வெளியிட ஆயத்தப்படுத்தப்படும் என் நாவல் ராமோஜியம் – ராமோஜி நகர் நீங்காத 1942 மதறாஸ் – சில பகுதிகள்

3.ராமோஜி நகர் நீங்காத 1942 மதறாஸ் = சில பகுதிகள்

கொட்டக் கொட்ட முழித்துக்கொண்டு எங்கள் வீட்டில் நானும் ரத்னா பாயும். தெருவில் முதல் வீட்டிலும், கடைசி வீட்டிலும் சேர்த்து நாலைந்து பேர்வழிகள் உண்டு. மற்ற வீடெல்லாம் கதவடைத்துப் பூட்டி திண்டுக்கல் பூட்டு தொங்கிக் கொண்டிருக்கிறது.

பேட்டை முழுக்க ஆள் நடமாட்டம் உள்ள வீடுகளை விட பூட்டிய வீடுகள் அதிகமாகத் தட்டுப்படுகின்றன. பலசரக்குக்கடை, பெட்டிக்கடை, காப்பிக்கடை என்று வீடுகள் உள்வாங்க, வீட்டு வாசலில், திண்ணையில் தடுப்பு எழுப்பி வைத்துப் பரபரப்பாக வியாபாரம் நடக்கும் சின்னச் சின்னக் கடைகளையும் அடைத்துப் பூட்டியானது.

தெருக்கோடியில் உட்கார்ந்து ரப்பர் வளையல் போட்ட கையால் முழம் போட்டு மல்லிகைப்பூ விற்கும் பூக்காரியும் நேற்றிலிருந்து காணாமல் போனாள்.

இன்று தமிழ் வருஷப் பிறப்பு. பண்டிகைக்கு அடையாளமாக ஒரே ஒரு வீட்டில் முகப்பில் மாக்கோலம் கண்ணில் படுகிறது. நாலு இழை திடமாக இழுத்து
ரத்னா பாய் தான் வீட்டு வாசலில் கோலம் போட்டிருக்கிறாள். கோலத்தைச் சுற்றி செம்மண்ணைப் பட்டையாகத் தீற்றவும் மறக்கவில்லை அவள்.

தினசரி பேப்பர் திண்ணைக்கும் ரேழிக்கும் குறுக்கே கதவோரமாகக் கிடக்கிறது.. நாளை பேப்பர் வருமோ என்று தெரியவில்லை. வந்தாலும் யுத்தச் செய்தி தவிரப் புதுசாகப் படிக்க அதில் ஏதுமிருக்காது. யுத்தத்துக்கு அடுத்த முக்கியமான விஷயமான ரேஷன் பற்றியும் புதுசாக ஏதும் வராது.

உப்பு, புளி தவிர சகலமானதுக்கும் ரேஷன் ஏற்கனவே அமுலில் இருப்பதால் ரேஷனில் புதுசாகச் சேர்க்க ஒரு உருப்படியும் கிடையாது. அடுப்பெரிக்க விறகுக்கு ரேஷன் வரப் போகிறதாக ரொம்ப நாளாக வதந்தி.

சர்க்கார் விறகுக்கடை, அடுப்புக்கரிக்கடை, கும்முட்டி அடுப்பு விற்கிற கடை என்று நடத்தினால் எப்படி இருக்கும் தெரியவில்லை.

ரேடியோ, நாள் முழுக்க ’மெட்றாஸை காலி செய்து விட்டு வெளியேறிப் போங்கள்’ என்று சகலரையும் வேண்டிக் கொண்டிருக்கிற செய்திதான் பத்திரிகையிலும் அச்சடித்து வந்திருக்கும். ரேடியோவில், அறிவித்த பிறகு நிலைய வித்வான் சோகம் கவிய கோட்டு வாத்தியம் வாசிப்பார்.

பேப்பரில் அந்தத் தொடர் மிரட்டல் இல்லை. என்னத்தைச் சொல்ல? யுத்தம் லண்டன், பெர்லின், மாஸ்கோ. பாரீஸ், டோக்யோ என்று சுற்றி விட்டு இப்போது சென்னைப் பட்டணத்தைக் குசலம் விசாரிக்க நெருங்கி வந்தே விட்டது.

எல்லாம் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையான போன வாரம் ஐந்தாம் தேதி, கொழும்பு துறைமுகத்தை ஜப்பான் விமானப்படையின் எழுபது சொச்சம் விமானங்கள் பப்படமாக நொறுக்கி கிட்டத்தட்ட ஐம்பது பேரைக் காவு கொண்டதில் தொடங்கியது. பிரிட்டீஷ் சமுத்திர சேனையின் ஒரு விமானம் தாங்கிக் கப்பலும், இரண்டு யுத்தக் கப்பல்களும் ஜப்பான் தாக்குதலில் சிதறியதாகத் தெரிய வந்தது.

இப்படி ஆள் சேதம், பொருள் சேதம் என்று கணிசமாக ஏற்பட்டாலும், வருத்தப்பட ஒண்ணுமில்லே என்று இங்க்லீஷ்கார இலங்கை கவர்னர், நம்பிக்கை கொடுத்துப் பேசியதாகச் செய்தி. அதுவும் தமிழில் பேசினாராம். கொழும்பில் இறந்த பலரும் தமிழர்கள் என்றும் தெரிய வந்தது.

கவர்னர் தமிழில் பேசியதற்காக நாலு பேர் சந்தோஷப்படலாம். என்றாலும் ’ஐம்பது பேர் பரலோகம் போனதெல்லாம் ஒரு விஷயமே இல்லை, லண்டனில் தினம் தினம் போக்குவரத்து விபத்துகளில் இறந்து போகிறவர்களின் எண்ணிக்கை அது’ என்று அவர் பிரிட்டீஷ் சர்க்காரின் அசமஞ்சத்தனத்துக்குச் சப்பைக்கட்டு கட்டிப் பேசியது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாச்சு.

சகுந்தலா, மீராபாய் என்று ஏதாவது புனைபெயர் வைத்துக்கொண்டு இந்த ஏகடிய அதிகப்பிரசங்கம் பற்றி ’தி ஹிந்து’ பத்திரிகைக்கு ஆசிரியருக்குக் கடிதம் எழுதினாலென்ன என்று யோசித்தேன்.

பத்திரிகை படிப்பதில் ஏற்படும் களைப்புக்கு கொஞ்சமும் குறையாத ஒன்று, அதற்குக் கடிதாசு எழுதணும் என்றதுமே வந்து சேர்கிற அலுப்பு.

இப்படி ஒருத்தர் மனுஷத்தன்மை இல்லாமல் பேசிவிட்டுப் போனது பற்றிய கடிதாசு வன்மையாகக் கண்டிக்கும் அல்லது ஓவென்று கட்டிப் பிடித்து அழும் தொனியில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறதே.

என் இங்க்லீஷ் அதெல்லாம் செய்யாது. வேண்டுமானல் தொப்பியைக் கழற்றும். யாருக்கு எதுக்கு ஹாட்ஸ் ஆஃப்?

ஏப்ரல் ஆறாந்தேதி காக்கினாடாவிலும், விசாகப்பட்டணத்திலும் ஜப்பான் விமானத் தாக்குதல் எனறு தகவல் வந்தபோது மெட்றாஸுக்கு தொடை நடுங்க ஆரம்பித்தது.

ஏப்ரல் ஏழாம் தேதி ஏதோ பொத்தானை எங்கேயோ யாரோ தவறாக அழுத்தி, சென்னைக்கு மேல் ஜப்பானிய விமானப்படை தாக்குதல் நடத்தப் போவதாக விடிகாலை நாலே முக்கால் மணிக்கு சைரன் அலற, பட்டணம் உச்ச பட்ச பிராண பயத்தில் கதவடைத்து வீட்டுக்குள் மத்தியானம் வரை அடைந்து கிடந்தது.

அப்புறம் பகல் சாப்பாட்டுக்காக அசைய நகர நிற்க உட்கார வேண்டிப் போனது. உயிர்ப் பயம் என்பதால் வாய்க்கு ருசியாகச் சாப்பிடாமல் இருக்க முடியுமா என்ன?

ஐந்து லட்சம் பேர். மெட்றாஸின் பாதி ஜனத்தொகை. இந்த ஜனக்கூட்டம் உயிருக்குப் பயந்து பட்டணத்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது.

ரயிலில், பஸ்ஸில், மாட்டு வண்டியில் காணும் பொங்கலுக்கு உசிர்க் காலேஜ், செத்த காலேஜ், கடற்கரை பார்க்கப் போகிற மாதிரி குடும்பம் குடும்பமாகப் பயணமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

எவாகுவேஷன் என்ற வார்த்தை எல்லார் நாக்கிலும் சரளமாகப் புரள ஆரம்பித்து விட்டது.

எழும்பூர் ரயில்வே ஜங்க்ஷனும் சென்ட்ரல் ஸ்டேஷனும் நித்திய கல்யாண உற்சவம் மாதிரி நாள் முழுக்க, ராத்திரி முழுக்க ஜனநெரிசலில் திணறுகின்றன, ஜனங்களை ஏற்றிக்கொண்டு மெட்றாஸ் விட்டு ஓடும் ரயில்கள் இலவச சேவையாகத்தான் பிரயாணப்படுகின்றன. யாரும் எங்கே போகவும் டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை. டிக்கட் வாங்கணும் என்று வைத்தாலும், யார் டிக்கட் கொடுக்க, யார் வாங்கின விஷயம் சோதிக்க?

மிச்ச சொச்சம் இல்லாமல் மெட்றாஸ் காலியாக வகை செய்யும் நல்ல நோக்கத்தோடு, முந்தாநாள், ஏப்ரல் பனிரெண்டாம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மதறாஸ் சர்க்கார் அதிகார பூர்வமான ஓர் அறிவிப்பை வெளியிட்டது.

அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது யாதெனில் – “மதறாஸ் பட்டணத்தைப் பயமுறுத்தும் போர் அபாயம் முன்னிருந்ததை விடத் தற்போது அதிகமாகி இருக்கிறது. எனவே அத்தியாவசியமான பணிகளைச் செய்ய மதறாஸில் இருக்க வேண்டியவர்களைத் தவிர மற்ற நகரவாசிகள் இன்னும் சில நாட்களுக்குள் பட்டணத்தை விட்டு உடனே குடிபெயர வேண்டும். போக்கிடம் இல்லாதவர்கள் பக்கத்து கிராமங்களில் சர்க்கார் ஏற்படுத்தி இருக்கும் முகாம்களில் போய்ச் சேர வேண்டும்”.

உலகம் அழியப் போகிறது என்று சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டீஷ் கவர்மெண்ட் முக்காடு போட்டு மூலையில் குந்தி உட்கார்ந்து அல்லல்பட்டு அழுது அலறுகிற பரிதாபம். உள்ளூரார்களை ஊரை விட்டு விரட்டவா இந்த வெள்ளை மூஞ்சித் தடியன்களை சீமையிலிருந்து வரவழைத்து பக்கப் பதிய உட்கார்த்தியது?

”தற்காலிகமாக நகரக் குடிமக்கள் சென்னையை விட்டு வெளியேறுவதை சர்க்கார் விரும்புகிறது. அதி விரைவில் இந்த நிலைமை மாறி, அனைவரும் மீண்டும் அவரவர் இருப்பிடத்துக்கும், வேலை செய்யுமிடத்துக்கும் திரும்பி வருவதை சர்க்கார் எதிர்பார்க்கிறது. அதற்காக அரசாங்கம் பாடுபடும். இதை நடப்பாக்க எந்த விதமான நடவடிக்கை எடுக்கவும் கவர்மெண்ட் தயங்காது”.

கவர்மெண்ட் அறிவிப்பு எழுதுகிற வேலை என்னுடையதாக இருந்தால் நான் இப்படித்தான் நம்பிக்கை தரும்படி எழுதியிருப்பேன். ரத்னா பாய் இன்னும் ஒரு வீசை கூடுதல் நம்பிக்கையைக் கசப்பு தூக்கலான காப்பியில் அஸ்கா ஜீனியைக் கரைத்து தித்திப்பாக்கியது போல் எழுதியிருக்கக் கூடும். அவளுக்குத் தமிழ் இன்னும் நன்றாகத் தெரிந்திருந்தால் என்று சேர்த்துக் கொள்வதில் வருத்தமில்லை.

இன்றைக்கு ஏப்ரல் 14. செவ்வாய்க்கிழமை. தமிழ் வருஷப் பிறப்பு. பண்டிகை கொண்டாடும் சந்தோஷமும் குதூகலமும் எங்கேயும் தெரியவில்லை. கூட்டம் கூட்டமாகத் தெருவில் போவோர் வருவாரும், கோவில்களில் புது வேஷ்டியும், முழுக்கால் சட்டை, அரைக்கால் சட்டையும், புதுப் புடவை, பாவாடை தாவணியுமாக ஒரு நிமிடம் வந்து சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டுப் போகிறவர்களும் ஆகக் குறைவு என்பதில் சந்தேகமில்லை.

பகல் சாப்பாட்டுக்கு களைகட்டும்படியாக பாயசம் இலையில் இட்டு உண்டும், குவளையில் பருகியும் களிப்படைவது பற்றிய எதிர்பார்ப்போடு வீடு போகிறவர்களாக யாரையும் நான் பார்க்கவில்லை. வேப்பம்பூ தூவிய இனிப்பு மாங்காய்ப் பச்சடியும் யாரெல்லாம் செய்து கொண்டாடினரோ.

வருடம் தவறாமல் காளிகாம்பாள் கோவிலுக்கும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கும் வருஷப் பிறப்பன்று காலையிலேயே போய் சண்டை, சச்சரவு, யுத்தம் எதுவும் தொடராமல் நின்று, எல்லாரும் சௌக்கியமாக இருக்க வேண்டுதலோடு அர்ச்சனை செய்து வருவது என் வழக்கம்.

வருஷப் பிறப்பன்று சாயந்திரம் மயிலை கற்பகாம்பாள் கோவிலில் இதே போல, யுத்தம் தீர அர்ச்சனை செய்வேன். அங்கே புது வருஷ பஞ்சாங்கம் வாசிப்பதைக் கொஞ்ச நேரம் கேட்டுக் கொண்டிருந்து விட்டு ரேடியோவில் நியூஸ் நேரத்துக்கு வீடு திரும்புவேன்.

எங்கும் போகாமல் சைக்கிளைத் துடைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன் இப்போது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன