கல்கி வாரப் பத்திரிகையும் நானும்

கல்கி வார இதழ் அச்சுப் பதிப்பு வடிவத்தில் இனி வெளிவராது என்று அறிய வருந்துகிறேன்.

கணையாழியிலும் தீபத்திலும் நான் எழுதத் தொடங்கியது ஜனரஞ்சகப் பத்திரிகை எழுத்தாகவும் சுவடு பிரிந்து பரிணமிக்க கல்கி எனக்குத் தளம் அமைத்துக்கொடுத்தது. 1990-களில் கிட்டத்தட்ட 30 சிறுகதைகளாவது கல்கியில் எழுதியிருப்பேன்.

மல்ட்டி மீடியா பற்றிக் கல்கியில் எழுதிய கட்டுரை தான் என் முதல் அறிவியல் தொடர்பான எழுத்து. தொடர்ந்து வெர்சுவல் ரியலிடி, எக்ஸ்பர்ட் சிஸ்டம், ஃபஸ்ஸி லாஜிக் என்று கிட்டத்தட்ட 15 கட்டுரைகள் எழுத உற்சாகப்படுத்தி, எழுதி வாங்கிப் பிரசுரித்தது கல்கி.

அந்தக் கட்டுரைகள் ‘கொறிக்கக் கொஞ்சம் கம்ப்யூட்டர் சிப்ஸ்’ என்ற பெயரில் புத்தகமானபோது அதன் முன்னுரையை மனமுவந்து அளித்தார் கல்கி திரு கி.ராஜேந்திரன் அவர்கள். அமரர் கல்கியே வந்து அளித்ததுபோல் அவருடைய புதல்வர் அளித்த அந்த முன்னுரை அமைந்து போனது என் அதிர்ஷ்டம்.

அது தவிர என் முதல் கம்ப்யூட்டர் – இணையம் பற்றிய தொடர் கல்கியில் தான் வெளிவந்தது (இது விகடனில் அப்புறம் மூன்றாண்டு தொடர்ந்தது).

கல்கிக்காக தஞ்சைக்கு பெரிய கோவில் குடமுழுக்கு நேரத்தில் (1997) என்னை அனுப்பி வைத்து, வந்து சேர்ந்ததும் சுடச்சுட கட்டுரை எழுதி வாங்கிப் பிரசுரித்து மேலும் எழுத உற்சாகமும் ஊக்கமும் அளித்தது கல்கி. நண்பர் தஞ்சை பிரகாஷ் மற்றும் தஞ்சை நண்பர்கள் உதவியோடு தஞ்சாவூரில் மாஜி மன்னர் முதல் புகைப்பட ஸ்டூடியோ உரிமையாளர் வரை நேர்காணல் நடத்தி, பெரிய கோவிலைப் பக்தியோடு கூட சப்த, ஒளி, வாடை ரூபமாக அனுபவித்து அந்தக் கட்டுரை எழுதினேன்.

தீபாவளி மலர்க் கதைகள், விடுமுறை மலரில் நாடகம், ஒரு பக்கக் கதை, இந்திய சுதந்திரப் பொன்விழா மலர் கதை, சுருக்கெழுத்தாளர் அமைப்பு விசிட் ரிப்போர்ட், விண்டோஸ் 4 அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டு கட்டுரை, நண்பர் ஞாநி மகன் அன்புக்குரிய மனுஷ் நந்தன் 12 வயதுச் சிறுவனாக அசோகமித்திரன் சிறுகதைகளைக் குறும்படமாக எடுத்தபோது நேர்காணல் என்று எழுதி நிறைத்தேன். அப்போது பிரபலமாக இருந்த டெலிவிஷன் தொடர் ‘ஜூனுன்’ பற்றிக்கூட நகைச்சுவைக் கட்டுரை எழுதினேன். எழுத்தை அதன் சீரியஸ்னஸ் விட்டுப் போகாமல், ரிலாக்ஸ்ட் ஆகப் பார்த்து எழுத கல்கிக்கு எழுதிக் கற்றுக் கொண்டேன்.

கல்கி சிறுகதைப் போட்டி நடுவராக அன்புக்குரிய திருமதி திலகவதி ஐபிஎஸ் மேடமும் நானும் இருந்து செயல்பட்டது மறக்க முடியாத அனுபவமானது. ‘என்ன முருகன், எல்லாக் கதையும் நல்ல கதைங்கறீங்களே… எதுக்கு ப்ரைஸ் கொடுக்கறது’ என்று புன்னகையோடு சொல்வார் திலகவதி அவர்கள்,

திருமதி சீதா ரவி கல்கி பத்திரிகை ஆசிரியராக இருந்த காலம் அது. இனிய நண்பர் பா.ராகவன் கல்கியின் உதவி ஆசிரியராகக் கலக்கிக் கொண்டிருந்த காலமும் அதே. திரு இளங்கோவன் என்ற இன்னொரு நல்ல நண்பர் – உதவி ஆசிரியரின் நட்பு கிட்டியதும் அப்போது தான்.

2000-களில் விலகித்தான் போனேன் – கணினித் துறையில் புகுந்து, பணி நிமித்தம் அயல் நாடுகளில் வசித்தபோது என் எழுத்து ஆர்வமும் பரிசோதனை முயற்சிகளில் திரும்பியது. மாய எதார்த்தக் கதையாடலை அடிப்படையாக்கி சிறுகதைகள் எழுதியபோது ஒரு விடுமுறை மலர் கதை கேட்டார்கள். பாங்காக்கில் இருந்து எழுதி கல்கிக்கு அனுப்பியது மேஜிக்கல் ரியலிசம் கலக்காத, ஆனால் விநோதமான கதைக்கருவோடு ‘தாமதமாக வந்தவர்’. அது கல்கி கதை இல்லைதான். எனினும் கல்கி எந்த மறுப்பும் சொல்லாமல் கதையை அதே படிக்குப் பிரசுரித்தது. என்ன, ‘சூஷி மீன் சாப்பிட்டான்’ என்பதை குஷியாக மீன் சாப்பிட்டான் என்று மாற்றி விட்டார்கள்! சீதா ரவி அவர்களுக்கு தொலைபேசிச் சொன்னேன். ‘பரவாயில்லே சார், குஷியா சாப்பிட்டதாகத் தானே வந்திருக்கு.. நொந்து போய் சாப்பிட்டதா வரல்லியே’ என்றார். இரண்டு பேரும் சிரித்தோம்.

கையெழுத்துப் பிரதியாகக் கதை அனுப்புவது முடிந்து, கம்ப்யூட்டரில் அந்தக்கால(1990 தொடக்கம்) தமிழ் வேர்ட் ப்ராசசரில் தட்டி அனுப்பிய முதல் கதை கல்கிக்குத்தான்.

‘முருகன், நெறய மாங்குமாங்குன்னு ஃப்ளாப்பியிலே போட்டு அனுப்பியிருக்கீங்க.. சந்தோஷமான கதைன்னு தெரியுது.. நிறைய சிரிச்ச மூஞ்சி மாதிரி, மத்தாப்பு மாதிரி, பொம்மை மாதிரி எல்லாம் வந்திருக்கு. சிரமம் பார்க்காம, இதைத் தமிழாக்கி எப்பவும் போல கையால் எழுதி அனுப்பிடுங்க’ என்றார் பா.ராகவன். அப்புறம் ஒரு வழியாக என் கணினியும் அவர்கள் கணினியும் ஒன்றை மற்றொன்று புரிந்து கொண்டன.

2000-களில் அறிவியல் தொடர் கேட்டார் அப்போது கல்கி ஆசிரியராக இருந்த நண்பர் ஆர்.வெங்கடேஷ். டிஜிட்டல் கேண்டீன் என்று ஒரு தொடர் எழுதினேன். தீபாவளி மலர்க் கதைகளும், ஒன்றிரண்டு வாரப் பத்திரிகைக் கதைகளும் கல்கிக்குக் கொடுத்தபோது ‘அரசூர் வம்சம்’ கல்கியில் தொடராக வந்தால் எப்படி இருக்கும் என்று நடக்காத காரியம் பற்றி யோசித்தது உண்மைதான்.

வெங்கடேஷ் கல்கி சார்பில் அழைக்க, கல்கியில் பிரசுரமான சிறந்த அச்சு விளம்பரத்தைத் தேர்ந்தெடுத்துப் பரிசு கொடுக்கும் நடுவர் குழுவில் பங்கு பெற்றேன். அந்த விருது வழங்கும் விழாவில் நடுவர்களையும் கவுரவிக்க இருந்ததாகவும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் சொல்லியும் என்னால் விழாவுக்கு போக முடியவில்லை. அன்றைக்கு என் நாவல் ‘விஸ்வரூபம்’ வெளியீட்டு விழா நாள். கல்கி விழாவில் என் சார்பில் நண்பர் வெங்கடேஷே பொக்கிஷம் போன்ற அந்த நடுவர் பரிசைப் பெற்று, பிறகு எனக்கு அளித்தார். கம்பீரமான, நடந்த படி புத்தகம் வாசிக்கும் வாசக கணபதி எனக்குப் பரிசாக வந்தார். எனக்குக் கிட்டிய அனைத்துப் பரிசுகளிலும் அவரே முதலானவர்.

அந்த வாசக கணபதியை அநியாயமாக கல்கி மாஸ்ட்ஹெட்டில் இருந்து ஏன் தூக்கினார்கள் என்பது எனக்கு இன்னும் புரியாத விஷயம்.

கல்கியில் அண்மையில் எழுதிய சிறுகதை என் நண்பர் கல்கி ஆசிரியர் ரமணன் கேட்டு வாங்கிப் போட்ட ‘இசை’. டிஜிட்டல் கல்கி இணையத் தளத்தில் அறிவியல் தொடர் கேட்டிருந்தர் ரமணன். ராமோஜியம் எழுதும் மும்முரத்தில் அதை மறந்தே போனதற்கு வருந்துகிறேன், ரமணன்.

கல்கி இணையத் தளத்தில் 1941-ம் ஆண்டு தொடங்கி வெளிவந்த கல்கி இதழ்களையும், தீபாவளி மலர்களையும் கிட்டத்தட்ட பாராயணம் பண்ணும் அளவு படித்து கொண்டிருந்தேன் அண்மையில் அந்த ‘ராமோஜியம்’ நாவல் எழுதும்போது.

அச்சுப் பதிப்பு கல்கிக்கு ராமோஜியம் நாவல் சமர்ப்பணம் ஆகிறது. Adieu, Kalki

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன