என் புதுச் சிறுகதை

அண்மையில் எழுதி லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் பிரசுரமாகியிருக்கும் என் சிறுகதை- விசிறி

விசிறி சிறுகதை இரா.முருகன்

கோபி பழைய மார்க்கெட்டை ஒரு தடவை சுற்றி வந்து விட்டான். சரஸ்வதி பூஜை என்பதால் பழைய புத்தகக்கடைகள் சீக்கிரமாகவே திறந்திருந்தன.

நாயனார் கடையில் இன்னும் வாடிக்கையாளர்கள் கூட்டமாகக் குவியவில்லை. பாதிக் கடையில் மர அலமாரிகளும் சாக்குப்பைகளும் பழைய புத்தகங்களாக நிரம்பி வழிய, மரப்பலகை தடுத்து அடுத்த பகுதியில் பழைய மேஜை ஃபேன், பழைய எலக்ட்ரிக் ஹீட்டர், சுவர்க் கடிகாரம் .

நாயனார் கடையில், எனக்கு பூலோக சுந்தரி கதைப் புத்தகம் வேணுமென்று கேட்டுக்கொண்டு நின்றவள் இருபது வயதுகூட இருக்க மாட்டாள். ஆனால் தோரணையில் கம்பீரமான பெண்.

நாயனார், அவளைப் பார்க்காமலேயே, இதோ வரேம்மா என்றபடி கோபியைப் பார்த்து வாங்க சார் என்றார்.

அப்போ நாங்கல்லாம் வரவேணாமா? வெடுக்கென்று கேட்டபடி கோபியைப் பார்வையால் எரித்தாள் பூலோக சுந்தரி. கோபி தன்னையே பார்த்துக் கொண்டான். கையில் பழைய மின்விசிறி – கருத்த ஆகாசத் துண்டுபோல் ஆடி வந்தது. அது அவன் மனசுக்குள் எழுதிக்கொண்டு போகிற புதுக் கவிதை வரி.

முதலில் வந்தவருக்கு முதலில் சேவை என்று கோபியைப் பார்த்து அறச் சீற்றம் கொட்டி அவள் அடுத்த குரோதமான வாக்கியத்துக்குப் போகும்முன் நாயனார் மேல்துண்டால் ஒரு பழைய புத்தகத்தைத் துடைத்துக்கொண்டு வந்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்.

இந்தாங்க நீங்க கேட்ட பூலோக சுந்தரி கதை. 1923 செல்வராய நாயக்கர் இயற்றி ரேடியண்ட் பிரஸ்லே அச்சடித்து வெளியிட்ட அபூர்வ புஸ்தகம்.

அவர் கையிலிருந்து பூலோக சுந்தரியைப் பிடுங்காத குறையாக வாங்கிக் கொண்டாள் அவள். சொல்லுங்க சார் என்று கோபியைப் பார்த்தபடி அவன் கையிலிருந்த பழைய டேபிள் ஃபேனை வாங்கி நாயனார் பழைய சாக்கெட்டில் செருக சாதுவாக இருந்தது அது.

நாயனாரே, இது நேற்று ராத்திரி லொடலொடன்னு ஃப்ரஞ்சு மொழியிலே பேசிச்சு. பதட்டத்தோடு சொன்னான் கோபி. அது அப்படித்தான் என்றார் நாயனார். சுவிட்சர்லேந்து மற்ற அரசு மொழிகளான ஜெர்மன், ரோமன்ஷ், இதாலிய மொழி எல்லாம் பேசுமே. இறக்கை மூடாமல் அவசரமாக வார்த்து ரெண்டாம் உலக யுத்த காலத்தில் சுவிட்சர்லாந்தில் செய்து இந்தியாவில் துப்பியது இந்த ஃபேன். எந்த யுத்தத்திலும் பங்கெடுக்காத நாடு அது. ஸ்பெயின் எல்லாப் போரிலும் இடம் பெற்றது. அமைதி இல்லாத ஸ்பெயின் அருமையான இலக்கியம் படைத்து கொடுத்தது. அமைதியின் சின்னமான சுவிட்சர்லாந்து குக்கூன்னு கூவும் கடியாரத்தையும் இந்த மாதிரி ஃபேனையும் உருவாக்கிச்சு.

யாரும் கேட்காமலேயே விளக்கம் சொன்னார் நாயனார். .அந்தப் பெண் சுவாரசியமாகப் பார்த்தபடி நின்று கொண்டிருக்க, நாயனார் வேறே ஏதாச்சும் பொஸ்தவம் வேணுமா என்று கரிசனத்தோடு அவளைத் கேட்டார்.

புத்தகம் வேணாம் அந்த ஃபேன் வேணும். அது என்னோடது என்னுதுன்னா எங்க தாத்தாவோடது. இசை பாடும் மின்விசிறி.

”என்னது தாத்தா ஃபேனா, முந்தாநாள் தான் நாயனார் கிட்டே வள்ளிசா நூறு ரூபாய்க்கு வாங்கிட்டுப் போனேன். ராத்திரி எல்லாம் ஒரே சத்தம்”.

கோபி ஃபேனை அணைத்தபடி நின்று பேசினான். ”பழைய ஃபேன் அப்படீன்னா சத்தம் வரும்னு சொல்வீங்க. இந்த சத்தம் பேச்சு சத்தம். யாரோ ராத்திரி முழுக்க பேசிக்கிட்டிருக்காங்க ஃபேன் உள்ளே இருந்து. என்ன பாஷை அதுன்னு தெரியுது.”

“எங்க தாத்தா வச்சிருந்தபோது அது ஜெர்மன் மொழியிலே ஆணும் பொண்ணுமா பேசிட்டிருந்தது. அது பாதியிலே நின்னு அவங்க ஃப்ரஞ்சில் பாட ஆரம்பிச்சதும் தாத்தா உயிர் போச்சு. அவரை சம்ஸ்காரம் பண்ணியபோது ஃபேனை எங்கேயோ தூக்கிப் போட்டுட்டாங்க. நாயனார் கையிலே எப்படியோ கிடச்சிருக்கு”.

அவள் என்ன பேசுகிறோம் என்று கருதாமல் பேசிப்போக நாயனார் முகம் கஷ்டம் காட்ட கோபி கோபத்தில் இரைந்தான் – ”நாங்க என்ன தெருப் பொறுக்கி உங்க தாத்தாவோட அபூர்வ வஸ்துவை எடுத்து வந்துட்டோம்னு சொல்றீங்களா?”

அந்த ஸ்திரி தணிந்து போனாள். ”ரொம்ப எக்சைட் ஆயிட்டேன் இந்த ஃபேனாக இருக்காது. ஒரே பேட்சிலே ரிலீஸ் பண்ணின இன்னொரு ஃபேன் இது. வாங்கி வச்சுக்கிட்டா தாத்தா நினைவு எப்பவும் பசுமையாக இருக்குமே. அதைத்தான் சொல்ல நினைச்சேன்”.

இருக்கலாம்;. ஆனால் இது விற்க இல்லே.

டிஷ்யூ பேப்பரை சூடிதாரிலிருந்து எடுத்து கண்ணைத் துடைத்துக்கொண்டு பரிதாப முகம் காட்டினாள் அவள்.

சொன்னால் சொன்னது தான். நான் ஃபேனை விக்கற மாதிரி இல்லே என்றபடி அவசரமாக ஃபேனை சாக்கெட்டிலிருந்து எடுத்து தூக்கிக்கொண்டு போனான் கோபி.

பின்னால் இருந்து ஏம்மா புத்தகம் என்று நாயனார் குரல். நான் ஏம்மா இல்லே ஹேமா. அவள் மூக்கை உறிஞ்சியபடி வாகன நிறுத்துமிடத்துக்குள் நுழைந்தாள்.

இது நடந்து அடுத்த சனிக்கிழமை பிற்பகல் கோபி மறுபடி பழைய மார்க்கெட்டுக்குப் போனான். நாயனார் இப்போ என்ன என்றார்.

சர்ச்சில் யுத்தம் புரிதல் பற்றி ராத்திரி முழுக்கப் பேசறார் என்றான் கோபி. யுத்தம் முடிந்து எழுபத்திரெண்டு வருஷம் ஆகியிருந்ததை டேபிள்ஃபேன் மற்றும் மறைந்த சர்ச்சில் மறந்து போயிருந்தது போல.

அவ்வப்போது ஏதோ மேற்கத்திய இசை நிகழ்ச்சியில் சிங்கம் கர்ஜிப்பது போல் ஒருத்தர் நோஸன் த்ருமா என்று பாட்டு. அது இன்னிக்கு ராத்திரி யாரும் தூங்கக் கூடாதுன்னு இத்தாலி மொழியிலே லூசியானோ பாவரொட்டி பாடியது என்று சர்வ சாதாரணமாகச் சொன்னார் நாயனார். பழைய புத்தகம்,அலாரம் கடியாரம், டேபில் ஃபேன், வால்வ் ரேடியோ அதததோடு சம்பந்தப்பட்ட அறிவு உண்டு அவருக்கு.

ஒழுங்கு பண்ணி வைக்கறேன், சாயந்திரம் வந்து எடுத்துக்கங்க என்று கோபியைப் பார்த்து சிநேகிதமாகச் சிரித்தார்.

ஹலோ கமலாம்பாள் சரித்திரம் முதல் பதிப்பு இருக்கா? ஹேமா குரலைக் கேட்டு குளிரை அனுபவித்துக் கொண்டு அவளை நோக்கி ஆர்வமாகப் பேசினான் கோபி.

”நாயனாரே இன்னிக்கு சாயந்திரம் இங்கே வர முடியாது. இன்னிக்கு சாயந்திரம் ராமானுஜர் அரங்கிலே எண்கவனகம். நான் நடத்தறேன். அனுமதி இலவசம் என்றான் கோபி. பதிலுக்குக் காத்திருக்காமல் நாயனாரையும் ஹேமாவையும் பார்த்துப் புன்னகைத்து விட்டு மோட்டார் பைக்கைக் கிளப்பினான் அவன்.

அங்காடி வாசலில் ஹேமா அங்கே கடந்து போகும் வரை காத்திருந்தான். அவளானால் தன் காரை புன்சிரித்தபடி ஸ்டைலாக ஓட்டிப் போனாள். அந்தச் சிரிப்பு அடுத்த பத்தாவது நிமிடம் ராமானுஜர் அரங்கில் நீண்டது.

எண்கவனகம் என்பது ஒரே நேரத்தில் எட்டு காரியங்களை மேற்கொள்றது என்று ஆரம்பித்தான் கோபி. கஷ்டமான ஆறு ஸ்தான கூட்டல், பெருக்கல் இப்படி ஒரே நேரத்திலே செய்யறது, செய்யுள் இயற்றுதல், பின்னாலிருந்து ஒருத்தர் அப்பப்போ மெல்லத் தொடும்போது அந்த எண்ணிக்கையை மனதில் வச்சுக்கறது, மேலே பூவை விட்டெறிந்து கணக்கு வச்சுக்கறது இப்படி எட்டு செயல்கள்.

பக்கத்தில் உட்கார்ந்திருந்த கிழவர் கம்ப்யூட்டர் ஒண்ணுமில்லே இந்த பையன் எப்படி கணக்கு போடுவான் பாருங்க என்று சிரித்தார் ஓநாய் போல. எல்லாத்தையும் ஏற்கனவே மனசுலே போட்டு வச்சிருப்பாங்க என்றாள் ஹேமா. என்னமோ கோபியை வம்பு இழுக்க வேண்டியிருந்தது அவளுக்கு. எனக்கு காது சரியா கேக்கலேங்க என்று பெரியவர் நழுவினார்.

நிகழ்ச்சி ஆரம்பித்தது.

கோபியின் முதுகில் அவ்வப்போது தொட்டு எண்ணிக்கை கணக்குப் பண்ணும் பகுதிக்கு கோபியின் நண்பன் தொட்டுத் தொட்டு எண்ண ஆரம்பித்தான். அவன் பக்கத்து நாற்காலியில் ஹேமா உட்கார்ந்திருந்தாள். என்னமோ தோன்ற தொடுதல் விவரத்தை அவள் மனதில் எண்ணிக்கொண்டே வந்தாள். தொடுகிறவனின் மொபைல் ஃபோன் அடிக்க அதற்குப் பதிலளித்தபடி எழுந்தான் அவன். அவசரம். சத்தமே போடாமல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் சொல்லிக்கொண்டு ஹெல்மெட்டை மாட்டியபடி வெளியேறினான் அவன். அதுவரை அவன் தொட்ட கணக்கு கூடச் சொல்லவில்லை.

உங்களுக்கு எதிர்ப்பு இல்லேன்னா நான் தொடறேன். ஹேமா முன்னால் வந்தாள். பேஷாக என்று வரவேற்பு அவளுக்கு. தப்புக் கணக்கு போட்டு கோபியை வீழ்த்தாட்ட அவளுக்கு ஆர்வம். எல்லாம் சரியாக நடந்தது. ஒரே ஒரு எட்டு ஸ்தான எண் மட்டும் ஒரு இலக்கம் தவறாகப் போனதை யாரும் லட்சியம் செய்யவில்லை. இப்போது கடைசியாகத் தொடுகணக்கு நிலவரம். கோபி தொண்டையைக் கனைத்துக் கொண்டு தொடங்கினான் – ஆண் தொடல் 37, பெண் தொடல் 45.

ஹேமா ஆச்சரியப்பட்டுப் போனாள். அந்த நிமிடத்தில் அவன் மேல் ஈர்ப்பு வந்தது. அது பரஸ்பர நேசமாக அடுத்த ஒரு மாதம் மட்டுமானது. ஹேமாவின் பாட்டிக்கு கலர் காகிதம் சுற்றி அந்த டேபில் ஃபேனை அளித்து விடலாம் என்று தீர்மானித்தான். ஹேமாவைக் காதலிக்கிறோமா அவள் பாட்டியையா என்று யோசித்து, வேண்டாம் அதுவும் வெகுதூர பாலக்காட்டில் நூருணியில் சதா வீல்சேரில் ஆரோகணித்து, காது கேட்காமல் இருக்கும் பாட்டிக்கு அவ்வப்போது சுழன்று பழங்கதை பேசும் அடாஸ் ஓல்ட் பழைய ஃபேன் எதுக்கு என்று தீர்மானித்து ஹேமாவுக்கு மோதிசூர் லட்டு வாங்கிக் கொடுத்தான்.

ஆபீஸ் வேலை காரணம் ஒரு வாரம் நாயனார் கடைக்குப் போகாமல் இருந்து, அப்புறம் அங்கே முதல் காரியமாகப் போனான் கோபி.

அவன் போனபோது ஃபேனைக் காணோம். கடைப் பையன் ஐநூறு ரூபாய்க்கு ஒரு வெள்ளைக்காரனுக்கு விற்றுவிட்டு சகலரிடமும் காயாலான் கடை சரக்கை சுளையாக ஐநூறுக்கு வித்தேன் என்று தன் சாமர்த்தியத்தைப் பறைசார்த்திக் கொண்டிருந்தான்.

கோபி வருத்தப்பட்டான். நாயனார் மலையாளத்தில் ஏதோ புலம்பினார். என்ன செய்ய, வேறே அதே போல் ஃபேன் வாங்கித் தரேன் என்று குழந்தைகளிடம் அம்மா சொல்கிற மாதிரி சமாதானப்படுத்தினாள் ஹேமா. அவள் மியூசியத்தில் உதவி இயக்குனராகக் கை நிறையச் சம்பளம் வாங்குகிறதை அவசியமில்லாமல் பகிர மாட்டாள் என்று கோபிக்குத் தெரிந்தபோது அவனை அமெரிக்காவுக்கு ஒரு மாதம் கம்ப்யூட்டர் மென்பொருள் உருவாக்கத் திட்ட நிர்வாகம் செய்ய அவன் அலுவலகத்தில் அனுப்பியிருந்தார்கள்.

அவன் திரும்ப வந்தபோது ஹேமா பழைய டேபில் ஃபேனோடு காத்திருந்தாள். கடைப் பையன் விற்றுவிட்ட ஃபேனின் அதே பாட்ச்சில் வேறு இருக்கக்கூடும் என்று அவளுக்குள் இருந்த அருங்காட்சியக உதவி நிர்வாகி சொன்னார். எது எப்படியோ, முதல் இரவில் படுக்கை பக்கத்தில் அந்த ஃபேன் இருந்தது. இறக்கைகள் சுழலவில்லை.

நடு ராத்திரிக்கு இறக்கைகள் சுழல ஆகாசவாணி முத்திரை இசையாக வயலின் வாசித்து இந்தியாவுக்கு சுதந்திரம் கிட்டியதாக நேரு குரலில் சந்தோஷ செய்தி சொன்னது. எழுபது வருடத்துக்கு முந்திய நிகழ்வு அது. கோபி ஃபேனுக்கும் நேருவுக்கும் நன்றி சொல்லிவிட்டு, ஹேமாவைத் தொட்டான். தொடல் கணக்கு ஒன்று என்றாள் அவள்.

இரா.முருகன்.
அக்டோபர் 2023

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன