைப் பார்த்தாள் கற்பகம். அதன் உள்ளிருந்து, ஒன்றும் இரண்டுமாக தலையைச் சொறிந்து கொண்டு ஆணும் பெண்ணுமாக இறங்கிக் கொண்டிருப்பதும், அழுகிற கைக்குழந்தைகளும் கண்ணில் பட்டார்கள்.

எதுக்கு ஓரமா ஒண்டிண்டிருக்கே? நீட்டி நிமிர்ந்து சாஞ்சு படுத்து இஷ்டம் போல் உக்காரேன்.

ஜனனி அவளை இழுத்துப் படுக்க வைக்க முயற்சி செய்ய, திலீப் அரை இருட்டில் சுவரைத் துழாவி சுவிட்ச் சுவிட்சாக அழுத்தி ஒரு கணத்தில் பளீரென்று மேலே இரண்டு விளக்குகளை எரிய விட்டான்.

அய்யோ, இப்படி பக்கத்துலே ஆயிரம் பேர் ரயில் பெட்டிக்குள்ளேயும், பிளாட்பாரத்திலேயும் புகுந்து புறப்பட்டுண்டிருக்கா. பெப்பரப்பேன்னு விளக்கைப் போட்டுண்டு கிடக்கேன் நானாக்க. கிடக்கறது கிடக்கு கிழவியைத் தூக்கி பலகையிலே வைன்னு என்னை எதுக்குடி இப்போ பள்ளி கொள்ளச் சொல்றே.

அவசரமாக எழுந்து உட்காந்த கற்பகம், திலீபைக் கேட்டாள் –

ஏண்டா இந்த சீட்டுலே வேறே யார் வரப் போறா? ஆம்பிளைகள் வந்தால் எனக்கு வேண்டாம். தரையிலேயே உக்காந்துண்டு வரேன்.

திலீப் கால் சராய் பாக்கெட்டில் இருந்து சதா கூடச் சுமந்து போகும் பிளாஸ்டிக் சீப்பை எடுத்தான். அதை சிரத்தையாக, மேலே மின்சார விசிறியின் இரும்பு வலைக்குள் நுழைத்துக் கொண்டிருந்தான்.

ஷாக் அடிக்கப் போறதுடா. சுவிட்சைப் போடேன்.

ஜனனி அவனிடம் இருந்து சீப்பைப் பிடுங்க முயற்சி எடுத்தது பலிக்கவில்லை.

’சுவிட்சாவது மண்ணாங்கட்டியாவது. சீப்பை வச்சுத்தான் இதை ஸ்டார்ட் பண்ணனும். சரியா பாட்டி? பம்பாய் போறயாக்கும். ஆல் தி பெஸ்ட்’.

சுழல்கிற விசிறியின் இறக்கைகளைக் காட்டி திருப்தியோடு சிரித்தான் திலீப்.

திடீரென்று கற்பகம் எழுந்திருந்தாள்.

நான் ஆத்துக்குப் போறேண்டா. பத்து ரூபா கொடு. டாக்சி பிடிச்சுப் போயிடறேன். நுங்கம்பாக்கம்னு சொன்னா வரமாட்டேன்னா சொல்லப் போறான்.

ஜனனி அவளைப் பிடிப்பதற்குள் கற்பகம் நகர்ந்து, இந்தப் பக்கம் தான் கதவு என்று ஊகித்த திசையில் வயசுக்குப் பொருந்தாத வேகத்தோடு நடந்தாள்.

வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சே. ஏ பாட்டி. பாட்டி. கற்பகம்.

ஜனனி பதற்றமாகக் கூப்பிட, கற்பகம் நிற்கிற வழியாகத் தெரியவில்லை.

ஒரே ஒரு வாரம் எங்களோட பம்பாய்லே இரு. நான் பத்திரமா திருப்பிக் கொண்டு வந்து விடறேன். அப்புறம் என் ஆயுசுக்கும் உன் ஆயுசுக்கும் உங்கிட்டே பம்பாய்னே சொல்ல மாட்டேன். ஜஸ்ட் ஒரு வாரம். ஏழே நாள் மட்டும் பம்பாய்.

திலீப் ஆகக் குறைவான பேரத்துக்கு இறங்கி வந்தான்.

ஒரு வாரம் அங்கே பம்பாய்லே தனியாக் கொட்டக் கொட்ட முழிச்சுண்டு என்ன பண்ணப் போறேன்?

கற்பகம் குழந்தை மாதிரி பிடிவாதம் முற்ற, பேரனையும் பேத்தியையும் அழுகை கலந்து வந்த குரலில் கேட்டாள்.

ஏன்? உனக்கு மனுஷா யாரும் வேணாம். எங்கப்பா, பெரியப்பா உன் பிள்ளைகளா இருந்தாலும் தேவை இல்லை. பெரியம்மா, எங்க அம்மா. மருமகள் தானே ரெண்டும். அதுவும் எங்கம்மா. ஆட்டக்காரி. மராத்திக்கார தட்டுவாணிச்சி. அவ பைத்தியம் முத்தி, யாரும் கவனிச்சுக்காமல் அனாதையா சாகணும். நீ சொகுசா டுர்யோன்னு நுங்கம்பாக்கத்துக்கு டாக்சி பிடிச்சுப் போய், உங்க வீட்டுலே உக்காந்துடுவியாக்கும்?நாங்க எக்கேடும் கெட்டாலும் உனக்கு ஒண்ணுமில்ல்லை.

திலீப் பாக்கெட்டிலிருந்து எடுத்த பர்ஸில் ஷாலினி மோரே திருவிழாவில் வழி தவறிப் போன குழந்தையாக விழிக்கிற புகைப்படம். லாவணி ஒப்பனை பாதி கலைந்து முகத்தில் அங்கங்கே ஜிகினா பளபளத்து இருக்கும் நடுவயதுக்காரி. கற்பகத்தின் முகத்துக்கு நேரே அதை நீட்ட அவள் கண்ணைக் கவிந்து பார்த்தாள்.

சட்டென்று திரும்ப விளக்கு அணைந்தது.

பாட்டி, பாட்டி, இரு. இறங்காதே. விழுந்துடுவே.

ஜனனி அலறும் குரல்.

இருட்டில் தடுமாறி வந்து ஜனனியை இடித்துக் கொண்டு இருக்கையில் உட்கார்ந்தாள் கற்பகம்.

பாட்டி சொல்றதைக் கேளு. போகாதே.

நான் ஏண்டா போறேன். உங்கம்மா பச்சரிசிச் சாதம் சாப்பிடுவாளோ?

வெளிச்சம் வந்திருந்தது.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன