பெரு நாவல் ‘மிளகு’ – Veerayee makes a comeback only to bid goodbye

An extract from my forthcoming novel MILAGU

வயதான சத்திரக் காரியகர்த்தா மட்டும் வாசல் படியில் உட்கார்ந்திருந்ததைக் கண்டு சந்தோஷம் ஏற்பட்டது பரமனுக்கு.

மகாதேவரே, தனியாக என்ன செய்யறீங்க இங்கே?

பரமன் கேட்டபடி கிழவரின் சிலீர் எனக் குளிர்ந்த விரைத்த கையைப் பற்ற அவர் பதற்றத்தோடு தன் கரத்தை உதறி யாரும் இல்லே போங்க போங்க என்று திருப்பித் திருப்பிச் சொல்கிறார்.

உள்ளே சோறு இருக்கா, நேத்து வடிச்சதுன்னாலும் சரிதான். பரமன் கேட்க, காரியகர்த்தா மறுபடியும் யாரும் இல்லே போங்க என்கிறார்.

அவர் சித்த சுவாதீனம் இல்லாமல் போயிருக்கிறார் என்று பட்டது பரமனுக்கு. அவரைக் கடந்து உள்ளே போக, அரிசியும், மிளகும், பூசணிக்காயும், புளியும், அலமாரியில் அததற்கான இடத்தில் வைத்திருக்க, அடுப்புகள் வெப்பம் இன்றித் தணுத்து இருந்தன.

எப்படி இந்த சத்திரத்தை சூறாட கேலடிப்படை வரவில்லை என்று தெரியவில்லை. வாசலில் இருந்த காரியகர்த்தாவைச் சற்றே குரல் உயர்த்திக் கேட்டார் பரமன் – ஏன் இங்கே யாரும் வரல்லே?

அவர் திரும்ப அவருடைய வார்த்தைகளைக் கொட்ட ஆரம்பித்து விட்டார் – யாரும் இல்லே. போங்க.

தடதடவென்று அரிசியைக் களைந்து வேகவைத்து, பூஷணிக்காயை நறுக்கி புளிக்குழம்பும் வைத்துவிட்டார் பரமன். சாப்பிட உட்கார்ந்தபோது கண்ணில் கரகரவென்று கண்ணீர் வழிந்தது.

மஞ்சு மஞ்சுநாத் எங்கேடா இருக்கே கண்மணி?

பக்கத்தில் வந்து உட்கார்ந்தார் காரியகர்த்தா. யாரும் இல்லே எல்லோரும் போயாச்சு. அவர் திரும்பச் சொல்ல, வெங்கலப்பானையில் இருந்து எடுத்து அவருக்கும் ஒரு வாழை இலை மடக்கில் பரிமாறினார் பரமன்.

யாரும் இல்லே எல்லோரும் போய்ட்டாங்க. சொல்லியபடி உண்டு முடித்தார் அவர். கை அலம்ப கொல்லைப் பக்கம் போனார் பரமன்.

கிணற்றில் தண்ணீர் சேந்த வாளியை இருட்டில் கிணற்றில் விட, சொத்தென்று எதன்மீதோ பட்டது அது. தீபம் பிடித்து பின்னால் நின்ற கிழவர் யாரும் இல்லே எல்லோரும் போய்ட்டாங்க என்று கிணற்றுக்குள் பார்த்துச் சொன்னார்.

பரமனும் தீபத்தைத் தாழப் பிடித்து கிணற்றில் பார்க்க, உள்ளே உயிரற்ற உடல்கள் கிட்டத்தட்ட பாதி ஆழத்துக்கு நிறைந்திருந்தன. சத்திரத்தில் கூடும் வண்டிக்காரர்கள் அவர்கள் என்று பரமனுக்குத் தெரிந்தது.

எல்லோரும் போய்ட்டாங்க. யாரும் இல்லே. கிழவர் திரும்பச் சொன்னார்.

கேலடிக்காரங்க வண்டிக்காரங்களை கொன்னுட்டாங்களா? கிழவர் உடனே அதே பதிலைச் சொன்னார்.

இவரைக் கேட்டு பயனில்லை. மீதி சோற்றை ஒரு வட்டிலில் வைத்து இலையால் மூடி, புளிக்குழம்பை இன்னொரு பாத்திரத்தில் எடுத்து வைத்தார்.

உக்கிராண அறையில் மீதி பூசணிக்காயை வைத்துவிட்டு வர கதவு திறந்து உள்ளே நுழைந்தவர் அந்த இருட்டில் விளக்கு இருட்டைப் பெருக்கி வைத்த அதிசயத்தை உணரும் முன் தரையில் எதுவோஅவசரமாக அசைந்தது தெரிந்தது.

பரமன் விளக்கைக் கீழே போட்டிருப்பார். கீழே கிடந்ததை அவர் அடையாளம் கண்டு கொண்டார். வீராயி. பரமனய்யா என்று திரும்பத் திரும்ப அழைத்தாள் அவள். பரமன் தன் இடுப்பு வேட்டியை அவிழ்த்து வீராயி மேல் போர்த்தினார். அவள் அழுகைக்கு ஊடே சொன்னதை ஊகித்திருந்தார்,

வயிற்றுப் பசிக்கு உணவு அளிக்கும் சத்திரத்தில் உடல் பசிக்கு உணவு கொண்டிருந்தன வந்த மிருகங்கள். வண்டிக்காரர்கள் காவல் இருந்து உயிரையும் கொடுத்தும் வீராயியை கூட்டமாக சீரழித்திருக்கிறார்கள் அவர்கள்.

வீராயி உங்க அப்பா எங்கே? அவர் இறந்து போய் ரெண்டு வருஷம் ஆச்சு பரமனய்யா. ஏதோ ஒரு ஆசுவாசம் பரமனுக்கு.

வீராயி ஓரமாகக் கிடந்த பிடவையை உடுத்திக் கொண்டு பரமனிடம் போகலாம் என்றாள்.  யாரும் இல்லே எல்லாரும் போய்ட்டாங்க என்று இன்னொரு தடவை சொன்னார் காரியகர்த்தா.

பரமன் வெளியே கிளம்பியபோது வீராயியும் அவரோடு நடந்தாள். மனதே இல்லாமல் அவள் கூட வரச் சம்மதித்தார் பரமன்.

எல்லோரும் வந்தாங்க யாரும் இல்லே இப்போ என்றார் காரியகர்த்தா கடைசியாக.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன