ஏமப் பெருந்துயில் நீங்கிய ஆல்ட் சி பிரபஞ்சத்து பிரதி நீலன் வைத்தியர்

நாவல் தினை அல்லது சஞ்சீவனி அத்தியாயம் 28 இல் இருந்து

பிரதி நீலன் வைத்தியர் இருக்கும் பேழையின் மேல்மூடி திறந்து நூறு தேள்க் கால்கள் உள்ளே நீட்டி பிரதி நீலன் சுவாசிக்கிறாரா என்று உறுதி செய்வதுபோல் அசைந்து பெருஞ் சத்தத்தோடு மூடி திரும்பக் கவிந்து ஒரு வினாடி அதிர்ந்து மேலே கூரையாக அமர்ந்தது.

அந்த ஒலி கேட்ட பிரதி நீலன் இதெல்லாம் உணரப்படுவது தன்னால் தானா அல்லது வேறு யார்க்கோ அனுபவமாகிப் பார்வை மூலமும், வாடை, ஒலி ரூபமாகவும் தனக்குக் கடத்தப்படுகிறதா என்று புரியாமல் குழம்பினார்.

அந்த பெரும் மண்டபத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டதோடு மறுபடி இருள் திட்டுத்திட்டாகக் கவிந்தது. பிரதி நீலன் வைத்தியர் காலை உயர்த்திப் பேழையின் கூரையைத் தொட முயன்றார்.

கால் நீண்டு போனாலும் இன்னும் ஒரு முழம் அதிகமானாலும் கூரை தொட்டுவிடும் தூரமில்லைதான் என்று புலப்பட்டது. அவர் கரங்கள் பக்கவாட்டில் தடவ, அங்கே குமிழ் ஒன்று வார்த்திருப்பதை உணர முடிந்தது.

அந்தக் குமிழைக் கைப்பற்றித் திருக, பேழையின் கூரை மெல்ல உயர்ந்ததைக் காண அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. குமிழியைத் திருகியபடி இருக்க கூரை முழுக்கத் திறந்து அவருக்காகக் காத்திருந்ததைக் கண்டார்.

பக்கத்துப் பேழைகளில் பெருந்துயிலில் ஆணும் பெண்ணுமாக எல்லா வயதினரும் கிடத்தப்பட்டிருப்பதைக் கண்டார். அவர் பேழையின் ஓரமாக நடக்க நடக்க கூரை வளைந்து கொடுத்தது. அடுத்த சில நொடிகளில் பேழையின் வெளியே வந்துவிட்டார்.

பெருந்துயில். இந்தச் சொல் தான் கருவி. மூடிய மனத்தைச் செதுக்கித் திறந்திருக்கிறது.

இவர் ஒரு நீலன். பிரதி நீலன் என்று சொல்கிறார்கள் இவரை. இன்னொரு நீலன் – அசல் நீலன் என்று விளிக்கப்படுகிறவர் அவர். அசல் நீலன் காஸ்மாஸ் பிரபஞ்சத்தில் வசிக்கும் தூசிக்குத் தூசி. இவர், பிரதி நீலன் ஆல்ட் எஸ் பிரபஞ்ச துகளின் துகள்.

சில நாட்களோ, ஒளியாண்டுகளோ, மாதங்களோ முன்னால், இங்கே, காஸ்மாஸ் பிரபஞ்சத்தில், அசல் நீலன் தேள்களின் ஊர்வலத்தில் படுத்துறங்கியபடி வந்ததைக் கூட்டத்தின் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தார் பிரதி நீலன்.

என்ன நடக்கிறது என்று பிரதி நீலனுக்குப் புரியும் முன்பு அவர் படுத்துறங்கியபடி, ஏமத்துயிலில் ஆழ்ந்து ஊர்வலத்தில் போகிறார். அசல் நீலன் ஊர்வலப் பாடையிலிருந்து வெளியே சாடி ஒரே வினாடியில் ஏமப் பெருந்துயில் மண்டபக் கோபுரத்தின் அருகே கொண்டு செலுத்தப்படுகிறார் என்பதைப் பார்த்தபடி பிரதி நீலன் துயிலப் போகிறார்.

ஆக அசல் நீலன் இந்தக் கோலாகலத்திலிருந்து வெளியேற, பிரதி நீலனாக ஆல்ட் எஸ் பிரபஞ்சம் போக, நகல் நீலன் இதோ காஸ்மோஸ் பிரபஞ்சத்தில் ஏமப் பெருந்துயில் கண் விழித்துப் பேழையிலிருந்து வெளியே வந்திருக்கிறார்.

கனஜோராகப் பசித்தது. ஒரு குன்று புளிக்குழம்பு பிசைந்த சோறுண்டு ஒரு பெரிய ஊருணியையே பருகித் தாகம் தீர்த்துக் கொள்ள நாவும் வயிறும் ஏக்கம் நிறைந்த ஆர்வம் தெரிவித்தன.

பெரிய சுவர்கள் வளைந்து வளைந்து திரும்பும் ஒழுங்கைகள் மூன்று ஒன்றன்பின் ஒன்றாக எதிர்ப்பட்டு வழிவிட்ட நீடுவழிகள் திறந்திருக்க, வேகம் கூட்டி நடந்தார் பிரதி நீலன்.

அரங்கும் மண்டபமுமாக இந்தப் பகுதிக் கட்டிட அமைப்பு அலங்கரிக்கப்பட்டுமிருக்கிறது ஏன் என்று யோசிக்க, இல்லை, இது அதே கட்டிடமில்லை, அடுத்த மாளிகையைப் பேழைகளில் உறங்குவார் மண்டபத்தோடு இணைக்கும் அமைப்பு எனப் புரிந்தது.

பெரிதிலும் பெரிதான மண்டபத்துக்கு நடுவே ஒரு கிழட்டுத் தேள், உயிர் தவிர மற்ற சகல சௌகர்யங்களும் வாய்க்கப் பெற்று பிண கம்பீரமாகக் கிடந்தது.

நான்கைந்து பேழைகளை ஒன்றின்மேல் ஒன்றாக வைத்த காற்று இல்லாத, புழுக்கம் மிகுந்தும் தொடர்ந்து சில்லென்ற அமைப்புமாகத் தெரிய அந்தத் தேட்சவம், என்றால் தேள் சவம், என்றால் செத்த தேள் கிடக்கும் கோலம் கண்டு அருவருத்து மூலைக்கு நடந்தார் பிரதி நீலன்.

பெரிய மேசைமேல் பழங்களும், இனிப்புகளும் அடுக்கிப் பரத்தியிருந்தது கண்டு பரபரப்போடு குவளையுண்டா குவளையில் நீருண்டா எனக் கண்கள் அலைந்திட பெரும் ஜாடியில் நிறைத்திருந்தது திராட்சை ரசம் என்று அதிநின்று எழும்பிய வாசனை சொன்னது.

கூடவே மனதை ஈர்க்கும் அடர்புளிப்புச் சுவையுண்டு என யூகிக்க வைக்கும் வாடையும் ஜாடியிலிருந்து வந்தது. நாற்காலியைச் சத்தம் வராமல் இழுத்துப் போட்டுக்கொண்டு ஆகாரம் செய்ய உட்கார்ந்தார் பிரதி நீலன்.

கொக்கு மாதிரி கழுத்து நீண்டிருந்த வெள்ளைப் பீங்கான் ஜாடியைச் சற்றே சாய்த்து கோப்பையில் திராட்சைச் சாற்றை வார்த்துவிட்டு, அடுமனையில் பாகம் செய்த மெல்லிய சிறு சச்சதுரப் படிவங்களான யவனர் உணவைப் பக்கத்தில் இருந்த மூடி போட்ட பீங்கான் பாத்திரத்தில் இருந்து எடுத்து அருகில் வைத்த தட்டில் இட்டார்.

அடுத்து பழக்கூழில் சீனிச் சக்கரை குழைத்து வண்ணமிட்டுக் காய்ச்சிய இனிய பதார்த்தத்தை விழுதாகத் தட்டில் ஓரமாக இட்டார். உண்ணத் தொடங்கினார்.

பழக் கூழைச் சற்று இங்கே நகர்த்துங்கள்.

கரமுரவென்று மனிதம் கலக்காத ஒரு குரல் அருகில் கேட்க, கை நடுங்க தட்டை ஏறக்குறையத் தவறவிட்டார் பிரதி நீலன் வைத்தியர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன