சீர்காழி கோவிந்தராஜனும் லூசியானோ பாவரொட்டியும்; கூடவே உம்ம் கல்தூம்

எங்கள் ஊர் காந்தி வீதியில் புது புரோட்டா ஸ்டால் தொடங்கும்போதோ, தெருமுனை வீட்டுப் பெண் பெரியவளாகி சடங்கு சுற்றும் சுபநிகழ்ச்சி என்றாலோ, வெகுவாகக் கவனத்தைக் கவர ஐம்பது வருடம் முன் ஏற்பாடான நிகழ்வு சவுண்ட் சர்வீஸ் ஒலிபரப்பு. ’விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்’ என்று சீர்காழி கோவிந்தராஜன் கணீரென்று பாடி ஒலிபரப்பைத் தொடங்கி வைத்தால், காதும் மனசும் அவரிடம் ஓடிவிட, விழா களைகட்டிவிடும். அசரீரி பாடும் சினிமா பாட்டா, பக்திப் பாடலா, தத்துவப் பாடலா, ஹை பிட்சில் பாடுவதில் அவரை அடித்துக்கொள்ள யாருமில்லை.

இந்தியில் சற்று மிருதுவான குரல்தான் பெரும்பாலும் பாடகர்களுக்கு. பாபி படம் வந்து நரேந்திர சஞ்சல் ’பேஷாக் மந்திர் மஜ்ஜித் தோடோ’ என்று உச்ச ஸ்தாயியில் பாடி அறிமுகமானார். இன்னொரு வெங்கலக் குரல் பாடகர் ’ரஸியா சுல்தான்’ படத்தில் ’ஆயே ஸன்ஸீர் கி ஜம்கார்’ என்று உச்சம் தொட்ட கப்பன் மிர்ஸா. கொஞ்சம் போல் சி.எஸ்.ஜெயராமன் குரலின் சாயல்.

ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் பீம்சன் ஜோஷி குரல் கம்பீரமும் கார்வையுமாக சத்தம் கூட்டி ஒலிக்கும். மாஜெ மாஹரு பண்டரி என்று ஜோஷி மராத்தி பக்திப் பாடல் (அபங்க்) பாடினால் அடுத்து ரெண்டு நாள் காதுக்குள் அந்தப் பாடல்தான் ஒலித்துக் கொண்டிருக்கும். அவர் வாரிசாக சங்கர் மகாதேவன் உரக்கப் பாடும் பந்ததியை ஏற்றெடுத்துக் கொண்டிருக்கிறார்.

கர்னாடக சங்கீதத்தில், ’என்ன பாட்டு பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை’ என்று நீலமணி ராகத்தில் உச்ச ஸ்தாயியில் உரக்கப் பாடி ரசிகர்களை ஈர்த்த மதுரை சோமு ’மருதமலை மாமணியே முருகையா’ என்று தர்பாரி கனடாவில் உருக்கமும் குரலெடுப்புமாக இசைபாடி சினிமா ரசிகர்களையும் கவர்ந்தார்.

கர்னாடக சங்கீதத்தில் மிகப் பிரபலமான பாடகரான சஞ்சய் சுப்ரமணியன் ஒரு பத்திரிகை நேர்காணலில் சொன்னது நினைவு வருகிறது – ’மைக் புழக்கத்துக்கு வரும் முன்னால் நல்ல சத்தமாகப் பாடினால் தான் கடைசி வரிசை ரசிகருக்குக் கேட்கும் என்று இசைக் கலைஞர்கள் பயிற்றுவிக்கப்பட்டார்கள். சத்தமாகப் பாட வரலியா, நீ பாட லாயக்கில்லே, வாத்தியம் வாசிக்கக் கத்துக்கோ’ என்று சீனியர்கள் கைகாட்டினார்கள். மதுரை மணி ஐயர் சொன்னார் – ’கீழே (கீழ் ஸ்தாயியில்) பாடினா பண்டிதர்களுக்குப் பிடிக்கும். மேலே பாடினா பாமரர்களுக்குப் பிடிக்கும்’.

சத்தம் போட்டுப் பாடி நிறைய கைதட்டு வாங்கி எப்போதும் அப்படியே பாட எதிர்பார்க்கப்பட்ட சில அற்புதமான மேதமையுள்ள இசைக்கலைஞர்கள் தொண்டையைக் கிழித்துக்கொண்டு (நிஜமாகவே vocal chord rupture ஆகி) பாடவே முடியாமல் போனதும் இங்கே நடந்திருக்கிறது.

நமக்குத்தான் உச்ச ஸ்தாயியில் பாடுவதில் மயக்கம் என்றில்லை. எகிப்திய இசையரசியான உம் குல்தும் Umm Kulthum 2-வது ஆக்டேவில் இருந்து (கீழுக்கும் கீழுமான ஸ்தாயி அது) 8-வது ஆக்டேவ் வரை (எட்டுக்கட்டை விட்டெறிந்து) பாடிப் புகழ் பெற்றவர். ’ஒரு வினாடிக்கு 14000 தடவை’ தொண்டை அதிரப் பாடியவர் அவர் என்று எகிப்தியர்கள் சொல்வார்கள். அந்தளவு vocal vibration ஆகும்போது மைக் பக்கத்தில் இருந்தால் அது எகிறி ரிப்பேராகி விடும் என்பதால் இரண்டு மீட்டருக்கு அப்பால் மைக்கை நிறுத்திப் பாட வைத்துக் கடலென ஆர்பரித்துக் கைதட்டி ரசித்தார்களாம்.

புச்சினி (Puccini) எழுதி இசையமைத்த இத்தாலிய ஓபராவில் பாடி நடித்துப் பிரபலமான இத்தாலிய டெனர் (மேல் ஸ்தாயி இசைக்கலைஞர்) லூசியானோ பாவரொட்டி (Luciano Pavarotti) கீழே C#3-யிலிருந்து மேலே F8 உச்சஸ்தாயி வரை பாடுவதை யுடியூபில் பார்த்தால் நமக்குத் தொண்டை வலிக்கும். Nessen Dorma தூக்கமில்லை என்று தொடங்கும் ஓபரா பாடல் அது. இதை உச்ச ஸ்தாயியில் பாவரொட்டி மட்டும் இல்லை, இன்னும் இரண்டு டெனர்கள் சேர்ந்து பாடியதைக் கேட்பதும் மற்றொரு மேலான, நேற்று ராத்திரி தூக்கம் போச்சு அனுபவம் தான். பாவரொட்டியும், உம் குல்துமும் இப்போது இல்லை. யூடியூபில் உண்டு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன