புது நாவல் ‘தினை’ அத்தியாயம் மூன்றில் மலைபடுகிழவோனும் மற்றவர்களும்

நாவல் ‘தினை’ – அத்தியாயம் 3 திண்ணை.காம் இணைய இதழில் பிரசுரமாகியுள்ளது. அதிலிருந்து-

நாவல் தினை – அத்தியாயம் மூன்று

புலவன் அருகே வந்து புன்னகைத்தான். ’ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி பெற்ற பேரிலை பெறாதவர்க்கு’. ஏதோ ஓலையைப் பார்த்து வேகமாகப் படித்தான்.

“செய்யுள் வடிவான புறப்பாட்டு என்று புதியதாக வரப்போகிற பாக்களின் பெரிய தொகுப்பில் சேர்க்கக் கூல வாணிகரும் அந்தணப் புலவரும் கேட்டபடி இருக்கிறார்கள். தரமான குறிஞ்சித் திணைப் பாடல்கள் கணிசமாகத் தேறவில்லையாம். இந்தப் பாடல் தொகுப்புக்குப் போக வாய்ப்பு உண்டு. எட்டுச் சீர் கொண்ட இரண்டு அளவடியாக மலைவளம் சேர்க்க வேண்டுமாம். போன கூட்டத்தில் சொன்னார்கள். மலைவளம் வேறு பாவில் உண்டு. எடுத்துப் பகர்த்தெழுதிக் கொள்கிறேன் என்றேன். செய்மின் என்றனர்”.

அவன் சொல்லச் சொல்ல முதியோன் குனிந்து வேலை வணங்கி, ”குன்றுதோறும் ஆடுவோனே, இந்தப் புலவன் புரியும் வண்ணம் இனியாவது பேசட்டுமென, கவிதையெழுதட்டுமென அருளுக முருக” என்று ஏற்ற இறக்கத்தோடு குரல் மடித்துச் சொன்னார்.

பக்கத்தில் மர உரலில் யானைத் தந்தத்தால் மூங்கில் நெல்லைக் குத்தி இடித்துக்கொண்டிருந்த முதுபெண்டிர் முருக முருக என்று பாடத் தொடங்கினார்கள். புலவன் அதைக் கேட்டபடி நின்றிருந்தான்.

”அடுத்த வெள்ளி தை வெள்ளியன்றோ, சிறு தெய்வம் பேணும் நாள். நீங்கள் சுனையில் நீராடித் தவக் கோலத்தில் சிறு முத்தனைப் போற்றி வழிபட்டு வர இருக்கிறீர்களா”? புலவன் கேட்டான்.

”அந்தத் தெய்வத்தை ஐந்நூறு வருஷம் முன் குறிஞ்சி, என்றால் இந்தச் சிறுமி இல்லை, குறிஞ்சி நிலமே வழிபட்டது. இப்போது கோவிலே இல்லையே?”. மலைக்கிழத்தி கேட்டாள்.

எழுத்து பொய்யாகுமோ? புலவன் எழுத்தாணியால் தலையில் தட்டிக்கொண்டு வினவினான். ”இந்த வருடம் பொங்கலைக்கூட மூங்கிலரிசி சமைத்துக் கோலாகலமாகக் கொண்டாடி விட்டோம். சிறு முத்தனைப் போற்றி வழிபடுதல் கடினமானதா என்ன? தேனும் தினையும் கொண்டு முத்தனை உருவாக்கி வழிபடுவீர்”.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன