உல்லுலூ – சூப்பர் மார்க்கெட்களில் பொருள் வாங்குவாருக்கான காவல் தெய்வம் – ஏஐ

அண்மையில் எழுதிய என் குறுநாவல் சிவிங்கி
சொல்வனம் இணைய இதழில் வெளியாகிறது
குறுநாவல் சிவிங்கியில் இருந்து ஒரு சிறு பகுதி

=======================================

உல்லுலூ வருகை

உல்லுலூ வந்திருக்கு. உல்லுலூ நீர்நிலைகளின் சிறு தெய்வம். ஆனந்தா, மரியாதை செய் உல்லுலூவுக்கு.
தேவதைகள் சிறகு நீவிச் சீராக்கியபடி ஆனந்தனை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டன. உல்லுலூ என்று ஒரு தெய்வமா, கேட்டதே இல்லையே என்று ஆச்சரியப்பட்டான் ஆனந்தன்.

நீ பார்க்கிறாயே, உல்லுலூ உண்டுதான். ஆல்ட் சி பிரபஞ்சம் நூறாண்டு முந்திப் புதியதாக உருவாக்கிய செயற்கைக் கடவுள். சூப்பர் மார்க்கெட் கடைகளில் பொருள் வாங்குவோர்க்கான காவல் தெய்வமாக உருவான உல்லுலூ குடிதண்ணீர் தெய்வமானது தற்செயலாகத்தான் நிகழ்ந்தது. உல்லுலூ உருவமைப்பும், ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் செயற்கை அறிவும் இந்த ஆண்டு கடைசியில் இறுதிக்கட்ட சோதனைகள் முடிவுக்கு வரும்போது பரவலாகப் பேசப்படும் என்றாள் வாதினி ஆனந்தனிடம்.

யட்சி யுத்தம் ஓய்ந்தது

அரை மணி நேரத்துக்கு மேல் போர் தொடங்காவிட்டதால், அது நிகழாது போனதாகக் கருதப்படும் என்று சட்டப் புத்தகம் புரட்டிக் கருத்துச் சொன்னது சிவிங்கி. அந்தச் சட்டப் புத்தகத்தை இரவல் வாங்கி ஏதோ பக்கத்தைப் புரட்டிப் படித்துவிட்டு அறிவித்தான் ஆனந்தன் – போர் ஓய்ந்தது.

உடனே, யட்சி யுத்தம் முடிவடைந்ததாக இரண்டு தரப்பும் வெள்ளைச் சிறகும் சாம்பல் இறகும் உதிர்த்து கைமாற்றிக் கொண்டன.

வாதினியும் சாதினியும் ஒருவரை ஒருவர் அணைத்து முத்தமிட்டுக் கொண்டனர். உல்லுலூ தெய்வம் சுனைக்கு மேலே எழும்பி ஆனந்தனை நோக்கி வாய் திறந்தபடி திமிங்கிலம் போல் மிதந்தது. அதன் பற்கள் கூர்மையாக நான்கு அடுக்கில் முதலைக்கு வாய்த்தது போல் பயம் கொள்ள வைத்தன.

எல்லா ஜீவராசிகளும் அத்தியாவசியமானதாகப் பருகும் குடிநீர்க் கடவுளை ஒரு துளி தண்ணீர் கூட அருந்தாத, நெருப்புக் குழம்பு குடிக்கும் தெய்வமையாக கட்டமைப்பு செய்யாதது ஏன் என்பதற்கு ஆல்ட் சி பிரபஞ்ச அறிவியலாரான கோவேறு கழுதையும் மஞ்சள் தோல் மானுடரும் காரணம் எதுவும் காட்டவில்லை.

ஒட்டகச் சிவிங்கி, வாதினி – சாதினி போர் பற்றி அன்பர்களிடம் விவரித்து வந்தபோது கூடுதல் தகவல் சொன்னது. அது வாதினி அளித்தபடி வருமாறு.

கடவுளர் அமைப்பும் புதிய சிறுகடவுள் உல்லுலூவும்

உல்லுலூவை கடவுள் அடுக்கில் Divine Pantheon தகுந்த இடம் கொடுத்து அமர்த்த மூன்று மாதம் போனது. உல்லுலூவுக்கான lore தொன்மச் சரடு, பாடிப் பரவ கீதங்கள், மற்ற கடவுளரோடு தந்தை, சகோதரன், சகோதரி, மாமன், மருமகள் என்று உறவு வலுவாக ஏற்படுத்துவதும் நிறைய நேரம் நீண்டது. ஒவ்வொரு புதுக் கடவுளும் பிரபஞ்சங்களினூடாகக் கட்டமைத்த அனைத்துக் கடவுளமைப்பில் இடம் பெற வைப்பதே இந்த உழைப்பின் நோக்கம். இந்த உறவுகளை நியமனமாக அமைத்த பின் அவற்றை மாற்ற முடியாது. Canonical considerations at work and play .

இத்தனை தகவலும் உல்லுலூ குடிநீர்த் தெய்வம் பற்றி சிவிங்கிக்குக் கோடி காட்ட வாதினி ஒரு நிமிடம் எடுத்துக் கொண்டாள். அதுவும் சாதினியோடு சேட்டைகள் இல்லாமல் பத்து விநாடியில் சொல்லி முடித்திருக்கலாம் தான்.

மறுபடி வாதினியோடு இதழ் கலந்து நின்றாள் சாதினி. போதும் இதைப் பார்க்க அலுப்பாகிப் போனது பெண்களே நீங்கள் யுத்தமிடும்போது நடுவண் நோக்கராக இருந்து தீர்ப்புத் தரவன்றோ என்னை அழைத்தீர்கள், யாண்டு நடப்பதென்ன என்று ஆனந்தன் ஒவ்வாத ஆச்சரியத்தோடு குறிப்பிட்டான்.

ஆனந்தா, நீதானே யுத்தம் ஓய்ந்ததாக அறிவித்தாய். அப்படியே ஆகட்டும். நாங்கள் யுத்தத்தை முன்னெடுக்கும்போது, சண்டையிடும்போது ஜன்ம விரோதிகள். பிற நேரம் ஒருவரை ஒருவர் வெறியோடு காமுறும் சிநேகிதிகள். சிருங்காரமாக முணுமுணுத்த சாதினிக்குப் பின்னால் நின்று அவள் கொங்கை வருடி, வாதினி மெய்மறந்தாள். உல்லுலூ தெய்வம் நீரில் எச்சில் உமிழ்ந்தது.

உல்லுலூ தெய்வம் ஆனந்தனைப் பார்த்து நீ எப்படி கடவுள்களோடு இடையாடிக் கொண்டிருக்கிறாய் அற்ப மானுடனே என்று அதிகாரத்தோடு கேட்டது. வாதினி தலையை அப்படி இல்லை என்று மறுக்கும் படிக்கு அசைத்தாள்.

ஆனந்தன் தர்க்கப் பிழை மூலம் காஸ்மோஸ் பிரபஞ்சத்தில் மானுடனாகப் பிறந்தான். அவனும் உன்னைப் போல் சிறு தெய்வமாக ஆல்ட் சி பிரபஞ்சத்தில் பிறந்து கடவுளமைப்பில் ஏறியிருக்க வேண்டியவன் என்று சாதினி சொல்ல, அதைப் பாதி கூட கேட்காமல் உல்லுலூ வலுவில்லாத

வெண்சிறகுகள் அடித்து மேலே உயர்ந்தது. சட்டென்று விழவும் செய்தது. அனுபவம் இல்லாத, அறிவுச் சுவடற்ற தெய்வமாக இருந்தது உல்லுலூ.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன