ராமோஜியம் நாவல் – இன்னொரு 1942 அத்தியாயம் – மழைக்காலச் சென்னை

“நல்ல வேளை அடிபடலே.. ஊமைக் காயம் தான்.. மயக்கமும் தெளிஞ்சாச்சு.. எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு தூக்க மாத்திரை கொடுத்திருக்கேன் .. தூங்கினா விட்டுடுங்க.. காலையிலே ஜம்முனு எழுந்திருச்சிடுவார்“

டாக்டர் நாயர் பெரிய மீசையை நீவிக்கொண்டு ரத்னாவையும் தெலக்ஸையும் பார்த்துச் சொன்னார். நான் அவர் மீசை மறைத்ததை எக்கிக் கடந்து ரம்பையையும் மேனகையையும் பார்வையால் அள்ளிப் பருகினேன்.

”சாரி சார், ஆறரை மணிக்கு உங்க வீட்டுக்கும் ஜோசியர் வீட்டுக்கும் போய்ட்டு வரலாம்னு கிளம்பினா, பெரிய கை ப்ரட்யூசர் ஒருத்தர் பம்பாய்லே இருந்து ப்ளேன் இறங்கி நேரா வந்துட்டார். இந்துஸ்தானி டாக்கி பண்ணு பம்பாய்க்கு வந்துங்கறார். அவர் கிட்டே நல்ல வார்த்தை சொல்லி, நாளைக்கு தீர்மானம் சொல்றேன்னு வாக்கு கொடுத்து கிளம்பறதுக்குள்ளே எட்டு மணி ஆயிடுச்சு.. நாளைக்கு போகலாம்னுச்சு சித்தி. ஐயோ காத்துக்கிட்டிருப்பீங்களே.. போய்ட்டு வந்துடறேன்னு கிளம்பி வந்தா இங்கே நீங்க ஒரே களேபரமா காலை முறிச்சுக்கிட்டு கிடக்கீங்க.. நாயர் டாக்டர் எங்க டாடிக்கு ப்ரண்ட்.. நானும் ரத்னா அக்காவும் கூப்பிட்டதும் வந்துட்டார்.. ”

தெலக்ஸ் நீளமாகப் பேசினாலும் ஒரு வார்த்தையும் கொட்டாவி வரவழைக்கவில்லை. ரத்னா அக்கா. இது போதும் இப்போதைக்கு எனக்கு.

ரத்னா கரைத்தாற்போல் ரசஞ் சாதம் கொடுக்க, தெலக்ஸ் புவனா ரொம்பப் பழகியவளாக சமையல்கட்டுக்கு நடந்து சுட்ட அப்பளத்தை ரத்னா கையில் இருந்து பறித்து வாயில் திணித்துக் கொள்ள, ரத்னா சிநேகிதத்தோடு முகம் மலர்ந்து சிரித்தாள்.

ரம்பை, மேனகைக்கு சத்யநாராயணா பூஜை பிரசாதமும் மஞ்சள், தேங்காய், வெற்றிலையும் கொடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தபடி நான் அடுத்த உறக்கத்தில் ஆழ்ந்தேன்.

விடிந்தபோது எதுவுமே கனவில்லை என்று என் காலில் பேண்டேஜும் கொம்பு உடைந்து கிடக்கும் குடையும் சொல்லிக் கொண்டிருந்தன. ரத்னா குளித்துத் தலையில் வேடு கட்டிக்கொண்டு எனக்கு காபி எடுத்து வந்தாள்.

”ஒரு சில்மிஷமும் இப்போ செய்ய அனுமதி கிடையாது. செஞ்சே ஆகணும்னா புது மாம்பலத்திலே நாராயண செட்டி தெருவுக்குப் போங்க”, என்று பொய்க் கோபத்தோடு சொன்னாள்.

நேற்று என்ன ஆச்சு? நாலு தடவை கேட்டேன். ரொம்ப பிகு பண்ணிக் கொண்டாள் ரத்னா. ”சரி, சொல்லாட்ட போ, நான் ஆபீசுக்கு கிளம்பறேன்” என்று எழப்பார்க்க, மீண்டும் படுக்கையில் தள்ளினாள்.

”நாயர் டாக்டர் இன்னும் ஒருவாரம் ரெஸ்டிலே இருக்கணும்னு மெடிக்கல் சர்ட்டிபிகேட் கொடுத்திருக்கார். உங்க ஆபீசுக்கு கேளப்பன் அண்ணன் மூலம் கொடுத்து விட்டுடறேன்”.

ரத்னா சமையல்கட்டுக்குப் போவதற்குள் ”ப்ளீஸ், என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்கலேன்னா தலையே வெடிச்சுடும் போல இருக்கு” என்றேன்.

அவள் திரும்பி வந்து முக்காலியைப் போட்டுக்கொண்டு உட்காந்து, தலை துடைத்தபடி சொன்னதன் சுருக்கம் இது –

தங்கப்பன் முதலாளி கடை வீதியில் அவர் கடை முகப்பில் சிறியதாக கண் திருஷ்டி கணபதி கோவில் ஏற்படுத்தியது உண்மைதான். அதற்கான மணல், சிமிட்டி மூட்டைகளை வீட்டில் இருந்து எடுத்துப் போயிருக்கிறார். சில மணல் மூட்டைகள் இன்னும் அவர் காம்பவுண்டில் தான். மழையில் கொஞ்சம் நனைந்து விட்டன அவை.

பிள்ளையாரை எங்கேயாவது திருடித்தான் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று ஐதீகம் இருப்பதாக சிநேகிதர்கள் சொல்ல, சோழி உருட்டி ஜோசியரும் ஆமோதிக்க, தங்கப்பன் முதலாளி மாம்பலம் பஸ் ஸ்டாண்ட் பக்கம் தெருவைப் பார்த்துக் கடை வைத்திருக்கிற இன்னொரு நண்பரோடு வாய்மொழி ஒப்பந்தம் போட்டுக்கொண்டாராம்.

அவரும் பிள்ளையார் கோவிலைத் தன் கடை முகப்பில் அமைத்தபிறகு ரெண்டு பிள்ளையார்களையும் ஒருத்தருக்கொருத்தர் ‘திருடி’ அவரவர் கோவிலுக்கு எடுத்துப் போகத் திட்டமாம்.

தங்கப்பன் முதலில் திருடிய பிறகு போனவாரம் ஒரு ராத்திரி தன் பழைய பிள்ளையாரை மண்டிக்கடை வேனில் மாம்பலம் அனுப்பினாராம். ”தெலக்ஸை நீங்க தரிசனம் பண்ணிட்டு வந்த ராத்திரி அது”. மணல் மூட்டைகள், மேடையும் சுவர்களும் வைத்துப் பூச மாம்பலம் போகவேண்டியது மழை காரணமாக அனுப்ப முடியாமல் தடைப்பட்டதாம்.

தங்கப்பன் முதலாளி கெஸ்ட் கண்ட்ரோல் ஆக்ட் கண்ணில் அந்த மண்ணைத் தூவி விட்டு விருந்து கொடுத்ததும் உண்மைதான். நாலு எட்டு இல்லை, மொத்தம் இருபது பேர். விஸ்தாரமான முன் ஹாலில் நாற்காலி போட்டு எல்லோரையும் உட்கார வைத்து, நாலு நாலு பேராக ஹாலில் சாப்பிட வைத்ததும் அவர் திட்டம் தான். காத்திருக்கும் நேரத்தில் சும்மா வாயை மென்று கொண்டிருக்க வேண்டாமே என்று சோடாவும், சும்மா சோடா தர வேண்டாமே என்று கொஞ்சம் பியரும், வெறும் பியர் மட்டும் வேண்டாமே என்று பிராந்தியும் அவர்களுக்கு ஊற்றிக் கொடுத்தாராம். முன்ஹாலில் நடமாட்டம் தெரியாமல் இருக்க விளக்கணைத்திருக்கிறார்கள்.

தோட்டத்தில் தெரிந்த விளக்கு இவர் வீட்டு விருந்துக்கு தொடர்பில்லாதது. இடந்தலை மிருதங்கச் சக்கரவர்த்தி வேலப்ப நாயக்கர் மருமகன்கள் கைவேலை அது. அவர்கள் அடுத்த வீடான குமாஸ்தா வீட்டு மொட்டை மாடிக்குத் தாவிப் போக தங்கப்பன் முதலாளி வீட்டு வாசல் மாடிப்படி அல்வா மாதிரி அமைந்துள்ளது. மாடியில் மங்கையர் காத்திருக்க, இரண்டு காளையரும் ஜோடியோடு சற்றே இருக்கக் குறுக்கே போய் விட்டார் குடையோடு தங்கப்பன் முதலாளி வீட்டுக் காம்பவுண்டில் ஓடின ராமோஜி.

குமாஸ்தா வீட்டு மாடியிலிருந்து இறங்கி ஓடி, வாசலில் நிறுத்தி வைத்திருந்த, வேலப்பன் செகண்ட் ஹாண்டில் வாங்கி முட்டை மொத்த விற்பனை வியாபாரத்துக்காக பயன்படுத்த உத்தேசித்திருந்த டெம்போவில் இரட்டையர்கள் தப்பிப் போய்விட்டார்கள். போகிற அவசரத்தில் மணல் மூட்டைகள் சரிந்து காம்பவுண்ட் தரையில் விழுந்ததாம்.

”நீங்க பார்த்தபோது கைப்பிடிச் சுவர் கைநழுவி, கீழே விழுந்த இடத்திலே மணல் மூட்டைகள் உங்களை மெத்தை மாதிரி ஏந்திக்கிட்டதாலே ஒரு அடி கூடப் படாம தப்பிச்சுட்டீங்க..”

அப்புறம் இதுவும் சொன்னாள் –

“போன வாரம், குமாஸ்தாவின் பெண்கள் டைப் அடித்துப் பழகிய காகிதத்தைத் தரையிலே போட்டதை பொறுக்கி எடுத்துக்கிட்டு வந்து காட்டினீங்களே.. அது உங்களுக்கு இல்லே.. இன்னிக்கு இருட்டின அப்புறம் சந்திக்கலாம், ரூட் க்ளியர்னு சமிக்ஞை அது, நாயக்கர் வீட்டுப் பசங்களுக்கு”.

யார் சொன்னது?

விலு சொன்ன நம்பகமான தகவல் இது என்று சேர்த்துக் கொண்டு என் முகத்தைப் பார்த்தாள். நான் விலாசினியை ஏற்கனவே ரூம் நெம்பர் மூன்றில் அடைத்திருந்த இடம் காலியாக இருக்க, அவள் ஆபீஸ் போயிருந்தாள்.

”தெருவிலே நிறைய நடமாட்டம் இருக்கு.. ராத்திரி சந்திக்க வரவேணாம்னு சொல்ல நினைச்சிருக்காங்க அந்தப் பொண்ணுங்க .. அதான் நேற்றைக்கு அவங்க டைப் அடிச்ச பேப்பரை நழுவ விடாதது. நீங்க நடுவிலே புகுந்து, ஏற்கனவே நழுவவிட்ட பழைய காகிதத்தைக் கொடுத்துட்டுப் போக, அவனுங்க குழம்பிப் போய், ஜதையை பார்க்க ராத்திரி போயிருக்காங்க.. மீதியை உங்க பேண்டேஜில் காண்க”.

”அப்புறம்?”, என்று கேட்டேன்.

“தங்கப்பன் முதலாளி இதுவரை எதுவும் பதுக்கவும் இல்லே. கடத்தவும் இல்லே. ஏ ஆர் பி வார்டன் ராமோஜி ராவ்சாகேப் கண்ணுக்கு மறைச்சு, ஏகப்பட்ட சிநேகிதங்களுக்கு விருந்து கொடுத்தது தப்புத்தான்னு உங்க உலக மகா ஏ ஆர் பி வார்டன் தலைவர் ரிடையர்ட் ஹெட்மாஸ்டர் கிட்டே மன்னிப்பு கேட்டாராம். அவர் என்னை ஏன் கூப்பிடலேன்னு கோபப்பட்டாராம்”.

அவளோடு நானும் சிரித்தேன்,

“சரி, நான் உங்களை ஒண்ணு கேட்கலாமா?” ரத்னா பயமுறுத்தினாள்.

“கேளு” என்று தயக்கத்தோடு சொன்னேன்.

“தெலக்ஸ் புவனா நேர்லே பார்க்க ரொம்ப சுமார் தான், கொஞ்சம் படகாமணி மூஞ்சி, தேங்காய்துருவி மாதிரி முன்பல்லுன்னு சொன்னீங்களே, அப்படி ஒண்ணும் தெரியலியே?” ரத்னா கேட்க, சமாதானமாகச் சொன்னேன் –

“நான் போயிருந்தபோது புது மாம்பலத்திலே கரண்ட் இல்லே. அதான் சரியா பார்க்க முடியலே”

“நம்பணுமா?”

“வேணாம்னா விட்டுடு”. இரண்டு பேரும் சிரித்தோம்.

”பிறகு?”

”செய்திகள் முடிவடைந்தன.. இனி நிலைய வித்வான் பிடில் வாசிப்பார்”

ரத்னா என் கையை மடியிலிருந்து தட்டி விட்டு முக்காலியில் இருந்து சாடி எழுந்திருந்தாள். அவளை வாசிக்க வாரியெடுத்து மடியில் போட்டுக் கொண்டேன். என்ன சத்தம் அங்கே என்று தெலக்ஸ் புவனா, மனதில் அவள் அறையில் இருந்து எட்டிப் பார்த்தாள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன