இரண்டு மார்ச் மாதங்கள் – ஜலஹள்ளி குல்கந்து

இரண்டு மார்ச் மாதங்கள் இரா.முருகன்

1982-ல் மகா வெப்பமான ஒரு மார்ச் மாதப் பகல் பொழுதில் சென்னை தியாகராய நகரில் என் கல்யாண மகோத்சவம் நடந்தது. தாலியைக் கட்டுங்கோ, தாலியைக் கட்டுங்கோ என்று புரோகிதரிலிருந்து நாதசுவரத்துக்கு ஒத்து ஊதின பையாலு வரை பொறுமையில்லாமல் சொல்ல, நான் கல்யாண மண்டபத்தின் வாசலையே திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஊஹும். அந்த மனுஷர் வரலே.

தாலியால் கட்டுண்ட அவளிடம் அடுத்த நாள் காலை சொன்னேன் – ஹனிமூன் போறோம். பெங்களூர்.

பொட்டுக்கடலை மாவு அதிக போஷாக்கு அளிப்பது என்று சொன்ன மாதிரி காதில் வாங்கிக் கொண்டு தலையசைத்தாள்.

என்ன என்ன எல்லாம் எடுத்து வைச்சுக்கணும்?

சட்டென்று நினைவு வராமல் விக்ஸ் வேப்பராப் மூக்கடைப்பு இன்ஹேலரில் தொடங்கி அப்புறம் சுதாரித்துக் கொண்டு என் பெட்டியைத் திறந்து பத்து தமிழ்ப் புத்தகங்களை எடுத்துப் போட்டேன்.

இதெல்லாம் பத்திரமா கொண்டு போகணும். சுஜாதாவுக்குத் தரணும். பெங்களூர் போறதே சுஜாதாவைப் பார்க்கத்தான். என்ன புரிஞ்சதா?

பத்தே நிமிடத்தில் பெண் வீட்டார் துஷ்டா துன்மார்க்கா என்று என்னை விரோதமாகப் பார்த்தபடி கட்டுச்சாதக் கூடையில் அடைத்த புளியஞ்சாதத்தை உருட்டி வாயில் போட்டுக் கொண்டார்கள்.

அவர்கள் சாப்பிட்டு முடித்து சண்டைக்கு வருவதற்குள் நானும் பெண்டாட்டியும் செண்ட்ரல் வந்து விட்டோம். நல்ல பசி. ரயில்வே காண்டீனில் புளியஞ்சாதம் வாங்கி வந்து கம்பார்ட்மெண்டில் உட்கார்ந்தபோது அவள் கேட்டாள் – முன்னாலேயே சொல்லியிருந்தா நான் விலகி இருந்திருப்பேனே.. புளியஞ்சாதத்திலிருந்தா? கேட்க நினைத்து சும்மா இருந்து விட்டேன்.

பெங்களூரில் ஆட்டோவில் போகிறபோது விலகித்தான் உட்கார்ந்திருந்தாள். அரை இருட்டில் மல்லேஸ்வரம் குல்கந்து கடையில் இலையில் வைத்து விளம்பும் எக்ஸ்ட்ரா ஸ்வீட் குல்கந்து கூட ‘ஊஹும் வேணாம்’.

ரெண்டு இலை நிறைய சாப்பிட்டு, என் கை எல்லாம் நசநசவென்று குல்கந்து பசையும் ரோஜாப்பூ வாடையுமாக, ஜலஹள்ளிக்கு வந்து சேர்ந்தோம். காலிங் பெல்லை அடிக்க நிமிர்த்திய விரல் பெல்லோடு ஒட்டிக் கொண்டு மணிச் சத்தத்தோடு மிச்ச சொச்ச குல்கந்து வாசமும் உள்ளே ஓங்கி அடித்திருக்கும்.

வாசல் கதவு திறந்தது. ஆறடி உசரமாக ஒரு நடு வயசு அரசாங்க அதிகாரி. இவர் பெண் தானா சுஜாதா? மனைவி பார்வை என் மேல் சந்தேகமாக விழுந்தது.

‘சுஜாதா சாருக்கு ஹலோ சொல்லு’.

புரியலை.

‘சார்தான் சுஜாதா.’

‘நீங்களும் குனியணும்’

அவள் புடவையை இழுத்துச் செருகிக் கொண்டாள். நல்ல வேளை தடுத்தாட்கொண்டேன். இல்லாவிட்டால் வாசல் படியிலேயே இசகு பிசகாக அவர் காலில் விழுந்து சரிந்து விழுந்து கும்பிட்டு ஆசிர்வாதம் வாங்கியிருப்பாள்.

சுஜாதா. புனைபெயராக பெண் பெயர் வைத்திருக்கும் ஒரு பொறுப்பான அரசு அதிகாரி, எழுத்தாளர், வெறும் எழுத்தாளர் இல்லை, பிரபலமான ரைட்டர் இத்யாதி விஷயங்களை சுஜாதா சார் வீட்டு வரவேற்பறையில் காத்திருந்தபோது சொன்னேன். தமிழ் படிக்கத் தெரியாத, மும்பைக்கார மனைவி பாதி புரிந்து சந்தோஷமாகத் தலையாட்டினாள். அவளுக்குப் போட்டி இல்லை.

அசல் சுஜாதாம்மா உள்ளே இருந்து கொறிப்புத் தீனித் தட்டுகளோடு வர, ‘என் ஒய்ப்’ என்று சுருக்கமாக அறிமுகப்படுத்தி விட்டு சோபாவில் ஓரமாக உட்கார்ந்து, நான் முன்னால் போட்ட புத்தக மூட்டையை ஆராய முற்பட்டார் சுஜாதா. எல்லாம் ரஷ்ய, சீன, ஜெர்மன் மொழிபெயர்ப்பு புதுக் கவிதைத் தொகுப்புகள். ஊஹும், நான் பெயர்க்கலை. யாராரோ. அவர் படிப்பாரோ?

‘இந்தக் கவிதையிலே குழந்தை செத்துப் போன அம்மாவோட அனுபவத்தை எத்தனை அழகா சொல்றார் பாருங்க’ என்று நான் அவர் விரித்துப் பிடித்திருந்த புத்தகத்தை நான் சிலாகிக்க, ‘ஆம்பளை பார்வை.. அது போலி’ என்றார் அவர். ஒரு தாட்டியான ரஷ்யக் கவிஞர் தாடியைத் தடவிக் கொண்டு சுவரில் சாய்ந்து சிரித்தார். பக்கத்தில் பல்லி கெக்கெக் என்று கூடவே சிரித்தது.

என் மனைவிக்கு சூழ்சிலை அலுப்புத் தட்ட ஆரம்பித்திருக்கும். மிசஸ் சுஜாதாவும் இப்படி எத்தனை பார்த்திருப்பாங்க? புதுசா வந்தவர்களிடம் என்ன பேச?

பெங்களூர்லே எங்கே எல்லாம் போனீங்க?

அவர் என் மனைவியைக் கேட்க, குல்கந்து சாப்பிட்டுட்டு கையைக் கூட துடைச்சுக்காம நேரே இங்கே தான் வந்திருக்கார் என்று பாதி புகாரும் பாதி அலுப்புமாகச் சொன்னாள் அவள்.

புரியறது. நான் இருபது வருஷமா எப்படி குடித்தனம் நடத்தறேன் தெரியுமோ? ஒரு வெகேஷன், ஒரு சினிமா, கோவில், உறவு, சிநேகிதம்னு வீட்டுக்குப் போறது.. ஒண்ணு கிடையாது. எப்பவாவது அபூர்வமா வாய்க்கும். அன்னிக்கு படிக்க புஸ்தகம் இருந்திருக்காது. இல்லே பத்திரிகைக்கு எழுதி முடிச்சிருப்பார்.

சுஜாதாம்மா குறையொன்றுமில்லை என்று கலகலவென்று சிரிக்க, இவர் மகா வெகுளியாக அங்கேயும் இங்கேயும் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்.

கட்டுரை, நாவல் என்று எல்லாம் போகாமல் கணையாழியில் வார்த்தையை மடித்து புதுக்கவிதையும் ஜாக்கிரதையாக சிறுகதையும் எழுதிக் கொண்டிருந்த நான் நேற்றுக்காலை வெப்பமான பகல் நேரத்தில் தாலிகட்டிய மனைவி சொன்னதை இருபது வருஷமாக ஒரு மகா எழுத்தாளரின் மனைவியாக வளைய வரும் சுஜாதாம்மா புரிந்து கொண்ட சூட்டிகை சுஜாதா சாருக்குக் கூடக் கைவராது.

அவரை நான் சந்தித்தது அப்போது முதல் தடவை இல்லை. என் முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்ட பதிப்பாளர், ‘பண முடை.. ஒரு ரெண்டாயிரம் கொடுங்க, புத்தகம் வந்து வித்ததும் திரும்பக் கொடுத்திடறேன்’ என்றார். கொடுத்தேன்.

அடுத்த வினாடி, ‘வாங்க பெங்களூருக்கு ஒரு நடை போயிட்டு வந்துடலாம்’ என்றார் அவர். அவ்வளவு தூரம் நடக்க முடியாது என்று நான் தீர்மானமாகச் சொன்னபிறகு, ரஜினிகாந்த் படம் ஓடிய பெங்களூர் டூரிஸ்ட் பஸ்ஸில் பெங்களூர் போய்ச் சேர்ந்து, காராபாத், கேசரி பாத் சாப்பிட்டு விட்டு பார்க்கப் போனது சாட்சாத் சுஜாதாவைத்தான். அவருக்கும் இவர்தான் அன்றைய ஆஸ்தான பப்ளிஷர்.

நான் கொடுத்த ரெண்டாயிரத்தில் ஒரு ஆயிரத்தை ஒரு பிளாஸ்டிக் தட்டில் நாலு வெற்றிலை பாக்கோடு வைத்து சுஜாதாவிடம் நீட்டும்போது என்னையும் எதுக்கோ தட்டை ஓரமாகப் பிடித்துக் கொள்ளச் சொன்னார். சுஜாதாவை அவ்வளவு பக்கத்தில் பார்த்த சந்தோஷத்தில் (காதில் முடியை ஏன் ஷேவ் செஞ்சுக்கலை?) நான் முழுத் தட்டையுமே ஏந்தத் தயாராக இருந்தேன். என் முதல் சிறுகதைத் தொகுப்பு எப்போ வரணுமோ அப்போ வரட்டும். இந்த சந்தோஷமே எதேஷ்டம்.

“நல்ல வேளை. மார்ச் மாசமில்லையா. ஆபீசுலே சம்பளத்திலே கிட்டத்தட்ட முழுசையும் இன்கம் டாக்சுக்குப் பிடிச்சுட்டாங்க. இந்த ஆயிரம் நிதி மாதிரி.”

சுஜாதா பணத்தை சட்டைப் பையில் வைத்துக் கொண்டார்.

இவ்வளவுக்கும் அவர் பி இ எல்லில் பெரிய அதிகாரி. ஆனால் என்ன? முப்பது வருடம் முன் அவர் சம்பளம் இன்கம் டாக்ஸ் போக அவ்வளவுதான். பி.எப் லோன் போட்ட எனக்கு மட்டுமில்லை, இன்கம் டாக்ஸ் பிடிக்கப்பட்ட அவருக்கும் ஆயிரம் ரூபாய் பெரிய தொகைதான். சுஜாதாவும் நானும் ஒரே நேர் கோட்டில் என்று அன்று தோன்றியதில் இருந்த ஆனந்தத்தைத் சொல்ல வார்த்தை ஏது?

சிறுகதைத் தொகுப்பின் காலி ப்ரூப்பை கடகடவென்று இருபது பக்கம் படித்தார் சுஜாதா. அவர் அளவு வேகமாகப் படிக்கிறவரை பார்த்ததே இல்லை.

‘நீ கவிதையா கதையான்னு முதல்லே முடிவு பண்ணிக்கோ’.

சிரிக்காமல் சொன்னார். இவ்வளவுக்கும் அசோகமித்திரன் முன்னுரையில் அந்தத் தொகுப்பைப் பாராட்டி இருந்தார்.

“ஜம்ப் கட் உத்தி எல்லாம் சரிதான். கதை எழுத வேறே ஜீன்ஸ் வேணும். கவிதை மாதிரி கதை எழுதினா ஒண்ணு படிக்கலாம், ரெண்டு படிக்கலாம்.. திகட்டிடும்”

நான் பரிதாபமாக அவரைப் பார்க்க, ‘சினிமாவுக்கு பாட்டு எழுதறியா? சொல்லு’ என்று ஆதரவாகக் கேட்டார். வேணாம் சார். கதை தான் எழுதணும்.

ஒரே மனிதர் மேல் பக்தியும் அவர் செய்யாததை செய்ய வேண்டும் என்ற வேகமும் ஏற்பட்டதற்கு அவருடைய விமர்சனமும் காரணம்.

பக்தி பின்னாட்களில் என் அறிவியல் கட்டுரைகள் வடிவத்தில் வெளிப்பட்டது. அறிவியல் கட்டுரைகளை எளிமையாக, சுவாரசியமாகத் தமிழில் எழுத சுஜாதா தமிழ் தவிர வேறே மார்க்கம் இல்லை. சுஜாதா மாதிரி எழுதறான் என்று இசையும் வசையும் எனக்குக் கிடைக்க என் கம்ப்யூட்டர் கட்டுரைகள் முக்கிய காரணம்.

சிறுகதை, நாவலில் சுஜாதா தொடாத மேஜிக்கல் ரியலிசம், காலமும் ஒரு பரிமாணாமாகக் கதை சொல்வது என்றெல்லாம் சோதனை செய்யும்போது, அவர் என் பின்னால் இருந்து ‘இதுக்கெல்லா ஒரு கோஷ்டியே அலையறது’ என்கிறார். சிரித்துவிட்டு நான் பாட்டுக்குத் தொடர்கிறேன்.

அவருக்கு இருந்த பிரபலத்துக்கு, தமிழ்க் கதையை உலகத் தரத்துக்கு எடுத்துப் போயிருக்கலாம். பத்திரிகைத் தொடர்கதையோடு அடங்கி விட்டார்.

வேணாம். மார்ச் மாசப் பகலில் கல்யாணமானதற்கு அடுத்த நாள் குல்கந்து பிசுக்கோடு பெங்களூர் போன நாளுக்குத் திரும்பப் போய்விடலாம்.

“கணையாழி, கதிர்லே எல்லாம் கதை பார்க்கிறேன்பா”.

படிக்கிறீங்களா சார்?

தொகுப்பு கொண்டு வா. சாவகாசமா படிக்கலாம்.

அவரும் சுஜாதாம்மாவும் வழி அனுப்பிய போது கையில் இன்னும் ரோஜா வாசனையோடு குல்கந்து பிசுபிசுத்தது.

இரா.முருகன்

(சாகித்திய அகாதமிக்காக நான் எழுதிய ‘இந்திய இலக்கியச் சிற்பிகள் – சுஜாதா’ நூல் முதல் வடிவம்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன