நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ – அணையப் போகும் பழந்தீ

வழி மறந்த கடைசிப் பறவை வீடு திரும்பும் பின் அந்திப் பொழுதில் இந்தப் பெண்கள் திரும்பினார்கள்.

இலுப்பெண்ணெய் தாராளமாக ஊற்றிப் பெரிய பருத்திப் பஞ்சுத் திரிகள் எண்ணெய் நனைத்துக் கொளுத்திய சுடர்கள் தெருவெங்கும் வீட்டு மாடப்புரைகளில் இருந்து ஒளி வீச இன்னும் சிறிது நேரத்தில் இரவு நிலம் போர்த்தும்.

குயிலிக்கு வியப்பாக இருந்தது. ஐம்பதாம் நூற்றாண்டில் இருந்து மூன்றாம் நூற்றாண்டுக்கு வந்து சேர்ந்தாலும், இரவும் பகலும் அந்தியும் இன்னும் எந்த வித்தியாசமும் இல்லாமல் வந்துதான் போகும்.

எப்போதும் பிரகாசமாக ஒளிரும் துர்க்கையம்மாள் பயணியர் சாலையின் ஐந்து விரிவான வாசல் படிகள் கூடுதல் வெளிச்சத்தை அளிக்க, படிகள் ஒவ்வொன்றிலும் நிலவிளக்கு ஒன்றும் ஐந்து முகக் குத்துவிளக்கும் சுடர் வீசி எரிந்ததே காரணம் என்று புலப்பட்டது.

சிறு அகல் விளக்குகளை எரிய வைத்துச் செப்புத் தட்டில் வைத்து உள்ளேயிருந்து எடுத்து வந்த கிழவியம்மாள் அவர்களிடம் உரக்கச் சொன்னாள் – குழந்தைகளே, வாருங்கள் விளக்கேற்றி இருள் அகற்றுவோம். குறிஞ்சித் தெய்வம் முருகன் வேலெறிந்து பகைவெல்ல மேதினியில் அவதரித்த புனிதமான கார்த்திகை தினம் இது.

சொன்னது மனதுக்கு இதமாக இருந்தது. கடந்து வந்த நாற்பத்தெட்டு நூறாண்டுகளில் எத்தனை விழாக்கள் காலப் பிரவாகத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயின. எத்தனை புதியதாக ஏற்பட்டு வளர்ந்து காலம் காலமாகத் தொடர்கின்றன என்று குயிலி ஆச்சரியப்பட வானம்பாடி வீட்டுக்கு உள்ளே நுழைந்தாள்.

தரை முழுக்கச் சின்னஞ்சிறு தீபங்கள் வா, வந்து என்னை எடுத்துக் கொள், இருட்டில் இருந்து வெளிச்சம் ஏகலாம் வா என்று சுடர்முகம் புன்னகைக்க, ஆடி அலைந்தன. வானம்பாடி தீச்சுடர் அமர்ந்துவிடாமல் ஓர் அகலை இரு விரல்கொண்டு தூக்கினாள். பார்த்து பார்த்து என்று பின்னாலேயே வந்தாள் கிழவியம்மாள்.

களிமண் பிசைந்து அகலாக்கிச் சுட்ட தீபம் என்பதால் கொஞ்ச நேரம் ஒளிர்ந்ததுமே இந்த அகல் சூடாகி விடும். அதை உள்ளங்கையில் பூத்தாற்போல் எடுத்து வைத்துக்கொண்டு எடுத்துப் போனால் சுடாது.

சொல்லியபடி எப்படி அதைச் செய்வது என்று செய்தும் காட்டினாள்.

சிறிது நேரத்தில் பயணியர் சாலை மற்ற வீடுகள் போல் பிரகாசமாக ஒளிர்ந்தது. குயிலி இருகை உள்ளங்கை எதிரே பார்த்திருக்க அந்தக் கார்த்திகைக் காட்சியை ரகசியமாகப் படம் பிடிக்க முனைந்தாள்.

காலக் கோட்டின் குறுக்கே நிகழும் இந்தக் கார்த்திகைப் பெருவிழாவும், தலைமுறை கடந்த இவர்கள் நாலாயிரத்து எண்ணூறு வருடம் பின்னால் சென்றிருப்பதும் படம் எடுக்க வரமாட்டாமல் குழம்பிப்போய் ஒளி மட்டுமாகத் தெரிந்தது.

படம் பிடிக்க முடியலே அம்மச்சி என்றாள் அவள் கிழவியம்மாளிடம். ஓவியம் வேணுமா இதோ என்று அவள் வீட்டுக்கு உள்ளே போய் மரப்பட்டையில் வண்ணம் பூசி எழுதிய கார்த்திகைத் திருநாள் ஓவியத்தோடு வந்தாள்.

தெருக்கோடியில் நின்ற வழிப்போக்கன் ஒருத்தன் இரண்டு வருடம் முன் வரையலையோ படம் வரையலையோ என்று வீடு வீடாகக் கேட்டு அந்தந்த நிமிடத்தில் வரைந்து கொடுத்து ஒரு பொற்காசு வாங்கிப் போனான்.

கிழவி, நம் வீட்டில் வந்து பார்த்து வரைந்தது இது என்று மகிழ்ச்சியோடு கூறினாள். இந்த ஓவியத்தில் அம்மாச்சி ஏன் இல்லாமல் போனது என்று குயிலி கேட்டாள். வெளிச்சத்தை ஓவியமாக்கும்போது எனக்கு என்ன வேலை அதுவும் அணையப் போகிற பழந்தீ.

தீயில் ஏது பழசும் புதுசும் எனக் கேட்டாள் வானம்பாடி.

நாவல் அத்தியாயத்தை முழுவதும் வாசிக்க, இங்கே சொடுக்கவும்

தீயில் ஏது பழசும் புதுசும்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன