Thalam and Si.Su.Chellappaசி.சு.செல்லப்பாவும் தளமும்


தளம் சி.சு.செல்லப்பா நூற்றாண்டு சிறப்பிதழைப் பாதி படித்தேன்.

எனக்கு சி.சு.செல்லப்பா அவர்களோடு தொடர்பு கொள்ள ஒரு சந்தர்ப்பம் தான் வாய்த்தது. 1976-1981ல் சிவகஙகையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிப் பணியில் இருந்தபோது தினமணி கதிர் பத்திரிகையில் (சாவி ஆசிரியர்) கோபுலு படங்களோடு மூன்று பக்கம் ஒரு புதுக்கவிதை – ’மாற்று இதயம்’ (இரவல் இதயம்?). சி.சு.செல்லப்பா எழுத்து பத்திரிகையில் எழுதியிருந்ததை சாவி கதிரில் மறு பிரசுரம் செய்தது அபூர்வமான நிகழ்வு. செல்லப்பா பற்றிய என் தேடல் அப்போதுதான் தொடங்கியது.

எழுத்து பிரசுரத்துக்கு ஒரு கடிதமும் டிமாண்ட் டிராப்ட்டும் அனுப்பினேன். அவர்கள் வெளியிட்ட வல்லிக்கண்ணனின் ‘புதுக் கவிதையில் தோற்றமும் வளர்ச்சியும்’ மற்றும் ‘புதுக் குரல்கள்’ கவிதைத் தொகுப்பு இரண்டு புத்தகங்களையும் அனுப்பச் சொல்லி.

நாலே நாளில் புத்தகங்கள் வந்து சேர்ந்து விட்டன. கூடவே நான் அனுப்பிய டிமாண்ட் ட்ராப்ட், ஒரு கடிதம்.

‘எழுத்து பிரசுரம்’ என்ற பெயரில் வங்கிக் கணக்கு ஏதும் இல்லை என்பதால் இந்த ட்ராப்டை மாற்ற முடியாது. நீங்கள் எப்போதாவது சென்னை வந்தால் நேரில் சந்தித்துப் பணம் செலுத்த முடியுமா?’ என்று எழுதி சி.சு.செல்லப்பாவே கையெழுத்திட்டு அனுப்பி இருந்தார். எழுத்து பிரசுரம் ஒன் மேன் ஷோ என்று அப்போது தான் தெரியும்.

அவரைப் பற்றி எனக்கு மனதில் எழுந்த முதல் பிம்பம், ‘இப்படியும் ஒரு அப்பாவி மனுஷரா? நான் சென்னை வருவேன், வந்தால் சந்தித்து பணம் கொடுப்பேன் என்று முன்பின் தெரியாத என்மேல் எப்படி அசாத்திய நம்பிக்கை வைத்தார்? இலக்கிய ரசிகர்கள் எல்லாம் நேர்மையானவர்கள் என்று அவருக்கும் ஒரு பிம்பம் இருந்திருக்குமோ என்னமோ.

சி.சு.செ எழுதிய கதைகள் தொகுப்பு ‘சரசாவின் பொம்மை’ சிவகங்கை கோகலே ஹால் லைபிரரியில் கிடைத்தது. ‘படிக்க வேண்டிய புத்தகம்’ என்று என் பேராசிரியர்களில் ஒருவர் அல்லது எல்லோருமோ சொன்னார்கள் – பேரா.ருத்ர துளசிதாஸ், பாஸ்கரன், துரைசாமி, கவிஞர் மீரா. எங்க நா.தர்மராஜன் சார் இந்த லிஸ்ட்லே இல்லைன்னு நிச்சயமாகத் தெரியும்.

சரசாவின் பொம்மை கதை சட்டுனு மனதில் பதிஞ்சது. முக்கியமாக அதை முடிக்கும் விதம். இப்போது தளத்தில் திரு விஜயராகவன் கட்டுரை படிக்கும்போது தெரிகிறது – கதை முடிவில் வரும் இரண்டு பத்தியும் சி.சு.செல்லப்பா தன் கையெழுத்துப் பிரதியில் எழுதியது இல்லை. மணிக்கொடி குழுவினர் மாற்றி அமைத்தது.

அந்த முடிவால் கதை பிரபலமாகவே, சி.சு.செ அதை ஏற்றுக் கொண்டதோடு வெளிப்படையாகத் தெரிவிக்கவும் செய்தார் (இந்தக் காலத்தில் காண முடியாத பண்பு அது). செல்லப்பா வாழ்க்கையில் செய்து கொண்ட ஒரே காம்ப்ரமைஸ் அதாகத்தான் இருக்கும் என்று தளம் மற்ற கட்டுரைகள் சூசகமாகச் சொல்கின்றன.

அவருக்கு உலக்த்தோடு ஏதோ சண்டை இருந்திருக்கிறது. தீவிர இலக்கியத் தேடலும், படைப்பாக்கமும், விமர்சனமும் எல்லாம் அந்தச் சண்டைக்கான ஒரு சாக்கு. வத்தலக்குண்டில் இருந்து சென்னைக்கு சினிமா பத்திரிகையாளராக வந்தபோது எடுத்த முடிவின் படி சினிமா ஜேர்னலிஸ்டாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் சி.சு.செல்லப்பாவிடம் மனுஷ சிநேகம் குறைவாகத்தான் இருந்திருக்குமோ என்னமோ. அழுக்கு கதர் வேட்டியும், புத்தகங்களைச் சுமந்து போய் கல்லூரி கல்லூரியாக விற்பதும் எல்லாம் தன்னை வருத்தி இலக்கியத்தை வளர்க்க மட்டும் இல்லை, முகம் தெரியாத யாரையோ அந்தத் துன்பத்தால் பழிவாங்கவா? சொல்லத் தெரியவில்லை.

தொண்ணூறு வயது வரை, அண்மையிலேயே வசித்த சொந்தத் தாயாரை முப்பது வருடம் போய்க்கூடப் பார்க்கவில்லை. மனைவியோடு சீரில்லாத உறவு. இலக்கியத்திலும் க.நா.சு, நா.முத்துசாமி, வைதீஸ்வரன் தொடங்கி விருட்சம் அழகியசிங்கர் வரை எல்லார் மேலும் கோபப்பட்டிருக்கிறார்.

அழகியசிங்கர் சி.சு.செ சொற்பொழிவுக்கு ஒரு மழைநாளில் ஏற்பாடு செய்து மிகுந்த சிரமத்தோடு ஆட்டோ பிடித்து அழைத்துப் போயிருக்கிறார். கொட்டும் மழையில் சென்னை புறநகர் பகுதியில் ஏதோ ஓரிடம். சி.சு.செ பேசுவதைக் கேட்க மொத்தம் ரெண்டே பேர் காத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். வந்ததே கோபம் செல்லப்பாவுக்கு. ‘விருட்சம் பட்டுப் போகட்டும், நாசமாகப் போகட்டும்’ என்று உரக்க சபித்திருக்கிறார். அப்போது இளைஞராக இருந்த என் வயதுக்காரர் அழகிய சிங்கரின் மனநிலை எனக்குப் புரிகிறது.

அவரையும் சம காலப் படைப்பாளிகள் உதாசீனம் செய்திருக்கிறார்கள் என்கிறார் சி.சு.செயின் -அணுக்கத் தொண்டர் என்று சொல்லலாமா அல்லது ஆருயிர் நண்பர்?- கி.அ.சச்சிதானந்தம் கட்டுரையில். பட்டியலில் சிட்டி, சிதம்பரசுப்ரமணியன் அடக்கம்.

சி.சு.செ பற்றிச் சொல்லும்போது ஏனோ ஞானக்கூத்தனின் கவிதை (கடைசி மூன்று வரிகளுக்காக) நினைவு வருகிறது.

ஒட்டகம்
——————-
ஆயிரம் முறைகள் எண்ணிப்
பார்த்தபின் முடிவு கண்டேன்
ஒட்டகம் குரூபி இல்லை

குரூபிதான் என்றால் மோவாய்
மடிப்புகள் மூன்று கொண்ட
அத்தையும் குரூபி தானே?

அத்தையைக் குரூபி என்றோ
ஒருவரும் சொல்வதில்லை
சண்டைகள் வந்தாலன்றி

சண்டைகள் வந்தபோது
மற்றவர் அழகில் குற்றம்
பார்ப்பது உலகநீதி

ஒட்டகம் குரூபி என்றால்
அதனுடன் உலகுக் கேதும்
நிரந்தரச் சண்டை உண்டோ?

பெண்ணேஸ்வரனின் வடக்கு வாசல் இதழில் சி.சு.செ பற்றிச் சொல்வதை இங்கே எடுத்தாள பெண்ணேஸ்வரின் அனுமதி கோருகிறேன்.
//
பாவலர் வ.பழனி, புதுச்சேரி.

வடக்கு வாசல் நவம்பர் 2011 இதழில் மகத்தான புனைவுகள்þ1 என்ற தலைப்பில் சி.சு. செல்லப்பா அவர்களின் வாடிவாசல் குறுநாவல் பற்றிய அறிமுகமும், ஆய்வும் கண்டேன். காலத்திற்கும் பேசப்படக்கூடிய படைப்புக்கள் தான் மணிக்கொடி எழுத்தாளர்களின் படைப்புக்கள். அவற்றைத் தொடாமல் யாரும் இன்றைய படைப்புக்களுக்குள் நுழைய முடியாது. அப்படி நுழைந்தால் அது அறைகுறையாகத்தான் இருக்கும்.

சி.சு.செ. பற்றியதான அறிமுகத்தில் அவர் சின்னமனூர் அருகில் உள்ள வாடிப்பட்டி என்னும் சிற்றூரில் பிறந்தார் என்பது சரி.

ஆனால் அவர் வாழ்ந்தது மதுரை மாவட்டத்திலுள்ள (தற்போது திண்டுக்கல் மாவட்டம்) வத்தலக்குண்டு ஊர்தான்.

வத்தலக்குண்டு அக்ரஉறாரத்தில் ஒற்றைத் தெரு, நடுத்தெரு, கோயில்தெரு என்று மூன்று தெருக்கள் உண்டு. கோயில் தெருவில் தான் சி.சு.செ. யின் வீடு உள்ளது. பெரிய அகம் என்று பெயர் அதற்கு. அவரது உறவினர்களின் வீடு அது. அங்குதான் அவர் இருப்பார். பரந்து நீண்ட கல் திண்ணையில் எழுத்து பத்திரிகையைப் போட்டு அதற்குப் பின் அடித்துக் கொண்டிருப்பார்.

நீர்க்காவி ஏறிய நாலு முழ வேட்டிதான் கட்டியிருப்பார். காடாத் துணியில் தைத்த கை இல்லாத பனியன் போட்டிருப்பார். டயர் செருப்பு. அதைத் தேய்த்துத் தேய்த்து அவர் நடந்து செல்லும் சத்தம் கேட்டு சி.சு.செ.தான் செல்கிறார் என்று நாங்கள் ஊகித்து விடுவோம்.

‘என்னடா படிக்கிற?’ பால் வாங்கப் போகும்போது தவறாமல் கேட்பார். கல்கியின் பொன்னியின் செல்வனை நீட்டுவேன் நான். சிரித்துக் கொண்டே போய்விடுவார். புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்று ஒரு புத்தகம். அது அவர் கொடுத்ததுதான். இன்னமும் வைத்திருக்கிறேன் நான்.
எங்கள் கவிதைகளையெல்லாம் நீட்டுவோம். பதிலின்றித் திரும்பி வந்துவிடும். அவர் நாற்காலியில் உட்கார்ந்திருக்க, சுற்றி வர நானும் நண்பர்களும் அமர்ந்து அவர் பேசுவதை எவ்வித எதிர்வினையும் (வாயைத்தான் திறக்கக் கூடாதே!) இன்றி அமைதியாகக் கேட்டு மகிழ்ந்து இருக்கிறோம்.

எழுபதுகளில் கமலாம்பாள் சரித்திரம் நாவல் எழுதிய வத்தலக்குண்டு பி.ஆர்.ராஜமய்யருக்கு நூற்றாண்டு விழாக் கொண்டாடியது சி.சு.செ.யின் பெரு முயற்சியில்தான். அப்போது அவர் இட்ட கட்டளையை ஓடி ஓடிச் செய்தவர்கள் நாங்கள். எஸ்.வி. சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடகக் குழு தேரோட்டி மகன் நாடகம் போட்டது அவ்விழாவில். நடிகர் முத்துராமனை நேரில் கண்டது அப்போதுதான். அக்ரஹாரத்தில் கோயில் தெருவில் ஒரு வீட்டில் நாடகக் கலைஞர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த வீடுதான் சி.சு.செ.யின் சொந்த வீடு. இன்றும் அவர் பெயர் பொறித்து நினைவு இல்லமாக உள்ளது. பராமரிப்பு? அதுபோல் ஒற்றைத் தெருவில் பி.ஆர். ராஜமய்யருக்கும் நினைவு இல்லம் உள்ளது. பராமரிப்பு?

நாடகத்திற்கு ரிகர்சல் திரு பி.எஸ்.ராமையா அவர்கள். அவருக்கும் வத்தலக்குண்டு தான் ஊர். வத்தலக்குண்டு கழக உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் தான் நாடகம் நடந்தது.

எழுத்து பத்திரிகையையும், அவரின் புத்தகங்களையும் தோளில் சுமந்து கொண்டு பல இடங்களுக்கும் சென்று விற்று வருவார் சி.சு.செ. மதுரைக்கும் சென்று கல்லூரிகளுக்கெல்லாம் நேரடியாகச் சென்றிருக்கிறார்.//

http://www.vadakkuvaasal.com/component/content/article/427.html

தளம் பற்றி எழுத இன்னும் நிறைய இருக்கிறது. அடுத்த இஷ்யூ வரும் வரை எழுத உத்தேசம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன