புது நாவல் ராமோஜியம் – ராமோசி ராயன் (ராமோஜி ராவ்) நட்டுவன் விட்டல ராயனை (விட்டோபா) சந்தித்த புதுவையில் ஒரு ஞாயிற்றுக்கிழமை – வருடம் 1745

ராமோஜி ஒவ்வொருத்தருக்கும் முக வார்த்தையாக இனி இப்படி செய்யாதீர் என்று சொன்னபோது அதில் ரெண்டு பேர் கூத்துக்கு மத்தளமும் மிருதங்கமும் இசைக்கிறவர்கள் என்றும் இன்னொருத்தன் புல்லாங்குழல் வாசிக்கிறவன் என்றும் தெரிந்தது.

அரியாங்குப்பம் பட்டாமணியக்காரர் மகளுக்குத் திரண்டுகுளி வீட்டு விசேஷத்தில் நேற்று ராத்திரி வினிகை (கச்சேரி) நடத்த வந்து திரும்பிப் போய்க்கொண்டிருந்தார்களாம். தடபுடலான நேற்றைய ராத்திரி விருந்து இந்தக் காலை நேரத்தில் வயிற்றோடு பிரியாவிடை பெற்று வெளியேற அவசரப்பட்டதால் உடனடியாகச் சாலையோரமாகக் குத்த வைத்ததாகச் சொன்னார்கள் அவர்கள் எல்லோரும்.

இன்னும் இரண்டு நாள் முதலியார்பேட்டை டேராவாம். பக்கத்தில் பாலையர் மட சத்திரத்தில் ஜாகையாம். சரி சந்திக்கிறேன் என்றான் ராமோஜி. எதற்கு சந்திக்கணும் என்று கேட்கவில்லை யாரும்.

அதற்குள் நாலு கடைகால் நிறைய தண்ணீரைக் கொண்டு வந்து பித்தளைச் சொம்போடு வைத்துவிட்டுப் போக ஏற்பாடு செய்தான் ராமோஜி. அவர்கள் கால் கழுவிச் சுத்தப்படுத்திக் கொண்டு, கொஞ்ச நேரம் வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்புறம் அனுப்பிவித்துக் கொண்டு போனார்கள்.

அதில் ஒருத்தன் மட்டும் இவ்வளவு தூரம் தண்ணியும், சொம்பும், தோப்பு நிழலும், வெற்றிடமும் இருக்கே, நான் போய்விட்டு வரட்டுமா என்றபடி தூரத்தில் மூலையில் உட்கார எழுந்து போனான்.

ராமோஜி திரும்ப கூடாரத்துக்கு வந்தான். கபே குடித்துக் கொண்டிருந்தார் தியூப்ளே.

“நீர் ஊர்ப்பெயரை சொல்ல பாட்டு கட்டி, புதுசாக சதுர் செய்வித்து ஊரோடு பாட ஆட வைத்து தெரிஞ்சதாக்கும்போது, இப்படி கண்ட இடத்தில் குத்த வைத்து மூத்திரமும் நரகலும் போவதும் உசிதமானதில்லை என்று அதிலே இன்னொரு பாட்டாக எழுதிப் போடும். ஆட்டமும் உசிதம் போல வரட்டும்”.

துரை மகா பெரிய விஷயத்தைத் தீர்மானித்த திருப்தியோடு காலை ஆகாரம் முடித்து அலமுசும் செய்தபின் புகைச் சுருட்டு பற்ற வைக்க, ராமோஜி கூடாரத்துக்கு வெகு தூரத்தில் உத்தியோகஸ்தர்கள் நின்றும் கம்பளம் விரித்தும் உட்கார்ந்திருந்த மரநிழலுக்குப் போனான்.

துரை வெளியே கிளம்பினால் நமக்கும் வேலை பார்க்கும் நாள் தான். இப்படி அலுத்தபடி சில ஒபிசியேக்கள் அடுத்து துரை கூப்பிடுவாரா என்று பார்த்தபடி உட்கார்ந்திருக்க, அவனும் அந்தக் கூட்டத்தில் கலந்தான்.

எங்கிருந்தோ கலகல என்று சிரிப்பும் வளையல் குலுங்குகிற சத்தமும் கேட்டது.

தலை நிறைய அடர்ந்த குடுமி வைத்த, காதுகளில் தங்கக் கடுக்கன் அணிந்து மீசை மழித்திருந்த ஒரு மனுஷனும், கூடவே நல்ல யௌவனமும் சௌந்தரியமுமாக ரெண்டு கன்யகைகளும், கொஞ்ச தூரம் தள்ளி நின்று கொண்டிருந்தார்கள். ராமோஜியின் பார்வை விழுந்ததும் அந்தப் பெண்டுகள் ஒரே நேரத்தில் முகவாயைத் தோளில் இடித்துக்கொண்டு பழிப்புக்காட்டி ஒருத்தி மற்றொருத்தியைக் கன்னத்தில் தட்டிச் சிரித்தது அதிசுந்தரமாகத் தெரிந்தது ராமோஜிக்கு. அவன் மகள் ரெண்டு பேரும் இப்போது இருந்தால் இந்த வயசாகத் தான் இருக்கும். கண்கள் கண்ணீரால் நிறையப் பார்வையைத் திருப்பிக்கொண்டான் ராமோஜி.

பெண்டுகள் கூட வந்திருந்த குடுமிக்காரன் ஒரு வினாடி ராமோஜியை உற்று நோக்கி பக்கத்தில் வந்தான். தணித்த குரலில் கேட்டான் –

“பத்துஜி ராயரின் புத்திரன் ராமோஜி ராயரில்லையோ நீங்கள்?”

ஆமாம் என்றான் ராமோஜி ஆர்வமாக. இந்தப் பெண்டுகள் யார் எங்கிருந்து வருகிறார்கள் என்று தெரிந்து கொள்வது ரசமாகவிருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது.

”நான் விட்டோபா ராவ். இவர்களுக்காக விட்டல ராயன் ஆகியிருக்கிறேன். சதிராட்ட நட்டுவன். பெண்டுகளுக்கு சதிரும் பாட்டும் வீணை மீட்டவும் கற்பித்து வருகிறேன். புதுச்சேரி நீடாராஜப்பய்யர் தெருவில் ஜாகை. உங்களைச் சந்தித்ததில் மெத்த சந்தோஷம்” என்றான் வந்தவன்.

அதெல்லாம் சரிதான், இந்தப் பெண்டுகளோடு முரட்டாண்டி சாவடி வந்த நோக்கம் என்னவோ என்று ராமோஜி கேட்க அவன் மந்தமாகப் புன்னகைத்தான்.

”துரைக்கு உல்லாச வேளைகளில் பாடி ஆடப் பெண்டுகள் வரணும். வேறே எந்த தப்பு தண்டாவுக்கும் போகிற மனுஷர் இல்லை அவர். துரை முரட்டாண்டி சாவடி வரும்போதே ஒரு சிப்பாய் வந்து நாலு பொண்ணு ரெண்டு மத்தளம் என்கிற மாதிரி அதிகாரமாகச் சொல்லி விட்டுப் போவான். நான் இவர்களில் யார் வீட்டுக்கு விலக்காகாமல் இருக்கிறார்கள் என்று அறிந்து மற்றவள் ரெண்டு மூணு பேரைக் கூட்டி வரணும். மற்றபடி இது தாய்மாமன் வேலை எல்லாம் இல்லை”, விட்டல ராயன் சொன்னான்.

ராமோஜியோடு விட்டல ராயனும் சிரித்தான். ரெண்டு பேரும் விட்டல ராயன் கொண்டு வந்த அடைப்பத்திலிருந்து புகையிலை உருட்டிப் போட்டுக்கொண்டார்கள்.

வெற்றிலை வேணாமென்றுவிட்டான் ராமோசி ராயன். அது கிருஹஸ்தர்களுக்கானது. பாக்கோடு சேர்ந்து ஒரு லகரியை உண்டாக்கி மற்ற லகரிகளையும் தேடி ஓடச் செய்யும். ராமோஜி இல்லறத்தான் இல்லை. எதுவும் இல்லாதவன். புகையிலை போதும் அவனுக்கு.

”நான் நாலு பாஷை தமிழ், தெலுங்கு, மராட்டி, இந்துஸ்தானி, ஏன் பிரஞ்சும் படித்திருக்கேன். அந்தப் பெண்டுகளுக்கும் தமிழும் தெலுங்கும் இங்க்லீஷும் நல்ல பழக்கம். மதறாஸ் போக வேண்டி இருப்பதால் இங்க்லீஷ் கற்பிக்க ஏற்பாடு செய்தேன். சங்கீதத்திலும் சதிரிலும் கடுமையான பயிற்சி ஐந்து வயதில் இருந்தே பெற்று வருகிறவர்கள். இந்த கிறுக்கன், குரங்கு மூஞ்சி துரைக்காக லெச்சை கெட்ட கூத்தாக அதுகள் ஆடவும், நான் அப்படிப் போடு-போடு என்று வினோத ஜதி சொல்லவும், சீழ்க்கை அடிக்கவும், பாடவும் வேண்டிய கட்டாயம்”.

விட்டலராயன் சிரித்துக்கொண்டே கண்கலங்க, அவன் தோளில் தட்டினான் ராமோஜி. அவனுக்கு இன்னொரு பொறி தட்டியிருந்தது.

அந்தப் பெண்டுகளை பக்கத்தில் அழைத்து விட்டல ராயன் யார் இன்னார் என்று சொன்னபோது ராமோஜி முகத்தில் வாத்சல்யம் தோன்றியது. அவனுடைய புத்ரிகள் இன்னும் உயரமாக இருப்பார்கள். பாடுவார்கள், ஆட்டத்தை ரசிக்கத் தெரிந்திருக்கும். அவர்களுக்குக் கல்யாண ஆலோசனை வந்திருக்கும். இந்தப் பெண்களுக்கு நித்திய கல்யாணமன்றோ பாவம்.

அதில் கொஞ்சம் பெரிய பெண் ரத்னா என்றும் குழந்தைத்தனம் போகாத முகக் களையோடு இருந்தவள் புவி என்ற புவனலோசனி என்றும் சன்னியாசிப்பேட்டை தேவதாசி லட்சணம்மாள் குடும்பத்தில் பட்ட பெண்கள் ரெண்டு பேரும் என்றும் காரைக்கால் கைலாசநாதன் கோவிலிலும் வேதபுரீஸ்வரர் கோவிலிலும் ஆட சன்னத்து வாங்கியவர்கள் இவர்கள் என்றும் ராமோஜியிடம் விட்டல ராயன் சொன்னான்.

”ராமோஜி அண்ணார் காலைத் தொட்டு ஆசிர்வாதம் வாங்கிடுங்கோ குமர்களா”. விட்டல ராயன் சொல்ல அந்தப் பெண்டுகள் குனிந்து வணங்கினார்கள்.
பிரியத்தோடு வாழ்த்தினான் ராமோஜி.

துரை, வந்திருந்த அதிகாரிகளை முகம் சுளித்துப் பார்த்தார்.

”என்ன எழவுக்கு இங்கே கூட்டமாக வந்தது? வீட்டுக்குப்போய் பெண்டாட்டியோடு சுகித்து கிடந்து நாளை வரச் சொல்லு”.

அவர் அங்கே வெட்டியாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்த உத்தியோகஸ்தர்கள் எல்லோரையும் திருப்ப அனுப்பச் சொன்னதாக கிரிமாசி பண்டிதன் வந்து சொன்னான். ஆக, கிட்டத்தட்ட கூடாரம் காலி என்ற நிலையில் ஆகாரம் வந்து சேர்ந்தது.

Excerpts from my forthcoming novel RAMOJIUM

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன