மீனும் வறுவலும் விற்ற பணத்தை ஊஞ்சலில் அமர்ந்து செலவு திட்டமிடுதல்

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது நூலில் இருந்து அடுத்த சிறிய பகுதி

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

 

சாப்பிட்டு விட்டு முசாபரி பங்களாவுக்கு நிலவொளியில் நடக்கும் போது தியாகராஜன் சைக்கிளை உருட்டிக் கொண்டே எங்கோ பூத்துச் சொரிந்த மகிழம்பூ மணத்தைத் தீர்க்கமாக நாசியில் முகர்ந்து கொண்டு வந்தார்.

 

பௌர்ணமி ராத்திரி மாதிரி இருக்கு. இது அதுக்கு அடுத்த ரெண்டாம் நாள்.

 

சொல்லியபடி தியாகராஜன் தெருவில் பூட்டிக் கிடந்த ஒரு வீட்டு முகப்பில் நின்றார். சத்தம் எப்போதோ ஓய்ந்து உறங்கிக் கொண்டிருந்த பெரிய இரண்டு கட்டு வீடு அது. அது கொச்சு தெரிசாவை வா வா என்று அழைத்தது.

 

உள்ளே வந்து ஒரு நிமிஷம் இருந்து போகச் சொல்லி அங்கே இருந்த பெண்கள் கூப்பிட்டார்கள். எல்லோரும் புடவை உடுத்தியிருந்த விதம் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் கொச்சு தெரிசாவுக்குப் பட்டது. ஒரு தொண்டு கிழவி வாசல் திண்ணையில் உட்கார்ந்து பாடிக் கொண்டிருந்ததும் அவளுக்குப் பார்க்கக் கிடைத்தது. கனாக் கண்டேன் கனாக் கண்டேன் என்று அந்த முதியவளின் குரல் பாசமும் பரிவுமாக அவளை உள்ளே அழைத்தது.

 

இந்த வீட்டுக்குள் எப்படிப் போவது?

 

கொச்சு தெரிசா கேட்க, மௌனமாகத் தலையைக் குலுக்கினார் தியாகராஜன். அப்போது. நிலவொளியில் அந்த மூத்த பெண்ணின் குரலாகத் தன்னை வரவேற்று நிற்கும் வீட்டைக் கடந்து போகவே கொச்சு தெரிசாவுக்கு மனம் இல்லை.

 

சின்னச் சங்கரன் டெல்லியிலே இருக்கான். பக்கத்துலே ஒக்கூர்லே அவங்க நிலத்திலே சாகுபடி செஞ்ச அம்பலகாரர் குடும்பத்திலே இந்த வீட்டுக்கு ஒரு சாவியும் சங்கரன் கிட்டேயே இன்னொண்ணும் இருக்கு,

 

ஒரு கார் வாடகைக்கு எடுத்துப் போய் அந்த ஆம்பல்காரைப் பார்த்து.

 

கொச்சு தெரிசா முடிக்கும் முன்னால் தியாகராஜன் சொன்னார் –

 

அம்பலகாரர் மகன் கூப்பிட்டானேன்னு போன வாரம் தான் கோலாலம்பூர் போயிருக்கார்.

 

முசாபர் நிம்மதியைச் சொல்லும் முகத்தோடு தியாகராஜனைப் பார்த்தான். கொச்சு தெரிசா ஏதோ ஈர்ப்பு செயல்பட அந்த வீட்டுக்கு இன்னும் நெருக்கமாகப் போய் நின்றாள்.

 

உள்ளே போய் இருந்து அந்த வீட்டை சாவகாசமாகப் பார்த்த்தும் புழங்கியும் அனுபவிக்க வேண்டும். முடிந்தால் அதை விலைக்கு வாங்க வேண்டும்  என்று நேற்று இரவு முசாபரி பங்களாவின் பெரிய மரக் கட்டிலில் கொச்சு தெரிசா முசாபருக்குக் காதில் சொன்னாள். அவன் தூங்கத் தொடங்கி இருந்தான்

.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன