புது நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 21 : இரா.முருகன்


நந்தினி தொலைபேசியைச் சத்தம் எழ வைத்தாள்.

வைத்தாஸ், எங்கே இருக்கே?

வீதியில் மோட்டார் வாகனம் போகும் இரைச்சல். ஜன்னல் திரையைத் தூக்காமல் ஓரமாக நின்று எட்டிப் பார்த்தாள்.

அழுக்குப் பச்சை நிறத்தில் ஆர்மி லாரி. ஐந்து நிமிடம் முன்னால் தான் ஒன்று கடந்து போனது.

கைக்கடியாரம் எங்கே? பகலில் இருந்து ஜன்னலுக்கும் உள்ளேயுமாக நடந்து கொண்டே இருப்பது தவிர எதையும் மனதில் இருத்த முடியவில்லை.

எல்லாம் சரியாக, எப்போதும் போல் இருக்கிறது என்று பாதுகாப்பாக உணரப் பழகிய காட்சி, சத்தம், வாசனை என்று ஏதாவது ஒன்று கிடைத்தாலும் போதும். இனம் புரியாத பயமாக கொஞ்ச நஞ்சம் மனதின் ஓரத்தில் ஒட்டி இருந்தாலும், துடைத்துப் போட்டு விடும் அதை எல்லாம்.

தலைச்சேரிக்காரி கூட்டத்தையும் இரைச்சலையும் ஒரு சத்தமும் இல்லாத அத்துவானத்தையும் பார்த்து பயப்பட என்ன இருக்கிறது? உயிரை வெகு சாதாரணமாக மதித்து மேலே பறக்கிற, வட்டம் கறங்கிச் சுழல்கிற சர்க்கஸுக்கு மறுபெயர் ஆச்சே தலைச்சேரி?

அப்படித்தான் அச்சன் சொல்லியிருக்கிறார். நந்தினி இதுவரை தலைச்சேரி போகாவிட்டாலும் தலைச்சேரிக்காரர்களின் துணிச்சலும் திடசித்தமும் அவளுக்குத் தெரியும். அடுத்த முறை கேரளத்துக்கு வைத்தாஸோடு போகும்போது வேம்பநாட்டுக் காயலில் படகு வீட்டுக்குள் சுருண்டு கிடக்காமல் தலைச்சேரி போவாள் அவள். சீக்கிரம் அது நடக்கும்.

ஜன்னல் வழியே நந்தினி பார்க்க, வாசலில் குடை பிடித்தபடி நடந்து போன ஒரு வெள்ளைக்காரச் சீமாட்டியையும், பின்னால் சிகரெட் குடித்தபடி குப்பைத் தொட்டியைக் குடைந்து கொண்டிருந்தவனையும் தவிர யாரும் இல்லை.

நந்தினியின் பெரிய அத்தையும், முத்தச்சனின் தங்கை வீட்டு ஆண்களும் பெண்களும் சர்க்கஸ் பழகித் தொழிலாக ஏற்றவர்கள். அத்தை அந்தரத்தில் பார் விளையாடித் தொங்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனாள். வலுவான முத்தச்சி வீட்டு அம்மாவன் ஒருத்தர் மரணக் கூண்டில் மோட்டார் சைக்கிள் பிடி நழுவி உயரத்தில் இருந்து விழுந்து ஆயுசு முடிந்தது.

அவர்களும் பயம் என்பதே தெரியாமல் மரணத்தை எதிர்கொண்டதாக நந்தினியின் அச்சன் சொல்லியிருக்கிறார். மற்ற எல்லாரும் தீர்க்காயுசும், மனசு முழுக்க தைரியமும், பணக் கஷ்டமுமாகத்தான் இன்னும் ஜீவித்திருக்கிறார்கள்.

கைக்கடியாரம் எங்கே? படுக்கையில் இருந்து நழுவிப் படுக்கைக்கு அடியில் விழுந்திருக்குமா?? வைத்தாஸ் இருக்கும்போது உபயோகித்துப் போட்ட உறையும், தூசியும் துணைக்கு இருக்க, அங்கே இருட்டுக்கு நேரம் சொல்லிக் கொண்டு கிடக்குமா?

வாசலில் வண்டிச் சத்தம் கேட்கிற மாதிரி இருக்கே? கடியாரத்தைத் தேடிவிட்டுப் பார்க்கலாம்.

வாஷ்பேசின் பக்கம் பற்பசையும், பல் துலக்கும் பிரஷ்ஷும் துருத்திக் கொண்டிருக்கும் தகரக் கொட்டானில் கைக்கடியாரமும் சுருண்டு கிடப்பது கண்ணில் பட்டது. எப்போது அங்கே போய் அதை அகற்றி வைத்தது என்று நினைக்க நந்தினிக்கு அலுப்பாக இருந்தது. இருக்கு. அது போதும்.

கடியாரத்தை வலது கையில் கட்டும்போது மணி பார்த்தாள், பிற்பகம் நாலரை.

இப்போது இந்தியாவில் வைத்தாஸுக்கு நேரம்? மூன்றரை மணி நேரம கூட்டிக் கொள்ள வேண்டும். இந்தியாவில் இப்போது ராத்திரி எட்டு மணி.

வைத்தாஸ் பொம்பளை தேடிப் போயிருப்பானா?

உடனே போன் செய்து, அப்படி இருந்தால் வாழ்த்து சொல்லலாம் என்று தோன்றியது நந்தினிக்கு.

ஆணுறை எடுத்துப் போயிருக்கியான்னு கேட்கணும். தலை குளித்த சுத்தமான பெண் தானே? பல் துலக்கியிருக்கிறாளா?

நந்தினிக்குச் சிரிப்பு வந்தது.

கூட்டி வந்து ஓட்டல் அறையில், ஓரமாகக் கரப்பான் பூச்சி ஊறும் படுக்கையில் கிடத்தி முயங்கிக் கிடந்தால்?

ஐந்து நட்சத்திர ஓட்டல் இல்லையோ அது?

ரூம் சர்வீஸ், அந்தப் பூச்சியை எடுத்து வெளியே போடுங்கள். வேறே உதவி எதுவும் வேணாம். நன்றி,

ஒரு நட்பு நாட்டின் தூதர் விருப்பப் பட்டால் எதுவும் செய்து கொடுத்து பில்லில் கட்டணமும் வரியும் காட்டிக் காசு வாங்கி விடுவார்களாக இருக்கும்.

புன்னகையோடு டிரான்சிஸ்டரை ஆன் செய்தாள்.

வழக்கமாக ஜாஸ் இசை முழங்கும் வானொலி நிலையம் மௌனமாக இருந்தது. செய்திகளும், அறிவிப்புகளும், வானொலி நாடகங்களும் நாள் முழுக்க ஒலிபரப்பும் இன்னொரு நிலையத்தில் தொடர்ந்து தேச பக்திப் பாடல்கள் மட்டும் ஒலிபரப்பப் பட்டுக் கொண்டிருந்தன, மாஸ்கோவும், பீகிங்கும் இன்னும் லண்டன் பிபிசியும் வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தன. என்ன கண்றாவியோ.

வைத்தாஸ் என்ன செய்து கொண்டிருப்பான்?

வைத்தாஸ் யாரோடும், எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். கிடக்கட்டும். நந்தினிக்கு ஒரு கவலையும் இல்லை. இந்தத் தினம் முடிந்து அடுத்தது சாதாரணமாக ஆரம்பிக்க வேண்டும். அதுதான் இப்போதைக்கு மனசு முழுக்க.

திரும்ப ஜன்னலுக்குப் போனாள். அதோ தெருக் கோடியில் இருந்து பழக்காரி இரண்டு கையிலும் இரும்பு வாளிகளோடு வருகிறாள். ஆரஞ்சுப் பழம் விற்கிறவள்.

இக்குங்கவா.

அவள் குரல் தெரு முழுக்க நிரம்பி, இந்த நாளும் மற்ற எல்லா தினத்தையும் போலத்தான் என்று ஆசுவாசம் தரப் போகிறது.

அந்தக் கிழவி நாலு பக்கமும் திரும்பத் திரும்பப் பார்த்தபடி, நிச்சயமில்லாத படி காலடி எடுத்து வைக்கிறதாக நந்தினிக்குப் பட்டது. அவள் கொண்டு போகிற இக்குங்குவா-ஆரஞ்சுப் பழங்கள் அவளுக்குச் சொந்தமானவையாக இல்லாமல் இருக்கலாம். கடனுக்கு வாங்கி விற்கிறவள் ஆனால் என்ன, விற்க எடுத்ததை வாய் விட்டுக் கூவி விற்க வேண்டியது தானே? விற்றால் தானே கடன் தீரும்?

இக்குங்கவா.

நந்தினி குரல் கொடுத்தாள். கிழவி கடந்து போய்க் கொண்டிருந்தவள் மேலே பார்க்கவே இல்லை. இன்னொரு முறை நந்தினி இக்குங்கவா என்றாள் சத்தமாக.

வேகமாக வந்த ராணுவ டிரக் நந்தினி வீட்டு வாசலில் நிற்க, யூனிபாரம் அணிந்த யாரோ உள்ளே இருந்து குதித்தார்கள். ஒருத்தர் இல்லை. மூணு பேர், ஒருத்தருக்கு அப்புறம் மற்றொருவராக.

பரபரப்போடு பார்த்தபடி இருந்தாள் நந்தினி.

ஒரு ராணுவக்காரன் பழக்காரியின் கையில் இருந்து வாளிகளைப் பறித்தான்.

இக்குங்கவா, இக்குங்கவா

அவள் அழும் குரலில் ஓலமிட்டுத் திரும்பத் திரும்பச் சொன்னாள்.

வாளிகளை ராணுவ டிரக் உள்ளே வைக்க, ஒரு ஆரஞ்ச் கீழே உருண்டு விழுந்தது.

இக்குங்கவா.

கிழவி ஆரஞ்சைக் குனிந்து எடுத்தபடி திரும்பக் கூவினாள். மூன்றாவது ராணுவ வீரன் அவளைப் பேயறை அறைந்தான். அவன் கண்டிப்பாக விரல் சுட்டினான்.

கிழவி அழுதபடி ஆரஞ்சை டிரக் உள்ளே எறிந்தாள். அவளை வந்த வழியே திரும்பச் சொன்னார்கள்.

இக்குங்கவா.

அவள் பேசத் தெரிந்த சொற்களில் அது ஒன்று தவிர மற்றதெல்லாம் நினைவில் இருந்து அழிக்கப் பட்ட மாதிரி அதையே திரும்பத் திரும்பச் சொன்னாள்.

அதை மட்டும் உச்சரித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று யாரோ எடுத்துச் சொல்லியிருந்ததை அனுசரிக்கிற மாதிரி அவள் குரல் நடுங்க மறுபடி சத்தம் கூட்ட, ஒரு ராணுவ வீரன் அவள் புட்டத்தில் உதைத்தான்.

நந்தினி கலவரத்துடன் அந்த ராணுவ வீரனைப் பார்த்தாள்.

வீட்டு வாசலில் காவல் இருக்க வரும் வீரன் இல்லை இவன். வைத்தாஸ் இங்கே வெளியுறவு அமைச்சக அதிகாரியாக இருந்த பொழுது இரண்டிரண்டு வீரர்களாக தினசரி எட்டு மணி நேரம் துப்பாக்கி பிடித்து வாசலில் நிற்பார்கள். காலை ஆறு மணிக்கு வரும் வீரர்களும், மதியம் இரண்டு மணிக்குக் காவல் மாறுகிறவர்களும் இரவு பத்து மணிக்கு அடுத்த ஷிப்டில் வருகிறவர்களும் வைத்தாஸ் வரும்போதும் வெளியே போகும் போதும், துப்பாக்கியை நேராகப் பிடித்து சல்யூட் வைத்து நிலத்தில் காலை அறைவதை நந்தினி ரசித்துப் பார்த்த நாட்கள் இப்போது வருவதில்லை. வைத்தாஸ் இந்தியாவுக்குத் தூதராகப் போனதோடு அந்தக் காவல் விலக்கிக் கொள்ளப் பட்டது.

ராணுவ டிரக் நகர, தெருவில் ஒவ்வொரு வீடாக நின்று நின்று பார்த்தபடி எதிர்த் திசையில் ஆர்மி ஜீப் ஒன்று ஊர்ந்த்து வந்தது.

வைத்தாஸ் டெலிபோன் செய்து அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டிருப்பானோ?

இன்னும் கொஞ்ச நாளில் என் மனைவி இந்தியாவில் என்னோடு கூட இருக்க வந்து விடுவாள். ஆப்பிரிக்க பல்கலைக் கழகத்தில் அவளுடைய உத்தியோக ஒப்பந்தம் முடிந்து விடும். அதுவரை வீட்டுப் பாதுகாப்பு தர வேணும் என்று அவன் கேட்டு அரசு ஜீப் வந்திருக்குமோ?

வீட்டு வாசலில் சற்றே நின்ற ஜீப் உடனே கிளம்பி ஊரந்தது. பாதுகாப்பு கொடுக்க வந்தவர்கள் இல்லை. சும்மா பராக்கு பார்த்தபடி போகிறவர்கள். ஜீப்பில் வந்தால் என்ன, டிரக்கில் போனால் என்ன,இவர்களால் ஒரு சுக்கும் பிரயோஜனம் இல்லை.

ஆப்பிரிக்கனுக்கும் அரேபியனுக்கும் நீ கட்டியோளாக ஏவல் செய்தபடி எந்த விதமான பாதுகாப்பும் இல்லாத பூமியில் ஜீவிதம் முழுக்க கஷ்டப்பட்டு நிற்கறது தான் உன் அதிர்ஷ்டம், விதிச்சதுன்னா நான் சொல்ல என்ன இருக்கு?

அச்சன் கேட்டபோது அவள் அது அப்படி இல்லை என்று தீர்க்கமாகத் தலையாட்டி மறுத்தது தப்பாகப் போனதா?

அச்சனுக்குத் தெரியாது. வைத்தாஸ் ஆப்பிரிக்கன் இல்லை. கரும்புத் தோட்டக் கண்காணி வேலை பார்க்க வந்த பாண்டிக்கார இந்திய அப்பனுக்கும் தோட்டம் துரவும் தொழிற்சாலையுமாகக் கொடிகட்டிப் பறந்த ஆப்பிரிக்கப் பெண்ணுக்கும் பிறந்தவன்.

அச்சனுக்குத் தெரியாது. அவன், அச்சன் அடிக்கடி சொல்லும் புத்திசாலி மலையாளி இளைஞர்களை விட அதிகம் படித்தவன். உத்தியோகத்தில் இருப்பவன். நாடறிந்த எழுத்தாளன். அவன் லண்டனுக்கு மேல்படிப்புக்கு வந்தது நந்தினியின் அதிர்ஷ்டம் காரணம்தான்.

தெரு அமைதியாகக் கிடந்தது. இப்படியே இன்றைய தினம் கடந்து போகட்டும்.

லண்டனில் படிப்பு முடித்தது நேற்றுத்தான் போல் இருக்கிறது. ஆச்சு, இரண்டு வருஷம் ஓடியே போனது. வைத்தாஸை சக மாணவனாக அங்கே சந்தித்த ஒரு வாரத்திலேயே ஏற்பட்ட காதலும் காமமும் அவளுக்கே ஆச்சரியமானது.

லண்டனில் ஒவ்வொரு சந்திப்பும் கலவியில் முடிய, கலைத்துக் கலைத்துப் பழகியது தவறோ என்னமோ, கல்யாணத்துக்கு அப்புறம் வயிற்றில் கரு தங்கவில்லை. அச்சன் சாபமும் உண்டோ?

நந்தினியை வைத்தாஸ் ஹோலி கிராஸ் கதீட்ரலில் வைத்துக் கல்யாணம் செய்து கொண்டபோது அவனுக்கு நண்பன் என்று யாரும் வரவில்லை.

பாதுகாப்புக்காக பாதிரியாரோடு கூட நின்ற, துப்பாக்கி பிடித்த நான்கு வீரர்கள் , மோதிரம் மாற்றியதும் வாழ்த்தி விட்டுத் துப்பாக்கியை உயரப் பிடித்தபடி நந்தினிக்கு முன்னும் பின்னுமாக ராணுவ நடை நடந்து போனார்கள்.

அன்றைக்கு ராத்திரியே நந்தினி தன் ஹாஸ்டலில் இருந்து வைத்தாஸுக்கு ஒதுக்கியிருந்த இந்த வீட்டுக்கு வந்து குடித்தனம் வைத்து விட்டிருந்தாள்.

சோவியத் நாட்டு அதிபர் வந்திறங்கியதால் வைத்தாஸ் அலுவலகத்தில் அதிகாரி நண்பர்கள் மந்திரிகளோடு அலைந்து கொண்டிருந்த நேரம் அது. அவர்கள் கல்யாண நாள் ராத்திரியில் கதவைத் தட்டி வாழ்த்துச் சொல்லி ஆரஞ்சு ஜூஸ் குடித்துப் போனார்கள்.

பழங்கள், மில்க் சாக்லெட், பேரிச்சை, முந்திரி இவற்றோடு அமெரிக்கத் தயாரிப்பான ஒரு பாக்கெட் ஆணுறைகளையும் கல்யாணப் பரிசாக அவர்கள் அளித்துப் போனதை வைத்தாஸ் சிலாகித்தான் அப்போது.

அந்த அதிகாரிகள் இப்போது எங்கே இருப்பார்கள்? அவர்கள் வீட்டு வாசலில் இன்னும் ராணுவ வீரர்கள் மரியாதை விலகாமல் காவலில் இருக்கக் கூடும்.

பழகிய அந்த மரியாதை கிட்டாமல் நந்தினிக்கு சங்கடம் அதிகமாக இருந்தது. முக்கியமாக, ராணுவ லாரிகள் விடிந்தது முதல் அவ்வப்போது ஒலியெழுப்பியும் சத்தமில்லாமலும் தெருவோடு உருண்டு போய்க் கொண்டே இருக்கும் நேரத்தில். வைத்தாஸ் இல்லாத நாளில்.

அச்சன் இங்கே வந்து இருக்கலாமில்லையா அவளுக்குத் துணையாக? அவர் மேல் வைத்த சகல ப்ரியத்தையும் மீறிக் கோபம் எட்டிப் பார்த்தது.

பினாங்கை விட்டு வேறு எங்கும் போகமாட்டேன் என்று அச்சனுக்கு அப்படி என்ன பிடிவாதம்? தலைச்சேரி கோவிந்த மேனோன் தலைச்சேரிக்கே இந்த முப்பது வருஷத்தில் ஒரு தடவை தான் போயிருக்கிறார். வாய் ஓயாமல் ஊரைப் பற்றிப் பேசுகிறவர் சொந்த ஊருக்குக் கொடுக்கும் மரியாதை இதுதான். ஆப்பிரிக்காவோ அவர் வர உசிதமான பூமியில்லை. அவர்கள் இன்னும் நக்னமாகத் திரிகிறார்கள். நக்னமாக ஆங்கிலம் பேசுகிறார்கள். நக்னமாக இங்கிலீஷ் சாசேஜ்களையும், பாலாடைக் கட்டிகளையும் விழுங்குகிறார்கள்.

தொலைபேசி ஒலித்தது. காலை முதல் எந்த இயக்கமும் இல்லாமல் கிடந்ததே.

இன்னும் உயிரோடு இருக்கியா?

நந்தினி ஆச்சரியத்தோடு அதன் அருகில் ஓடினாள்.

வைத்தாஸாக இருக்கட்டும்.

நந்தினி, கிளம்பலியா?

வைத்தாஸ் இல்லை. மிசஸ் அகர்வால்.

மிஸ்டர் அகர்வால், இந்திய தூதரகத்தில் முக்கியமான அதிகாரி, நாய் வளர்ப்பதிலும் அவற்றின் இனம் பெருக்கி உயர்ஜாதி நாய்க்குட்டிகளை நல்ல விலைக்கு விற்பதிலும் நிபுணர். Canine pimp என்பான் வைத்தாஸ்.

அகர்வால் மாமா நாயை எல்லாம் நண்பர்கள், விரோதிகள் எல்லோருக்கும் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொடுத்து விட்டாராம். வீட்டுத் தளவாடம் எல்லாம் போன வாரமே இந்தியா போயானதாம். இப்போது அகர்வால் குடும்பம் காரில் அணடை நாட்டுக்குப் போகத் தயாரெடுப்பில் இருக்கிறார்கள். அங்கே இருந்து இந்தியா அடுத்த விமானத்தைப் பிடித்து. ஆப்பிரிக்காவே வேணாம் என்று சொல்லி விட்டாராம் அகர்வால் சாப்.

நீ கிளம்பலியா, நந்தினி?

நந்தினி நினைத்தது சரிதானா? இன்றைக்கு வித்தியாசமான தினமா?

என்ன ஆச்சு?

அவள் குரல் நடுங்கக் கேட்க, தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது.

வாசலில் பெரிய ஓசை. ஜன்னலுக்கு ஓடினாள்.

நான்கு பெரிய ராணுவ டிரக்குகள் அவள் வீட்டு வாசலை, தெருவை முழுக்க அடைத்துக் கொண்டு நின்றன. கூட்டமாக இருபது, முப்பது ராணுவ வீரர்கள் குதித்து இறங்கி காம்பவுண்டுக்குள் அதிரடியாக வந்து கொண்டிருந்தார்கள்.

பரபரப்போடு, செத்துப்போயிருந்த டெலிபோனில் எண்களைச் சுழற்றினாள்.

வைத்தாஸ் வைத்தாஸ்

இக்குங்கவா

வைத்தாஸ் எழுதும் நாவலில், காயலில் படகேறிய வைத்தாஸ் நந்தினிக்குக் கை அசைத்துக் கொண்டு நிற்க படகு வேகம் கூட்டிப் போய்க் கொண்டிருந்தது.

வைத்தாஸ்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன