பெருநாவல் மிளகு – பிதார் ஜெயம்மாவின் மங்களூர் அடுக்ககம்

அத்தியாயம் 51 இல் இருந்து

சங்கரன் எழுந்து நின்றார். பாத்ரூம் போகணும் என்றார். அவரை தாங்கிப் பிடித்தபடி விமான டாய்லெட்டுக்கு நடத்திக் கூட்டிப் போனாள் வசந்தி.

“கதவை மூடலே. நானும் இருக்கேன். பயப்படாமல் போங்கோ. யாரும் துப்பாக்கி வச்சுண்டு நிற்கலே வாசல்லே” என்றாள் வசந்தி, டாய்லெட் கதவைத் திறந்தபடிக்கு வைத்து, சங்கரனை கமோடில் இருத்தியபடி.

இவர்கள் பத்து நிமிடம் வரவில்லையே என்று தெரிசா இருக்கைகளின் ஊடாக நடந்து கழிவறை வாசலுக்கு வந்தாள்.

“தெரிசா, அடல்ட் டயாபர் போட்டுவிட்டு பழக்கம் இருக்கா?” வசந்தி கேட்டாள். ”தெரிஞ்சுக்கிட்டா போச்சு” என்று வசந்தி சங்கரனுக்கு டயாபர் போட உதவி செய்தாள் அவள். ”கூல், இனி நான் பார்த்துக்கறேன்” என்றாள்.

இரண்டு அறுபது வயசுக்காரிகள் அதே வயசு வரம்பில் ஒரு ஆணுக்கு டாய்லெட் போக இப்படி விழுந்து விழுந்து உதவி செய்வதை ஏர் ஹோஸ்டஸ்களும் ப்ளைட் பர்ஸர்களும் விநோதமாகப் பார்க்க, அவர்களிடம் சுருக்கமாக முன்கதை சொன்னாள் தெரிசா. அதற்கப்புறம் அவர்கள் பார்வையே மாறிப் போனது.

மிட்டாயும், காதில் அடைக்கப் பஞ்சும், விமானம் ரன்வேயில் ஓடி வந்து உயரப் பறக்கும் முன் உபசரிப்பாகக் கொடுத்துக்கொண்டு வந்த ஹோஸ்டஸ் சங்கரன் பக்கம் வந்ததும் ”டாஃபி சார்” என்று கேட்டு பதிலை எதிர்பார்க்காமல் நாலைந்து மிட்டாய்களை அவர் கையில் கொடுத்து நகர்ந்தாள். குட்டிக் குழந்தைகளுக்கு மிட்டாய் உபசாரம் செய்வதுபோல் இருந்தது அது. சங்கரனும் சின்னப் பையனாக அந்த மிட்டாய்களை சட்டைப் பாக்கெட்டில் பத்திரமாக வைத்துக் கொண்டார்.

சாப்பாடு வைத்த ட்ராலிகளைத் தள்ளிக்கொண்டு ஏர் ஹோஸ்டஸ்கள் இருபுற இருக்கைகளுக்கு நடுவே நடந்த போது, சங்கரன் சிரித்துக் கொண்டார். எதற்காக என்று வசந்தி கேட்க நினைத்து வேண்டாம் என்று வைத்தாள்.

“முன் இருக்கை முதுகில் உங்கள் உணவு வைக்க பலகை மடித்து வைக்கப்பட்டுள்ளது. அதைத் தயவு செய்து தாழ்ப்பாள் திறந்து தட்டுகள் வைக்கும்படிக்கு படிந்து வைக்கவும்”. அறிவிப்பு வந்தபோது சங்கரன் நித்திரை போயிருந்தார்.

“பரவாயில்லே வசந்தி இன்னும் ஒரு மணி நேரம் தான், நான் பிஸ்கட் எடுத்துண்டு வந்திருக்கேன். ஆத்திலே போய் சாப்பிட்டுக்கட்டும்” என்று ஜெயம்மா சொல்ல, வசந்தி நானும் அப்புறம் சாப்பிட்டுக்கறேன் என்றாள்.

ஜெயம்மா தெரிசாவைப் பார்த்தாள். வேண்டாம் என்று பார்வையால் சுட்டினாள் தெரிசா. ”நான் சாப்பிடப்போறேன்” என்றாள் ஜெயம்மா. சங்கரன் கண் விழித்தார். கை வைத்துத் தடுத்தார் யாரை என்று இல்லாமல்.

“ஜெயம்மா, நீ மட்டும் ஏன் சாப்பிடணும்? இது கைக்கு எட்டி வாய்க்கு எட்டாமல் போகலாம். என் அனுபவத்திலே இருந்து சொல்றேன். போய் சாப்பிட்டுக்குவோம்”. ஹோஸ்டஸிடம் வேண்டாம் என்று ஜெயம்மாவும் திருப்பிக் கொடுத்ததும் தான் சங்கரன் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

மங்களூர் விமான நிலையத்தில் கொச்சி – மங்களூர் விமானம் இறங்கும்போது இருகை கொண்டு இரு செவி பொத்தி, சீட்டில் சுருண்டு கிடந்தார் சங்கரன். இட்ஸ் ஆல்ரைட் என்று தெரிசா திரும்பத் திரும்பச் சொல்லியபடி அவர் தோளைத் தடவிக் கொண்டிருந்தாள்.

சங்கரன் அடுத்த சீட் பக்கம் சரிந்து தெரிசாவின் உதடுகளில் முத்தம் கொடுத்தார். அவளுக்கு எல்லா விதத்திலும் கூச்சத்தைக் கொடுத்த முத்தம் அது. வசந்தி தலை குனிந்து பார்த்தபடி இருந்தாள். பொது இடத்தில் கொடுத்த முத்தம், அறுபத்தைந்து வயசில் வாலிபம் திரும்பியது போல் கொடுத்தது, மனைவி பார்க்க சிநேகிதிக்குக் கொடுக்கப்பட்டது. ஜெயம்மாவுக்கு முன்னால் சிருங்காரம் காட்டிய நாகரிகமின்மை எல்லாம் தெரிசாவுக்கும் வசந்திக்கும் சங்கடத்தை உண்டாக்கியிருக்க வேண்டும்.

”ஜெயம்மா, ஏர் போர்ட்லே இருந்து வீடு ரொம்ப தூரம் இருக்குமா”?

வசந்தி சூழலை மாற்றக் கேட்டாள்.

“வசு, இறங்கி அரைமணி நேரத்தில் பேக்கேஜ் வாங்கிண்டு கார்லே உக்காந்து பாஜ்பே மெயின் ரோடுலே போனா, பத்தே நிமிஷத்திலே பேஜாய் தான். அதான் நம்ம பிரதேசத்துக்கு பேர். பேஜார் இல்லே, பேஜாய்” என்றாள் ஜெயம்மா. விமானம் ஓடி இறங்கி, வேகம் குறைந்து ஊர்ந்து, பின் நின்றது.
”மங்களூர்லே என்ன பார்க்கணும்?” சங்கரன் மங்களூர் பேஜாய் நகர்ப்பகுதியில் ஜெயம்மாவின் அபார்ட்மெண்ட்க்கு காரில் போகும்போது கேட்டார்.

“ஜெயம்மாவை பார்க்க வந்திருக்கோம். பார்த்துட்டு திரும்பிடலாம்” என்றாள் வசந்தி. தெரிசாவைப் பார்த்து உடனே, “அஃப் கோர்ஸ் அக்கம்பக்கத்துலே பீச், கோவில்னு நாலைஞ்சு ஸ்பாட் பார்த்துட்டு” என்று கொஞ்சம் போல் மாற்றினாள்.

ஜெயம்மா, ”இவ்வளவு தூரம் வந்து இந்த ஜெயம்மாவோட கிழட்டு மூஞ்சியைப் பார்த்துண்டு உக்காந்துட்டு, மறுபடி ப்ளேன் பண்ணிப் போகப் போறியா?” என்று கேட்க தெரசா சிரித்துவிட்டாள்.

“அது என்ன ப்ளேன் பண்றது?” தெரிசா கேட்டாள்.

ஜெயம்மாவும் சிரித்தாள். ”எங்க தமிழ்லே வண்டி பண்ணுவோம்னா வண்டியிலே போக ஏற்பாடு செய்வோம், பல் கழுவுவோம் என்னாக்க பல் ப்ரஷ் பண்ணுவோம், தலைய்லே எண்ணெ துடைப்போம் அப்படீன்னா தலையிலே எண்ணெய் தடவுவோம், ஏன் கேக்கறே போ!” என்று தெரசாவைத் தோளில் அணைத்து, வசந்தி மேல் காட்டிய அதே நேசத்தை தெரிசா மேலும் காட்டினாள்.

“தெரிசா, இங்கே நானே உங்க மூணு பேரையும் கூட்டிப் போக உத்தேசிச்சிருந்தது கத்ரி மஞ்சுநாத் கோவிலும் தன்னீர்பவி பீச்சும். எலிட் பீச் அது. பாபுலர் பீச்சுன்னா பனம்பூர் பீச் இருக்கவே இருக்கு. ரெண்டுக்கும் கூட போய்ட்டு வந்துடலாம். நம்ம வீட்டுலே இருந்து பக்கம் தான். மஞ்சுநாத் கோவில் ஆயிரம் வருஷம் முந்தி தஞ்சாவூர் கோவில் மாதிரி ரொம்பப் பழைய, அற்புதமான கோவில்”.

“ஷாப்பிங் எங்கே போகலாம்? என்ன வாங்கலாம்?” வசந்தி கேட்டாள்.

“ட்ரை ப்ரூட்ஸ், முக்கியமாக முந்திரிப் பருப்பு, ஏலம், பட்டை லவங்கம், மிளகு, டப்பாவிலே அடைச்ச மீன். சரி சாப்பிடலேன்னா வேண்டாம், மெல்லிசா பதினாலு காரட் தங்க நகை எல்லாம் வாங்கலாம்.. நாள் முழுக்க ஷாப்பிங் போகலாம். அவ்வளவு அங்காடி உண்டு” என்றாள் ஜெயம்மா.

வீட்டு வாசலில் கார் நின்றது. காவல் சிறந்த gated community. பல மாடிக் குடியிருப்பு. நாகரிகமும் வளமும் தெரியும் தனவந்தர் சூழல். எல்லாம் மூணு பெட்ரூம் அப்பார்ட்மெண்ட் தானா என்று கேட்டாள் வசந்தி. ஆமா என்று தலையசைத்தாள் ஜெயம்மா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன