New – from the new novel Milagu I am writing – வைத்தியன் வந்த நாள்

அரண்மனை வைத்தியன் ஒரு போத்தல் நிறைய அடைத்த முகர்ந்து பார்க்கும் உப்போடு சென்னபைரதேவியின் திருமுன்பு மரியாதை விலகாமல் நின்று கொண்டிருந்தான். அவன் கையைத் தள்ளி எழுந்திருக்கப் பார்த்தாள் சென்னு. அவனா விடாக்கண்டனாக அழிச்சாட்டியமாக அங்கேயே நின்றான்.

”என்னை முதல்லே யானைக் காலாலே மிதிக்க வச்சுக் கொன்னுட்டு சர்பத் குடிக்க திருமனசு வைக்கணும் மகாராணி. இப்பவே கொன்னுடுங்கோ”

வைத்தியனின் விநோதமான கோரிக்கையைப் புன்சிரிப்போடு கேட்டுக் கொண்டிருந்தாள் சென்னபைரதேவி. அவன் மேல் தப்பில்லை. சென்னுவின் நாக்கு தான் சின்னக் குழந்தை போல் உணவு ருசியில் மயங்கி விட்டது. குளிரப் படுத்திய குடிநீர் கிடைத்ததா? ஆமாம். அதில் போத்தல் நிறைய எடுத்த முகலாய ஷெர்பத் கலந்தாச்சா? ஆச்சே. சேமியா நாடாக்களை உடைத்துப் போட்டு, வெல்லம் சீய்த்துக் நெய்யில் வறுத்த அரை காலாக பாதாம் பருப்பும், பிஸ்தாவும், பெரிய பேரிச்சம் பழத் துணுக்குகளும் கலந்தானதா? ஓ ஆனதே. இந்தக் கலவையைக் களிமண் பானைக்குள் பானையாக நான்கு அடுக்கு வைத்து வெளியே சர்க்கரையிட்டுக் காய்ச்சிக் குளிர்ந்த பசுவின் பால் ஊற்றிச் சுற்றிலும் மலைத் தொடரிலிருந்து மரத்தூள் குடுக்கையில் எடுத்து வந்த பனிக்கட்டியை அணைத்தபடி வைத்தானதா? ஆனது. நான்கு மணி நேரம் பொறுத்தானதா? ஐந்து மணி நேரம் காத்திருந்தானது. பெட்டிக்குள் என்ன கண்டீர் மகாராணி? இனிப்புச் சுவையான, கேசரி நிறம் கொண்ட பாலும் பருப்பும் ஷெர்பத்தும் கலந்த அபூர்வமான சுவை உணவு. வைத்தியன் வருவதற்குள் தின்று தீர்க்க வேண்டும். வயிறு வலித்தாலும் சரிதான்.

பிறந்த நாளுக்கு சென்னு தனக்கே தனக்கான கொண்டாட்டமாக வைத்துக் கொண்டது இந்த இனிப்புப் பனிக்கட்டிதான். ஒன்று மட்டும் தின்ன நினைத்திருந்தது வேறு யாரும் கவனிக்காததால் எட்டு பனிச் சுவைக் கட்டி ஆனது. நடு ராத்திரி தொடங்கி அடிவயிறு சுண்டி இழுத்து வலிக்கத் தொடங்கியது நிமிடத்துக்கு நிமிடம் கூடிக்கொண்டுதான் போனதே தவிர குறையவில்லை.

அம்மா, இன்னும் வலி இருக்கா? வைத்தியன் கேட்க இல்லை என்றாள் தலையசைப்பில் சென்னபைரதேவி.

வைத்தியன் பரமேஸ்வர பைத் வங்காளி. வந்த ஒரு மணி நேரத்துக்குள் எதையோ சுட வைத்து வேறெதையோ அள்ளிப் போட்டு, மற்ற ஒன்றைக் கை மறைவாகக் கிள்ளிப் போட்டு, அஸ்கா சர்க்கரை கேட்டு வாங்கி இனிப்பு கிண்டுவது போல் நெய்யில் குழைத்து கலந்து சின்னஞ்சிறு அடுப்பில் அவன் கொதிக்கக் கொதிக்கக் காய்ச்சி மகாராணிக்குக் குடிக்கக் கொடுத்த பானத்தை அதன் வாசனைக்காகவே யாரும் வேண்டாம் என்று சொல்லாமல் பிரியத்தோடு ஒரு சொட்டு மிச்சமில்லாமல் குடித்துவிட்டு போவார்கள். சென்னுவுக்கு இரண்டு மடக்கு குடித்த அப்புறம் அது வேண்டியிருக்கவில்லை.

“அம்மா இது வேணாம் என்றால் நல்ல கசப்பாக, ஜாதிக்காய்ப் பொடி போட்டுக் கலக்கித் தரேன். பானம் செய்விக்க உத்தரவாகணும்”

“உன் தலையிலே உத்தரவாக. ஒண்ணு பாகல் காய் கசப்பு. இல்லையோ அஸ்கா சீனி இனிப்பு. ரெண்டுக்கு நடுவிலே உனக்கு மருத்து பண்ணவே தெரியாதா?” உண்மையில் கோபமில்லை. விளையாட்டு தான்.

“நீங்க என்னை முதல்லே யானைக் கால்லே இடற வச்சுக் கொன்னுடுங்க. அல்லது குதிரையாலே கட்டி இழுக்கப்பட்டு கை கால் தனித்தனியாகப் போக வச்சுடுங்க. அதுவும் இல்லேன்னா பீரங்கி உள்ளே வச்சு வெடிச்சு வெளியே தள்ளிப் பொடிப்பொடியாப் போக வைக்கலாம். அது எல்லாமோ ஒன்று ரெண்டோ நடந்த அப்புறம் பனிக்கூழோ கட்டியோ விருப்பம் போல சாப்பிடுங்க. வயித்து வலி வரலாமா வரலாமான்னு வாசல்லே நிக்கும். வாவான்னு வெத்தலை பாக்கு வச்சு வரவேற்பு, கூடிக் குலாவல் எல்லாம் நடக்கட்டும். நான் இல்லே. ஆனைக் கால்லே, பீரங்கி உள்ளாற நான் போய்க்கிறேன். பால் மட்டும் ஊத்திப் படைக்கச் சொல்லிடுங்க”

சென்னு அடக்க மாட்டாமல் சிரித்தாள்.

டேய் வைத்தியா நீ உங்க அப்பா வைத்தியரோடு சின்னப் பையனா மருந்து மூட்டையைத் தோளிலே தூக்கிக்கிட்டு வந்ததை இன்னிக்குத் தான் பார்த்த மாதிரி இருக்கு. நீயானா என் கிட்டேயே அழிச்சாட்டியம் பண்ணிண்டு நிக்கறே. சரி என் நல்லதுக்குத்தான் பண்ணறே. இத்தனை முஸ்தீபா அதுக்கு? ஒரு வேளைக்கு நாலு பனிக்கூழ்கட்டி தின்னா குத்தமா? ஊர்லே படிச்சவங்க யார்கிட்டேயாவது கேட்டுப் பாரு. இங்கே கூட்டிட்டு வந்து என் முன்னாலே கேட்பேன்னாலும் சரிதான்.

“சரி அம்மா, யாராவது ஒண்ணுன்னு சொல்லி எட்டு கட்டி பனிக்கூழை வாரி வாரிச் சாப்பிட்டு உடம்பு ஒண்ணும் ஆகலேன்னு இருப்பாங்களா? அதுக்கு எனக்கு புரியறமாதிரி நியாயம் ஏதாவது சொல்லுங்கம்மா”.

பக்கத்தில் வைத்திருந்த ஓலை விசிறியை வைத்தியன் மேல் தூக்கிப் போட்டாள் சென்னு. இன்றைக்கு மீதி பனிக்கூழ் இருந்தால் இந்தப் பயல் போனதும் அதை ஒரு வழி பார்க்க வேண்டியதுதான். இவன் மருந்து கொடுக்கும் போது கொஞ்சம் தாராளமாக இன்னொரு தினத்துக்கு வருவது போல் வாங்கிக் கொள்ளலாம். பட்கல் போறேன் மால்பே போறேன் மங்கலா புரம் போறேன்னு பிரயாணத்துக்கான மருந்துன்னு கேட்டு வாங்கிடணும்

நான் அடுத்த வாரம் மங்களாபுரம் போறதா உத்தேசம்

அவள் அடி எடுத்து ஆரம்பிக்க, அந்த புத்திசாலி வைத்தியன் உடனே வணங்கிச் சொன்னது இது –
அடுத்த வாரம் முழுக்க வேறே காரியம் ஏதும் இருந்தா அதை மாற்றி வச்சுட்டு நான் முதல் சேவகனாக வந்துடறேன் மகாராணியம்மா. அதை விட வேறென்ன எனக்கு பெரிய வேலை?

படம் கோகர்ணம் மஹாபலேஷ்வர் கோவில்
Pic courtesy hellotravel.com

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன