பசலையும் மாமையும் ஒண்ணுதானப்பா

திண்ணை.காம் இதழில் என் புது நாவல் தினை வெளிவரத் தொடங்கியுள்ளது. இந்த வாரம் வெளியாகியுள்ள அத்தியாயம் மூன்றில் இருந்து
//

நாவல் -தினை. அத்தியாயம் மூன்று

முழுமையாக நாவல் ‘தினை’ அத்தியாயம் மூன்று படிக்க முந்தைய வரியைச் சொடுக்குக

//அவன் மலை இறங்க முற்படும்போது துணி மூட்டையைத் தலையிலும், கூழச்சக்கைப் பலாப்பழத்தை கையிடுக்கிலும் இடுக்கியபடி காடன் புலவன்கூட நடந்தான். முடமுதுப் பார்ப்பான் மலைகிழவோனைப் பார்த்துப் பகடியாக உருவாக்கப்பட்டவனா என்று கேட்க நினைத்து வாயைத் திறந்து, வேண்டாம் என்று மூடிக் கொண்டான் அவன்.

”காடா, காதலியிடம் காதல் சொல்ல நினைத்து இப்போது வேண்டாம் என்று வைத்து மறுபடி சொல்ல உத்தேசித்து, தண்ணீரைவிட்டு எந்நேரத்திலும் கரைக்கு எறியப்படப் போகும் மீன்போல் வாயைத் திறந்து திறந்து மூடினான் தலைவன் என்ற உவமை எப்படி இருக்கிறது” எனக் கேட்டான் புலவன்.

”மிக்க நன்று. நான் மாலை நேரத்தில் நண்பர்களோடு அதுவும் இதுவும் உதுவும் பேசும்போது சேர்த்துக் கொள்கிறேன்” என உற்சாகமாகச் சொன்னபடி காடன் நடந்தான் புலவனோடு.

”அடுத்த கூத்துக்குக் கரு உருவாக்கி விட்டேன். நீயும் குறிஞ்சியும் ஆட வேணும்” என்றான் புலவன்.

“புலவர் பெருமானே, அதென்ன மலைவாழ் மக்கள் என்றால் சதா சர்வகாலமும் பறவை மாமிசம் சுட்டுத் தின்றபடி கூத்தாடிக் கொண்டிருப்பது தான் வேலையா? வயிறு வாட இதெல்லாம் செய்ய முடியுமா? நான் தேன் எடுத்துப் போய் சமதரை கிராமங்களில் விற்று வருகிறேன். மாடத்தி காட்டு மூலிகை கொண்டு போய்க் கிராமம் தோறும் கூவிக்கூவி விற்கிறாள். குறிஞ்சிக்கு தினைப் புனம் காப்பதே முழுநேர வேலையாகியுள்ளது. இதில் நானும் அவளும் தழுவி ராத்திரியில் காதல் செய்துகொண்டு உடம்பில் பசலை படர்ந்திருக்க கள்ளு மாந்தி, மாமை படர்ந்த உடம்பைச் சொரிந்து சொரிந்து நினைவு கூர என்ன இருக்கு? மாமை விஷயமெல்லாம் நீர் ஏற்கனவே உரைத்தது. ஓலைத் தூக்கைத் தாரும். கீழே போட்டுவிடப் போகிறீர்”.

அவன் சிரித்தபடி கேட்க புலவன் அவன் கையில் ஓலைத் தூக்கைக் கொடுத்து விட்டு சரிவான ஒற்றையடிப் பாதையில் இறங்கலானான்.

“மாமையும் பசலையும் ஒண்ணுதானப்பா”.

மலை இறங்கும், ஏறும் அனுமதி வாங்குவதற்கான இடத்தில் ஏற மட்டும் வரி பெற்றுக் கொண்டிருந்த அரசு அதிகாரி தூங்கி வழிந்து கொண்டிருந்தார்.

தஞ்சையிலும் குடந்தையிலும் சுங்கச் சாவடியே கிடையாது என்றான் காடன். சுங்கம் தவிர்த்த சோழன் மாதிரி இதரரும் இருக்கக் கூடாதா? அவன் புலவனைக் கேட்க அவன் காதில் விழாதது போல் நின்றான்,

காடன் வியர்வை பூசிய உடல் மின்ன மறுபடி மலை ஏறியபோது சீனத்து விருந்தாளியை பகல் உணவு கொடுத்து உபசரித்துப் பரணில் இளைப்பாற்ற ஆண்கள் கூட்டம் மும்முரமாகப் பணியெடுத்துக் கொண்டிருந்தது.

அவர் கொண்டு வந்திருந்த மாவுக் குழல்களை வென்னீரில் கொதிக்க வைத்து, உலர்ந்த மீனைத் தூளாக்கிக் கலந்து, அவருக்கு இலைத் தட்டிலும் வழங்கப்பட்டது. மலைபடு கிழவோருக்கு சீனர் விருப்பப்படி இரண்டு அகப்பை அந்தச் சீன உணவு அளிக்கப்பட்டது.

கிழவோர் பல் விழுந்துபட்ட வாய்க்கு அருமையான ஆகாரம் கண்டு கொண்டேன் கொண்டேன் என்று மகிழ்ந்து உண்டார்.

தினைமாவைத் தேனில் பிசைந்த கலவையை வேகவைத்து உலர்த்தி மூங்கில் அச்சுகளில் குழலாகத் திரித்து நீட்டி நறுக்கினால் சீனர் உணவுக்குக் கிட்டத்தட்ட அருகில் வரும் என்று பெண்கள் சொல்ல அதை உடனே நடப்பாக்கலாம் எனக் கருத்துத் தெரிவித்தார் முதுகிழவோர்.
//

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன