புதினம் ‘ராமோஜியம்’ – சில பகுதிகள் – 1942 செப்டம்பர் சென்னை -விருந்து வரக் காத்திருந்து..

சாயந்திரம் நாலு மணிக்கு கடை கட்டி வைத்துக் கிளம்ப ஆயத்தமாக முகம் கழுவி வந்தபோது பந்துலு சார் என் நாற்காலிக்கு எதிர் நாற்காலியில் காத்துக் கொண்டிருந்தார்.

“சார், கிளம்பிக்கிட்டே இருக்கேன்” என்று சமாதானமாகச் சொல்ல, அவர் அமைதியாகக் கூறிய பதில் –

“சாரி ராமோஜி, இன்னிலேயிருந்து ஏ ஆர் பி நாலு மணிக்கு வீட்டுக்குப் போக ஸ்பெஷல் பெர்மிஷன் ரத்தாயிடுத்து.. எப்பவும் போல அஞ்சு, அஞ்சரை, ஆறு, ஏழுக்கு போய்க்கலாம் … நான் ரோமாண்டி துரை மீட்டிங்க் போறேன்”.

அவர் சொன்ன பின்குறிப்புகளை ஆராய்ந்தால் தெரிந்தது என்ன என்றால், யாரோ ஜப்பான்காரன் குண்டு போட ப்ளேன்லே மெட்றாஸ் போகணும், அப்படியே கொத்தவால்சாவடியிலே மூணு படி மாகாணிக்கிழங்கு வாங்கிட்டு வரணும்னு ப்ளான் பண்ணினது நடக்கலே போலே இருக்கு.

ஏ ஆர் பி வார்டன்கள் சீக்கிரமே ஆபீசில் இருந்து கிளம்பி, அரை டிராயர் போட்டு விசில் ஊதிக்கொண்டு கம்பு சுழற்றிக்கொண்டு ஜப்பான் போர் விமானங்களை கடுமையாக எதிர்த்து வெற்றிவாகை சூடுவதில் சென்னை மஹாநகரமே நம்பிக்கை வைத்துக் காத்திருந்தது போதும் என்றுபட ஏ ஆர் பி வார்டன்களுக்கு ஸ்பெஷல் ஆபீஸ் பெர்மிஷன் ஓவர்.

காந்தி பக்தர்கள் எல்லோரும் சப்ஜாடாக ஜெயிலுக்குப் போக, வெள்ளையனே வெளியேறு போராட்டம் சுமார் வெற்றி. ஏ ஆர் பி வார்டன்கள் ரோந்து வந்து கண்காணிக்க ஆள்படை எதுவுமில்லை. அவர்கள் இனியும் பிற்பகல் நாலு மணிக்கு வீட்டுக்குப் போகவேண்டாம். போய், தனியாக இருக்கும் பெண்ஜாதியிடம் சில்மிஷம், சாயந்திரம் ஆறு மணிக்கு போண்டா, குணுக்கு, தவலவடை என்று சிறுதீனி, ராத்திரி ஒன்பதுக்கு சப்பாத்தி, அடை, தோசை என்று பெருந்தீனி எனக் கிரமமாகச் சாப்பிட்டு, ரெண்டு பேரும் வயிறு தள்ளவும் வேண்டாம்.

சீக்கிரம் வீடு போக ஸ்பெஷல் பெர்மிஷன் ஓவர் ஆனால் என்ன? மாதம் ஒரு தடவை கிடைக்கும் ரெகுலர் பெர்மிஷனில் ’வீட்டில், சத்யநாராயண பூஜை’ என்று காரணத்தைப் பதிந்து விட்டு, மிடுக்காக வீட்டுக்குக் கிளம்பினேன்.

“அத்தங்காவை நல்லா கவனிச்சுக்கும்.. மறக்காம என் பெண்ஜாதி கிட்டே பட்சணம், பலகாரம் எல்லாம் கொடுத்து அனுப்பும்” என்று கருத்தோடு சொல்லி அனுப்பினார் ரசனைத் திலகமான பந்துலு சார்.

ட்ராம் இறங்கி வீடு திரும்பும்போது எனக்குச் சற்று முன்னால் மிருதங்கம் இடந்தலை மேதை வேலப்ப நாயக்கர் மருமகன்களான ரெட்டையர்கள் தழையத் தழையக் கட்டிய வேஷ்டியோடு ஐயங்கார் ரெமிங்டன் டைப்ரைட்டிங் இன்ஸ்ட்யூட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். சூடு தேடி ஒரு சின்னப் பட்டாளம் யுவன்மார் அந்தத் திசையில் மடித்துப் பிடித்த வெள்ளைக் காகிதங்களோடு நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

எனக்கு முன் எதிர்ப்பட்ட குமாஸ்தாவின் பெண்கள் ஒயிலாக ஏதோ தெருவே நந்தவனமான மாதிரி அன்ன நடை நடந்து என்னைக் கடந்து போனார்கள்.

இவர்கள் எல்லோரிடமும் லவுட் ஸ்பீக்கர் வைத்து இன்றைக்கு நம்ம தெருவுக்கு, எங்க வீட்டுக்கு ஒரு பிரபலம் வருகை தருவதாக இருக்கிறார் எனவே தெருவில் குப்பை போட வேண்டாம் தயவு செய்து என்று அறிவிக்க மனம் துடித்தது.

என் கைப்பையில் வைத்திருந்த வேகமான நரி – சோம்பேறி நாய் சமாசாரம் டைப் அடித்த காகிதத்தை மிருதங்க இரட்டையர்களிடம் கொடுத்தேன். சுத்தம் சுகம் தரும் என்று சின்னதாக ஒரு பிரசங்கம் ஆரம்பிப்பதற்குள் அவர்கள் காணாது கண்ட மாதிரி சந்தோஷப்பட்டு நன்றி சொல்லிப் போனார்கள்.

நான் வீட்டுக்குள் போவதற்குள் எதற்கும் ஞாபகப் படுத்தின மாதிரி இருக்கட்டும், அதைவிட முக்கியம் ஏற்கனவே தெலக்ஸ் வந்து போயிருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் வந்ததால் அதையும் நிவர்த்தி செய்யலாம் என்று ஜோசியர் வீட்டுக்குப் போனேன்.

“யாரு, புவனலோசனி தானே.. சாயந்திரம் வரான்னு சொன்னேளே.. அதான் பாத்ரூம் கூடப் போகாம உக்காந்திருக்கேன்” என்று அதீத ஆர்வம் காட்டினார் ஜோசியர். தெலக்ஸ் வரும் நேரம் நெருங்கி வந்துகொண்டிருந்தது.

மக்மல் பூரியும், குலோப்ஜாமுனும், உருளைக்கிழங்கு மசாலா சற்றே எலுமிச்சைச் சாறோடு கலந்து உள்ளே வைத்து, மொறுமொறுவென்று வார்த்த ரவா மசாலா தோசையுமாக அடர்த்தியான சாயந்திர டிபன். குறையே சொல்ல முடியாத பில்டர் காபி. ரத்னா அமர்க்களப் படுத்தியிருந்தாள்.

சுபாங்கி அம்மாளும், பந்துலு சம்சாரமும் அரட்டை அடித்துக்கொண்டு சமையல்கட்டில் உட்கார்ந்திருக்காவிட்டால், ரத்னாவுக்கு அவசரமாக, அழுத்தமாக, உதட்டில் ஒரு முத்தம் வைத்திருப்பேன்.

உடை மாற்றிக்கொண்டு, என்னமோ தோன்ற கதர் சட்டையும் அணிந்து நானும் ஒரு நாற்காலியில் அமர்ந்து கம்ப ராமாயணத்தைப் புரட்டியபடி தெலக்ஸ் வருகைக்காகக் காத்திருக்க, ஆறரை வந்து அதுவும் கடந்து ஏழு மணியானது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன