ராமோஜியம் – ஒரு புது அத்தியாயத் தொடக்கம் – சென்னை 1945

ராமோஜியம் – ஒரு புதிய அத்தியாயம் 1945 – தொடக்கப் பகுதி

அது ஏன் கல்யாணமான அடுத்த வருஷமே பெண்டாட்டியை வயிற்றைத் தள்ள வைத்து அடுத்த தலைமுறை பிறந்து வர ஆவன செய்ய வேண்டும் என்று புருஷனையும் பெண்ஜாதியையும் மற்றவர்கள் எல்லோரும் மறைமுகமாகவோ நேரடியாகவோ நிர்பந்திக்கிறார்கள் என்று தெரியவில்லை.

சில பேர் இன்னும் மோசம், கல்யாணப் பத்திரிகையைக் கையில் வாங்கிக் கொண்டதுமே பத்து மாதக் கணக்கைப் போட ஆரம்பித்து, ஞாபகமாக விசாரிக்கப் புறப்பட்டு வந்துவிடுகிறார்கள். கல்யாணம் முடிந்து ஒரு வருஷமான நாள், ரெண்டாம் ஆண்டு விழா என்று சகலமானதுக்கும் நாம் மறந்திருந்தாலும் இவர்கள் மறக்காமல் வந்து, ரெண்டு ஆப்பிள், ஒரு காய்ந்து போன ஆரஞ்சுப் பழம் என்று காகிதக் கவரில் வைத்துப் பரிசாக நீட்டியபடி கேட்பது – ”எப்போ எதிர்பார்க்கலாம்?”

இது என்ன முப்பது மதுரமான கானங்கள் கொண்ட தமிழ் டாக்கி படமா அல்லது சிறையில் அடைத்த காந்தி கட்சிக்காரர்களின் ரொட்டீன் சமாசாரமா, எப்போது ரிலீஸ் என்று தேதி குறித்துச் சொல்ல?

”காலாகாலத்திலே எல்லாம் நடந்துடணும், பார்த்துக்கும்”.

இல்லைன்னா என்ன செய்வாங்க தெரியவில்லை. அந்த ஆரஞ்சை வேணுமானால் திருப்பிக் கொடுத்திடலாம்.

பெண் வயிற்றில் கரு உருவாகி வர, ஞாயிற்றுக்கிழமை காலையில் புருஷனும் பெண்டாட்டியும் ஆளுக்கு ஒரு பிடி கொள்ளு பச்சையாகச் சாப்பிடணும் என்று ஒரு யோசனை.

ரொம்ப வற்புறுத்தவே ஒரு ஞாயிறு இட்லி, சின்ன வெங்காய சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்ற அற்புதமான சண்டே வளமுறையைப் புறக்கணித்து, ஒரு பாத்திரத்தில் கொள்ளோடு வந்த ரத்னா, அதிலிருந்து ஒரு டீஸ்பூன் எடுத்து வாயிலிட்டு மெல்ல, நான் திகிலுடன் பார்த்தேன்.

அது பொறுக்க முடியாத ருசி என்று முகம் காட்ட அவள் எழுந்து ஓடிப் போய்த் துப்பி விட்டு, சமையலறையில் அடுப்பில் வைத்திருந்த சின்ன அண்டாவில் அகப்பை விட்டுத் துழாவித் தட்டில் ஏதோ இட்டுக் கொண்டு வந்தாள். அவாளுக்கு இவாள் எழுந்துண்பாள் என்கிற மாதிரி, இது அவித்த கொள்ளு.

என்னை எப்பாடு பட்டும் குதிரை ஆக்க யாருடைய துர்போதனையிலோ அவள் எடுத்த நடவடிக்கை வெற்றி பெறும் தருணத்தில், மிருதங்கம் வேலப்ப நாயக்கர் வாசலில் நின்று, ”வரலாமா? வரலாமா?”, என்று இரைந்தார்.

ரத்னா விதித்த கொள்ளு தண்டனையிலிருந்து இப்போதைக்காவது விடுதலை கிட்டிய சந்தோஷத்தில், வரலாம் வரலாம் என்று நாயக்கரை உற்சாகமாக எதிர்கொண்டேன்.

”ஒரு சந்தேகமுங்க.. இது சங்கீதம் தொடர்பானது.. நீங்க தான் அக்கம்பக்கத்திலே சங்கீதம் தெரிஞ்ச இன்னொரு ஆத்மா.. நாகஸ்வரமா நாதஸ்வரமான்னு போன மாசம் சங்கீத அஞ்ஞானிகள் கிட்டே கூடக் கேட்டுட்டு, எங்கிட்டயும் வந்தீங்களே நினைவு இருக்கா.. நீங்க தான் ஆலோசனை சொல்லணும்”. நாயக்கர் தீர்மானம் வைத்துச் சொன்னார்.

ரத்னா கொண்டுவந்து வைத்த காப்பியை அரை நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு வாசனை பிடித்து அனுபவித்து, கண் திறந்து என்னை நோக்கினார் –

”இந்த அருமையான காப்பியைக் குடிச்சுட்டு ஆபீஸ் போக எப்படி மனசு வரும்? இன்னொன்னு, வேறே ஒண்ணுன்னு கேட்டுக்கிட்டே இருக்குமே!”

மனசெல்லாம் பூவாக மலர்ந்து நின்றிருப்பாள் ரத்னா. இன்றைக்கு அவித்த கொள்ளு கிடையாது.

நான் கணக்குப் போட்டது சரிதான். குளிக்காமல் பசியாற அமர்ந்தேன். வேலப்ப நாயக்கர் வந்த விஷயம் மேலே சொல்ல விட்டுப் போச்சே. இதோ அது.

இதுவரை பெண் பாடகிகள் யாருக்கும் மிருதங்கம் வாசித்ததில்லையாம் அவர். நாளுக்கு நாள் பெண் பாடகிகள் அதிகமாகிக்கொண்டு போகிறார்கள். வாசிக்க மாட்டேன் என்று மூஞ்சியைத் திருப்பிக்கொண்டு உட்கார்ந்தால் வருமானம் ஆகக் குறைவாகி விடுகிறதாம்.

வேன் வாங்கி முட்டை மொத்தக் கொள்முதல் விநியோகம் ஆரம்பித்தால் மகன்கள் மற்றும் மருமகன்கள் சிரத்தையே எடுக்காமல் நாடகம், சினிமா என்று அற்ப சந்தோஷத்துக்காக அலைய, பிசினஸ் சோபையின்றி, ஏதோ முதலுக்கு மோசமில்லாது நடக்கிறதாம்.

அதெல்லாம் இருக்கட்டும். நாயக்கரின் சந்தேகம் என்ன? என்றால், பழைய காப்பியம், செய்யுள் எதிலாவது பெண்கள் சங்கீதக் கச்சேரி செய்வது பற்றி வருகிறதா?

ராமோஜி கொஞ்சம் சிரத்தை எடுத்து உடனே பார்த்துச் சொல்ல முடிந்தால் நல்லது. காப்பியத்தில் இருந்தால், பழைய சம்பிரதாயம் உண்டு என்று சொல்லி அவர் பாடகிகளுக்குப் பக்க வாத்தியம் வாசிக்க ஆரம்பித்து விடுவாராம்.

நான் உடனே எல்லாம் தெரிந்தவனின் வேஷத்தை எனக்கு ஒட்டவில்லை என்றாலும் வலிந்து அணிந்து கொண்டேன். தெய்வாதீனமாக தமிழ்த் தாத்தா உத்தமதானபுரம் சாமிநாதய்யர் பிரசுரித்த சீவக சிந்தாமணியில் காந்தர்வ தத்தையோ இன்னொரு கதாநாயகியோ வீணை வாசிப்பது பற்றி படித்த நினைவு. கச்சேரி என்பதற்கு வினிகை என்ற விநோதப் பெயரும் உண்டாம்.

சீவக சிந்தாமணிக்கு எங்கே போக? புரசைவாக்கம் லைப்ரரியில் இருக்காது. ஆகச் சிறியது அந்த நூல் நிலையம். ரிடையர்ட் ஹெட்மாஸ்டர் வைத்திருக்கலாம். அவர் இந்துநேசன் உட்பட சகலமானதையும் படிக்கிறார். அதற்காக சிந்தாமணி படித்திருப்பார் என்று எப்படி முடிவு செய்வது?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன