ராமோஜியம் நாவல் பதிப்புக்கு ஆயத்தமாகிறது – மைலாப்பூர் கோயில் – தமிழ்ப் புத்தாண்டு 1942

“சௌகார்பேட்டையிலே ஒரு ஏகாம்பரேஸ்வரர் கோவிலும் இருக்காம். சுபாங்கி அம்மா சொன்னாங்க. மறந்துடாதீங்க. நாளைக்கு போயே ஆகணும்”

நான் ரத்னாவை ஆச்சரியத்தோடு பார்த்தேன். ஊரோடு காலி செய்து கொண்டு மெட்றாஸை விட்டு ஓடுகிறார்கள். இங்கே இன்றைக்கு இருப்பது ராத்திரி வரை நிச்சயம்; நாளை இருப்பது நாளைக்குத்தான் தெரிய வரும் என்று அவரவர்களே தலையில் எழுதிக் கொண்டுவிட்டார்கள்.

இந்தப் பெண்ணரசியானால், நாளைக்கு மறந்து விடாமல் சௌகார்ப்பேட்டையில் கோபுர தரிசனத்துக்குப் போய்வர வேண்டும் என்கிறாள்.

“உன்னோட திடமான நல்ல மனசுக்காக சௌகார்பேட்டை என்ன, நேரம் இருந்தா நாளைக்கு திருவொற்றியூர் கூடப் போவோம்”

நான் சொல்லி முடிக்கும் முன் எழும்பூர் போகிற ட்ராம் லோத்ரா மகளிர் டானிக் விளம்பரத்தைச் சுமந்தபடி வந்து நின்றது. ஏறிக் கொண்டோம்.

”மூக்குத்தூள் டப்பாவை எடுத்துட்டு வரலியே”

ரத்னா பாய் ஓடும் டிராமில் இருந்து குதிக்கிற தயாரில் இருந்தாள்.

குதித்தாலும் ஒன்றும் ஆகாதுதான். அவ்வளவு மெதுவாகப் போகிற வாகனம். க்ளங்க் க்ளங்க் என்று சங்கிலிகள் சத்தம் போடுவது மட்டும் இன்னும் அடங்கி இருந்தால், ட்ராம் வருவதும் போவதும் தெரியாத பூனை நடையாக இருக்கலாம்.

“இந்த மூக்குப்பொடி விவகாரத்தை இன்றைக்கு, தமிழ் வருஷப் பிறப்பு தினத்திலாவது கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாமே” என்று அவளிடம் ஆளில்லாத ட்ராமில் உட்கார்ந்து மன்றாடினேன். ரத்னா விடாமல் கைப்பையில் இருந்து சின்னஞ்சிறியதாக ஒரு வாழை மட்டைச் சுருளை எடுத்துத் திறந்து ஒரு சிட்டிகை பொடியை விரலில் வைத்து இழுக்க, ட்ராம் டிரைவர் தும்மியது கேட்டது.

“பொடியால் எந்த பிரயோஜனமும் இல்லை, உடம்பு ஆரோக்யத்துக்கு கெடுதல்-னு டாக்டர்கள் சொல்றாங்க” என்று பொத்தாம்பொதுவாகக் குறிப்பிட்டேன். பொடி போடுகிற டாக்டரை நான் பார்த்ததில்லை. சிகரெட் குடிப்பவர்கள் உண்டுதான்.

”கொஞ்சம் சும்மா இருங்களேன். சகல வலிமையும் கொண்ட பிரிட்டீஷ் சக்கரவர்த்தி ஆறாம் ஜார்ஜ் கோமகன் தினசரி பிடிக்கிற சிகரெட் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது என் நாசிகா சூரணம் உடம்புக்குள் போய்க் கெடுதல் உண்டாக்குவது கம்மிதான். அவரும் சிகரெட்டை விட்டொழித்து பட்டணம் பொடி உறிஞ்சினால் திக்குவாய் போய் சரளமாகப் பேசுவார்” என்றாள் ரத்னா. இதெல்லாம் எங்கே படித்திருப்பாள்?

சந்தேகமென்ன? நாலு பக்கம் ஹரி ஹரி என்று ஹரி நாமம் சொல்கிற புராணம், தொடர்ந்து பல்லவனையும், சேர சோழ பாண்டியரையும் குதிரை ஏற்றி விட்டு இன்னும் இறங்கவே விடாமல் கதைக்கும் கதா பிரவாகம், அப்புறம் முதலிலும் கடைசி நாலு பக்கத்திலும் காந்தி பஜனை. ரெண்டு பக்கம் உலக வியவகாரங்கள், பட்டணம் பொடி, சிகரெட் விளம்பரங்கள். ரேடியோ கச்சேரி முழுக்கக் கேட்டோ, கேட்காமலேயோ அலாதியான பிர்க்கா சாரீரம், போஷித்து வாசிப்பு என்று சங்கீத விமர்சனம். இப்படிக் கலந்துகட்டியாக அச்சுப் போடும் தமிழ் தின, வார, மாதப் பத்திரிகைகளில் சில அவள் வாசிப்பது.

அதில் ஒரு பத்திரிகையில் போன மாதம் கோகிலப் பூங்கோதை கச்சேரி விமர்சனத்தில் பூங்கோதைக்கு சுகமான சரீரம் என்று அடித்து வந்திருந்தது. நான் அந்தப் பத்திரிகையில் படித்த முதல் நிஜம் அதுவாக இருக்கக் கூடும்.

பூங்கோதை விஷயத்தில் குறில் நெடில் எல்லாம் பார்க்கக் கூடாது என்று மனசாரச் சொன்னால், ரத்னா இன்னொரு தடவை ட்ராமில் இருந்து குதிக்க முயற்சி செய்யக் கூடும். பூங்கோதை சங்கீதம் இருக்கட்டும். ரத்னா பொடி போடாமல் இருக்க அது ஒரு சுகுவும் உபகாரம் செய்யாது.

யுத்தகாலம் என்பதால் அச்சடிக்க காகிதத்துக்கு கட்டுப்பாடு வைத்து சர்க்காரே விநியோகிக்க முறையீடு செய்து வாங்கி அச்சடித்து வெளியிட பக்கம் கம்மியாகி இளைத்துப் போனாலும், இந்தப் பத்திரிகைகள் எதுவும் விலையைக் கம்மி பண்ணுவதில்லை. விளம்பரங்களையும் குறைப்பதில்லை.

தொடர்ந்து இவற்றைப் படித்தால் சிகரெட்டும் பட்டணம் பொடியும் உடம்புக்கு கெடுதல் செய்யாது என்ற தப்பான அபிப்ராயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

சிகரெட் மென்மையான நாகரிக வஸ்து, பொடி நாசுக்கானது என்று புகையிலை வம்சத்துக்கு சிம்மாசனம் அளிக்கவும் சந்தாதாரர்கள் தயங்க மாட்டார்கள். அந்த வாசக வரிசையில், சந்தேகமென்ன, ரத்னா முதலில் இருப்பாள்.

“ஏம்பா ராமோஜி, மயிலாப்பூர் எறங்கணும்னு சொன்னியே, இல்லியா?”, ட்ராம் ட்ரைவர் என்னை ஏறிட்டுப் பார்த்துச் சிரித்தபடி காத்திருந்தார்.

அது என்னமோ பட்டண ட்ராம் சர்வீஸில் கிட்டத்தட்ட அரைவாசி ட்ராம் கண்டக்டர்களும், அதே எண்ணிக்கையில் ட்ராம் ட்ரைவர்களும் எனக்கு சிநேகிதர்கள். ராமோஜி என்ற என் பெயர் சொல்லவும் மனசில் வைத்திருக்கவும் எளிமையானதாக இருப்பதால் அவர்களுக்கு மறப்பதே இல்லை.

இப்படி ஒரு சௌகரியம் ஏற்படுத்திக் கொடுத்ததற்கு என் அப்பாஜி பத்துஜி சாருக்குத்தான் நன்றி பாராட்ட வேண்டும். அவரை அவ்வப்போது நினைப்பதே அவருக்குச் செய்கிற மரியாதை.

ரத்னாவிடம் இதைச் சொல்லியபடி நடக்க, அவள் கலகலவென நகைத்தாள். “அப்பாஜியை உங்கம்மா நினைவு வச்சிருந்ததே வேறே மாதிரி” என்றாள்.

எப்படி என்றேன். கோவிலுக்குப் போகிற போது அது எதுக்கு என்று மறுபடியும் சிரித்தாள்.

“ஐந்து நிமிஷமாவது ஆகும் கபாலீஸ்வரரைத் தரிசிக்க. அதற்குள் எல்லாம் பேசி சிரிச்சு வைச்சுடலாம்”, என்று ஆர்வத்தோடு கேட்டேன்.

சரி பக்கத்துலே இன்னும் நெருங்கி நடங்க என்றாள்.

இதேது கேட்காமலேயே கிடைக்கிற அபரிமிதமான சலுகை என்று வியந்து கிட்டத்தட்ட பாதி உடலை அவளுக்கு ஈந்த மாதிரி கையைக் கோர்த்துக் கொண்டு நடக்க ஆரம்பிக்க, வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டாள்.

இத்தனைக்கும் ஆள் அரவம் ஒழிந்த வீதி. இருட்டு வேறு இந்தோ அந்தோ என்று பம்மிப் பம்மிக் கவிந்து கொண்டிருந்தது.

”உங்கப்பாவுக்கு வாயுத் தொல்லை உண்டாமே, அம்மாஜி சொன்னாங்க”.

”ஆமா, அவர் காலத்திலே நம்ம வீட்டுலே ரேடியோப் பெட்டி கிடையாது.. அப்பாஜி ராத்திரி ஏழேகால் மணிக்கு பார்க் ரேடியோவிலே ந்யூஸ் கேட்டுட்டுத்தான் வீட்டுக்கு வர்ற வழக்கம். வரும்போதே ஆரம்பிச்சு ராத்திரி பதினொரு மணிக்கு தூங்கறவரைக்கும் டர்ர்ர் தான்.. ராத்திரி அவரோட தூக்கத்திலே குறட்டை உண்டோ என்னமோ, வாயு மெத்த உண்டு பெண்ணே”, என்றேன்.

”அப்பாஜியோட பழைய போர்வை ஒண்ணு.. அம்மாஜி மடிச்சு மரப்பெட்டியிலே வச்சிருக்காங்களே அந்தப் போர்வைதான் .. ஒரு நாள் அதை துவைச்சுக் காயவைச்சு மடியாக வைக்கணும்னு தோணிச்சு. அப்பாஜி சிரார்த்தத்துலே அவருக்கு பொடி கொடுக்கும்போது அதைக் கீழே விரிச்சுப் படைக்கலாமே.. அவருக்கு பிடிச்ச வஸ்துவாச்சே.. அந்தப் போர்வையை துவைக்கப் போனா அம்மாஜி வேணாம்னுட்டாங்க. சொல்றாங்க…”

என்னன்னு?

கோவில் வாசலில் செருப்பு விடும் இடத்தில் வேறே பாதுகை எதுவும் காணோம். ரத்னாவானால் மறுபடி சிரிக்க ஆரம்பித்திருந்தாள்.

சொல்லிட்டு சிரி பெண்ணே.

“அப்பாஜி இந்தப் போர்வையை போர்த்திக்கிட்டுத்தான் வாயு ஸ்தம்பனம் நடத்தினது. அவர் போய் மூணு வருஷமாச்சு. போர்வையிலே அவரோட வாயு வாசனை இன்னும் பத்து வருஷத்துக்கு வரும். அதுக்குள்ளே நான் போயிடுவேன். போர்வையை அப்படியே. வச்சிருப்போம். எனக்கு அப்பப்போ ஆறுதல் இந்தப் போர்வைதான .. அம்மாஜி சொன்னாங்க’பா.”.

அவள் சொல்லி முடிக்க, ஆளுக்கு ஒரு பக்கம் திரும்பிக் குனிந்து சிரித்தோம். ஊரோடு எவாகுவேஷன் என்று வெளியேறவில்லை என்றால் புருஷன் பெண்ஜாதி போகடாத்தனமாக இப்படி வழிச்சுக்கொண்டு சிரிக்கற காரியம் என்னவாக இருக்கும் என்று வேடிக்கை பார்க்க மாட வீதி, லஸ், மந்தவெளி எல்லாம் அறுபத்து மூவர் உற்சவம் மாதிரி ஜனம் கூடியிருக்கும்.

”பாவம் அதுக்கு ரெண்டு மாசத்துலே போய்ச் சேர்ந்துட்டாங்க.. சொர்க்கத்திலே மாமனாரோடு சேர்ந்து நல்லா இருக்கட்டும்” ரத்னா கைகூப்பியபடி சொன்னாள்.

கோவிலுக்குள் போனோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன