மிளகு – All is well that ends well for Lord Coutinhoe, his housekeeper and his co-researcher

படுக்கை அறைக்கு ஓரமாக ஜன்னல் வழியே பேய் மிளகுக்கொடி திரும்பவும் உள்ளே நுழைந்து படர ஆரம்பித்திருந்ததை சுபமங்களத்தம்மாள் திகிலோடு பார்த்து, குசினிக்காரனை விளித்து அதை வெட்டியெறியச் சொன்னாள்.

அவனும் பயப்பட, பைத்யநாத் வைத்தியர் மருந்துப் பெட்டிக்குள் இருந்து பெரிய கத்தரிக்கோலை எடுத்து கொடியை சுபாவமாக நறுக்கித் தள்ளினார்.

என்ன செய்கிறது இவருக்கு என்று கட்டிலில் சுபமங்களா மேல் முகம் சாய்த்து சயனம் செய்திருந்த பிரபுவுக்கு தன் பிருஷ்டம் இடிபடும் தூரத்தில் நின்று விசாரித்தார் பைத்யநாத்.

பிரபு நல்ல நினைவோடு இருந்தால் இப்படி அவர் முகத்தில் பிருஷ்டம் உரச நிற்பாரா வைத்தியர்? எல்லாம் செயலாக இருந்தால் ஒரு மரியாதை இல்லையென்றால் இன்னொரு வகை மரியாதை, இப்படித்தான் உலகம் போய்க் கொண்டிருக்கிறது என்று தத்துவார்த்தமாக நினைத்தபடி சுபமங்களத்தம்மாள் நடந்ததாக அவள் கருதியதை எல்லாம் வரிசை தப்பியும் முன்பின் யார் என்ன சொன்னது செய்தது குழம்பியும் சொல்லி முடித்தபோது மருத்துவர் பைத்யநாத்துக்குக் கிட்டிய மனக்காட்சியானது, விக்ஞான உபாத்தியாயர் செருப்பை வாயில் கவ்விக்கொண்டு கவுட்டின்ஹோ மாளிகைக்குள் இருந்து துள்ளிக் குதித்து வெளியே ஓடியது.

உபாத்தியாயரும், பிரபுவும் ஏதோ மிளகுப் பதார்த்தத்தை காய்ச்சிக் குடித்து போதம் கெட்டுப் போனதாகவும் தெரிந்து கொண்டார் வைத்தியர். கவுட்டின்ஹோவுக்கு நாடி பிடித்துப் பார்த்தார் அவர். சீராக இருந்தது அது. சுவாசத்தை நாசிக்கு எதிரே உள்ளங்கை வைத்துச் சோதிக்க, அபின் வாடை தூக்கலாக இருந்தததாகப் பட்டது அவருக்கு. அந்த வாடையில் வைத்தியர் தலையே சுற்றத் தொடங்க, பிரபுவுக்கு எவ்வளவு லகரி ஏற்றுவதாக இருக்கும் அது.

என்ன மருந்து பெட்ரோ துரையின் மருத்துவப் பெட்டியில் இருந்து கஸாண்ட்ரா கொடுத்தாள் என்று சொல்லத் தெரியவில்லை சுபமங்களத்துக்கு. அதை விழுங்கியதும் கண் திறக்காமலேயே தன்னோடு சிருங்கார சேஷ்டைகளைத் தொடங்கினார் அவர் என்பதை மட்டும் சொன்னாள் அவள். அதில் ஒரு மறைமுகப் பெருமை தட்டுப்பட்டதை கவனிக்க வைத்தியர் தவறவில்லை.

அந்தக்கொடி காலில் சுற்றி தரையில் விழுத்தாட்டும்படி மூப்பர் என்ன செய்து கொண்டிருந்தாராம்? பதில் தெரிந்தே கேட்கிற கேள்வி அது என்பது போல் சிரிப்போடு வந்த வினா அது.

”வைத்தியர் ஐயா, என்ன ஆச்சு என்று தெரியவில்லை”.

’வேறென்ன ஆகியிருக்கப் போறது? எவளாவது முலைகள் கனத்த தட்டுவாணியை உள்ளே தூக்கிக்கொண்டு வந்து போட்டு ஓடிப் பிடித்து விளையாட உத்தேசித்திருப்பான் கிழவன். இங்கே இப்படி பிரக்ஞை இல்லாமல் இருக்கும்போதே பேய்ப் பிடியாக என்னைப் பிடித்திருக்கிறானே, எழுந்தால் வேறென்ன எல்லாம் பண்ணுவானோ’.

மனதில் பதில் சொல்லி  புன்சிரித்தாள் அவள். ரொம்ப நாளுக்கு அப்புறம் தன்னை புஞ்சிரி பொழியும் சுந்தரிப் பெண்குட்டியாக அவள் உணர்ந்தாள்.

இந்த அதிரூப சொரூபத்தோடு காதல், காமாந்தகமான உறவு எல்லாம் எப்படி சாத்தியமாகிறது என்று தனக்குள் ஆச்சரியப்பட்டார் வைத்தியர். காம அந்தகம் தானே? கண்தெரியா காமத்தோடு முதுமை, சாக்கடையில் மிட்டாய் கிடைத்தாலும் பாய்ந்து எடுத்து, மேலே ஒட்டிய நரகலைத் துடைத்து, தின்னத் தயாராக்குமே, எதுதான் சாத்தியமில்லை? வியந்தார் அவர்.

கொஞ்சம் கஷாயம் காய்ச்ச வேண்டும், குசினிக்கு போக முடியுமா என்று சுபமங்களத்திடம் கேட்க, அவள் பிரபுவின் பிடியிலிருந்து விடுபட செய்ததைப் பார்க்க வைத்தியருக்கே  மனம் ஒருநிலைப்படாமல் அலைபாய்ந்தது.

கவுட்டின்ஹோ இன்னும் அதிகமாக பிரக்ஞை தவறி, கஸாண்ட்ரா வந்து படு என்று சொல்லிவிட்டு உறக்கத்திலும் ஆழ்ந்தார்.

”உன் பிரபுவுக்கு இன்னொரு பிரபுவின் மாளிகை நிர்வாகி மேல் அசுரத்தனமான வெறி போலிருக்கு. அதற்கும் பேய் போல அப்பும் மிளகுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?”

விசாரித்தபடி குசினிக்குத் தானே போய் கனன்று கொண்டிருந்த கரி அடுப்பை உயிர்ப்பித்து கஷாயம் காய்ச்சிக் கொண்டிருந்தபோது தான் அசம்பாவிதம் ஏற்பட்டது.

அது யாதெனில், பைத்யநாத் பின்னால் இருந்து பேய் மிளகு நேரே நிமிர்ந்து உயர்ந்து இரு பக்கமும் இலைக் கரங்களை பிரம்மாண்டமாக நீட்டி அலாதியான   மனுஷப் பிறவியோ, பனிமனிதனோ நடக்கிறது போல் முன்னால் நகர்ந்து பைத்யநாத் வைத்தியர் பின்னால் நெருங்கி நின்று அவர் தோளைத் தீண்டியது.

”சுபமங்களா, நீ போய்ப் படு, இதெல்லாம் ஒண்ணும் நீ நடப்பிக்கிற காரியமில்லை”

பொத்தாம் பொதுவாகச் சொல்லி அடுப்பில் பொங்கி வழியத் தயாராக இருக்கும் கஷாயத்தை இடுக்கி தேடிப் பிடித்து இறக்குவதற்கு முன் பின்னால் திரும்பிப் பார்த்து அவர் அலறியது – ”ஐயோ மிங்கு”.

இடர் வந்தபோது பெண்டாட்டியைக் கூப்பிடும் முதல் மனுஷன் தானாகத்தான் இருக்கும் என்று தோன்ற இடுக்கி போட்டுப் பிடித்த கஷாயப் பாத்திரத்தை சற்றே பின்னால் நின்று அணைக்க முற்பட்ட அசுரத் தாவரத்தின்மேல் வடிக்க, ஒரே வினாடியில் அது இருந்த இடம் தெரியாமல் போனது. அது கிளப்பிய வாடை வீடு முழுக்கச் சூழ்ந்து அங்கங்கே தலை காட்ட ஆரம்பித்த பேய் மிளகை கருவறுத்துப் போட்டது.

அந்த கஷாயத்தை புகட்டியதும் ஒரே நிமிடத்தில் விழித்தெழுந்த கவுட்டின்ஹோ, ”எங்கே அந்த தேவதை கஸாண்ட்ரா?” என்று பைத்யா வைத்தியரின் தாடையைப் பிடித்து அசைத்துக் கேட்டார், ஏதோ, வைத்தியர் அவளைக் கடித்து முழுங்கின மாதிரி.

“அந்தப் பெண்பிள்ளை நினைவை ஒழியும் இந்தக் கிழ வயதில். இறைநம்பிக்கையில் சிறந்து, போகும் காலம் புண்ணியம் தேடும்” என்றாள் சுபமங்களா அவர் விரல்களை நெட்டிமுறித்தபடி.

கவுட்டின்ஹோ அவளை குக்கலின் நரகல் போல் அருவருத்துப் பார்த்து, நீ   உன் வீட்டுக்கு போகலாம் என்று துரத்தினார். பைத்யா வைத்தியரிடம் அவர் அடுத்துச் சொன்னது – ”வைத்தியரே, பேய் மிளகுக்கு எதிர்மருந்து நீர் உண்டாக்கிய கஷாயம் தான். செய்முறை சொல்லும். கணிசமாக வராகன் தரேன்”.

சொல்லியபடி மருந்து சீசாவைக் குலுக்குவது போல் குலுங்கிக்கொண்டு அவர் மறுபடி உறங்க ஆரம்பித்தார். அது பிரக்ஞை தவறுவதில்லை என்று நிச்சயப்படுத்திக்கொண்ட பைத்யா வைத்தியர் அவரை கட்டிலில் படுக்க வைத்து விட்டுத் திரும்ப, பிரபுவுக்கு நெருக்கமாக  சுபமங்களத்தம்மாள்.

”அவருக்கு ஒண்ணுமில்லே. காலையிலே கலகலன்னு எழுந்திடுவார்” என்றபடி நடந்தபோது கவுடின்ஹோவுக்கு நெல்பரலி லேகியம் கொடுத்திருக்கலாம் என்று தோன்றியது வைத்தியருக்கு. போகட்டும் அதை விழுங்கினால், இணைவிழைச்சு சிலருக்கு அதிகமாகிறதாகக் கேட்டறிந்திருந்தார் அவர். கவுட்டின்ஹோ ஏற்கனவே ஸ்திரி நவத்வார வாடை பிடித்து அலைகிறவர். நெல்பரலி வேறே எதுக்கு அவருக்கு?

அவர் வாசல் பக்கம் நகர்ந்தபோது, ”கதவைச் சாத்திட்டு போங்க வைத்தியரே” என்றாள் கண்கள் தரைநோக்கிக் குனிந்து அலைபாய, சுபமங்களம். கதவைச் சார்த்தும் போது வைத்தியர் சுபாவமாக உள்ளே ஒரு நொடி பார்க்க, கட்டிலில் சுபமங்களமும் அவசரமாகப் படுத்துக் கொள்வது கண்ணில் பட்டது.  பேய் மிளகு. அவர் தன்னையறியாமல் சொன்னபடி சாரட் ஏறினார் அவர். குதிரைகள் கனைத்து ஆமோதித்து ரதம் உருள ஆரம்பித்தது.

pic newscientist.com

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன