எழுதி வரும் புது நாவல் ‘மிளகு’வில் இருந்து – வாழை இலைப் பெட்டி

தலைநகர் ஜெருஸப்பா தெருக்களிலும், மிர்ஜான் கோட்டைக்குச் சுற்றிலும் உள்ள நெல் வயல்களைக் கடந்து நிறைந்துள்ள கிராமங்களிலும், மிர்ஜான் நகரிலும், இந்த மிர்ஜான் கோட்டைக்கு உள்ளே பலவிதமான பணிகளில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் இன்று இதோ பாருங்கள் இந்தப் பொதியை ஆளுக்கொன்றாக அளிக்கிறோம். குழந்தைகளுக்குச் சற்றே சிறிய பொதியும் பெரியவர்களுக்குப் பெரிதுமாக அளிக்கப்படும் இதெல்லாம்” என்றபடி சிறு பேழை போல் மடித்து ஈர்க்கு குத்திய பச்சைப் பெட்டி ஒன்றைக் காட்டினான்.

“இதென்ன, வாழை இலையை வளைத்து நெளித்து ஈர்க்குச்சி செருகி, வாழைநார் கட்டிச் செய்த மாதிரி இருக்கே” என்று ஆச்சரியப்பட்டு அந்தப் பொதியைத் திரும்பத் திரும்ப தூக்கிப் பார்த்தாள் சென்னு.

”உள்ளே என்ன இருக்கு ரஞ்சி?” ரஞ்சிதா முகம் மலர நின்றாள். அரசியார் ரஞ்சி என்று செல்லமாக அழைத்தால் மனம் முழுக்க நிரம்பிய சந்தோஷத்தில் இருக்கிறார் என்று அவளுக்குப் பொருள் கொள்ளத் தெரியும்.

“கமகமவென்று நெய் வாடை வரவில்லையா அம்மா, மொகலாய் பிரியாணி தான்.”

”ஏது முகலாயர்களைப் போரிட்டு அழிக்க முடியாது என்பதால் அவர்களுடைய பிரியாணியைத் தின்றே அழிக்கத் திட்டமா?” சிரித்தாள்.

“அது சரி, பிரியாணி வாசனை புரிகிறது. கூடவே வேறு ஏதோ நல்ல வாசனையும் தட்டுப் படுகிறதே” பொதியைச் சுட்டிக்காட்டிக் கேட்டாள் சென்னு.

”ஆம் அம்மா, பிரியாணியோடு கூடவே இரண்டு பருப்பு வடைகளும் தனியாகப் பொதிந்த லட்டு உருண்டையும், அல்வாத் துண்டும் வைத்திருக்கிறது. குழந்தைகளுக்கு இனிப்பு முட்டாயும் ஆளுக்கொரு கொத்து காய்ந்த இலையில் பொட்டலம் கட்டி உள்ளே இட்டிருக்கிறது. இந்தப் பொதி போல் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் விருந்துணவுப் பொதிகள் காலையிலிருந்து மேற்கு வீதி முழுக்க பந்தல் போட்டு தெருவில் வரிசையாக அடுப்பு பற்றவைத்து ஏற்றிக் கிண்டிக் கிளறி இறக்கப்பட்டு சூடும் சுவையுமாகப் புதிதாகப் பறித்த வாழை இலைகளில் பொதியப்படுகின்றன.
இனிப்புகளுக்காக இன்னொரு பிரிவு கூடவே சுறுசுறுப்பாக இயங்குகிறது”.

சென்னபைரதேவிக்கு நேமிநாதனை வியக்காமல் இருக்க முடியவில்லை. தெற்கு வீதியும், கிழக்கு வீதியும் அவள் தினசரி அலுவல் காரணமாக அல்லது போர்த்துகீசியர்களை அத்தியாவசியமாகச் சந்திக்கச் செல்லும்போது கடந்து போகும் வீதிகள். அங்கே ஒரு நெருப்புப் பொறி பறந்தால் கூட சென்னுவின் கூர்மையான பார்வைக்கு அது தப்பியிருக்க முடியாது. விருந்தெல்லாம் வேண்டாம் என்று சொல்லியிருப்பாள். ஆனால் மேற்குவீதி உள்ளொடுங்கி உள்ளதால் பார்வைக்குத் தப்பிவிடும் என்று கணக்குப் போட்டிருக்கிறான் நேமிநாதன்.

மகனே ஆனாலும் பாதுகாப்பு வளையத்தில் ஒரு சிறு தொய்வு அங்கே இருப்பதையும் அவனறியாமலேயே சொல்லாமல் சொல்லி உணர்த்தி விட்டான். இனி மேற்குத் தெருவும் சுற்றித்தான் சென்னு பயணம் போவாள்.

அவள் முன் மண்டபத்துக்கு நடந்தபோது தயங்கி நேமிநாதன் ஒரு அடி பின்னால் வந்து கொண்டிருந்தான். கூடவே ரஞ்சனாதேவி. வரிசையாக அணிவகுத்து அங்கே நின்ற சிப்பாய்கள் “மிளகுப் பேரரசி நீடு வாழ்க” என்று மேற்கத்திய பாணியில் போர்த்துகீசியரையும் ஆங்கிலேயர்களையும் போல பாதுகைகள் சப்திக்க கால் தரையில் அறைந்து நின்று விரைப்பான இங்கிலீஷ் சலாம் அடித்தார்கள்.

“சல்யூட் அடிக்கும் வீரனுக்கு பதில் மரியாதையாக இருகை கூப்பி வணங்கலாமா?” ரஞ்சிதா நேமிநாதனிடம் கேட்டது சென்னுவின் பாம்புச் செவியிலும் விழுந்தது. “நானும் சல்யூட் அடிக்கப் போகிறேன். மேற்கில் ஆண் பெண் பேதமில்லாமல் வணங்கும் முறை அதுதானாம்” என்றபடி அவர்களோடு முன் மண்டபத்தில் நுழைந்தாள் சென்னபைரதேவி.

மண்டப வெளியில் மிர்ஜான் கோட்டைக்கு வெளியே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மிர்ஜான் துறைமுக நகரில் வாசனை திரவியக் கடைகள் வைத்திருக்கும் வணிகர்கள் மாணப் பெரிய மலர் மாலையும், வெள்ளித் தகட்டால் செய்து கண்ணாடிப் பேழைக்குள் பொருத்திய ராம பட்டாபிஷேக சிற்பமுமாக நின்றார்கள்.

“மிளகுப் பேரரசி நீடு வாழ்க. யக்‌ஷ தேவன் அருளுண்டாகட்டும்”

சென்னுவுக்குச் சட்டென்று கோகர்ணம் மஹாபலேஷ்வர் கோவிலுக்கு இன்று வருவதாக பிரார்த்தனை நேரத்தில் சொன்னது நினைவு வந்தது. வணிகர்களுக்கு நன்றி சொல்லி அவர்கள் கொண்டு வந்த மாலையைப் பூத்தாற்போல் பிடித்தபடி நேமிநாதனைத் தேடினாள் சென்னு. ஓரமாக நின்று கொண்டிருந்தான் அவன்.

நேமிநாதனிடம் கோவில் என்று மட்டும் சொல்ல அவன் புரிந்து கொண்டு ஒரே நிமிடத்தில் மகாராணியின் சாரட் வண்டியை சகல அலங்காரங்களோடும் சௌகரியங்களோடும் அழைத்து வரச் செய்து நிறுத்தினான். பூச்சரங்களும் பாசிமணி மாலைகளும், வாழைமரம் கட்டிய அழகும், தோரணங்களின் வர்ண ஜாலமுமாக அரச ஊர்தி வந்து நின்றது.

சாப்பாட்டில் கை நனைக்க முற்பட்ட பிரமுகர்கள் நிறுத்தி வாசலுக்கு மகாராணியைக் காண விரைந்தார்கள்.

“நீங்கள் உண்ணுங்கள். நான் கோவிலுக்குப் போய்விட்டு வருகிறேன்” என்றபடி சாரட்டில் ஏறி அமர்ந்தாள் சென்னபைரதேவி.

“மேற்கு வீதி வழியாகப் போகலாம்” சாரட்டின் முன் பகுதியில் ஆயுதம் ஏந்தி நிற்கும் சிப்பாய்கள் இருவரும் சாரதியிடம் சத்தம் தாழ்த்திச் சொல்ல, அவன் வியப்பு ஒரு வினாடி முகத்தில் காட்டி இது தினசரி நடப்பாச்சே என்பது போல் சகஜ பாவத்தோடு முகத்தை வைத்துக் கொண்டு குதிரைகளை ஓடத் தூண்டி சாரட்டை நகர்த்தினான். தூண்டுதலுக்கு அவசியமே இல்லாமல் அந்த அரபுப் புரவிகள் வேகம் எடுத்துப் பறந்தன.

Honnavar Waterfalls Pic courtesy backpackster.com

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன