பெரு நாவல் ‘மிளகு’ – Paramans of the Multiverse, line up. You have nothing to lose

An excerpt from my forthcoming novel MILAGU

பரமன் வெளியே வரும்போது யோசித்தபடி ஓடத் தொடங்கினார்.  தெருக் கோடி பெரிய மைதானத்தில் விரிந்தது. பிரகாசமாக தீபம் இன்னும் எரியும் சதுர்முக பசதி வெற்றிடத்துக்கு நடுவே பிரதானமாக எழும்பியிருந்தது. அது ஆடவில்லை. சுழன்று கொண்டிருந்தது.

பரமனுக்கு திடீரென்று தோன்றியது இந்த பசதியிலும் இதன் சுழற்சியிலும் தான் பரமன் திரும்ப அவர் காலத்துக்கும் வசித்த பூமிக்கும் போக வழி இருக்கும். அது எந்தப் பிரபஞ்சத்தில்? அவர் தான் பரமனா, அல்லது பரமனின் பிரதியா? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார் அவர்?

அப்படி நினைவு வந்தபோதே பசதி சுற்றும் வேகம் அதிகமானது. ஓட்டமாக ஓடிப் போய் சுழலும் பசதிக்கு நெருக்கமாக நின்றார். பசதியின் உள்ளே எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் சீரான வெளிச்சம் இரவுக்கும் பகலுக்கும் வித்தியாசம் காணமுடியாமல் அந்தப் பிரார்த்தனை மண்டபம் முழுக்க நிறைத்திருந்தது.

ஒரு வினாடி உற்றுப் பார்த்தார் பரமன். அது பிரார்த்தனை மண்டபம் இல்லை. தெருவும் கட்டிடங்களுமாக வேறு உலகம் அது. அது பம்பாயில் தாதர் ரயில் நிலையத்துக்கு வெளியே காமத் ஓட்டல் வாசல்.

பங்கஜ் நாரி ப்ரீதம் ப்யாரி என்று ஓட்டல் ரேடியோ பாடுகிறது.பரமன் துள்ளும் நடையும் சிறு ஓட்டமுமாக ஓட்டலுக்குள் நுழைவதை வெளியே இருந்து பரமனே பார்க்கிறார்.

உள்ளே படியேறும் பரமன் வெளியே இருந்து பார்க்கும் பரமனுக்கு வயதில் பாதிக்குக் கீழ் இளையவன். ஓடிப் போய் அந்தக் காட்சி வெளியில் கலந்துவிட அவர் மனம் துடிக்கிறது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகளின் பம்பாய். இருபத்தைந்து வயது பரமன்.

ரொம்ப நாள் கழித்துப்  பார்க்கும் பம்பாய். அவசரமாக அங்கே போக பரமன் காலை எட்டிப் போட்டு சதுர்முக பசதி பிரார்த்தனை மண்டபத்துக்குள் நுழைகின்றார்.

அது பசதி மண்டபம் இல்லை. உள்ளே இருந்த இளைய பரமன் இவரைப் பார்த்துச் சிரிக்கிறான்.

இந்தப் பரமனுக்குப் பேச வரவில்லை. ஏதோ தப்பு நடந்திருக்கு என்று முணுமுணுத்தபடி வெளியே நடக்க நினைக்கும்போது வா, காப்பி சாப்பிட்டுப் போகலாம் என்று இளைஞன் வற்புறுத்துகிறான்.

நீ நீங்க நீ யார்னு நான் தெரிஞ்சுக்கலாமா? அந்த இளைஞனை பவ்யமாக விசாரிக்கிறார் இந்தப் பரமர். நான் தான் நீங்க. நீங்க தான் நான். சொல்லிவிட்டுச் சிரிக்கிறான் இளைஞன் பரமன்.

இந்தப் பரமனுக்கு எப்படி என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்ற அறுதப்பழைய வாக்கியத்தைச் சொல்கிறார்.

போதாது என்றுபட, இந்த சந்திப்பு நல்ல நட்பாக மலரட்டும் என்று சொல்லும்போது பரமனுக்கு இந்த சூழ்நிலைக்குத் தகுந்தபடி பேசியதாக சந்தோஷம். சந்திப்பின் மகிழ்ச்சியை அடைந்தாலே போதும்.

நாம் சந்தித்து பழகி நட்பு வளர்க்க முடியுமானால் தேவையில்லாத குழப்பம் தான் ஏற்படும் என்றபடி காமத் ஓட்டல் மேஜை முன் அமர்கிறான் இளைய பரமன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன