ராமோஜியம் – அடுத்து வரவிருக்கும் என் நாவலில் இருந்து – 1942 செப்டம்பர் மதறாஸ்

விடிந்தால் செவ்வாய். என் வீடு பத்து நிமிஷத்துக்காவது பிரபலத்தின் வருகையால் பெயர் பெறப்போகிற தினம். நானே எதிர்பாராத விதமாக சத்யநாராயண பூஜையை நாளை மறுநாள் புதனில் இருந்து ஒருநாள் முன்னதாக செவ்வாய்க்கு மாற்றி வைத்தாள் ரத்னா. சுபாங்கி அம்மாள். விலாசினி ஆகிய நிபுணர்கள் ஆலோசித்து, செவ்வாயும் சிலாக்கியம் என்று சொன்னார்களாம்.

ராமண்ணா ஜோசியரும் ஒரு ரூபாய் காணிக்கை வாங்கிக்கொண்டு அப்படியே வைத்துக் கொள்ளலாம் என்று சோழி உருட்டிக் கணக்குப் போட்டுச் சொன்னாராம். தெலக்ஸ் புவனாவுக்கு ஆஸ்தான ஜோசியராக இருந்து நூறு நூறாக சம்பாதிக்க வேண்டிய அந்த ஜோசியக்காரர், அற்பமாக ஒற்றை ரூபாவுக்கெல்லாம் சோழி உருட்டுவதை நினைத்துச் சிரித்தேன்.

செவ்வாய் மாலை ஆறு மணிக்கு டெபுடி கவர்னர் துரை சூப்ரண்ட்டெண்ட்களையும் இதர மேலுத்யோகஸ்தர்களையும் ஏதோ அவசர மீட்டிங் என்று கூப்பிடாமல் போயிருந்தால் பந்துலு சாரும் வந்திருப்பார்.

“நமக்கு ஒரு ஆத்திரம் அவசரம்னா அன்னிக்குத்தான் மயிரப் பிடுங்கற மீட்டிங் மண்ணாங்கட்டின்னு எழவெடுப்பான்.. இதுக்கே சுதந்திரம் வந்து இவங்களை கப்பலேத்தி துரத்தணும்” என்று திடீர் 777 பிராண்ட் தேசபக்திப் பிரசங்கம் செய்தார் பந்துலு.

வெய்யில் தாழ ஆறரை மணிக்கு என் வீட்டில் பூஜை தரிசித்து விட்டு, ரத்னாவிடம் இருந்து மஞ்சள் குங்குமம் பெற்றுக்கொள்ள வருவதாக தெலக்ஸ் சொன்னதை ரத்னா திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாள். பிரபலமான ஒருவர் வீட்டுக்கு வரப்போகும் பெருமையும் பரபரப்பும் விதிவிலக்கில்லாமல் ரத்னாவையும் பீடித்திருந்திருந்தது.

தெலக்ஸின் சித்தியும் அவள் கூடவே வர, ”நேனு கூட ஒஸ்தானு ஒஸ்தானு”
என்று ப்ராணனை வாங்கிக் கொண்டிருந்தாள். அவள் இல்லாமல் தெலக்ஸ் எங்கேயும் போகப் படியிறங்க மாட்டாள் என்பதில் ஒஸ்தானம்மாவுக்கு தலை நிறைய கர்வம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன