‘மிளகு’ – பெரும் நாவலின் ஒரு பக்கம் A midwife and wife

மிங்குவுக்கு இது மூன்றாவது முறை பிரசவ வலி கண்டது. ஒவ்வொரு தடவை வலிக்கும்போதும் உள்ளறையில் இருந்து வேதனை முனகல் கேட்டு மிங்குவின் கணவர் பைத்யநாத் வைத்தியர் உள்ளே ஓடிப் போய் நோக்குகிறார்.

அங்கே இருக்கும் மருத்துவச்சி ராஜம்மா அவரை வாசலுக்குக் கை சுட்டி மிதமான குரலில் சொல்கிறாள் – ”மருமகனே, நீங்க ஊருக்கெல்லாம் வைத்தியம் பார்க்கலாம். ஆனா இப்படி வைத்தியர் பெண்டாட்டிக்கும் பிரசவம் பார்க்கறது இந்த மருத்துவச்சிதான். எப்போ உங்களை உள்ளே கூப்பிடணுமோ அப்போ கூப்பிடறேன். அதுவரை வாசல்லே இரும்”. வைத்தியரை வெளியே விரட்டாத குறையாக அனுப்பி வைக்கிறாள்.

பத்து நிமிடம் சென்றிருக்கும். ஆச்சா? ரகசியம் பேசும் குரலில் விசாரித்தபடி வைத்தியர் திரும்பவும் உள்ளே ஓடி வருகிறார். மருத்துவச்சி ராஜம்மா இல்லை என்று தலையசைக்கிறாள்.

”அது வந்து, பனிக்குடம் உடைஞ்சு அவள் சத்தம் போட்ட மாதிரி கேட்டது”.

”பனிக்குடம் உடைஞ்ச பொண்ணு சத்தம் போடறது தான் உங்களுக்கு கேட்டு அனுபவம். எனக்கு உடைஞ்சது என் கர்ப்பத்திலேன்னு சுய அனுபவம். பதறாமல் போய் உக்காருங்கோ. நான் பார்த்துக்கறேன். எப்போ கூப்பிடணுமோ அப்போ கூப்பிடறேன்”.

பனிக்கால இரவாக இருந்தாலும் வைத்தியருக்கு வியர்த்துக் கொட்டியது. நடுவயதைத் தொடும்போது ஏற்பட்ட கர்ப்பம். மிங்குவுக்கு முப்பத்தைந்து வயது. வைத்தியரோ நாற்பதைத் தொட்டாகி விட்டது. இந்த வயதில் குழந்தை பெற்றுக்கொண்டால் இரண்டு பேருக்கும், ஏன், குழந்தை வளரும்போது அதற்கும், கஷ்டம் இல்லையா?

வைத்தியரும் மிங்குவும் கர்ப்பத்தில் முடியாத உடல் சேர்க்கையையே எப்போதும் கடைப்பிடிப்பது என்று தீர்மானித்துச் சென்ற இரண்டு வருடமாக செயல்பட்டார்கள். என்ன செயல்பட்டோம் என்று வைத்தியர் அதிசயித்தார்.

நாள் பார்த்து சம்போகம், அவ்வப்போது அணைப்பு என்று உபத்திரவமில்லாமல் போய்க்கொண்டிருந்த தாம்பத்ய ஜீவிதம், போன காமன் பண்டிகை ராத்திரி அவரும், மிங்குவும் அரிசி மது அருந்தியதும் விழித்தெழுந்து, இப்போது மருத்துவச்சி வந்து வீட்டுக்குள் சட்டமாக உட்கார்ந்து வைத்தியரை அதிகாரம் செய்வதில் முடிந்து கொண்டிருக்கிறது.

இன்னும் ஒரு மணி அல்லது ரெண்டு மணி நேரத்தில் குழந்தை பிறந்து விடும். வீடே மாறப் போகிறது அப்புறம். மிங்கு ரெண்டு மாதமாவது மகாராணியின் நம்பிக்கைக்குரிய தாதியாக பணி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி குழந்தையைப் பராமரிக்க வேண்டும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் அவள் வேலைக்குத் திரும்ப வேண்டும்.

ராஜாங்க வைத்தியராக தான் இருப்பதை விட, மிங்கு சென்னபைரதேவி ராணியம்மாவின் பிரத்யேக தாதி என்பது மிர்ஜான் கோட்டையிலேயே சக்தி வாய்ந்த ஒரு உத்தியோகம். அதை எப்படியும் வைத்தியர் குடும்பத்தில் தக்கவைக்க வேண்டும் என்று வைத்தியர் தீர்மானித்திருக்கிறார்.

வைத்தியர் மறுபடி வீட்டுக்குள் அரைகுறை இருட்டில் பார்க்கிறார். மருத்துவச்சி வெற்றிலை பாக்கை சின்னஞ்சிறு தாம்பூல உரலில் டொக்டொக்கென்று இடிக்கிற சத்தமும், சில்வண்டு இரையும் சத்தமும் தவிர ராத்திரி அமைதியானது.

pic A child birth in ancient Rome
ack historyextra.com

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன