மிளகு – எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் இருந்து : மிர்ஜான் கோட்டையில் நிர்மல முனி நிகழ்த்திய பேருரை

Draft of an excerpt from my novel Milagu – work in progress. All rights @era.murukan

பிரபஞ்சத்தில் அனைவருக்கும், அனைத்துக்கும், என்றால், உயிருள்ள, உயிர் என்பது இல்லாத அனைத்துப் பொருட்களுக்கும் ஆன்மா உண்டென்று மொழிந்தருளினார் பகவான் மகாவீரர். ஒரு குக்கலை, என்றால் நாயைக் கல் எறிந்து காயப்படுத்தும் மூடர்கள் போல ஒரு செடியை இழுத்துப் காயும் பூவும் பறிக்கும் மூடர்களும் அந்தத் தாவரத்தை வலியால் துடிக்க வைக்கிறார்கள் என்று சொல்லியருளினார் அந்த மகான். அது மட்டுமில்லை, ஒரு கல்லை இன்னொரு கல் கொண்டு தாக்கினாலும் தாக்கப்பட்ட கல்லுக்கு வேதனையும் வலியும் மிகும் என்பதைப் புரிந்து கொள்வீர்களாக.

மண்ணுக்கும், அதில் ஆழத்தில் வசிக்கும் மண்புழுக்களுக்கும், மேலே செடிகொடி மறைவில் வாழும் எலிகள், முயல்களுக்கும், துன்பம் ஏற்படுவது நிலத்தைப் பண்படுத்திப் பயிர் செய்வது மூலம் துன்பம் ஏற்படும். எனவே வேளாண்மை வேண்டாம், உணவு துறந்து நோற்றுச் சுவர்க்கம் புகுவோம். உங்களில் எத்தனை பெயர் உலகைத் துறக்க, உணவுச் சுவை துறக்க, உறவுச் சுவை துறக்க, ஆடை துறக்க மனம் ஒப்புகிறீர்கள்? யாரும் மாட்டீர்கள். மனம் பக்குவப்படும் வரை.

நிர்மல முனி என்னும் நிர்மலானந்த அடிகள் வாயைச் சுற்றிக் கட்டிய இரட்டை வெள்ளைத் துணிக் கவசங்களுக்கு இடையே வடிகட்டிய குரல் மெதுவாகக் கசிந்து வரப் பேசினார். தரையில் ஒரு கால் மடித்து மறு கால் நீட்டி உட்கார்ந்திருந்தார் அவர். அவர் முன், தண்ணீர்ப் பாத்திரம் வைத்த சிறு மரமேடை அவருடைய இடுப்புக்குக் கீழே மறைத்து இருந்தது. திசைகளையே ஆடையாக உடுத்த திகம்பரரான அவர் இப்படி மதபோதனைச் சொற்பொழிவு செய்யாத நேரத்தில் இடுப்பில் உடுப்பு இல்லாததைப் பற்றி நினைப்பதே இல்லை.

அரண்மனைப் பிரதானிகளும், அழைப்பு கிட்டிய பெருவணிகர்கள் மற்றும் நகரப் பிரமுகர்களும் சமணத் துறவியின் உபதேச உரை கேட்கப் பெருமளவில் வந்திருந்தார்கள். அவர்களில் பத்துப்பேர் கூட சமணர் இல்லை. சென்னபைரதேவி வரச் சொல்வதால் தட்டாமல் வருகிறவர்கள் பலரும்.

எல்லாம் பிரதானி கோரிக்கை விடுத்ததில் தொடங்கியது. அரசியின் அறுபதாம் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தது பற்றிப் பேசும்போது, இந்துமத, சமணப் பேருரைகள் நிகழ்ச்சியின் பகுதியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னதோடு இன்னொன்றும் கூறினார் அவர்.

“அம்மா, இந்த வருடம் மிளகுப் பயிருக்கு தேவையான மழை இன்னும் பெய்யவில்லை. வந்து விடும் என்றாலும் தெய்வத்தைப் போற்றிக் கொண்டாடிக் கூட்டமாகப் பக்திப் பாடல் இசைத்தும், சான்றோர் நல்ல விஷயங்களைப் பற்றி உரை நிகழ்த்தியும் நல்ல வாக்குகளை வெளியிலெங்கும் பரப்பி, மழைத் தேவனையும் மற்றச் சிறு தெய்வங்களையும் மகிழ்ச்சியடைய வைத்தால், மழை நிச்சயம். சமண, இந்துத் துறவிகளை உங்கள் பிறந்த நாளைச் சிறப்பித்து நல்வாக்கருளி மிர்ஜான் கோட்டையில் உரை நிகழ்த்த அழைத்து வர உங்கள் உத்தரவு உண்டு தானே? இசை நிகழ்ச்சிகளை ஜெருஸோப்பாவில் ஏற்பாடு செய்திருக்கிறோம்.

மழை பெய்யப் பிரசங்கம் என்றதுமே இதெல்லாம் தெரிந்தவள் அப்பக்கா மகாராணி என்று சென்னபைரதேவி நிச்சயம் செய்து விட்டாள். அப்பக்கா அவள் ராஜாங்க இருப்பிடமான புட்டிகே-யில் தான் மழை காலம் என்பதால் இருக்கிறாள் என்று செய்தி கொண்டுபோய் திரும்ப வாங்கி வரும் தூதர்கள் சொன்னார்கள். வைத்தியனும் சொன்னான். கோடை வந்தால் அங்கே இல்லாமல், இரண்டாவது தலைநகரான உள்ளல் துறைமுக நகரில் ஏற்றுமதி ஆகும் வெல்லமும், லவங்கப் பட்டையும் தரமானதாக இருக்கிறதா என்று வர்ததகர்களோடு வர்த்தகராக மேற்பார்வை பார்த்தபடி நிற்பாள். போகவர வெல்லம் கிள்ளித் தின்னவும் அவளுக்குப் பிடிக்கும்தான்.

நேரம் கடத்தாமல் குதிரையேறி விரையும் தூதர்களை அப்பக்காவிடம் லிகிதத்தோடு அனுப்பினாள் சென்னா. பதில் உடனே தேவை என்று கேட்டிருந்தாள்.

சுருக்கமான கடிதம் அது.

பிரியமான அபி, நாட்டில் மழை பெய்ய வேணும். பேசினால் மழை பெய்யும் என்ற க்யாதி உள்ள சந்நியாசிகளில் அதி சிறந்தவர் பெயரையும் எங்கே அவரைக் கண்டு அழைத்து வரலாம் என்பதையும் உடனே பதில் லிகிதமாக எழுது. சிகப்பு ஆடைத் துறவிகள் மட்டுமில்லை, திகம்பரர் என்றாலும் சரிதான். மழைக்காலத்தில் சாதுர்மாச விரதமாக ஒரே இடத்தில் நான்கு மாதம் ஆராதித்திருக்க முனிகளுக்கு மிர்ஜானிலோ ஹொன்னாவரிலோ, ஜெருஸோப்பாவிலோ தகுந்த வசிப்பிடம் ஏற்பாடு செய்து விடலாம்.

கடிதம் வந்த அடுத்த நாளே அப்பக்கா அனுப்பிவைக்க நிர்மலானந்த அடிகள் வந்து சேர்ந்தார். சாதரணமாக எவ்வளவு தூரம் இருந்தாலும் அங்கங்கே இருந்து இளைப்பாறி நடந்து தான் வருவது வழக்கம் சமண சந்நியாசிகள் எல்லோருக்கும்.

அவசரம் என்பதால் வாடகைக்கு வண்டி பண்ணி அனுப்பாமல் அப்பக்காவின் சொந்த சாரட்டில் அவரை ஏற்றி மிர்ஜானுக்கு அனுப்பியிருந்தாள் அவள். குதிரைக்குத் துன்பம் என்று அதற்கு எத்தனை மறுப்பு தெரிவித்திருப்பாரோ. அப்பக்கா எத்தனை மன்றாடி அவரை மிர்ஜானுக்கு அனுப்பி வைத்தாளோ.

கடுமையான உதர நோய் கண்டு குணமடைந்ததால் ஒரு பொழுது மட்டும் உண்ணும் திகம்பர விதிமுறையைச் சற்றே தளர்த்தி பகலிலும் மாலையிலும் ஒரு கைப்பிடி உண்ணுவாராம் நிர்மலானந்த முனியவர்கள். அவர் என்ன உண்ணுவார், எப்போது உண்ணுவார், எவ்வளவு உண்ணுவார் என்பதையும் எழுதியிருந்தாள் அப்பக்கா.

அதன்படி காலை ஐந்து மணிக்கு ஒரு குவளை காய்ச்சாத பசும்பாலும் சிறு கிண்ணத்தில் உலர்ந்த திராட்சைப் பழங்களும். பகலில் பருப்பு சாதம் தால் சாவல் ஒரு சிறு கோப்பை, ஒரு குவளை குடிநீர். சாயந்திரம் ஐந்து மணிக்கு இரண்டு கரண்டி சோறும், புளிக்குழம்பும், தணலில் வாட்டிய பப்படமும் சாப்பிடும் துறவி அவர். அதெல்லாமே மிர்ஜான் கோட்டை அருகே கிராமங்களில் கிடைக்கும் என்பதால் சாமியாருக்கு விருந்து புரக்கும் மரியாதை செய்ய சென்னாவால் முடிந்தது.

நிர்மலானந்த அடிகளின் உபந்நியாசத்தைக் கேட்க முதலில் வந்தது கோட்டைக் காவலர்களில் வயதானவரான இஸ்லாமியர் குர்ஷித் மியான். ”நான் எல்லா மதத்திலும் நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ள சொற்பொழிவுகளுக்குப் போகிறேன் அம்மா. இந்த சமண சாமியார் வித்தியாசமானவர் என்றார்கள். என்ன வித்தியாசம் என்று பார்க்க வந்தேன்” என்றார் அவர் சென்னபைரதேவியிடம் மரியாதை விலகாத குரலில்.

மேடையில் உடுப்பு இல்லாமல் நிர்மலானந்த அடிகள் அமர்ந்திர்ப்பதைப் பார்த்து சற்றே சங்கடத்தோடு முதல் வரிசையில் உட்காராமல் ஐந்தாவது வரிசைக்குப் போனாள் சென்னா.
அவர் பேசுவது எல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. இது மட்டும் தான் சமண மதம் என்று சொன்னால் சென்னா நம்ப மாட்டாள். கல்லுக்கும் உயிர் உண்டு என்பதால் கல்லை உடைத்துக் கட்டடம் கட்டி வசிக்கக் கூடாது. கல்லைக் கொண்டு கோவிலும் கட்டக் கூடாது. கேட்க நன்றுதான் இது.

வேளாண்மையின்போது மண்ணுக்குள் நெளியும் மண்புழுவும் மற்றவையும் இறக்கக் கூடிய அபாயம் உள்ளதால் பயிர்த்தொழில் வேண்டாம் என்கிறாரே அடிகளார். அதைப் பற்றி யோசித்தாள் சென்னா பேச்சு முடிந்து எழுந்தபோது. சாப்பிடாமல் வயிற்றைப் பட்டினி போட்டு இறைவனின் திருவடி போவதுதான் எல்லோருக்கும் விதிக்கப்பட்டதா? சார்ந்தவர்களுக்கு எளிய சோறும், புளிக்குழம்பும், மோரும், ஒற்றைக் காய்கறியும் கூடத் தர முடியாதவர்கள் எதில் சேர்த்தி? தகப்பன், தாய், பெண்டாட்டி, மகன், மகள் என்று நெருங்கி இருந்து வாழும் உறவில் வந்தவர்களுக்கு சோறு போடாமல், பட்டினி கிடந்து போகிற சொர்க்கத்தில் என்ன மகிழ்ச்சி கிடைக்கும்? துறவறத்தையும் அஹிம்சையையும் இவ்வளவு தூரம் இழுத்து வந்தது சரிதான். எல்லோரும் துறவியாக முடியாது. ஆனவர்கள் கடினமாக அஹிம்சையைக் கடைப்பிடிக்கட்டும். மற்றவர்கள் முடிந்த அளவு அன்பே லட்சியமாக, தினசரி வாழ்க்கையில் தீச்செயல் விலக்கிப் சக மனிதர்களான பிற உயிர்கள் மேல் அன்பு கொண்டு இருக்கட்டும். கடைப்பிடிக்க முடியாத போதனைகளை தீர்த்தங்கரர்களின் பாதம் பணிந்து வணங்கிக் கடந்து போவதன்றோ இனிச் செய்ய வேண்டியது.

சென்னாவுக்குப் பசித்தது. பழைய சோறு கூடாது. பூச்சிகள் பறந்து வந்து பாத்திரத்தில் சோற்று நீரைப் பருக எழுந்து இறந்து வீழலாம். ஆக புதுச் சோறு, பழைய சோறு எதுவும் வேண்டாம். உடுப்பும் தேவை இல்லை. சென்னா மலையாகச் சோறைக் குவித்து உண்ணப் போகிறாள். புளிச்சாறும், தயிரும், உப்பிட்டு ஊறிய எலுமிச்சையும் உண்டு உண்டு வயிறு வலிக்கட்டும். வைத்தியன் கவனித்துக் கொள்வான். அவள் அவசரமாகப் புடவையை இறுக்கிக் கொண்டாள்.

மழை பெய்ய ஆரம்பித்திருந்தது.

நிர்மலானந்த அடிகள் பேசி முடித்தபோது கனமழை பொழிந்ததால் அவருடைய பேச்சு ராசி எல்லோருக்கும் பிடித்துப்போனது. மழை தொடர்ந்து பெய்யும் மழைக்காலம் வழக்கத்தை விடச் சீக்கிரம் வந்து சேர்ந்ததுக்கு எல்லோருக்கும் மகிழ, அப்பக்கா மழையிலேயே மிர்ஜான் வந்துவிட்டாள்.

”அடி என் செல்ல சாளுவச்சி. சொன்னேனே, நிர்மலானந்த அடிகள் பிரசங்கிச்சால் மழை கொட்டும்னு. நீ பாதி நம்பினே. இப்பப்பாரு. உன் காட்டிலே நாட்டுலே மழை”.

அப்பக்கா சென்னபைரதேவியை இறுகக் கட்டிக்கொண்டு கொத்தளத்தில் நின்று அவளோடு மழைச் சாரலில் ஆடினாள்.

Pic Fort Mirjan – Ack with thanks en.wikipedia.org

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன